Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும்

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு - மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும் | 12th History : Chapter 1 : Rise of Nationalism in India

   Posted On :  09.07.2022 01:36 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும்

(அ) ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி (ஆ) காலனியரசின் பங்களிப்பு: மெக்காலே கல்வி முறை (இ) கற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு (ஈ) சமயப் பரப்பாளர்களின் பங்களிப்பு

மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும்

 

(அ) ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி


காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் துண்டுபட்டிருந்தது. இந்துக்களிடையே, பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய , தத்துவ அறிவினைப் பெறும் தனியுரிமையைப் பெற்றிருந்தனர். கல்வியைத் தங்களின் முற்றுரிமையாக்கிக் கொண்ட அவர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம் வகித்தனர். வித்யாலயங்கள், சதுஸ்பதிகள் என்றழைக்கப்பட்ட உயர்தரக் கல்விக் கூடங்களில் கல்வி பயின்றனர். புனிதமான மொழி எனக் கருதப்பட்ட சமஸ்கிருத மொழி வழியில் அவர்கள் கல்வி கற்றனர். தொழில் நுட்ப அறிவானது - குறிப்பாகக் கட்டடக்கலை, உலோகவியல் சார்ந்த அறிவுத்திறனானது பரம்பரையாக ஒரு சந்ததியிடமிருந்து மற்றொன்றுக்கு கைமாற்றம் செய்யப்பட்டது. இம்முறை புதிய முயற்சிகளுக்குத் தடையாயிருந்தது. இம்முறையிலிருந்த மற்றுமொரு குறைபாடு பெண்களும் ஒடுக்கப்பட்டோரும் ஏனைய ஏழை மக்களும் கல்வியறிவு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட்டதாகும். கல்வி கற்பதில் மனப்பாட முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. புதிய முயற்சிகளுக்கு மற்றுமொரு தடைக்கல்லாயிற்று.

 

(ஆ) காலனியரசின் பங்களிப்பு: மெக்காலே கல்வி முறை


இந்தியர்களைக் கல்வி கற்றவர்களாகவும் வலிமை பெற்றவர்களாகவும் மாற்ற வேண்டும் என்பதைக் காட்டிலும் வேறுசில காரணங்களுக்காகவும் காலனியரசு இந்தியாவில் நவீனக் கல்வியின் பரவலுக்கு உதவிகள் செய்தது. இந்தியா போன்ற ஒரு பெரிய காலனி நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர்க்குத் தங்களிடம் பணி செய்ய பெரும் எண்ணிக்கையிலான கல்வி கற்ற நபர்கள் தேவைப்பட்டனர். தேவைப்படும் அளவிற்கான பெருவாரியானப் படித்த நபர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்து வருவது சாத்தியமற்றது. இந்நோக்கத்தில்தான் 1835இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டத்தை


T.B. மெக்காலே 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர். மெக்காலே இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாக 1823இல் பொதுக்கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது. கல்வி தொடர்பாகவும், எம்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழிகாட்டுவது இக்குழுவின் பொறுப்பாகும். இவ்வமைப்புப் பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்தது. கீழ்த்திசைக் குழுவானது கல்வி பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது. ஆங்கில மரபுக்குழு மேலைக் கல்வியானது ஆங்கில மொழி வழியில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது.


மெக்காலே ஆங்கில மரபுக்குழுவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார். 1835இல் அவர் தனது புகழ்பெற்ற இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் (Minute on Indian Education)" எனும் குறிப்புகளை வெளியிட்டார். இக்குறிப்புகளில் ஆங்கில வழியில் மேற்கத்தியக் கல்வி கற்பிக்கப்படுவதற்கு ஆதரவாக வாதிட்டார். ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் விருப்பத்தில், கருத்தில், ஒழுக்க நெறிகளில், அறிவில் ஆங்கிலேயராய் இருக்கும் ஒரு மக்கள் பிரிவினரை இந்தியாவிற்குள்ளே உருவாக்க அவர் விரும்பியதே அவர் ஆங்கில மரபுக் குழுவை ஆதரித்ததன் காரணமாகும்.


இயற்றியது. இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய ஆங்கிலக் கல்விமுறையை வடிவமைத்தவர் டி.பி. மெக்காலே ஆவார். இதன் விளைவாகக் காலனிய நிர்வாகம், ஆங்கில நவீனக் கல்வியை வழங்கும் பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கிற்று. 1857இல் பம்பாய், சென்னை , கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. இந்தியர்களில் படித்த வகுப்பினர் ஆங்கிலேயர்க்கு விசுவாசமாக இருப்பதோடு ஆங்கில அரசின் தூண்களாகவும் திகழ்வர் என காலனியரசு எதிர்பார்த்தது.

ஆங்கிலேயர் தங்கள் நலனுக்காக கற்றறிந்த இந்திய மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அதை பாபு வர்க்கமென ஏளனப்படுத்தினர். இருந்தபோதிலும் அந்த வர்க்கத்தினரே இந்தியாவின் புரட்சிகர, முற்போக்கானப் படித்த வர்க்கமாக மாறி நாட்டின் விடுதலைக்காக மக்களைத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினர்.


 

(இ) கற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு


பொருளாதார நிர்வாக மாற்றங்கள் ஒருபுறமும் மேற்கத்தியக் கல்வியின் வளர்ச்சி மறுபுறத்திலுமாக புதிய சமூக வர்க்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு இடமளித்தன. இப்புதிய வர்க்கங்களின் இடையேயிருந்து ஒரு நவீன இந்திய கற்றறிந்தோர் பிரிவு உருவானது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்நவீன சமூக வர்க்கம் இந்தியாவின் வணிக வர்த்தகச் சமூகங்கள், நிலப்பிரபுக்கள், லேவாதேவி செய்வோர் (வட்டிக்குப் பணத்தைக் கடன் கொடுப்போர்) ஆங்கிலம் பயின்ற ஏகாதிபத்திய அரசின் துணை நிர்வாகப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாய் இருந்தது. இவர்கள் தொடக்க காலத்தில் ஆங்கிலேய நிர்வாகத்துடன் இணக்கமான அணுகுமுறையைக் கொண்டிருந்தனர். இருந்தபோதிலும் தங்களது விருப்பங்கள் சுதந்திர இந்தியாவில் மட்டுமே நிறைவேறுமென்பதை இவர்கள் உணர்ந்து கொண்டனர். மேற்சொல்லப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் ஏனைய மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தெடுப்பதில் சிறப்பானப் பங்காற்றினர். தேசிய அளவில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுவதற்கு முன்னர் இருந்த பல அமைப்புகளில் இவ்வகுப்புகளைச் சேர்ந்தோரின் உணர்வுகள் தெளிவாகப் பேசப்பட்டதைக் காண முடிகிறது.


நவீன இந்தியக் கற்றறிந்தோர் பிரிவைச் சேர்ந்த ராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர், அரவிந்த கோஷ், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, பெரோஸ்ஷா மேத்தா, சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரும் மற்றோரும் இந்திய அரசியல், சமுதாய, மத இயக்கங்களுக்குத் தலைமையேற்றனர். மேலைநாட்டு அறிஞர்களான ஜான்லாக், ஜேம்ஸ் ஸ்டூவர்ட் மில், மாஜினி, கரிபால்டி, ரூஸோ, தாமஸ் பெயின், மார்க்ஸ் ஆகியோராலும் மற்றவர்களாலும் கூறப்பட்ட தேசியம், மக்களாட்சி, சோசலிசம் போன்ற தத்துவக் கருத்துக்களைக் கற்றறிந்த இந்தியர்கள் அறிந்து கொண்டனர். சுதந்திரமான பத்திரிகை உரிமை, பொதுக்கூட்டங்களில் சுதந்திரமாகப் பேசும் உரிமை, சுதந்திரமாக ஒன்று கூடும் உரிமை ஆகியன இயற்கையான இயல்பான உரிமைகளாகும். கற்றறிந்த இந்தியரின் ஐரோப்பியக் கூட்டாளிகள் இந்த உரிமைகளைத் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்திருந்தனர்; அதை அவ்வாறே கடைபிடிக்க இவர்களும் விரும்பினர்; பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அங்கே மக்கள் ஒருவரையொருவர் சந்தித்துத் தங்களைப் பாதிக்கும் அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இச்செயல் போக்குவரத்து வசதியின் மிகப்பெரும் விரிவாக்கம், இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட அஞ்சல், தந்தி சேவைகள் ஆகியன இதுபோன்ற விவாதங்கள் தேசிய அளவில் நடைபெறுவதையும் சாத்தியமாக்கின.



(ஈ) சமயப் பரப்பாளர்களின் பங்களிப்பு


இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுத்தர மேற்கொள்ளப்பட்ட தொடக்க கால முயற்சிகளிலொன்று கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டதாகும். மதமாற்ற ஆர்வத்தால் தூண்டப்பெற்ற அவர்கள் இந்துக்களிடையே நடைமுறையிலிருந்த பலகடவுள் நம்பிக்கையையும் சாதிய ஏற்ற தாழ்வுகளையும் தாக்கலாயினர். நவீன மதச்சார்பற்ற கல்வியின் மூலமாக கிறித்தவத்தைப் போதிப்பது சமயப் பரப்பு நிறுவனங்கள் கைக்கொண்ட ஒரு முறையாகும். மரபு சார்ந்த கல்வி முறையில், கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களும், விளிம்பு நிலை மக்களும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை இவை வழங்கின. மக்களில் மிகமிகச் சிறிய பகுதியினரே கிறித்தவ மதத்திற்கு மாறினர். ஆனால் கிறித்தவம் விடுத்த சவால்கள் பல்வேறு சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் தோன்ற வழிவகை செய்தது.


Tags : Rise of Nationalism in India | History இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு.
12th History : Chapter 1 : Rise of Nationalism in India : Western Education and its Impact Rise of Nationalism in India | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி : மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும் - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி