மூன்றாம் பருவம் அலகு -1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பெண்கள் மேம்பாடு | 7th Social Science : Civics : Term 3 Unit 1 : Women Empowerment

   Posted On :  19.04.2022 08:32 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : பெண்கள் மேம்பாடு

பெண்கள் மேம்பாடு

கற்றலின் நோக்கங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த அறிவினைப் பெறுதல் • சமூகத்தில் பாலினத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை அறிதல் • சமூகத்தில் பெண்களின் பல்வேறு பங்களிப்பினை பற்றி புரிந்துகொள்ளுதல் • பொருளாதார முன்னேற்றத்திற்கான பெண்களின் பங்களிப்பை அறிந்துகொள்ளுதல் • பெண்களின் உரிமைகள் பற்றிய கருத்தைப் புரிந்துகொள்ளுதல்

குடிமையியல்

அலகு - 1

பெண்கள் மேம்பாடு



கற்றலின்  நோக்கங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த அறிவினைப் பெறுதல் 

சமூகத்தில் பாலினத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை அறிதல் 

சமூகத்தில் பெண்களின் பல்வேறு பங்களிப்பினை பற்றி புரிந்துகொள்ளுதல்

பொருளாதார முன்னேற்றத்திற்கான பெண்களின் பங்களிப்பை அறிந்துகொள்ளுதல் 

பெண்களின் உரிமைகள் பற்றிய கருத்தைப் புரிந்துகொள்ளுதல்


அறிமுகம்

பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவது மட்டும் அன்று. அவர்களிடம் ஏற்கெனவே உள்ள வலிமையை உலகம் உணரும் விதமாக மாற்றுவதே பெண்ணியம் ஆகும்.

பெண்கள் சமத்துவத்திற்கான போராட்டமானது எந்த ஒரு பெண்ணியவாதிக்கோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிற்கோ சொந்தமானது அல்ல. மாறாக, அது மனித உரிமைகள் பற்றிய அக்கறை கொண்டவர்களின் கூட்டு முயற்சியாகும்.

"ஒரு ஆணுக்கான கல்வி என்பது அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண்ணுக்கு வழங்கும் கல்வியானது, ஒரு தலைமுறைக்கான கல்வியாகும்."

பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார்.

பெண்களின் மேம்பாடு மற்றும் தனித்துவம் என்பது அவர்கள் அரசியல், சமூகப் பொருளாதார மற்றும் நலவாழ்வு நிலையில் பெறும் முன்னேற்றத்தையே குறிக்கும். இதுவே அவர்களின் நிலைத்த மேம்பாட்டிற்கு ஆணிவேராகும்.

நாட்டின் நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கு நமது சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தலும் பாலினச் சமத்துவம் அடைதலும் அவசியமாகும். 


பாலினம் பற்றிய சமூக அம்சங்கள்

சமூகவியலில் பாலினத்திற்கு இடையே வேறுபாட்டைக் காண்கிறோம். பாலியல் என்பது உயிரியல் பண்புக்கூற்றின்படி ஆண் அல்லது பெண் என சமூகத்தில் பயன்படுத்துவதாகும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை மக்கள் பேசும்போது, பெரும்பாலும் பாலியல் பற்றிய கருத்துகளே பேசப்படுகின்றன. ஆனால், பாலினம் என்பதைவிட உயிரியல் பண்பிலான வேறுபாடு மட்டுமே அது என்பது பற்றிய நமது சமூகத்தின் புரிதல் மிக அவசியமானதாகும்.

சமூகவியலில் பாலினம்

ஆண்பால், பெண்பால் குறித்த புரிதல்கள் மற்றும் வேறுபாடுகளில் சமூகத்தின் தாக்கம் எவ்விதம் என்பதை ஆராய்வதே சமூகவியலில் பாலினம் என்பதாகும்

.

பாலினம் என்பது உயிரியல் பண்புகளைச் சார்ந்தது. குறிப்பாக, சமூகம் எவ்வாறு பாலியல் வகைகளைக் கருத்தில் கொள்கிறது மற்றும் நடத்துகிறது என்பதே இதன் கருப்பொருளாகும். பாலினம் ஆண் பெண் பங்ககளிப்பின் சமூக விதிமுறைகளை உள்ளடக்கியது. இது ஆண், பெண், திருநங்கை மற்றும் பிற பாலின நிலைகளை உள்ளடக்கி அதனை சமூகம் எவ்வாறு அணுகிச் செயல்படுத்துகிறது என்பதும் பார்க்கப்படவேண்டும். அதேபோன்று, பாலினம் என்பதை ஒரு நபர் எவ்விதம் உணர்கிறார் என்பதன் மூலமும் தீர்மானிக்கப்படுகிறது.

பாலினச் சமூகவியல் ஆண்மை , பெண்மைக்கு இடையிலான வேறுபாடுகளை எவ்வாறு ஆராய்கிறது மற்றும் சமூகம் எவ்வாறு புரிந்துகொள்கிறது என்பதும் ஆகும். (ஆண்கள் மற்றும் பெண்களுக்குப்பொருத்தமான நடத்தை என்ன என்று சமூகம் கருதுவதைப் பார்ப்பது) இவை எவ்வாறு சமூக நடைமுறைகளின் அடையாளத்தைப் பாதிக்கின்றது என்பதை நாம் ஆராயவேண்டும்.


மேம்பாட்டிற்கான முக்கிய காரணிகள் : 

1. கல்வி : ஒருவருக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

2. பாலினப்பாகுபாடு : பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு அரிது.

3. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.


பெண் கல்வி


40 ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் 'அனைவருக்கும் கல்வி' என்ற உரிமையை வலியுறுத்தி உள்ளது.

கல்விபெறும் பெண்குழந்தை, தாயான பின்பு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் அரவணைப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கிறார். பெண் குழந்தைகளின் அவசியத் தேவையான கல்வி, அறிவினை பெறவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் அதனால் சமூகத்தில் அவர்களின் தகுதிநிலை உயரவும் அவர்களின் சுய முன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றது

நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை. அது நமது மகன்களைப்போல் பள்ளிக்குக் கல்வி கற்கச்செல்லும் நமது மகள்களின் கனவுகளில் உள்ளது. அவர்களே, இவ்வுலகத்தில் தாங்கிநிற்கும் வல்லமைக் கொண்டவர் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகளின் பொது சபையில், 2012 ஆம் ஆண்டு உரையாற்றும்போது கூறினார்.


பெண் கல்வியின் இணையற்ற முக்கியத்துவங்கள் 

1. அதிகரித்த கல்வியறிவு: 

உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட 63 சதவிகிதம் பேர் பெண்கள். எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்.

2. ஆள் கடத்தல்: 

ஆள் கடத்தலில் அதிகம் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களேயாகும். இளம் பெண்களுக்கு அடிப்படைத் திறன்கள் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதினால் ஆள் கடத்தல்கள் கணிசமாகக் குறைக்கப்படும் என்று ஆள்கடத்தல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் இடை முகமைத் திட்டம் விளக்குகின்றது. 

3. அரசியல் பிரதிநிதித்துவம்: 

உலகம் முழுவதும் பெண்கள் வாக்காளர்களாகவே உள்ளனர். அவர்களது அரசியல் ஈடுபாடு கட்டுப்படுத்தப்படுகிறது. குடிமைக்கல்வி மற்றும் குடிமைப் பயிற்சி அனைத்து விதமான மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைக்கின்றது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான தலைமை மற்றும் பங்கேற்பினைப் பற்றிய ஆய்வு பரிந்துரைக்கிறது. 

4. வளரும் குழந்தைகள்: 

கல்வியறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளை ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகரித்து ஐந்து வயதுக்கு மேல் வாழ வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 


5. காலம் தாழ்த்திய திருமணம்: 

பின்தங்கிய நாடுகளில் மூன்றில் ஒரு பெண்குழந்தைக்குப் பதினெட்டு வயதுக்குள் திருமணமாகிவிடுகிறது மற்றும் எந்த நாடுகளில் பெண்குழந்தைகள் ஏழு அல்லது அதற்கும் மேலான வருடங்கள் படிக்கிறார்களோ, அவர்களின் திருமணம் நான்கு ஆண்டுகள்வரை தள்ளிப்போகிறது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் பரிந்துரைக்கிறது. 

6. வருமான சாத்தியம்: 

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது. ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது. 

7. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்: 

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உயருகிறது. 10 சதவீதம் கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக மூன்று சதவிகிதம் அதிகரிக்கின்றது. 

8. வறுமை குறைப்பு: 

பெண்களுக்குக் கல்வியில் உரிமைகள் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்களும் பொருளாதார செயல்பாடுகளில் பங்கேற்பர். இதனால் அவர்களின் வருவாய் ஈட்டும் திறன் அதிகரித்து வறுமை அளவைக் குறைக்க வழி ஏற்படும்.

சாவித்ரிபாய் புலே, பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் ஆவார். பெண்கள் கல்வியை பற்றி பேசும்போதெல்லாம் நினைவில் வருபவர், இந்தியாவில் பெண் கல்வியை செயல்வடிவமாக்கிய ஜோதிராவ்புலே, சாவித்ரிபாயின் கணவர் ஆவார். இவர்கள் இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை 1848 ஆம் ஆண்டு தொடங்கினர்.



உலகின் முதன்மை பெண்மணிகள்

முதல் பெண் /  பெயர் / நாடு

பிரதம மந்திரி - சிறிமாவோ பண்டாரநாயக - இலங்கை 

விண்வெளி - வாலென்டினா தெரேஷ்கோவா – சோவியத் ஒன்றியம்

எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்டவர் - ஜன்கோ தபே - ஜப்பான் 

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் -  சார்லோட் கூப்பர் - இங்கிலாந்து


இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்

1. முதல் மகளிர் பல்கலைக்கழகம் மகர்ஷிகார்வே 1916 இல் ஐந்து மாணவிகளுடன் புனேவில் SNDT பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். 

2. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் விஜயலட்சுமி பண்டிட். 

3. மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ். 

4. மாநிலத்தின் இளம் வயது அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர் 25 வயதாக இருந்தபோது ஹரியானா அமைச்சரவையில் அமைச்சரானார். 

5. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு, ஒன்றிணைந்த மாகாணங்களின் பொறுப்பாளர் ஆனார். 

6. ஐக்கிய நாடுகளின் பொது சபையில் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட் (1953). 

7. இந்தியாவில் முதல் பெண் பிரதமர் - இந்திராகாந்தி (1966) 

8. முதல் பெண் காவல்துறை உயர் அதிகாரி - கிரண்பேடி (1972). 

9. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அன்னைதெரசா (1979). 

10. எவரெஸ்டை சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் பச்சேந்திரி பால் (1984). 

11. புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண் அருந்ததி ராய் (1997). 

12. முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் (2007). 

13. மக்களவையின் சபாநயகர் பதவிவகித்த முதல் பெண் சபாநாயகர் மீராகுமார் (2009).

14. உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி மீராசாகீப் பாத்திமா பிவி.

15. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் அன்னிபெசன்ட். 

16. இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் சுச்சித கிருபாளினி. 

17. முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா. 

18. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் 

19. இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்


பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவுக்கான காரணங்கள் 

1. பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை 

2. சமூகப் பாகுபாடு மற்றும் பொருளாதார சீரழிவு

3. பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது

4. பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு 

5. பள்ளிகளில் குறைந்த தக்கவைப்பு வீதம் மற்றும் அதிக இடைநிற்றல் விகிதம்


பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு 

• பெண்களின் பொருளாதார வளர்ச்சி அல்லது முன்னேற்றம் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. 

• மனித உரிமைகளை முன்னெடுக்கும் போதும் அதன் வளர்ச்சியின் போதும் பெண்கள் மேம்பாடு அவசியமான நடைமுறைகளில் ஒன்றாகும். 

• நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம், மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம் அடைவது ஆகியன அவசியக் காரணிகள் ஆகும்.


பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைவதால் ஏற்படும் நன்மைகள் 

1. பெண்களின் பொருளாதார மேம்பாடானது, பெண்கள் பாலியல் சமத்துவம் பெறுவதற்கும் உரிமைகளை அடைவதற்கும் வழிவகுக்கிறது. 

2. பெண்களைப் பொருளாதார முன்னேற்றமடைய செய்வதும், உலகில் பாலின இடைவெளிகளை குறைப்பதும் நிலைத்த நீடித்த இலக்கை அடைய உதவுகிறது. 

3. பொருளாதாரம் மேம்பாடு அடைகின்றது

இந்தியாவில் ஆண்/பெண் கல்வியறிவு விகிதம் (1951-2011)


4. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி இலக்கினை அடைவதன் மூலம் பெண்களால் பொருளாதார முன்னேற்றம் அடைய முடிகிறது. 

5. மூன்று அல்லது அதற்கு மேலான பெண்கள் ஒரு நிறுவனத்தில் செயல்படும்போது, அனைத்து பரிமாணங்களிலும் அந்த நிறுவனம் வளர்ச்சியடைகிறது.


பெண்களின் பொருளாதார மேம்பாட்டின் நோக்கங்கள் 

1. சட்டங்களில் பாலின வேறுபாடுகள் காணப்படுவது வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் பெண்களையும் பாதிக்கும். 

2. உலகத் தொழிலாளர் சந்தையில் பெண்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. 

3. ஆண்களைவிட பெண்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. 

4. முறைசாரா மற்றும் பாதிக்கப்படக்கூடிய வேலைகளில், பெண்கள் அதிகம் பணிபுரிகிறார்கள். 

5. உலகளவில் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. 

6. பெண்கள் சமமற்ற பொறுப்புணர்வுடன் ஊதியம் பெறாமல் வீட்டு பராமரிப்பு பணிகளைப் பார்க்கின்றனர். 

7. ஊதியம் பெறாத பராமரிப்பு பணி அவசியமான ஒன்று. ஆனால், அதை பொருளாதார செயல்பாடாகவோ அங்கீகாரமுடையதாகவோ கணக்கிடுவது இல்லை . 

8. பெண்கள் தொழில்முனைவோராக இருப்பது குறைவு. மேலும், அவர்கள் தொழில் தொடங்குவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். 

9. நிதி நிறுவனங்களையோ, வங்கிகளையோ ஆண்களை விட பெண்கள் குறைவாகவே அணுகுகிறார்கள்.

10. பெண்கள் இன்றளவும் சமூகப்பாதுகாப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. 

11. பணிபுரியும் இடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகள், பெண்களுக்கு வயது, இருப்பிடம், வருமானம், சமூகநிலை போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் ஏற்படுகிறது.

இந்திய சமூகம் பன்முகத்தன்மைக்கும் ஒற்றுமைக்கும் பெயர் பெற்றது. இந்திய சமுதாயத்தைப் போலவே வேறுபட்ட சமூகத்தின் பலவீனமான பிரிவினரைப் பெற்ற இந்த சமுதாயத்திலும் சமூக சமத்துவமின்மை நிலவுகிறது. அது பெண்கள், பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், குழந்தைகள், ஏழை, நிலமற்ற விவசாயிகள் ஆகியோரைப் பலவீனமான பிரிவினர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் பண்டைய காலத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தும் பிரிவின் கைகளில் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர். மேலும் உரிமைகள் மற்றும் நீதிக்கான அவர்களின் போராட்டம் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பலவீனமான குழுவிற்கு எதிரான முந்தைய பாகுபாட்டைப் போலவே பழையது.


சுருக்கம்

பெண்கள் அதிகாரம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள், இப்போது உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தனிப்பட்ட உரிமைகள் சமூக, சமத்துவம் அரசியல் சக்தி மற்றும் பொருளாதார வாய்ப்பு ஆகியவை பெண் அதிகாரமளிப்பின் அம்சங்களாகும். உலகின், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இலக்கை அடைய உண்மையிலேயே செயல்படுகின்றன. உலகின் மொத்த மக்கள்தொகையில் 50% பெண்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த உலகில் பெண்களை மேம்பாடு அடையச் செய்யாமல் உலக அமைதியையும் செழிப்பையும் நாம் கற்பனை செய்துகூடபார்க்க முடியாது. ஒவ்வொரு பெண்ணையும் ஒரு சுய சிந்தனையுடைய அதிகாரம் பெற்ற பெண்ணாக மாற்றுவது அனைவருடைய பொறுப்பாகும்.


சொற்களஞ்சியம்

1. பலவீனனைக் கொடுமைப்படுத்துபவர், கொடுமைக்காரர் – bully - to hurt or frighten someone, terrorise

2. ஆள் கடத்தல் – trafficking - the act of buying or selling people

3. வெற்றிகரமான – thriving - very lively and profitable, successful

4. வேலை, பணி – chores - task, duty

5. தேக்கி வைத்தல், வைத்திருத்தல் – retention -  the act of retaining something, with holding

6. தொழிலதிபர் - entrepreneur - a person who sets up a business or businesses

7. துன்புறுத்தல், தொல்லை கொடுத்தல் - harassment - aggressive pressure, irritation


Tags : Term 3 Unit 1 | Civics | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Civics : Term 3 Unit 1 : Women Empowerment : Women Empowerment Term 3 Unit 1 | Civics | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : பெண்கள் மேம்பாடு : பெண்கள் மேம்பாடு - மூன்றாம் பருவம் அலகு -1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : பெண்கள் மேம்பாடு