Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | முதல் உலகப்போர்

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு - முதல் உலகப்போர் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught

   Posted On :  27.07.2022 05:17 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

முதல் உலகப்போர்

அ) போருக்கு முந்தைய அதிகார அரசியல் ஐரோப்பா ஆ) போருக்கான காரணங்கள் i) கூட்டணிமுறையின் பரிணாமம்ii) 1905 முதல் 1913 வரை ஏற்பட்ட நெருக்கடிகள் மொராக்கோஇ) போரின் போக்கு போர் பரவுதல்(ஈ) பாரிஸ் அமைதி மாநாடு(உ) வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கூறுகள்

முதல் உலகப்போர்

அ) போருக்கு முந்தைய அதிகார அரசியல் ஐரோப்பா

புதிய நூற்றாண்டு பிறந்தபோது அக்கண்டத்தில் ஜெர்மனியே தொழிற்துறையில் மேம்பட்ட நாடாக விளங்கியது. எனினும் உலகின் பெருவாரியான பகுதிகளை பிற ஏகாதிபத்திய சக்திகளே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தன மன்னர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் காலத்தில் ஜெர்மனியும் தனது ஆட்சியின் கீழ் அதிகமான காலனிகளை கொண்டிருக்க விரும்பியது. அது வட ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்தும் லட்சியம் கொண்டிருந்தது. ஜெர்மானிய முதலாளிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் கிழக்கு திசை நோக்கிய விரிவை விரும்பியதால் அரசும் பெர்லின் முதல் பாக்தாத் வரை இருப்புப்பாதையை உருவாக்கி ஆட்டோமன் பேரரசை பொருளாதார அடிப்படையில் கட்டுப்படுத்தும் கடமை கொண்டிருப்பதாகக் கருதியது.


1871இல் நடந்த பிராங்கோ - பிரஷ்யப் போரில் பிரான்ஸ் தான் இழந்த அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளைத் திரும்பப்பெற்றுவிடும் குறிக்கோள் கொண்டிருந்தது. அந்நாடு தாதுவளம் மிக்க மொராக்கோ பகுதியை ஆப்பிரிக்காவில் இருந்த தனது பேரரசின் பகுதியாக மாற்ற நினைத்தது. ரஷ்ய நாடு மத்தியதரைக் கடல் பகுதியை அணுகவும், இஸ்தான்புல்லை தனதாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யும் என்பதால் பாஸ்போரஸ் பகுதியையும், டார்டெனெல்ஸ் பகுதியையும் (அச்சமயம் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்தது) தான் கொள்ள நினைத்தது. துருக்கி ஐரோப்பாவில் இருந்து ஒதுக்கப்பட்டால் பால்கன் பகுதி மீது தான் உரிமை கோரலாம் என ரஷ்யா திட்டம் தீட்டியது. இத்தாலிய வெளியுறவுக் கொள்கையின் அடிநாதமே ஆஸ்திரியாவிற்கும், துருக்கி நாட்டிற்கும் விரோதமானதாகும். இத்தாலிய மக்கள்தொகையை அதிகமாகக் கொண்டிருந்த டிரையஸ்ட் மற்றும் ஏட்ரியாட்டிக் கடற்கரைப்பகுதி மீது ஆஸ்திரியாவின் கட்டுப்பாடு உறுதியற்ற ஒன்றாகவே திகழ்ந்தது. இத்தாலி ட்ரிப்போலியையும், பிற வட ஆப்பிரிக்கப் பகுதிகளையும் ஆக்கிரமிப்பதை துருக்கி தடுத்தது பிரிட்டனைப் பொறுத்தவரை பெரும் தொழில் வளர்ச்சியையும், நீண்டு பரவிய பேரரசையும் கொண்டிருந்தபோதும் குறைந்த விலையிலான ஜெர்மன் பொருள்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருள்களும் இதன் சந்தையில் ஆக்கிரமித்ததால் அந்த வகையில் இவ்விரு நாடுகளோடு போட்டியிட வேண்டிய அவசியம் அதற்கு இருந்தது.


ஆசியா

மெய்ஜி சகாப்தத்தில் (1867-1912) படித்து கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட ஜப்பானில் தொழில் வளம் பெருகியதோடு, அம்மக்களிடையே ஆக்கிரமிப்பு அடிப்படையிலான தேசியவுணர்வு ஊற்றெடுத்து தாங்களும் உலக சக்திகளில் ஒன்றாகத் திகழவேண்டும் என்ற லட்சியம் உருவானது. இதனால் சீனாவை பிடிக்கும் போட்டியில் ஜப்பானும் களமிறங்கியது. அப்போது சுதந்திர நாடாக இருந்த கொரியா மீது ஜப்பான் படையெடுத்து அங்கிருந்த சீனப் படைகளை விரட்டியது. அதன்பின் நடந்த சீனா-ஜப்பானியப் போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட ஷிமனோசெகி உடன்படிக்கையின்படி (Treaty of Shimonoseki) ஜப்பானிற்கு ஃபார்மோசா, ஆர்தர் துறைமுகம், லியோடுங் தீபகற்பம் (Liaotung Peninsula) ஆகிய பகுதிகள் வழங்கப்பட்டன. சிறிய நாடான ஜப்பான், சீனாவை போரில் தோற்கடித்தமை (1894-95) உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜப்பானின் இந்த திடீர் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய ஐரோப்பிய சக்திகள் ஜப்பானை லியோடுங் தீபகற்பத்தை ஒப்படைக்கும்படி செய்தன. இந்த மூவர் தலையீட்டை " (TripleIntervention - பிரான்ஸ் , இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் 1895இல் செய்த குறுக்கீடு) சினத்தோடு எதிர்கொண்ட ஜப்பான் மிகப்பெரிய போர்த்தளவாடத் திட்டத்தை வகுத்தது.

பெரும் சக்திகளின் வசீகர வட்டத்தில் ஜப்பான்

சீனா-ஜப்பானியப் போரைக்காட்டிலும் ஜப்பான் ரஷ்யாவை 1904-05இல் நடந்த போரில் தோற்கடித்தமை பெரும் முக்கியத்துவம் கொண்டதானது. மூவர் தலையீட்டை தொடர்ந்து ரஷ்யா தெற்கு மஞ்சூரியாவை ஆக்கிரமித்தது. ஜப்பான் 1902ஆம் ஆண்டில் இங்கிலாந்தோடு ஒரு கூட்டணியை ஏற்படுத்தி அதன் வாயிலாக ரஷ்யாவை தமது படைகளை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியது. ரஷ்யா ஜப்பானை குறைத்து மதிப்பிட்டிருந்தது. 1904இல் போர் வெடித்துக் கிளம்பியது. ரஷ்ய-ஜப்பானியப் போரான இதில் ஜப்பான் வெற்றி பெற்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்தியஸ்தத்தின் கீழ் போர்ட்ஸ்ம வுத் உடன்படிக்கையை கையெழுத்திட்டு ஆர்தர் துறைமுகத்தை மீண்டும் பெற்றது. இப்போரின் வாயிலாக ஜப்பான் பெரும் சக்திகளின் வசீகர வட்டத்தில் நுழைந்தது.

1905க்குப் பின்னர் ஜப்பான் பின்பற்றிய வலுத்த-கர இராஜதந்திரம்

ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஜப்பானிய தூதர் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்பட்டது ஜப்பானுக்கு 1910இல் கொரியா மீது படையெடுக்க காரணமாக அமைந்தது. சீனாவில் 1912இல் மஞ்சு வம்சத்தின் வீழ்ச்சிக்குப்பின் நேர்ந்த குழப்பம் ஜப்பானுக்கு தனது எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. ஜப்பான் 1915ஆம் ஆண்டு புதிதாக உருவாகியிருந்த சீன குடியரசின் தலைவரான யுவான் ஷிகாய் முன்பு 21 நிர்ப்பந்தங்களை சமர்ப்பித்தது. இந்நிர்ப்பந்தங்களில் ஜெர்மானியர்களுக்கு சீன கடலோர மாகாணமான ஷாண்டுங்கில் வழங்கப்பட்டிருந்த உரிமையை தங்களுக்கு மாற்றிக் கொடுக்கவும், மஞ்சூரியாவில் ஜப்பானின் ஆதிக்கத்தை அங்கீகரிக்கவும், சீன அரசிற்கு ஜப்பானிய ஆலோசகர்களை நியமிக்கவும் கோரப்பட்டிருந்தது. பெருவாரியான ஜப்பானின் கோரிக்கைகளுக்கு சீனா உடன்படும்படியானது.

 


ஆ) போருக்கான காரணங்கள்

i) கூட்டணிமுறையின் பரிணாமம்

கூட்டணி முறையின் தோற்றம் 1870களில் இருந்து துவங்கியதாகத் தெரிகிறது. அதன் முதல் வடிவமைப்பாளர் பிஸ்மார்க் ஆவார். பிரான்ஸ் நாடு அல்சேசையும், லொரைனையும் இழந்தமைக்குப் பழிவாங்கக்கூடும் என்று பிஸ்மார்க் எதிர்பார்த்தார். அதனால் பிரான்சை தனிமைப்படுத்த அவர் தீர்மானம் கொண்டார். எனினும் ஜெர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய நாடுகளை இணைத்து அவர் 1873இல் உருவாக்க நினைத்த மூன்று பேரரசர்களின் கழகம் தோல்வியையே சந்தித்தது. ஆனால் தனது எல்லைக்குள்ளும், வெளியிலும் ஸ்லாவ்களிடமிருந்து பிரச்சனையை எதிர்நோக்கியிருந்த ஆஸ்திரியா மட்டும் ஜெர்மனியோடு ஆழ்ந்த புரிதலை விரும்பியதால் அந்நாட்டுடன் மட்டும் பிஸ்மார்க்கால் வலுவான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. இக்கூட்டணி 1882இல் இத்தாலியையும் தன்னகத்தே இணைத்ததால் மூவர் கூட்டணியாக விரிவடைந்தது.


ஜெர்மனியின் நகர்விற்கு எதிர்நகர்வை முன்வைக்க விழைந்த பிரான்ஸ் 1894 ஆம் ஆண்டு ரஷ்யாவோடு ஒரு இரகசிய இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி பிரான்சையோ, ரஷ்யாவையோ தாக்க ஜெர்மனியோ அல்லது ஜெர்மனியின் மேற்பார்வையில் ஆஸ்திரியாவோ, இத்தாலியோ முற்பட்டால் இருநாடுகளும் பரஸ்பரமாக உதவிக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே தனது தனிமையை தூக்கி எறிந்த பிரிட்டன் ஜப்பானோடு ஒரு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டது. பிரான்ஸ் ரஷ்யாவின் கூட்டு நாடு என்பதால் ஜப்பான் பிரிட்டனோடு (1902) நெருக்கம் கொள்வதை விரும்பியது. ஆங்கிலோ-ஜப்பானியக் கூட்டால் சுதாரித்த பிரான்ஸ், பிரிட்டனின் நட்பைக் கோரி மொராக்கோ, எகிப்து சார்ந்த பிணக்குகளைத் தீர்க்க முன்வந்தது. இது 1904இல் 'நாடுகளுக்குள் ஒத்துப்போகிற நட்புறவை ' (Entente Cordiale) விளைவித்தது. மொராக்கோவில் பிரான்சை தன்னிச்சையாக செயல்படவிடுத்து பிரிட்டன் எகிப்தை ஆக்கிரமித்தமைக்கு பிரான்சின் அங்கீகாரத்தைப் பெற்றது. தொடர்ந்து 1907இல் பிரிட்டன் ரஷ்யாவோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பாரசீகத்தை செல்வாக்கிற்குட்பட்ட கோளங்களாகப் பிரித்தது. இவ்வாறு பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளை அங்கமாகக் கொண்டு முக்கூட்டு நட்பு (Triple Entente) உருவாக்கப்பட்டது.

ஐரோப்பாவின் பெரும் சக்திகள் 1907ஆம் ஆண்டில் இரு எதிரெதிர் முகாம்களாக மூவர் கூட்டணி (ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி) என்றும், முக்கூட்டு நட்பு (பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா) என்றும் உருவெடுத்து நின்றன.

ii) 1905 முதல் 1913 வரை ஏற்பட்ட நெருக்கடிகள் மொராக்கோ

இங்கிலாந்தோடு ஏற்பட்ட புரிதலை முன்னிறுத்தி (Entente Cordiale, 1904) பிரான்ஸ் மொராக்கோவில் தனது திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைத்தது. ஒரு பிரெஞ்சு தூதுக்குழு 1905இல் மொராக்கோவின் ஃபெஸ் (Fez) நகரை வந்தடைந்து அதை பிரான்சின் பாதுகாப்பிற்குட்பட்ட (Protectorate) பகுதியாகவே கருதி செயல்பட்டது. இதற்கு ஜெர்மனி தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்த சர்ச்சையை ஐரோப்பிய மாநாடு ஒன்றனுக்கு எடுத்துச்செல்ல பிரான்ஸ் உடன்பட்டது. அல்ஜியர்ஸில் நடந்த அம்மாநாட்டில் எந்தப்பலனும் ஏற்படவில்லை . எனினும் பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராக பிரான்சை ஆதரித்தமை தெளிவுபட்டது.

அகாதிர், 1911

ஓராண்டுக்குள் பிரான்ஸ் மீண்டும் மொராக்கோவில் சுறுசுறுப்பாக செயல்படத் துவங்கியது. இம்முறை ஜெர்மானியர்கள் மொராக்கோவின் துறைமுகமான அகாதிருக்கு தங்களின் துப்பாக்கி பொருத்திய படகான பேந்தரை அனுப்பி அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த ஆர்வத்தை தெளிவுப்படுத்தினார்கள். பிரிட்டனிடம் இருந்து வரவிருந்த அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையை மேற்கொண்டு வளர்க்க ஜெர்மனி விரும்பவில்லை. எனினும் பிரான்ஸ் மொராக்கோவில் தனது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்கு ஆப்பிரிக்காவில் ஜெர்மனிக்கு தாராளமானப் பல சலுகைகளைக் கொடுத்தது.

போஸ்னிய சிக்கல்

ஆஸ்திரிய-ஹங்கேரி அதுவரை ஆஸ்திரியாவின் பாதுகாப்பில் இருந்த போஸ்னியாவையும் (செர்பிய மக்களை உள்ளடக்கியது), ஹெர்ஸிகோவினாவையும் 1908இல் திடீரென இணைப்பதாக அறிவித்ததினால் தொடர் சிக்கல்கள் தோன்றின. ரஷ்யப் போர்கப்பல்கள் பாஸ்போரஸ் மற்றும் டார்டெனெல்ஸ் பகுதிகள் வழியாக மத்திய தரைக்கடலுக்கு தடையின்றிச்செல்ல கடற்பாதை ஏற்படுத்திக் கொள்வதற்காக அந்நாடு மேற்கொண்ட உத்தியே இந்நகர்வாகும். இதனால் துருக்கியர்கள் சினமடைந்தாலும் அவர்கள் செய்வதறியாதிருந்தார்கள். கொந்தளிப்பிற்குள்ளான செர்பியா, ரஷ்யாவிடம் உதவி கோரியது. ஆனால் ஜப்பானுடன் நடத்தியப் போரின் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாமல் இருந்த ரஷ்யா தான் ஆஸ்திரிய-ஹங்கேரியை எதிர்த்தால் ஜெர்மனியின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் இதில் தலையிட விரும்பாமல் இருந்தது. ஆகவே செர்பியாவும், ரஷ்யாவும் தங்களுக்கு அனுகூலமான நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்கும்படி ஆயிற்று.

பால்கன் போர்கள்

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பாதியில் துருக்கி தென்மேற்கு ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த ஒரு நாடாகத் திகழ்ந்தது. அதன் இராஜ்ஜியம் பால்கன் பகுதிகளில் விரிந்து ஹங்கேரி முதல் போலந்து வரை சென்றது (பால்கன் பகுதி என்பது மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடலுக்கு இடைப்பட்ட தென்கிழக்கு ஐரோப்பியப் பகுதியாகும்). பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் துருக்கி எதிர்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்றத்தன்மை கிரீஸ் துவங்கி பல நாட்டினரும் துருக்கியின் கட்டுப்பாட்டை உடைத்து அந்நாட்டின் பகுதிகளைப் பிரித்தெடுக்க வழிசெய்தது.

முதலாம் பால்கன் போர்

மாசிடோனியாவை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா, கிரீஸ், செர்பியா, பல்கேரியா, சிறிது காலத்திற்குப்பின் மான்டி நீக்ரோ ஆகிய நாடுகள் 1912ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் உருவாக்கியதே பால்கன் ஐக்கியமாகும் (Balkan League). மாசிடோனியாவின் மக்கள் பல்வேறு இனப் பின்புலத்தை கொண்டவர்களாக விளங்கினர். போர் அக்டோபர் 1912இல் துவங்கி இரண்டே மாதத்திற்குள்ளாகவே துருக்கியர்களின் எதிர்ப்பை முறித்தது. ஐரோப்பிய மாகாணங்களிலிருந்து துருக்கியர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். ஆனால் பிரச்சனை வென்றெடுத்த பிரதேசங்களை பிரித்துக்கொள்ளும்போது ஏற்பட்டது. இறுதியாக மே 1913இல் கையெழுத்திடப்பட்ட லண்டன் உடன்படிக்கையின் கீழ் மாசிடோனியா பிரிக்கப்பட்டு அல்பேனியா என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது.

இரண்டாம் பால்கன் போர்

வெற்றிபெற்ற நாடுகள் மாசிடோனியாவை பிரிக்கும் முடிவில் சண்டையிட்டுக் கொண்டன. பல்கேரியர்கள் தங்களின் கூட்டு நாடுகளான செர்பியாவையும், கிரீசையும் தாக்கினாலும் தோல்வியே கிடைத்தது. துருக்கியர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாங்கள் இழந்திருந்த ஏட்ரிய நோப்பிளை மீண்டும் எடுத்துக்கொள்ள முனைந்தார்கள். இரண்டாம் பால்கன் போர் ஆகஸ்ட் 1913இல் புக்காரெஸ்ட் உடன்படிக்கையை கையெழுத்திட்டதோடு முடிவுக்கு வந்தது.

பால்கன் சிக்கலிலிருந்து இரண்டு கூறுகள் வெளிவருகின்றன. முதலாவதாக பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக செர்பியர்களை பழிவாங்க துடித்தனர். இரண்டாவதாக செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக்களிப்பில் திளைத்தார்கள். இக்காலம் முதற்கொண்டு ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும், அதன் அண்டை நாடான போஸ்னியாவிலும் மிகுந்த தீவிரவாதத்தன்மை கொண்டதாக மாறியது.

உடனடிக் காரணங்கள்

பால்கன் சம்பவங்களின் உச்சகட்டம் போஸ்னியாவின் செராஜிவோவில் நிகழ்ந்தது. ஆஸ்திரிய - ஹங்கேரியின் பேரரசர் ஃபிரான்ஸ் ஜோசப்பின் (Franz Joseph) வாரிசும், ஆர்ச்டியூக் அந்தஸ்தில் இருந்தவருமான ஃபிரான்ஸ் ஃபெர்டினான்ட் (Franz Ferdinand) 1914 ஜூன் 28 அன்று போஸ்னியாவில் மாணவராக இருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த பிரின்சிப் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை செர்பிய நாட்டின் தூண்டுதலினால் தான் நடந்ததாக ஆஸ்திரியா குற்றம் சாட்டியது. ஒரு மாதகாலத்தில் இறுதியறிக்கை (ultimatum) ஒன்றினை பெல்கிரேடுக்கு அளித்து அதனை நிபந்தனையில்லாமல் சரணடைய ஆஸ்திரியா செர்பியா கொடுத்த விளக்கத்தையும், மத்தியஸ்தம் புரிய ஜெர்மனி மேற்கொண்ட முயற்சிகளையும் ஆஸ்திரியா புறந்தள்ளியது. பிரிட்டன் போரை பரவாமல் ஒடுங்க செய்ய முயன்றது. ஆஸ்திரியா ஜூலை 28 அன்று செர்பியா மீது போர்ப்பிரகடனம் செய்து பெல்கிரேடை குண்டுவீசித் தாக்கியது. செர்பியாவிற்கு ஆதரவாக ரஷ்யா படைகளைத் திரட்டி குறுக்கிடக் கருதினாலும் அதற்கு முன்பு ஜெர்மனி தனது தாக்குதலைத் தொடுத்தது. அது ஆகஸ்ட் 1 அன்று ரஷ்யா மீதும், அதன் நட்பு நாடான பிரான்ஸ் மீதும் போரை பிரகடனம் செய்தது.


போரில் நேரடியாகப் பங்கெடுக்க பிரிட்டன் தயக்கம் காட்டியது. ஆனால் ஆகஸ்ட் 3 அன்று பிரிட்டிஷாரின் உதவியை நாடி பெல்ஜிய மன்னரிடத்திலிருந்து கோரிக்கை ஒன்று வந்தது. பெல்ஜியம் எந்த கூட்டு நாடுகளுக்கும் ஆதரவு நல்காமல் தனித்திருந்து வந்த நாடாகும். ஆயினும் அதனை ஜெர்மனி தாக்கியது. பெல்ஜியத்தின் நடுநிலையை ஜெர்மனி கலைத்தமை தீவிரக் கண்ணோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. பிரிட்டன் ஆண்டாண்டுகளாக கடைபிடித்துவரும் கொள்கையில் பெரும் சக்திகள் எவையும் பெல்ஜியத்தின் கடற்கரையை தனது பாதுகாப்பிற்கு எதிராக பயன்படுத்தி விடக்கூடாது என்பதும் அதற்கு முக்கியமானதாகும். இத்தேசிய பாதுகாப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டன் ஜெர்மனியை எதிர்த்துப் போரிட முடிவெடுத்தது. இதையடுத்து ஆகஸ்ட் 3 அன்று ஜெர்மனியை உடனடியாக பெல்ஜிய மண்ணைவிட்டு வெளியேறக் கூறி இறுதியறிக்கை ஒன்றை பிரிட்டன் அனுப்பியது. பிரிட்டனும், ஜெர்மனியும் ஆகஸ்ட் 4 முதல் போரை துவங்கின.

 


இ) போரின் போக்கு போர் பரவுதல்

போரில் பிரிட்டன் இறங்கியதிலிருந்து மிக குறுகிய காலத்தில் பிற நாடுகளும் சண்டையிடத் தயாராகி வந்தன. செர்பியாவுக்கு ஆதரவாக ஆகஸ்ட் 7 அன்று மான்டிநீக்ரோ களமிறங்கி ஆஸ்திரியாவை எதிர்த்தது. இரண்டு வாரங்களில் தூரக்கிழக்கு பிரதேசங்களிலிருந்த ஜெர்மனியின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கோடு ஜப்பான் ஜெர்மனி மீது போர்ப்பிரகடனம் செய்தது. அக்டோபர் மாதத்தில் கருங்கடலில் இருந்த ரஷ்யாவின் துறைமுகங்கள் மீது துருக்கி குண்டுகளை வீசியது. முக்கூட்டு நாடுகள் (Triple Entente Powers), ஆஸ்திரிய மற்றும் துருக்கியப் பகுதிகளைக் கொடுக்க வாக்களித்தமையால் மே 1915 வரை நடுநிலைவகித்த இத்தாலியும் போரில் இறங்கியது.

மைய நாடுகளும் நேச நாடுகளும்

போரில் இறங்கிய நாடுகள் மைய நாடுகள் என்றும் நேச நாடுகள் என்றும் இருவகைகளாகப் பிரிக்கப்பட்டன. ஜெர்மனி, ஆஸ்திரிய - ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகள் மைய நாடுகள் எனப்பட்டன. மைய நாடுகளை எதிர்த்த ஒன்பது நாடுகளாவன ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, பெல்ஜியம், செர்பியா, ருமேனியா, கிரீஸ் ஆகியவைகளாகும். பெருவாரியான அமெரிக்கர்கள் நடுநிலைவகிப்பதையே விரும்பியதால் அமெரிக்க ஐக்கிய நாடு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தார்மீக அளவிலான ஆதரவையும் பொருளுதவியையும் (விலைமதிப்பில்லா) தளவாடங்களையும் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் நல்கியது.

எல்லைகளில் நிகழ்ந்த போர்கள் மேற்கு திசை, 1914

தாங்கள் நடுநிலைவகித்தும் தங்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு ஜெர்மானியர்களுக்கு முறைமையான கண்டனத்தைப் பதிவுசெய்ததைத் தவிர்த்து பெல்ஜிய நாட்டால் வேறெதுவும் செய்யமுடியவில்லை . இதனால் முன்னேறி வரும் ஜெர்மானியப் படைகளை தடுத்து நிறுத்தும் சுமைகலந்தப் பொறுப்பானது பிரான்ஸ் நாட்டின் மீது விழுந்தது. பிரான்சால் பெருமளவில் படையெடுத்து வந்து கொண்டிருந்தவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை . ஜெர்மன் படைகளின் முதல் பிரிவு பாரிஸ் நகரிலிருந்து இருபது மைல்கள் தொலைவு வரை நெருங்கி வந்தது. பயங்கொண்ட பிரெஞ்சு அரசு போர்டியாக்ஸ் (Bordeaux) நகருக்குப் புலம்பெயர்ந்தது.

கிழக்கு திசை, 1914

கிழக்கு திசையில் ரஷ்யப்படைகள் பிரஷ்யாவின் கிழக்குப்பகுதி வரை ஊடுருவிச் சென்றன. டானென்பர்க் போரில் வான் ஹிண்டன்பர்க்கின் போர்த்திறத்தால் ரஷ்யா பேரிழப்புகளைச் சந்தித்தது. பின்னர் ஜெர்மானிய ஜெனரல் ஹிண்டன்பர்க் ரஷ்யர்களின் போலந்தை தாக்கப்படையெடுத்துச் சென்றார். இருதிசைகளிலும் பொறியில் சிக்கியது போன்ற நிலையிலிருந்த ஜெர்மனிக்கு கிழக்கில் தனது வெற்றிகள் யாவையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லுமளவிற்குப் போதுமான பொருள்வளம் இருக்கவில்லை.

கிழக்குப்புறத்தில் நடந்த சண்டைகளில் நேச நாடுகளுக்குப் பேரழிவு ஏற்பட்டாலும் அது எதிரிகளின் கவனத்தை திசைதிருப்பவும், பிரான்ஸ் நாடு எதிர்கொண்ட அழுத்தத்தில் இருந்து அதனை விடுவிக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்தியது. மார்னே (Marne) போரில் (1914 செப்டம்பர் 6-13) பிரான்ஸ் முன்னேறி வந்த ஜெர்மனியின் படைகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது. ஜெர்மானியர்கள் செப்டம்பர் 13 அன்று ஏறக்குறைய ஐம்பது மைல் தொலைவிற்கு புறந்தள்ளப்பட்டிருந்தார்கள். இவ்வாறு பாரிஸ் நகர் காக்கப்பட்டது.

ஜெர்மானிய காலனிகள் தாக்கப்படல்

கடலில் பிரிட்டன் கொண்டிருந்த கட்டுப்பாடு ஜெர்மனியை அதன் காலனிய நாடுகளுக்கு அவசரகால உதவிகள் எதையும் எடுத்து செல்லமுடியாதபடி செய்தது. அதனால் ஜெர்மானிய கிழக்கு ஆப்பிரிக்கா நீங்கலாக பிறபகுதிகள் போர் துவங்கிய சில மாதங்களிலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

மேற்கு திசை, 1915

பிரான்சை நிர்மூலமாக்க ஜெர்மனி எடுத்த முதல் முயற்சி தோற்றதும், மேற்கு திசையிலிருந்த எதிர் படைகள் ஆங்கில கால்வாய் முதல் சுவிட்சர்லாந்து வரையான 650 கிலோமீட்டர் தூரத்திற்கு குழிதோண்டி அகழிப் போர்முறையைக் கைக்கொண்டது, முள்வேலியின் பின்னிருந்து இருதரப்பும் எந்திரத் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் கொண்டு தாக்கிக் கொண்டே நான்கு ஆண்டுகள் முற்றுகைப் போரை (War of Attrition) நடத்தின.

அகழிப் போர்முறை: தோட்டாக்களும், குண்டுகளும் பறந்து கொண்டேயிருந்த போர்க்களங்களை உள்ளடக்கிய முதல் உலகப்போர் எழுப்பிய ஆபத்தான சூழல் வீரர்களைத் தங்கள் உடலையும், உயிரையும் பாதுகாக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டி அதனுள் அடைக்கலம் தேட வைத்தது. துருப்புகளால் தோண்டப்பட்ட அகழிகளோ, குழிகளோ அவர்களை குண்டுகள் வெளியிட்ட தீயிலிருந்து பாதுகாக்க உதவின. ஜெர்மானியர்கள் தங்கள் காலாட்படைப்பிரிவிற்கு நன்றாகத் தோண்டப்பட்ட அகழிகளையும், அதில் மின்சாரம் மற்றும் படுக்கை வசதிகளையும் செய்து கொடுத்தது. உலகப்போரை அடையாளப்படுத்தும் அகழி முறையானது இரண்டு முதல் நான்கு அகழிகள் ஒன்றனுக்கு இணையாக மற்றொன்று செல்வதேயாகும். ஒவ்வொரு அகழியையும் எதிரிகள் சுட்டாலும் சில அடிகளுக்கு மேல் தோட்டா செல்லமுடியாதபடி நேர்கோட்டில் இல்லாமல் வளைந்துநெளிந்து வடிவமைத்திருந்தனர். அகழிகளின் முக்கிய வரிசைகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவும், பின்புறத்தில் தொடர் இணைப்பு அகழிகளும் ஏற்படுத்தப்பட்டு அதன் வாயிலாக உணவு, வெடிபொருள்கள், புதிய துருப்புகள், கடிதங்கள், ஆணைகள் போன்றவை பரிமாற்றம் செய்யப்பட்டன.

சோம் (Somme) மற்றும் வெர்னில் (Verdun) நடந்த போர்கள், 1916)

நீண்டகாலம் பெரிய அளவில் நடத்திச் செல்லப்படும் போர் பிரெஞ்சுக்காரர்களின் மனவுறுதியை குலைத்துவிடும் என்று ஜெர்மானியர்கள் கருதினார்கள். அதனால் புகழ்பெற்ற படையரணாக விளங்கிய வெர்டூனை 1916ஆம் ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூலை வரையான காலத்தில் அவர்கள் தாக்கினார்கள். இருதரப்பிலும் இழப்புகள் கடுமையாக இருந்தன. பிரான்சின் முக்கியப் பகுதி தாக்கப்பட்டபோது அதன் முக்கிய பாரம் பிரிட்டன் மீது விழுந்தது. ஜெர்மானியர்களுக்கு எதிரான பிரிட்டிஷாரின் தாக்குதல் சோம் நதிக்கரையில் நடந்தது. இரண்டு மில்லியன் மக்கள் கலந்துகொண்ட வெர்ன் போரும், அதன்பின் நடந்த சோம் போருமே நேச நாடுகளின் பக்கமாக அதிர்ஷ்டத்தைத் திருப்பின.

ஜட்லாந்து, 1916

மிக முக்கியத்துவம் வாய்ந்த கடற்போர் மே 1916இல் டென்மார்க்கின் ஜட்லாந்து தீபகற்பத்திற்கு அருகில் நடந்தது. இப்போர் முடிவுபடாத ஒரு போராக இருந்தது. ஜட்லாந்து போர் முதல் உலகப்போரின் மிகப் பெரும் கடற்போராக நினைவில் கொள்ளப்படுகிறது. கடற்படைப் போர்கள் ஜெர்மானிய அரசு நீர்மூழ்கி கப்பல்களுக்கு தடையேற்படுத்தும் (Blockade) நோக்கம் கொண்ட நேச நாடுகளின் கப்பல்களைத் தடையில்லாமல் தாக்க அதிகாரம் வழங்கியபின் நின்றுபோனது.

Qகப்பல்களும்பபடகுகளும் முதல் உலகப்போரின் காலத்தில் ஜெர்மனி கொண்டிருந்த மிக அச்சுறுத்தும் ஆயுதம் நீர்மூழ்கிகள் அல்லது U-படகுகளாகும். பிரிட்டனின் கப்பல்கள் அனைத்தையும் மூழ்கடிக்கும் உத்தியை ஜெர்மானியர்கள் கடைபிடித்தார்கள். ஒரே மாதத்தில் 880,000 டன்கள் கனத்திற்கு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. Q- கப்பல்கள் பிரிட்டனின் ஜெர்மனிக்கான பதிலடியாகும். பிரிட்டன் 200க்கும் மேற்பட்ட நீராவி கப்பல்களையும், மீன்பிடி கப்பல்களையும், சரக்கு படகுகளையும் கொண்டு வாணிப நடவடிக்கையை மேற்கொள்வது போன்று ஒரு மாயபிம்பத்தை ஏற்படுத்தி U-படகுகள் விளைவித்த ஆபத்துகளை எதிர்கொண்டது. பிரிட்டன் இக்கப்பல்களின் வாயிலாக ஜெர்மனியை தாக்குதலைத் தூண்டச்செய்து பின் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் படைபலத்தையும் கொண்டு பதிலடி கொடுக்கும் உத்தியைக் கையாண்டது.

கிழக்கு திசையில் போர், 1917

ரஷ்ய சார் மன்னரின் ஆட்சி பிப்ரவரி 1917இல் கவிழ்க்கப்பட்டமை கிழக்குப்புறத்தில் மத்திய சக்திகளுக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்து அதன்பின் ஜெர்மனி தனது கவனத்தை மேற்குப்புறமாக குவிக்க வழிவகை செய்தது. அமைதியை விரும்பிய சோவியத் ரஷ்யா (1918 மார்ச் 3) ஜெர்மனியோடு பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

கலிபோலி படையெடுப்பு 1915-16: டார்டெனெல்ஸ் படையெடுப்பு என்றும் கூறப்படும் இப்படையெடுப்பு தோழமை நாடுகளால் ஐரோப்பாவிலிருந்து ரஷ்யாவிற்கு செல்லும் கடற்வழிப் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது. போதுமான உளவு தகவல்களை சேகரிக்காததும் போரிடும் பகுதியின் தன்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாததும் துருக்கியர்களின் கடும் எதிர்ப்பும் ஒரு சேர்ந்து படையெடுப்பின் வெற்றியைத் தடுத்தன. தாங்கள் துவங்கிய இடத்திலிருந்து சிறிதளவே முன்னேறி கடும் சேதங்களை சந்தித்தும் அக்டோபர் மாதத்தின் பாதி வரை தோழமை நாடுகள் தவித்துக் கொண்டிருந்தன.

காம்ப்ராய் போர் (Battle of Cambrai): (நவம்பர்டிசம்பர் 1917) பிரிட்டிஷாரால் அதிக அளவில் டாங்கி வகை பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டமை பிரான்சின் காம்ப்ராயில் நடந்தப் போரிலாகும். திடீரென 340 டாங்கிகள் போர்முனையில் தோன்றியதும் ஜெர்மானியர்கள் பெரும் திகைப்பிற்கு உள்ளானார்கள்.

போரில் அமெரிக்காவின் நுழைவு

நீர்மூழ்கிகளின் படையெடுப்பு உக்கிரமானபோது அமெரிக்கர்கள் போரில் நுழைந்தார்கள். பிரிட்டிஷாரின் லைனர் வகை கப்பலான லூசிடானியா (Lusitania) மே 1915இல் ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்பட்டபோது அதிலிருந்த 128 அமெரிக்கர்கள் மாண்டனர். ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்கு நடுநிலைவகித்து சமாளித்துக் கொண்டிருந்த குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சன் இறுதியாக அமெரிக்க மக்கள் கொடுத்த அழுத்தத்திற்கு இணங்கி ஏப்ரல் 1917இல் ஜெர்மனி மீது போர்ப்பிரகடனம் செய்தார். தனது அளவிடமுடியாத வளங்களோடு அமெரிக்காப் போரில் இறங்கியது நேச நாடுகளின் வெற்றியை முன்பே உறுதி செய்தது போலாயிற்று.


நட்பு நாடுகளால் ஜெர்மனி கைவிடப்படல்

மன்னர் பிரான்சிஸ் ஜோசப்பை தொடர்ந்து அரியணை ஏறிய பேரரசர் சார்லஸ் 1918 நவம்பர் 3 அன்று கையெழுத்திட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஆஸ்திரியாவைஅதிகாரமட்டத்தில் இருந்து வெளியேற்றியது. போர் நிறைவுபெற ஒரு சில வாரங்களே இருந்த சூழலில், ஜெர்மனியின் நட்பு நாடுகளனைத்தும் அதனைக் கைவிட்டு விலகின. முதலில் சரணடைய முன் வந்த நாடு பல்கேரியாவாகும். துருக்கியர்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவே விரும்பினர். ஜெர்மனி இயலவே இயலாத விஷயமான தனித்த நிலையில் போரை முன்னெடுத்துச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் துருப்புகளின் மனவுறுதி மிகவும் சரிவுற்றிருந்தது. தோழமை நாடுகள் ஏற்படுத்தியிருந்ததடுப்பரண்கள் ஜெர்மானிய மக்களுக்கு பெரும் சிரமங்களைக் கொடுத்தன. கெய்சர் அரியணையைத் துறந்து ஹாலந்திற்கு ஓட்டம் பிடித்தார். இதற்கிடையே சோஷலிச கட்சியின் தலைவரான ஃபிரெடிரிக் எபர்ட் (Fredrich Ebert) ரெய்க்ஸ்டாகில் (Reichstag) தற்காலிக அரசின் தலைமையை ஏற்று போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட பேச்சுவார்த்தையைத் துவங்கினார். ஜெர்மனி நவம்பர் 11 அன்று சரணடைவதாக கையெழுத்திட்டது.

       

(ஈ) பாரிஸ் அமைதி மாநாடு


அமைதி மாநாடு அமைதி மாநாடு ஜனவரி 1919இல் பாரிசில் துவங்கியது. நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உட்ரோ வில்சன் (அமெரிக்க ஐக்கிய நாடு), லாய்ட் ஜார்ஜ் (இங்கிலாந்தின் பிரதம அமைச்சர்), மற்றும் ஜார்ஜஸ் கிளெமென்ஸ் (பிரான்சின் பிரதம அமைச்சர்) ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். உட்ரோ வில்சனின் 14 சரத்து திட்டமே அமைதி பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக அமைந்தது. மற்றொரு போருக்கான அச்சுறுத்தும் சூழல் எழுந்ததால் ஜெர்மன் அரசு இச்சரத்துக்களை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டது. அமைதி உடன்படிக்கை 1919 ஜூன் 28 அன்று வெர்செய்ல்சில் உள்ள கண்ணாடி மாளிகையில் (Hall of Mirrors) கையெழுத்திடப்பட்டது.

குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சனின் முன்மொழிவு உள்ளடக்கியவைகளாவது : 1. திறந்த உடன்படிக்கைகள் வெளிப்படையாகவே உருவாக்கப்படுதல். 2. கட்டுப்பாடுகள் யாவும் கடல்வெளியில் தளர்த்தப்படல். 3. நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தடைகள் அகற்றப்படல். 4. போர்த்தளவாட உற்பத்தி குறைக்கப்படல். 5. காலனி சார்ந்த சிக்கல்களை சம்மந்தப்பட்ட மக்களின் விருப்பமறிந்து பாரபட்சம் காட்டாமல் தீர்விற்கு உட்படுத்தல். 6. ரஷ்யா தனக்கு ஏற்றதாகக்கருதும் எத்தகைய அரசையும் நிறுவ அதற்கு வாய்ப்பளிப்பதோடு அவ்வரசை பிறநாடுகள் ஏற்றுக்கொள்ளவும், ஆதரிக்கவும், வரவேற்கவும் செய்தல். 7. பெல்ஜியத்தை மீண்டும் சுதந்திர நாடாக்குதல். 8. அல்சேசையும், லொரைனையும் பிரான்சிடமே மீண்டும் ஒப்படைத்தல். 9. இத்தாலிய எல்லையை தேசிய அடிப்படையில் மறுநிர்ணயித்தல் 10. தேசிய சுயநிர்ண யம். 11. ருமேனியா, செர்பியா, மான்டி நீக்ரோ ஆகியவை மீண்டும் உருவாக்கப்பட்டு செர்பியாவிற்கு கடலை அடைய வழி ஏற்படுத்தல். 12. துருக்கி மக்களை தன்னாட்சி கொண்ட வளர்ச்சி முறைக்கு கொண்டு செல்வதோடு கருங்கடல் நீர்ச்சந்தியிலிருந்து மத்தியதரைக்கடல் வரை "நிரந்தரமாக திறந்துவிடல். 13. போலிஷ் மக்களுக்கென்றே சுதந்திரமான போலந்து உருவாக்கப்பட்டு அதற்கு கடல் தொடர்பு ஏற்படுத்துதல். 14. பன்னாட்டு சங்கத்தை ஏற்படுத்தல்.

தனித்தனியான உடன்படிக்கைகள் வரையப்பட்டு அவற்றை நேச நாடுகள் ஆஸ்திரியாவுடனும் (செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை), ஹங்கேரியுடனும் (டிரையனான்), பல்கேரியாவுடனும் (நியூலி), துருக்கியுடனும் (செவ்ரெஸ்) கையெழுத்திட்டுக் கொண்டன. துருக்கியோடு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை (செவ்ரெஸ் உடன்படிக்கை) சுல்தான் ஏற்றுக்கொண்டாலும், கமால் பாஷாவும், அவரது தொண்டர்களும் அதை எதிர்த்ததால் அது தோற்றது.

 
(உ) வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கூறுகள்

வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கூறுகள் சுருக்கமாகக் கீழ்வருமாறு: அல்சேசையும், லொரைனையும் ஜெர்மனி பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும். சார் பள்ளத்தாக்கின் நிலக்கரி சுரங்கங்கள் பிரான்சிடம் வழங்கப்பட வேண்டும். சார் பகுதி 1935 வரை பன்னாட்டு சபையால் நிர்வகிக்கப்பட்டு, அதன்பின் பொது வாக்கெடுப்பின் வாயிலாக அப்பகுதி தொடர்ந்து பன்னாட்டு சபையால் நிர்வகிக்கப்படுவதா அல்லது ஜெர்மனியிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவதா அல்லது பிரான்சுக்கு பரிசளிப்பதா என்று முடிவெடுக்கப்பட வேண்டும். ரஷ்யா, ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குள் பிரிந்து கிடந்த போலந்து மாகாணங்களை ஒன்றிணைத்து பால்டிக் கடல் வெளிக்கு ஜெர்மானிய துறைமுகமான டான்சிக்கை (Danzig) உள்ளடக்கிப் பாதையமைத்து, அதனை பன்னாட்டு சபையின் அரசியல் கட்டுப்பாட்டில் விடுக்க வேண்டும். உரிமைகள், பட்டங்கள், கடல்வெளியில் ஜெர்மனி வைத்திருந்த பகுதிகள் யாவையும் தோழமை நாடுகளுக்கு விட்டுக்கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. ஜெர்மானிய காலனிகள் யாவும் பன்னாட்டு சபையின் கட்டாயத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

பிரான்ஸ் மீதும், பெல்ஜியம் மீதும் புதிய தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு ரைன் பள்ளத்தாக்கில் அரண் அமைக்கவோ, படைகளைக் குவிக்கவோ ஜெர்மனிக்கு தடைவிதிக்கப்பட்டது. தோழமை நாடுகள் ரைன்லாந்தை ஆக்கிரமிக்க முடிவுசெய்யப்பட்டது. ரைன் நதியின் கிழக்குக்கரைப்பகுதிகள் இராணுவக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுவதென்றானது. கிழக்கு ஐரோப்பாவில் பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையின் கீழ் ரஷ்யா ஜெர்மனிக்கு விட்டுக்கொடுத்த மாகாணங்களான பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவற்றை சுதந்திர குடியரசுகளாக மாற்றவும் உத்தேசிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திற்கு தனது இருப்பை இழந்திருந்த போலந்து பல போலிஷ் மாகாணங்களை இணைத்ததின் வாயிலாகப் புத்துயிர் பெற்றது.

ஜெர்மனி நிராயுதபாணியாக்கப்பட்டு அதன் நீர்மூழ்கிக் கப்பல்களையும், போர்கப்பல்களையும் இழக்கச் செய்யப்பட்டது. இராணுவப் பயன்பாட்டிற்காகவோ, கப்பற்படையின் தேவைக்கென்றோ ஜெர்மனி விமானங்களைக் கொண்டிருக்கக்கூடாது

என்றதோடு அதன் தரைப்படை அதிகாரிகளையும், பிறப் பணியாளர்களையும் சேர்த்து 100,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டக்கூடாதென்றும் வரையறுக்கப்பட்டது. ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் ஐக்கியமாதல் தவிர்க்கப்பட்டு ஜெர்மனி ஆஸ்திரியாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வற்புறுத்தப்பட்டது.

ஜெர்மனியும் அதன் கூட்டு நாடுகளுமே போரில் விளைந்த இழப்புகளுக்கும், சேதங்களுக்கும் பொறுப்பெனக் கொள்ளப்பட்டது. போர் சேதங்கள் 1921இல் கணக்கிடப்பட்டு 33 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.

ஜெர்மானியப் பேரரசர் இரண்டாம் வில்லியம் மீது நன்னடத்தையை மீறியமை , ஒப்பந்தங்களின் புனிதத்தன்மையை மதிக்கத் தவறியமை போன்ற உச்சபட்ச குற்றங்கள் சுமத்தப்பட்டது. அவரை ஒரு தீர்ப்பாயத்தின் மூலம் விசாரிக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால் நெதர்லாந்து அரசு பேரரசரை ஒப்படைக்க மறுத்துவிட்டதால் விசாரணை நடத்த எடுக்கப்பட்ட முடிவு கைவிடப்பட்டது.

Tags : Imperialism and its Onslaught | History ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 13 : Imperialism and its Onslaught : World War I Imperialism and its Onslaught | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் : முதல் உலகப்போர் - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்