Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | p-தொகுதி தனிமங்கள்-I

வேதியியல் - p-தொகுதி தனிமங்கள்-I | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I

   Posted On :  13.07.2022 09:05 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I

p-தொகுதி தனிமங்கள்-I

ஒரு தனிமத்தின் கடைசி எலக்ட்ரான் p-ஆர்பிட்டாலில் சென்று நிரம்புமாறு உள்ள தனிமங்கள் அடங்கிய தொகுதி p-தொகுதி என அழைக்கப்படுகின்றது.

அலகு 2

p-தொகுதி தனிமங்கள்-I



கென்னத் வேட் (1932-2014)

கென்னத் வேட் ஒரு பிரிட்டிஷ் வேதியியல் அறிஞர் ஆவார். டுர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். அவர் போரேன் கொத்துத் திரள் சேர்மங்களின் (borane clusters) வடிவங்களை கணிக்கும் முறையினை உருவாக்கினார். வேட் உருவாக்கிய விதிகளைப் பயன்படுத்தி, திரள் பிணைப்பிற்கு கிடைக்கக்கூடிய வெளிக்கூட்டு - எலக்ட்ரான் இரட்டைகளை (SEP) கணக்கிடுவதன் மூலம் போரேன் திரள்களின் வடிவங்களை பகுத்தறியலாம். இவரது பங்களிப்பிற்காக, கென்னத் வேட் அவர்களுக்கு,1989 இல் இலண்டன் ராயல் சொசைட்டியின் FRS விருதும் 1990 ஆம் ஆண்டு டில்டன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது..


கற்றலின் நோக்கங்கள்

இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர் 

* p-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கினை விவரித்தல்

* p-தொகுதி தனிமங்களில் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளை விளக்குதல்

* போரானின் தயாரிப்பு முறைகள், பண்புகள் மற்றும் பயன்களை விவாதித்தல், போரான் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் முக்கிய சேர்மங்களின் தயாரிப்பு முறைகளை விவாதித்தல்

* கார்பன் மற்றும் சிலிக்கன் ஆகியவற்றின் முக்கிய சேர்மங்களின் தயாரிப்பு முறைகளை விவாதித்தல், ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்.



அறிமுகம்:

தனிம வரிசை அட்டவணையில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் s, p, d மற்றும் f என நான்கு தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டிருப்பதை நாம் ஏற்கனவே கற்றறிந்தோம். S-தொகுதி தனிமங்களின் பண்புகள் பற்றியும், அவற்றின் முக்கியமான சேர்மங்களைப் பற்றியும் பதினொன்றாம் வகுப்பில் கற்றறிந்தோம். p-தொகுதி தனிமங்களில் தொடங்கி, மற்ற பிற தொகுதிகளில் இடம்பெற்றுள்ள தனிமங்களைப்பற்றி இவ்வாண்டில் கற்றறிவோம்.

ஒரு தனிமத்தின் கடைசி எலக்ட்ரான் p-ஆர்பிட்டாலில் சென்று நிரம்புமாறு உள்ள தனிமங்கள் அடங்கிய தொகுதி p-தொகுதி என அழைக்கப்படுகின்றது. இத்தனிமங்கள் நவீன தனிம வரிசை அட்டவணையில் 13 முதல் 18 ஆம் தொகுதி வரை இடம் பெற்றுள்ளன. மேலும் இத் தொகுதிகளில் காணப்படும் முதல் தனிமங்கள் முறையே B, C, N, O, F மற்றும் He ஆகியனவாகும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் பலதரப்பட்ட பண்புகளை பெற்றுள்ளன, மேலும் அலோகங்கள், உலோகங்கள் மற்றும் உலோகப் போலிகளும் காணப்படுகின்றன. இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள அலோகத் தனிமங்கள் உலோகத் தனிமங்களைக் காட்டிலும் பல்வேறு வகையான மாறுபடும் பண்புகளைப் பெற்றுள்ளன. இத்தொகுதி தனிமங்களும், அவற்றின் சேர்மங்களும் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, மூலக்கூறு ஆக்ஸிஜன் இல்லாமல் நாம் உயிர்வாழ்வதலை கற்பனைக்கூட செய்ய இயலாது. மிக அதிகளவில் காணப்படும் அலுமினியம் மற்றும் அதன் உலோக கலவைகள், வீட்டு உபயோக பாத்திரங்கள் முதல் விமான பாகங்கள் வரையிலான பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம் போன்ற தனிமங்களின் குறைக்கடத்தும் பண்பானது, நவீன மின்னணுவியல் துறையில் பெரும் புரட்சியை உண்டாக்கியுள்ளது. இந்த அலகில் p-தொகுதி தனிமங்களில் முதல் மூன்று தொகுதிகளான (தொகுதி 13 முதல் 15 வரை) போரான், கார்பன் மற்றும் நைட்ரஜன் தொகுதி தனிமங்களின் பண்புகளைப் பற்றி நாம் கற்றறிவோம்.





Tags : Chemistry வேதியியல்.
12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I : p-Block Elements-I Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I : p-தொகுதி தனிமங்கள்-I - வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I