நியூட்டனின்
இயக்க விதிகள்
1. நியூட்டனின் முதல்
விதி
ஒவ்வொரு
பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக்
கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும். இவ்விதி விசையினை வரையறுக்கிறது.
அது மட்டுமின்றி, பொருட்களின் நிலைமத்தையும் விளக்குகிறது.
2. விசை
விசை என்பது 'இழுத்தல்' அல்லது 'தள்ளுதல்' என்ற
புறச்செயல் வடிவம் ஆகும். இதை கீழ்கண்டவாறு விளக்கலாம்.
1. ஓய்வில் உள்ள
பொருளை இயக்குவதற்கு அல்லது இயக்க முயற்சிப்பதற்கான செயல்.
2. இயங்கி
கொண்டிருக்கும் பொருளை நிறுத்த அல்லது நிறுத்த முயற்சிப்பதற்கான செயல்.
3. இயங்கி
கொண்டிருக்கும் பொருளின் திசையினை மாற்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல் ஆகும்.
விசையானது எண்மதிப்பும் திசையும்
கொண்ட ஒரு வெக்டார் அளவாகும்.
3. விசையின் வகைகள்
விசைகளை, அவை செயல்படும்
திசை சார்ந்து கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
(அ) ஒத்த இணைவிசைகள் :
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட
சமமான அல்லது சமமற்ற விசைகள்,
ஒரே திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை ஒத்த இணைவிசைகள்
என்றழைக்கப்படுகின்றன.
(ஆ) மாறுபட்ட இணைவிசைகள்:
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட
சமமான அல்லது சமமற்ற
விசைகள், எதிர்
எதிர்திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை மாறுபட்ட இணைவிசைகள்
என்றழைக்கப்படுகின்றன.
இவ்விசைகளின் செயல்பாடுகளை அட்டவணை 11ல் அறியலாம்.
4. தொகுபயன் விசை (Resultant
force)
ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள்
செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை தொகுபயன் விசை என்றழைக்கப்படுகிறது. இதன்
மதிப்பு, செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டார்
கூடுதலுக்குச் (விசைகளின் எண்மதிப்பு மற்றும் திசை ஆகியவற்றின் கூடுதல்) சமமாகும்.
தொகுபயன் விசையின் மதிப்பு சுழி
எனில் பொருள் சமநிலையில் உள்ளதென அறியலாம். இவ்விசைகள் சமன் செய்யப்பட்ட விசைகள்
எனப்படும். தொகுபயன் விசை மதிப்பு சுழியில்லை எனில், அவை பொருட்களின் இயக்கத்திற்கு காரணமாக
அமைகின்றன. இது சமன் செய்யப்படாத விசைகள் எனப்படும்.
எ.கா. கிணற்றில் இருந்து நீர்
எடுக்க செயல்படும் விசை, நெம்புகோலின் மீது செயல்படும் விசை, தராசுத்தட்டுகளில்
செயல்படும் விசை முதலியன சமன் செய்யப்படாத விசைகளுக்கு எடுத்துக்காட்டுகள்
அகும்
தொகுபயன் விசைக்கு சமமான, ஆனால் எதிர்
திசையில் செயல்படும் ஒரு விசையானது பொருட்களை சம நிலைக்கு கொண்டுவர உதவுகிறது.
இவ்விசையை ‘எதிர்சமனி’ (Equilibrant)
என்று அழைக்கப்படுகிறது.
5. விசையின் சுழல்
விளைவு
கதவுகளில் கைப்பிடி எந்த இடத்தில்
பொருந்தியுள்ளது? மற்ற இடத்தில் வைக்காமல் ஏன் எப்போதும் கதவுவின் விளிம்பருகில் அவை
பொருத்தப்பட்டுள்ளன? கதவினை, விளிம்புகளில்
பிடித்து இழுப்பது அல்லது தள்ளுவது எளிதானதா? அல்லது சுவரின்
இணைப்பு கீல் (Hinges) பகுதியின் அருகில் பிடித்து இழுப்பது
அல்லது தள்ளுவது எளிதானதா?
கதவினை திறக்க அல்லது மூட, விசையினை
விளிம்புகளில் செலுத்துவது எளிதானதாகும். கதவின் இணைப்பு அச்சிலிருந்து
விளிம்பானது தொலை தூரத்தில் உள்ளது. எனவே அங்கு செயல்படும் விசை அதிக சுழல்
விளைவினை ஏற்படுத்துகிறது. கதவில் உள்ள நிலையான இணைப்பு அச்சு, ‘சுழல் அச்சு’ (Axis of rotation) என்றழைக்கப்படும்.
தண்டொன்றின் ஒரு முனையை தரையிலோ
அல்லது சுவரிலோ நிலையாக பொருத்தி,
மறுமுனையில் தண்டின் தொடுகோட்டின் வழியே விசை செயல்படுத்தப்பட்டால்,
தண்டானது நிலைப்புள்ளியை மையமாக வைத்து சுழலும். இப்புள்ளி “சுழற்புள்ளி" (Point of rotation) எனப்படும்.
6. விசையின்
திருப்புத்திறன்
விசையானது ஒரு புள்ளியில் அல்லது
ஒரு அச்சில் ஏற்படுத்தும் சுழற் விளைவினை அதன் திருப்புத்திறன் மதிப்பின் மூலம்
அளவிடலாம்.
ஒரு புள்ளியில் மீது செயல்படும் விசையின்
திருப்புத்திறன் τ ஆனது, விசையின் எண்
மதிப்பு F- ற்கும், நிலையான புள்ளி
மற்றும் விசை செயல்படும் அச்சிற்கும் இடையே உள்ள செங்குத்து தொலைவு d க்கும், உள்ள பெருக்கற் பலனைக் கொண்டு அளவிடப்படுகிறது.
τ =
F × d …………… (1.2)
இது ஒரு வெக்டார் அளவாகும். இதன்
திசையானது விசை செயல்படும் அச்சின்திசை மற்றும் தொலைவின் தளத்திற்கு, செங்குத்து
திசையில் இருக்கும். இதன் SI அலகு நியூட்டன் மீட்டர் (Nm)
அகும்.
இரட்டை (Couple):
இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில்
ஒரு பொருளின் இரு வேறு புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால், அவை ‘இரட்டை விசைகள்' அல்லது ‘இரட்டை’ என்றழைக்கப்படும். அவை ஒரே
நேர்க்கோட்டில் செயல்படாது.
இரட்டைகளின் தொகுபயன்விசை மதிப்பு
சுழியாதலால் இவை நேர்க்கோட்டு இயக்கதினை ஏற்படுத்தாது. ஆனால் சுழல் விளைவினை
ஏற்படுத்தும். இதை இரட்டைகளின் திருப்புத்திறன் என்றழைக்கிறோம்.
எ.கா. நீர் குழாய் திறத்தல் மற்றும்
மூடுதல், திருகின் சுழற்சி,
பம்பரத்தின் சுழற்சி முதலானவை.
இரட்டையின் சுழற்விளைவு, அதன் திருப்புத்
திறன் மதிப்பு கொண்டு அளவிடப்படுகிறது. இம்மதிப்பு எதெனும் ஒரு விசையின்
எண்மதிப்பு மற்றும் இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு, இவைகளின் பெருகற்பலனுக்கு சமமாகும்.
இரட்டையின் திருப்புத்திறன்(M) = விசையின் எண்
மதிப்பு(F) × இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு(S)
M = F × S ……………………. (1.3)
இதன் SI அலகு நியூட்டன்மீ,
CGS அலகு முறையில் டைன் செமீ ஆகும். விசையின்
திருப்புத்திறன் ஒரு வெக்டார் அளவாகும். திருப்புத்திறனின் திசை, பொருட்களின் சுழற்சி வலஞ்சுழியாக இருப்பின் எதிர்க்குறியாகவும்,
இடஞ்சுழியாக இருப்பின்
நேர்க்குறியாகவும் கொள்ளப்படுவது மரபாகும். இது படம் 1.4 (a) மற்றும் (b)ல் காட்டப்பட்டுள்ளது.
7. விசையின்
திருப்புத்திறன் செயல்படும் சில எடுத்துக்காட்டுகள்
1. பற்சக்கரங்கள் (Gears)
பற்ச சக்கரங்கள் வட்டப்பரப்பின்
விளிம்புகளில் பல் போன்று மாற்றம் செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும். பற்சக்கரங்கள்
மூலம் திருப்புவிசையினை மாற்றி இயங்குகின்ற வாகனசக்கரங்களின் சுழற்சி வேகத்தை
மாற்றலாம். மேலும் திறனை கடத்துவதற்கும் பற்சக்கரங்கள் உதவுகின்றன.
2. ஏற்றப்பலகை: (seesaw play):
நீங்கள் ஏற்றப்பலகை விளையாட்டினை
விளையாடி இருப்பீர்கள். அதில் அமர்ந்துள்ள எடை அதிகமான ஒருவர், மற்றொருவரை எளிதில்
தூக்குகிறார். எடை அதிகமான நபர் பலகையின் ஆதாரப்புள்ளியினை நோக்கி நகரும் போது,
விசை செயல்படும் தூரம் குறைந்து, திருப்புவிசையின்
செயல்பாடு குறைகிறது. இது எடை குறைவான நபரானவர், எடை அதிகமான
நபரை தூக்க வழி வகை செய்கிறது.
3. திருப்புச்சக்கரம் (steering wheel)
மிக வலுவான மகிழுந்து மற்றும் பார
உந்துகளின் சக்கரங்களின் திசையினை, குறைவான திருப்பு விசை கொண்டு எளிதில் மாற்ற
திருப்புச்சக்கரம் உதவுகிறது.
8. திருப்புத்திறன்களின்
தத்துவம் (principle of moments) தத்துவம்
சமநிலையில் உள்ள பொருள் ஒன்றின்
மீது சம் மதிப்புள்ள அல்லது சம் மதிப்பற்ற விசைகள் இணையாகவோ அல்லது எதிர் இணையாகவோ
செயல்பட்டால், அப்பொருளின் மீது செயல்படும் மொத்த வலஞ்சுழி திருப்புத்திறனும், மொத்த இடஞ்சுழி திருப்புத்திறனும் சமமாக இருக்கும்.
அல்லது சமநிலையில் உள்ள போது ஒரு
புள்ளியின் மீது செயல்படும் அனைத்து விசைகளின் திருப்புத்திறன்களின் கூடுதல்
சுழிக்கு சமமாகும்.
மேற்கண்ட படம் 1.5ல் சமநிலையில்
உள்ள பொருள் ஒன்றில், ஆதார மையம் P ல்
இருந்து d1, தொலைவில் இயங்கும் விசையான F1,
இடப்பக்கச் சுழற்சியினையும், ஆதார மையம் P
ல் இருந்து d2, தொலைவில் இயங்கும்
விசையான F2, வலப்பக்கச் சுழற்சியினையும்
ஏற்படுத்துகிறது.
திருப்புத்திறன்களின் தத்துவத்தின்
படி
வலஞ்சுழி திருப்புத்திறன் =
இடஞ்சுழி திருப்புத்திறன்
F1 × d1 = F2
× d2 ……………………. (1.4)