முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஷாஜகான் (1627-1658) | 7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire
ஷாஜகான் (1627-1658)
ஜஹாங்கீரைத் தொடர்ந்து, இளவரசர் குர்ரம் ஒரு அதிகாரப் போராட்டத்திற்குப் பின்னர் ஷாஜகான் (உலகத்தின் அரசர்) என்ற பெயருடன் அரசராக ஆட்சிப் பொறுப்பெற்றார். அகமது நகருக்கு எதிராகப் படையெடுத்த அவர் 1632 இல் அதை இணைத்துக் கொண்டார். பீஜப்பூரும் கோல்கொண்டாவும் கைப்பற்றப்பட்டன. இச்சமயத்தில் சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே (சிவாஜியின் தந்தை) போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மராத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர். இதனால், தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது. சமய விடயங்களில் ஷாஜகான் சகிப்புத்தன்மை அற்றவராக விளங்கினார். இவருடைய ஆட்சிக் காலத்தில் முகலாயரின் புகழ் அதன் உச்சத்தை எட்டியது. அது பாடத்தின் அடுத்த பகுதியில் விரிவாகக் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
1657 இல் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய நான்கு மைந்தர்களுக்குள் வாரிசு உரிமைப்போர் வெடித்தது. தம்முடைய மூன்று சகோதரர்களான தாரா, சூஜா, முராத் ஆகியோரைக் கொன்று ஔரங்கசீப் வெற்றிபெற்றார். தம் வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை ஷாஜகான் ஒரு கைதியாக ஆக்ரா கோட்டையிலுள்ள ஷாபர்ஜ் அரண்மனையில் கழித்தார்.