Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பெண்கள் இயக்கங்கள்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - பெண்கள் இயக்கங்கள் | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu

   Posted On :  27.07.2022 07:50 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

பெண்கள் இயக்கங்கள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன.

பெண்கள் இயக்கங்கள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன. அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்தியப் பெண்கள் சங்கம் (Women's India Association - WIA), அகில இந்தியப் பெண்கள் மாநாடு (All India Women's conference - ALWC) ஆகியவை முக்கியமானவையாகும். இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது. இவ்வமைப்பு தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டன. இதே சமயத்தில் இந்தியப் பெண்கள் சங்கம், பெண்கல்வி குறித்த பிரச்சனைகளைக் கையாள்வதற்காக 1927இல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது. மேலும் அரசு பெண்களின் மேம்பாட்டிற்காகப் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.


பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர், பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினர். தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டு கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர். முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

கடவுளுக்கு இறைப்பணி செய்யும் சேவகர்களாக இளம் பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்டோர் தேவதாசி என்று அறியப்பட்டனர். கடவுளுக்குச் செய்யப்படும் சேவை எனும் நோக்கில் அமைந்திருந்தாலும் நாளடைவில் இம்முறை பெரும் ஒழுக்கக்கேட்டிற்கும் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் இட்டுச்சென்றது. இத்தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற இயக்கத்தில் டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் முதலிடம் வகித்தார். ‘மதராஸ் (அர்பணிப்பைத் தடுத்தல்) தேவதாசி சட்டம் 1947’ எனும் சட்டம் அரசால் இயற்றப்பட்டது.

1930இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் “சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது” எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம் மசோதாஇந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு வழிபாட்டு இடங்களிலோ “பொட்டுக் கட்டும் சடங்கு” நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானதாகும் என அறிவித்தது தேவதாசிகள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அனுமதியை வழங்கிய முறைக்கு உதவிசெய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய்வோர்க்கு குறைந்த பட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது. இம்மசோதா சட்டமாக மாறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருந்தது.


Tags : Social Transformation in Tamil Nadu தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்.
10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu : Women’s Movements Social Transformation in Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : பெண்கள் இயக்கங்கள் - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்