Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | விலங்கினங்களின் தகவமைப்பு

விலங்குலகம் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - விலங்கினங்களின் தகவமைப்பு | 6th Science : Term 1 Unit 5 : Living World of Animals

   Posted On :  16.09.2023 01:40 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம்

விலங்கினங்களின் தகவமைப்பு

ஓர் உயிரினம் தன் உடலை ஒரு குறிப்பிட்ட வாழிடத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டால்தான், அது அங்கு உயிர்வாழ முடியும். தாவரங்களும், விலங்குகளும் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கேற்ப சிறப்புத் தன்மைகளையும், பண்புகளையும் பெற்றுள்ளன.

விலங்கினங்களின் தகவமைப்பு

ஓர் உயிரினம் தன் உடலை ஒரு குறிப்பிட்ட வாழிடத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டால்தான், அது அங்கு உயிர்வாழ முடியும். தாவரங்களும், விலங்குகளும் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கேற்ப சிறப்புத் தன்மைகளையும், பண்புகளையும் பெற்றுள்ளன. தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கேற்ப, தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகளே தகவமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.


மீன்

மீன்கள் நன்னீர் அல்லது கடல்நீரில் வாழ்கின்றன. மீன்களின் நீர்வாழ் தகவமைப்புகளை இங்கு காண்போம்.

1. மீனின் தலை, உடல் மற்றும் வால் ஆகியவை இணைந்து படகு போன்ற வடிவத்தை உருவாக்குகின்றன. மீனின் படகு போன்ற உடல் அமைப்பு அது நீரில் எளிதாகவும், வேகமாகவும் நீந்த உதவுகிறது.

2 மீன்கள் செவுள்கள் எனப்படும் சிறப்பு உறுப்புகளைப் பெற்றுள்ளன. இது நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவுகிறது. இவை நீரில் சுவாசிப்பதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.

3. பெரும்பாலான மீன்களின் உடல் முழுவதும் வழவழப்பான செதில்கள் காணப்படுகின்றன. இவை மீனின் உடலைப் பாதுகாக்கின்றன.

4. மீன் நீரில் நீந்துவதற்காக துடுப்புக்களைப் பெற்றுள்ளது.


5. உறுதியான வால் துடுப்பானது திசைதிருப்பும் துடுப்பாக செயல்படுவதோடு, உடல் சமநிலை பெறவும் உதவுகிறது.


தவளை

இருவாழ்விகள் எனப்படும் உயிரினங்கள் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய இரட்டை வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன. இவை மாறும் வெப்ப நிலையுள்ள விலங்குகளாகும். இவற்றில் தலை மற்றும் இரண்டு சோடி கால்களைப் பெற்ற பெரிய உடற்பகுதி காணப்படுகின்றன. இவை இளம் உயிரி நிலையில் செவுள்கள் மூலமும், முதிர் உயிரி நிலையில் தோல், வாய்க்குழி மற்றும் நுரையீரல்கள் மூலமும் சுவாசிக்கின்றன.


பல்லி

1 பல்லிகள் செதில்களாலான தோல் கொண்ட ஊர்வன அமைப்பைக் வகையைச் சார்ந்தவை. இவை, கால்கள், அசையும் கண் இமைகள், கண்கள் மற்றும் வெளிப்புறக் காதுத் திறப்பு ஆகியவற்றைப் பெற்று பாம்புகளிலிருந்து வேறுபடுகின்றன.

2. இவை பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழக்கூடியவை. பெரும்பாலான பல்லிகள் நான்கு கால்களால் நடக்கக் கூடியவை, இவற்றின் கால்கள் வலிமை வாய்ந்தவை.

3. சில பல்லிகள் இரு கால்களில் ஓடக் கூடியவை. இவ்வாறு இரு கால்களில் ஓடும்போது பல்லியின் வாலானது அதன் முழு உடல் எடையையும் தாங்கும் வகையில் பின்னோக்கியும், மேல் நோக்கியும் அமைந்திருக்கும்.

4. சில பல்லிகள் தலை இணைப்பு மூலமாக தலையை முழுமையாக சுழற்றும் தன்மையைக் கொண்டவை.

5. பல்லிகள் நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கின்றன.

6. பெரும்பாலான பல்லிகள் கொசு மற்றும் பூச்சி போன்ற பூச்சிகளை கரப்பான் உண்கின்றன. நாக்கில் காணப்படும், நீட்சிப் பகுதிகள் இரையை இழுத்துப் பிடிக்க பயன்படுகின்றன.

7. சில பல்லிகளுக்கு (டயனோசார்) கால் விரல்களில் விரலிடைச் சவ்வுகள் உள்ளன. சில பல்லிகள் பறக்கும் தன்மையையும், பாதுகாப்புடன் தரையிறங்கக் கூடிய தன்மையையும் பெற்றுள்ளன.



பறவைகள்

1. பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட, படகு போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் காற்றில் பறக்கும்போது அவற்றிற்கு குறைந்த அளவு தடையே ஏற்படுகிறது.

2. பறவைகளுக்கு வாய்க்குப் பதிலாக அலகுகள் உள்ளன.

3. அவை நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கின்றன.

4. பறவையின் முன்னங்கால்கள் இரண்டும் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன.

5. இவை காற்றறைகளுடன் கூடிய எடை குறைவான எலும்புகளைப் பெற்றுள்ளன. 6. பறவைகள் பறப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அவற்றால் நிலத்தில் நடக்கவும், ஓடவும், குதிக்கவும் முடியும். பறவைகளின் பின்னங்கால்களில் உள்ள கூர்மையான நகங்கள் மரங்களின் கிளைகளை நன்கு பற்றிக் கொண்டு ஏற உதவுகின்றன.

7. பறவையின் வால் அது பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

8. பறத்தலின்போது ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்குவதற்கேற்ப வலிமை மிக்க மார்புத் தசையினைப் பெற்றுள்ளன.

9. ஒரே சமயத்தில் இரண்டு கண்கள் மூலமும் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும். இருவிழிப் பார்வை என்று பெயர்.


 

பருவ மாறுபாட்டின் காரணமாக விலங்குகள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வது வலசை போதல் எனப்படும். தமிழ் நாட்டில் வேடந்தாங்கல், கோடியக்கரை மற்றும் கூடன்குளம் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் காணப்படுகின்றன.

பல பறவைகள் வெளிநாடுகளான சைபீரியா மற்றும் ரஷ்யாவிலிருந்து வேடந்தாங்கல் வருகின்றன. அதேபோல் கோடை மற்றும் வறட்சி அதிகமுள்ள காலங்களில் நம் நாட்டுப் பறவைகள் வெளி நாடுகளுக்கு வலசை போகின்றன. எனவே. இவை வலசைபோகும் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன.


 

ஒட்டகம்

ஒட்டகம் நீர் குறைந்த, வெப்பநிலை அதிகமான பாலைவனத்தில் வாழ்கின்றது. அங்கு வாழ்வதற்கேற்ப அதன் உடலானது கீழ்க்காணும் சில சிறப்பு அமைப்புக்களைப் பெற்றுள்ளது.

1. ஒட்டகத்திற்கு நீண்ட கால்கள் இருப்பதால் பாலைவனத்தில் உள்ள சூடான மணலிற்கு மேலே அதன் உடல் சற்று உயரத்தில் இருக்கின்றது.

2. இவை கிடைக்கும்போதெல்லாம் அதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் சேமித்து வைத்துக் கொள்கின்றன.

3. வறண்ட பாலைவனங்களில் இருக்கும்போது தனது உடலில் நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் வகையில் கீழ்க்காணும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.

(i) ஒட்டகம் குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது.

(ii) அதன் சாணம் வறண்டு காணப்படும். மேலும், அதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை.

(II) ஒட்டகம் தன் உடலில் இருந்து சிறிதளவு நீரையே இழப்பதால், அதனால் பல நாட்களுக்கு நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியும்.


4. ஒட்டகம் தனது திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கின்றது. ஆற்றல் தேவைப்படும் காலங்களில் அது தன் திமில் பகுதியில்சேமித்துவைத்துள்ளகொழுப்பைச் சிதைந்து ஊட்டம் பெறுகின்றது.

5. ஒட்டகம் பெரிய மற்றும் தட்டையான கால்கள் மூலம் மிருதுவான மணலின் மீது நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் ஒட்டகம் பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுகிறது.

6. ஒட்டகத்தின் நீண்ட கண் இமைகள் மற்றும் ரோமங்கள் அதன் கண் மற்றும் காதுகளை புழுதிப் புயலிலிருந்து பாதுகாக்கிறது.

7. பாலைவனத்தில் ஏற்படும் புழுதிப் புயலின் மூலம் ஏற்படும் தூசிகள் உள்ளே செல்வதைத் தடுக்க அவை நாசித்துவாரங்களை மூடிக்கொள்கின்றன.


சில விலங்குகள் அதிகப்படியான குளிரைத் தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன, இந்நிலைக்கு குளிர்கால உறக்கம் (Aestivation) என்று பெயர். எ.கா. ஆமை

 

அதேவேளை, சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தைக் தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டு, உறக்கத்தில் ஈடுபடுகின்றன, இந்நிலைக்கு கோடைகால உறக்கம் (Hibernation) என்று பெயர். எ.கா. நத்தை.


 

கங்காரு எலி எப்பொழுதும் நீர் அருந்துவதே அது தான் உண்ணும் விதைகளிலிருந்து நீரைப் பெறுகிறது.


நமது மாநில விலங்கான நீலகிரி வரையாடு மலைகளின் மீது உள்ள பாறைகளின் இடுக்குகளில் மிக எளிதாக நுழைந்து, உடல் சமநிலையுடன் ஏறி தாவர வகைகளை உண்ணும் திறன் பெற்றுள்ளது.







Tags : Living World of Animals | Term 1 Unit 5 | 6th Science விலங்குலகம் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 5 : Living World of Animals : Adatptation in Animals­ Living World of Animals | Term 1 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம் : விலங்கினங்களின் தகவமைப்பு - விலங்குலகம் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம்