Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | உணவுக் கலப்படம்

ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் - உணவுக் கலப்படம் | 9th Science : Health and Hygiene-Food for Living

   Posted On :  17.09.2023 04:15 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

உணவுக் கலப்படம்

உணவுக் கலப்படம் என்பது 'உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதோ அல்லது உணவிலிருந்து நீக்குவதோ’ ஆகும். இவ்வாறு செய்வதனால் உணவில் இயற்கையாகக் காணப்படும் பொருள்கள் மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது. கலப்படத்திற்காக உபயோகப்படுத்தப்படும் பொருள் கலப்படப் பொருள் எனப்படும்.

உணவுக் கலப்படம்

உணவுக் கலப்படம் என்பது 'உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதோ அல்லது உணவிலிருந்து நீக்குவதோ ஆகும். இவ்வாறு செய்வதனால் உணவில் இயற்கையாகக் காணப்படும் பொருள்கள் மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது. கலப்படத்திற்காக உபயோகப்படுத்தப்படும் பொருள் கலப்படப் பொருள் எனப்படும்.

பால் மற்றும் பால் உற்பத்திப் பொருள்கள், தானியங்கள், பருப்பு வகைகள், காப்பித்தூள், தேயிலைத்தூள், மஞ்சள்தூள், குங்குமப் பூ, இனிப்பு வகைகள், ஆல்கஹால் இல்லாத பானங்கள், வாசனைப் பொருள்கள், சமையல் எண்ணெய்கள், இறைச்சி, கோழிப்பண்ணை உற்பத்திப் பொருள்கள் போன்றவை பொதுவாகக் கலப்படம் செய்யப்படும் சில உணவுப் பொருள்களாகும். உணவுக் கலப்படப் பொருள்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1. இயற்கையான கலப்படப் பொருள்கள்

2. தெரியாமல் சேர்க்கப்படும் கலப்படப்பொருள்கள்

3. தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்

 

1. இயற்கையான கலப்படப் பொருட்கள்

உணவில் இயல்பாகக் காணப்படும் வேதிப்பொருள்கள் அல்லது கரிமப் பொருள்கள் இயற்கையான கலப்படப் பொருள்களாகும். .கா. சிலவகை நச்சுக் காளான்களில் காணப்படும் நச்சுப்பொருள்கள், ஆப்பிள் மற்றும் செர்ரி விதைகளில் காணப்படும் புரூசிக் அமிலம், கடல் நச்சுக்கள், மீன் எண்ணெய் நச்சுப்படுதல் மற்றும் சுற்றுப்புறத்தில் காணப்படும் மாசு போன்றவை.

 

2. தற்செயலாக / தெரியாமல் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள் 

உணவுப் பொருளைக் கையாளும்போதும், அதனைக் கலன்களில் அடைக்கும்போதும், அறியாமையினாலோ அல்லது கவனக் குறைவினாலோ இப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றனஅவை பின்வருமாறு:

. பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய வேதிப்பொருள்கள்.

. உணவுப் பொருள்களைச் சேமிக்கும் இடங்களில் கொறிக்கும் பிராணிகள் மற்றும் பூச்சிகளின் மல ஜலங்கள் விழுதல், எலிக்கடிகள் மற்றும் லார்வாக்கள் தோன்றுதல்.

. கனிகள், காய்கறிகள், உடனடியாக உண்ணும் இறைச்சி மற்றும் கோழிப்பண்ணை தயாரிப்புகளில் எஸ்செரிச்சியா கோலை, சால்மோனல்லா இனம் போன்ற நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதால் அவை கெட்டுப்போதல்.

 

3. தெரிந்தே சேர்க்கப்படும் கலப்படப் பொருள்கள்

இந்த கலப்படப் பொருள்கள் இலாபநோக்கத்திற்காக வேண்டுமென்றே சேர்க்கப்படுகின்றன. இந்த கலப்படப்பொருள்கள் கலந்த உணவை உண்ணுபவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தமான மிக மோசமான விளைவுகள் உண்டாகும். அவ்வாறு சேர்க்கப்படும் பொருள்கள் கீழே தரப்பட்டுள்ளன.

. உணவுப் பாதுகாப்புப் பொருள்களான வினிகர், சிட்ரிக் அமிலம், சோடியம் பைகார்பனேட் (சமையல் சோடா), பாலில் சேர்க்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு, செயற்கை மாவுப்பொருள், உணவு நறுமணப்பொருள்கள், செயற்கை வேதிப்பொருள்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்கள் போன்ற உணவுச் சேர்க்கைப் பொருள்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பொருள்கள்.

. வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு போன்ற வேதிப்பொருள்கள்.

. பச்சைக் காய்கறிகள், பாகற்காய், பச்சைப்பட்டாணி போன்றவற்றில் பசுமை நிறத்தைக் கொடுப்பதற்காக காரீய உலோகம் கலந்த அங்கீகரிக்கப்படாத உணவு நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை காய்கறிகளில் வாடிய நிலை தோன்றாமலிருப்பதற்காக சேர்க்கப்படுகின்றன.


. ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற கனிகளின் மேல் பளபளப்பான தோற்றத்தைக் கொடுப்பதற்காக உண்ணக்கூடிய ஆனால் தீங்கு விளைவிக்கும் செயற்கை மெழுகான செல்லாக் அல்லது கார்னோபா மெழுகு போன்றவை சேர்க்கப்படுகின்றன.

 

கலப்படம் செய்யப்பட்ட உணவுகளால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்

கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை உண்ணுவதால் மோசமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்றில் ஏற்படும் வாயுக் கோளாறுகள், ஆஸ்துமா, ஒவ்வாமை, நரம்புக்கோளாறுகள், தோல் ஒவ்வாமைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படைதல், மலக்குடல் புற்றுநோய் மற்றும் குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல் போன்றவை ஏற்படுகின்றன.


உணவு தரக்கட்டுப்பாடு

நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான மற்றும் பாதுகாப்பான உணவைகிடைக்கச் செய்வதை அரசு எப்பொழுதும் வலியுறுத்துகிறது. நுகர்வோருக்கு தூய்மையான மற்றும் முழுமையான உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் நுகர்வோரை வியாபாரிகள் ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடனும் இந்திய அரசாங்கம் 1954 -ஆம் ஆண்டு 'உணவுக் கலப்படம் தடுப்புச் சட்டம்' மற்றும் 1955-ஆம் ஆண்டு ' உணவு கலப்பட தடுப்பு விதிகள்' போன்ற உணவுப் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றியது.

விற்பனை செய்யப்படும் உணவுப்பொருள்கள் குறைந்தபட்ச தரம் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்தைப் பெற்றிருக்கவேண்டும் என்று இந்த உணவுப்பாதுகாப்புச் சட்டம் தெளிவாக வலியுறுத்துகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

 உணவுப் பாதுகாத்தலை ஊக்குவிப்பதற்காவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி உலக சுகாதார தினத்தன்று "பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை" என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

 

1. நம் நாட்டிலுள்ள உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனங்கள்

ISI, AGMARK  (அக்மார்க்), FPO, FCI மற்றும் இதர சுகாதாரத் துறைகள் நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்களுக்கு குறைந்தபட்ச நிர்ணயங்களை இந்திய உணவு கழகம் விதித்துள்ளன. FCI (இந்திய உணவுக் கழகம்) 1965-ஆம் ஆண்டு கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.


விவசாயப் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்து விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது.

நாடு முழுவதும் உணவு தானியங்களை விநியோகம் செய்வது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அளவு உணவு தானியங்களை விநியோகம் செய்வது மற்றும் தேவையான அளவு சேமித்து வைத்து உணவுப் பாதுகாப்பை நிலைநிறுத்துவது.

உணவு தானியங்களை நுகர்வோர் வாங்கும் விதத்தில் சந்தை விலையை ஒழுங்குபடுத்துதல்.

செயல்பாடு 1

ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு உணவுப் பொட்டலத்தை (ஜாம், பழரசம், ஊறுகாய், ரொட்டி, பிஸ்கட் முதலியவை) கொண்டு வரவும். அந்தந்த உணவின் பெயர், தயாரிப்பாளருடைய விவரங்கள், அதில் அடங்கியுள்ள பொருள்கள், மொத்த எடை, அதிகபட்ச விற்பனை விலை, காலாவதி நாள், அந்த உணவைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தர நிர்ணயம் செய்த விநியோக நிறுவனத்தின் அச்சிடப்பட்ட குறியீடுககளான ISI, AGMARK or FPO போன்ற விபரங்களை குறிக்கவும்.

உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனங்கள், அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் உணவு பாதுகாத்தலில் அவைகளின் பங்கு


செயல்பாடு 2

1. பால்: சாய்வான பளபளப்பான மேல் பகுதியில் ஒரு துளி பாலினை வைக்கவும். கலப்படமற்ற பாலாக இருந்தால் மெதுவாக வழியும் மற்றும் வடிந்த இடத்தில் பால்த்தடம் காணப்படும். அதே சமயம் நீர் கலக்கப்பட்ட பாலாக இருந்தால் வேகமாக வடிந்து பாலின் தடம் காணப்படுவதில்லை .

2. தேன்: தேனில் பருத்தியினால் செய்யப்பட்ட ஒரு திரியினை முக்கி எடுத்து தீக்குச்சியால் கொளுத்த வேண்டும். கலப்படமற்ற தேன் எரியும். ஆனால் சர்க்கரைக் கரைசல் சேர்க்கப்பட்ட தேன் படபடவென்று வெடிக்கும்.

3. சர்க்கரை: சர்க்கரையை நீரில் கரைக்கவும். சாக்பீஸ் பொடி சர்க்கரையுடன் சேர்க்கப்பட்டிருந்தால், அப்பொடி சர்க்கரைக் கரைசலின் அடிப்பகுதியில் வீழ்வடிவாகும்.

4. காப்பித்தூள்: ஒரு கண்ணாடி டம்ளரில் நீரினை எடுத்து அதில் ஒரு சில கரண்டிகள் காப்பித்தூளைத் தூவ வேண்டும். காப்பித்தூள் நீரில் மிதக்கும். ஆனால் புளியங்கொட்டைப் பொடியுடன் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அது நீரின் அடியில் படியும்.

 5. உணவு தானியங்கள்: இவற்றில் கற்கள், மணல் மற்றும் பளிங்குக் கற்கள் போன்றவை காணப்படும். இவற்றை பிரித்தல், கழுவுதல் முறைப்படி தூய்மைப்படுத்தலாம்.

 

 

நினைவில் கொள்க

சாதாரண வளர்ச்சிக்கும் மற்றும் உடல் வளர்ச்சி நிலைக்கும் உயிர்களுக்கு உணவு தேவை.

சில ஊட்டச்சத்துக்களின் நீண்டநாள் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள் மற்றும் ஊட்டச் சத்து பற்றாகுறை நிலைவருவதற்கு வழிவகுக்கும்.

உலர்த்தல், புகையிடுதல், கதிரியக்கம், குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தி பாதுகாத்தல், பாஸ்டர் பதனம், கலன்களில் அடைத்தல் போன்றவை உணவைப் பாதுகாக்கும் சில முறைகளாகும்.

 கலப்படப் பொருள்கள் என்பது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயத்துக்கு எதிராக விரும்பத்தகாத பொருள்கள் உணவில் சேர்க்கப்படுதலாகும்.

1954- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுக் கலப்படம் தடுப்புச் சட்டத்தில் நுகர்வோர் பொருள்களுக்கு குறைந்தபட்சத் தர நிர்ணயம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

 

A-Z சொல்லடைவு

களைப்பு : மன உளைச்சல் அல்லது உடல் நோயினால் ஏற்படும் அதிகப்படியான சோர்வு.

நீர் உறிஞ்சும் தன்மை : காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும் பண்பு.

தசைப்பிடிப்பு : திடீர் மற்றும் விருப்பமின்றி ஏற்படும் தசைச் சுருக்கங்கள்.

ஊட்டச்சத்துக்கள் : சாதாரண வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சி நிலைகளுக்கும் ஊட்டமளிக்கின்ற பொருள்கள்.

நரம்புத்தூண்டல் : நரம்பு இழைகளின் வழி கடத்தப்படும் மின்சார சமிக்ஞை.

ஊட்டம் :  வளர்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவைப்படும் உணவு.

ஆஸ்ட்டியோபோரோசிஸ் : எலும்புகளை வலுவிழக்கச் செய்து அவற்றை உடையக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் நோய்.

பக்கவாதம் : நமது உடலில் ஏற்படும் தற்காலிக அல்லது நிரந்தர தசைகளின் செயலிழப்பு.

 உணவின் சேமிப்புக் : உணவை சேமித்து வைக்கும்போது அவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்

 காலம் : காலஅளவு.

நச்சுகள் : பாக்டீரியாக்கள், விலங்குகள் அல்லது தாவரங்களிலிருந்து உருவாகக்கூடிய விஷத்தன்மை கொண்ட பொருள்கள்.

Tags : Health and Hygiene-Food for Living ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்.
9th Science : Health and Hygiene-Food for Living : Adulteration Health and Hygiene-Food for Living in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் : உணவுக் கலப்படம் - ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்