Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | உணவு செரித்தல் மற்றும் செரிமான நொதிகளின் பங்கு (Digestion of Food and Role of Digestive Enzymes)

வாய்க்குழி, இரைப்பை, சிறுகுடல் - உணவு செரித்தல் மற்றும் செரிமான நொதிகளின் பங்கு (Digestion of Food and Role of Digestive Enzymes) | 11th Zoology : Chapter 5 : Digestion and Absorption

   Posted On :  06.01.2024 11:28 pm

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

உணவு செரித்தல் மற்றும் செரிமான நொதிகளின் பங்கு (Digestion of Food and Role of Digestive Enzymes)

செரித்தலின்போது திட உணவுப்பொருள்கள் உட்கிரகித்தலுக்கேற்ற மற்றும் தன் மயமாதலுக்கேற்ற நிலைக்கு மாற்றப்படுகின்றது. இச்செயல் பகுத்தல் மற்றும் வேதி செயல்களால் நடைபெறுகின்றது.

உணவு செரித்தல் மற்றும் செரிமான நொதிகளின் பங்கு (Digestion of Food and Role of Digestive Enzymes)

செரித்தலின்போது திட உணவுப்பொருள்கள் உட்கிரகித்தலுக்கேற்ற மற்றும் தன் மயமாதலுக்கேற்ற நிலைக்கு மாற்றப்படுகின்றது. இச்செயல் பகுத்தல் மற்றும் வேதி செயல்களால் நடைபெறுகின்றது.


வாய்க்குழியில் உணவு செரித்தல் (Digestion in the Buccal Cavity)

உணவின் மீதான பார்வை, அதன் மணம், சுவை மற்றும் வாய்க் குழியில் உணவுப்பொருள் ஏற்படுத்தும் தொடு தூண்டல் ஆகியவற்றால் தூண்டப்பெற்ற அனிச்சை செயல் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. உணவைச் சிறிய துண்டுகளாக உடைத்தல் மற்றும் அரைத்தல் போன்ற முதல் நிலை செரிமானம்வாய்க்குழியில் நடைபெறுகின்றது. இதற்கு மெல்லுதல் (Mastication) என்று பெயர். உமிழ்நீரில், நீர், Na+, K+, Cl –, HCO3- போன்ற மின்பகு பொருட்களும் (Electrolytes) டயலின் (Ptyalin) எனும் உமிழ்நீர் அமைலேஸ், பாக்டீரிய எதிர்ப்புப் பொருளான லைசோசைம், மற்றும் உயவுப்பொருளான கோழை (கிளைக்கோ புரதம்) ஆகியன உள்ளன. உணவை ஈரப்படுத்தி, மென்மையாக்கிக் குழைத்த நிலைக்கு மாற்றி உயவுத் தன்மையை ஏற்றி எளிதில் விழுங்குவதற்கேற்ற தன்மைக்கு உணவை உமிழ்நீர் மாற்றுகின்றது. உணவிலுள்ள பாலிசாக்ரைடான ஸ்டார்ச்சின் அளவில் 30% உமிழ்நீர் இரட்டைச் சர்க்கரை மூலக்கூறுகளாக மாற்றுகிறது. நன்கு அரைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் உணவுக் கவளங்களாக (Bolus) மாற்றப்பட்டுத் தொண்டை வழியாக உணவுக்குழலுக்குள் செலுத்தப்படும் நிகழ்ச்சிக்கு விழுங்குதல் (Deglutition) என்று பெயர். உணவுக் கவளம் உணவுக் குழலின் பெரிஸ்டால்சிஸ் (Peristalsis)  என்னும் அலையியக்கம் மூலம் இரைப்பையை அடைகின்றது. இரைப்பைக்குள் உணவு செல்வதை கார்டியாக் சுருக்குத்தசை கட்டுப்படுத்துகிறது.


இரைப்பையில் உணவு செரித்தல் (Digestion in the Stomach)

இரைப்பையில் 4 முதல் 5 மணி நேரம் தங்கியுள்ள உணவு தொடர் அலையியக்கத்தின் மூலம் இரைப்பை நீருடன் கலந்து கடையப்படுகிறது. இதனால் உணவு இரைப்பைப்பாகு (Chyme) என்னும் கூழ்ம நிலையை அடைகிறது. தானியங்கு அனிச்சைசெயல் மூலம் இரைப்பை நீர் சுரப்பு ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்படுகிறது. உணவு வாயினுள் இருக்கும் பொழுதே இரைப்பைநீர் சுரப்பு துவங்குகிறது. இரைப்பை நீரில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் மற்றும் பல முன்னொதிகளும் (Proenzyme) உள்ளன.

தெரிந்து தெளிவோம்

இரைப்பையில் HCI சுரக்காவிட்டால் நிகழ்வது யாது?

செயல்படாத முன்னொதியான பெப்ஸினோஜனை, செயல்படும் நொதியான பெப்ஸினாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCI) மாற்றுகிறது. பெப்ஸின் (Pepsin) உணவிலுள்ள புரதத்தைப் புரோடியோஸ்களாகவும் பெப்டோன்களாகவும் (பெப்டைடுகள்) மாற்றுகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவை அமிலத்தன்மை (pH 1.8) யுடன் இருக்கச் செய்து பெப்சின் செயல்பாட்டிற்கு உகந்த நிலையை அளிப்பதுடன் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளை அழித்துஉணவுஅழுகுதலையும் தடுக்கின்றது. இரைப்பை நீரில் உள்ள கோழை மற்றும் பைகார்பனேட்டுகள் உயவுப்பொருளாகி, அதிக அமிலத்தன்மையுடைய HCI பாதிப்பிலிருந்தும் இரைப்பையின் கோழைப் படல எபிதீலியத்தை பாதுகாக்கின்றன (படம் 5.8). ரென்னின் (Rennin) என்னும் மற்றுமொரு புரதநொதி இளங்குழந்தைகளின் இரைப்பைநீரில் உள்ளது. இது கால்சியம் அயனிகளின் முன்னிலையில் பால் புரதமான காசினோஜனை காசினாக மாற்றுகிறது. வயது அதிகரிக்கையில், இந்த நொதியின் அளவு குறைகிறது.



சிறுகுடலில் உணவு செரித்தல் (Digestion in the Small Intestine)

பித்தநீர், கணைய நீர் மற்றும் சிறுகுடல் நீர் ஆகியன சிறுகுடலில் வந்து சேர்கின்றன. இங்கு நடைபெறும் தசை இயக்கத்தினால் உணவும் சிறுகுடலின் பல்வேறு சுரப்புகளும் கலந்து செரித்தலை எளிதாக்குகின்றது.

இறந்த சிவப்பணுக்களின் சிதைவினால் உருவான ஹீமோகுளோபினின் பொருட்களிலிருந்து உருவான பித்த நிறமிகளான பிலிரூபின் (Bilirubin) மற்றும் பிலிவெர்ட்டின் (Biliverdin) ஆகியவற்றுடன், பித்த உப்புக்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பாஸ்போ லிபிட் போன்றவைகள் பித்த நீரில் உள்ளடங்கியுள்ளன. ஆனால் பித்தநீரில் நொதிகள் இல்லை. பித்த நீர் உணவிலுள்ள கொழுப்பைப் பால்மமடையச் செய்கின்றது. பித்த உப்புகள் கொழுப்புத் துகள்களின் பரப்பு இழுவிசையைக் குறைத்துச் சிறு திவலைகளாக மாற்றுகின்றன. மேலும் பித்தநீரானது லிபேஸ் நொதியைத் தூண்டிக் கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.

இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குள் நுழையும் இரைப்பைப்பாகில் (Chyme) மீதம் உள்ள செரிக்கப்படாத புரதங்கள் மற்றும் ஓரளவிற்குச் செரிக்கப்பட்ட புரதங்கள் மீது கணையநீரில் உள்ள புரதச்சிதைவு நொதிகள் செயல்படுகின்றன.

கணைய நீரில் டிரிப்ஸினோஜன், கைமோடிரிப்ஸினோஜன் கார்பாக்ஸிபெப்டிடேஸ்கள் கணைய அமைலேஸ்கள், கணைய லிப்பேஸ்கள் மற்றும் நியூக்ளியேஸ்கள் போன்ற நொதிகள் உள்ளன. சிறுகுடல் கோழைப்படலத்திலிருந்து சுரக்கும் என்டிரோகைனேஸ் எனும் நொதி செயல்படாத டிரிப்ஸினோஜனை செயல்படும் டிரிப்ஸினாக மாற்றுகின்றது. டிரிப்ஸின், கணைய நீரிலுள்ள செயல்படாத கைமோடிரிப்ஸினோஜனை செயல்படும் நொதியான கைமோடிரிப்ஸின் ஆக மாற்றுகின்றது.

டிரிப்ஸின், புரதங்களை நீராற்பகுத்து பாலிபெப்டைடுகள் மற்றும் பெட்டோன்களாக மாற்றுகின்றது. கைமோடிரிப்ஸின் குறிப்பிட்ட அமினோ அமிலங்களுடன் இணைந்துள்ள பெப்டைடு பிணைப்புகளை நீராற்பகுக்கின்றது.

கணைய அமைலேஸ், கிளைக்கோஜனையும் மால்டோஸாக மாற்றுகிறது. கணைய லிபேஸ் பால்மமாக்கப்பட்ட கொழுப்புத் துகளான டிரைகிளிசரைடுகள் மீது செயல்பட்டு அவற்றைத் தனித்த கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளாக மாற்றுகின்றது. மோனோ கிளிசரைடுகள் மேலும் நீராற்பகுக்கப்பட்டு  கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றப்படுகின்றது. கணைய நீரிலுள்ள நியூக்ளியேஸ்கள், நியூக்ளிக் அமிலங்களை நியூக்ளியோடைடுகள் மற்றும் நியூக்ளியோசைடுகளாக மாற்றுகின்றன.

புருன்னரின் சுரப்பியின் (Brunner's gland) சுரப்புப் பொருளும் சிறுகுடல் சுரப்பிகளின் சுரப்புப் பொருளும் இணைந்து சக்கஸ் என்டரிகஸ் (Succus entericus) எனும் சிறுகுடல் நீரை உருவாக்குகின்றது.

சிறுகுடல் நீரில் உள்ள நொதிகளான மால்டேஸ் லாக்டேஸ், சுக்ரேஸ் (இன்வர்ட்டேஸ்), பெப்டிடேஸ்கள், லிபேஸ்கள், நியூக்லியோடைடேஸ், நியூக்கிலியோசைடேஸ் ஆகியன பித்த நீர் மற்றும் கணையநீரால் செரிக்கப்பட்ட உணவின் மீது வினையாற்றுகின்றன.


கணையத்திலிருந்து தோன்றும் கோழையும் பைகார்பனேட் அயனிகளும் உணவைக் காரத் தன்மை கொண்ட ஊடகமாக (pH - 7.8) மாற்றிச் செரிமான நொதிகள் செயல்பட ஏதுவான சூழலை உருவாக்குகின்றனசெரித்தலின் முடிவில் உணவிலிருந்த அனைத்துப் பெரிய மூலக்கூறுகளும் அதனதன் சிறிய அலகுகளாக மாற்றப்படுகின்றன.


கார்போஹைட்ரேட்டுகள்ஒற்றை சர்க்கரை (குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், காலக்டோஸ்)

புரதங்கள்அமினோ அமிலங்கள்

கொழுப்புகள்கொழுப்பு அமிலங்கள், மற்றும் கிளிசரால்

செரித்தலின் முடிவில் தோன்றும் எளிய பொருட்கள் இடைச்சிறுகுடல் மற்றும் பின்சிறுகுடலில் உட்கிரகிக்கப்படுகின்றன. செரிமானமாகாத மற்றும் உட்கிரகிக்கப்படாத பொருட்கள் பெருங்குடலுக்குள் செலுத்தப்படுகின்றது. இரைப்பை குடல் பாதையின் பல்வேறு பகுதிகளின் பணிகளை நரம்பு மற்றும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கின்றன. இரைப்பை மற்றும் குடல் சுரப்புகள் நரம்புகளால் தூண்டப்படுகின்றன. உணவுப்பாதையின் கோழை சுரப்பிகளில் உருவாகும் உள்ளார்ந்த ஹார்மோன்கள் செரித்தல் நீரின் சுரப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

Tags : buccal cavity, stomach, small intestine வாய்க்குழி, இரைப்பை, சிறுகுடல்.
11th Zoology : Chapter 5 : Digestion and Absorption : Digestion of food and role of digestive enzymes buccal cavity, stomach, small intestine in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : உணவு செரித்தல் மற்றும் செரிமான நொதிகளின் பங்கு (Digestion of Food and Role of Digestive Enzymes) - வாய்க்குழி, இரைப்பை, சிறுகுடல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்