Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | செரிமானச் சுரப்பிகள் (Digestive Glands)
   Posted On :  06.01.2024 07:24 am

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

செரிமானச் சுரப்பிகள் (Digestive Glands)

நாளமுள்ள சுரப்பிகளான (Exocrine glands) செரிமானச்சுரப்பிகள் உயிரியவினையூக்கிகளான நொதிகளைச் சுரக்கின்றன.

செரிமானச் சுரப்பிகள் (Digestive Glands)

நாளமுள்ள சுரப்பிகளான (Exocrine glands) செரிமானச்சுரப்பிகள் உயிரியவினையூக்கிகளான நொதிகளைச் சுரக்கின்றன. உமிழ் நீர்ச்சுரப்பிகள், கல்லீரல், கணையம் ஆகியவை உணவுப் பாதையோடு இணைந்த செரிமானச் சுரப்பிகள் ஆகும். இரைப்பைச் சுவரிலுள்ள இரைப்பை சுரப்பிகள் இரைப்பை நீரையும், சிறுகுடலின் கோழைப் படலம் சிறுகுடல் நீரையும் சுரக்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா?

உமிழ்நீரிலுள்ள பைகார்பனேட்டுகள் உமிழ்நீரின் PH 5.4 முதல் 7.4 வரை வைக்கின்றது. இந்த அளவு குறைந்தால் உமிழ்நீரின் அமிலத்தன்மை உயர்ந்து பற்களின் எனாமல் பகுதி கரையக்கூடும்.


உமிழ் நீர்ச் சுரப்பிகள் (Salivary Glands) 

மனிதனின் வாய்க்குழியில் மூன்று இணை உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன. அவை மேலண்ணச் சுரப்பி (Parotid), கீழ்த்தாடைச் சுரப்பி மற்றும் நாவடிச் சுரப்பி ஆகியனவாகும் . இவற்றுள் கன்னப் பகுதியில் உள்ள மேலண்ணச் சுரப்பி மிகப்பெரியது. நாக்கிற்குக் கீழ் உள்ள சுரப்பி நாவடிச் சுரப்பியாகும். மேலண்ணச் சுரப்பியின் நாளத்திற்கு ஸ்டென்சனின் நாளம் (Stenson's duct) என்றும் கீழ்த்தாடைச் சுரப்பியின் நாளத்திற்கு வார்ட்டனின் நாளம் (Wharton's duct) என்றும் மற்றும் நாவடிச்சுரப்பி நாளத்திற்கு ரிவினிஸ் நாளம் (Rivinis duct) அல்லது பர்தோலின் நாளம் (Bartholin's duct) என்றும் பெயர் (படம் 5.6). இந்நாளங்கள் வழியாக உமிழ் நீர் வாய்வழியாக அடைகிறது. உமிழ் நீர் சுரப்பிகளிலிருந்து நாளொன்றுக்கு ஏறத்தாழ 1000 முதல் 1500 மி.லி. உமிழ்நீர் சுரக்கிறது.


இரைப்பை சுரப்பி (Gastric Glands)

இரைப்பையின் உட்சுவரில் இரைப்பை சுரப்பிகள் உள்ளன. இங்குள்ள முதன்மை செல்கள் (அல்லது) பெப்ட்டிக் செல்கள் (Peptic cells) அல்லது சைமோஜன் செல்கள் (Zymogen cells) இரைப்பை நொதிகளைச் சுரக்கின்றன கோப்பை வடிவ செல்கள் (Goblet cells) கோழையைச் சுரக்கின்றன. பெரைட்டல் செல்கள் அல்லது ஆக்சின்டிக் செல்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 உட்கிரகிக்கத் தேவையான கேசல்ஸ் உள்ளமைக் காரணியையும் (Castle's intrinsic factor) சுரக்கின்றன.


கல்லீரல் (Liver)

நமது உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பியாகிய கல்லீரல் வயிற்றறையின் வலது மேல் பகுதியில் உதரவிதானத்திற்குச் சற்றுக் கீழ் அமைந்துள்ளது. கல்லீரல் இடது மற்றும் வலது என இரு பெரிய கதுப்புகளையும் இரண்டு சிறிய கதுப்புகளையும் காண்டது. இக்கதுப்புகள் உதரவிதானத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதுப்பும் கல்லீரலின் செயல் அலகான பல சிறு கதுப்புகளால் ஆக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் கிளிஸ்ஸனின் உறை (Glisson's capsule) எனும் மெல்லிய இணைப்புத்திசுப் படலத்தால் சூழப்பட்டுள்ளது. கல்லீரல் செல்களில் சுரக்கும் பித்தநீர் மெல்லிய தசையாலான பித்தநீர்பையில் (Gall bladder) சேமிக்கப்படுகிறது. பித்த நாளமும் (Cystic duct) கல்லீரல் நாளமும் இணைந்து பொதுப் பித்த நீர் நாளத்தை உருவாக்குகின்றன. பொதுப்பித்த நீர் நாளம் கீழ்நோக்கிச் சென்று கணைய நாளத்துடன் இணைந்து கல்லீரல் -கணையப் பொதுநாளமாக (Hepato-pancreatic duct) உருவாகிச் சிறு துளைவழியே முன் சிறுகுடலில் திறக்கிறது. இத்துளை, ஓடி சுருக்குத் தசையால் (Sphincter of Oddi) சூழப்பட்டுள்ளது. (படம் 5.7) கல்லீரல் செல்களுக்கு இழப்பு மீட்டல் தன்மை அதிகம் உள்ளதால் 3 முதல் 4 வாரத்திற்குள் பழைய செல்கள் புதிய செல்களால் மாற்றியமைக்கப்படுகின்றன.


தெரிந்து தெளிவோம்

கல்லீரலில் உருவாகும் பித்தநீரில் செரிமான நொதிகள் ஏதும் இல்லை ஆனாலும் செரித்தல் சரியாக நடைபெற பித்த நீர் அவசியமாகின்றது. (குறிப்பாக கொழுப்பு செரித்தலில்).

) பித்த நீரில் உள்ள பொருட்கள் யாவை

) கொழுப்பு மற்றும் பிற ஊட்டப் பொருட்கள் செரித்தலில் பித்த நீர் எவ்வாறு உதவுகின்றது

) கொழுப்பு உட்கிரகித்தலில் பித்த நீர் எவ்வாறு உதவுகின்றது?

கல்லீரல் பித்த நீரைச் சுரப்பது மட்டுமன்றி மேலும் பல பணிகளையும் மேற்கொள்கின்றது. அவைகளாவன,

1. வயதான, பழுதுபட்ட இரத்தச் செல்களை அழித்தல்

2. குளுக்கோஸைக் கிளைகோஜன் வடிவத்தில் சேமித்து வைக்கின்றது அல்லது கணைய ஹார்மோன்களின் செயல்பாட்டினால் மீண்டும் குளுக்கோஸாக இரத்தத்தில் விடுவிக்கின்றது.

3. கொழுப்பில் கரையும் வைட்டமின்களையும், இரும்பையும் சேமிக்கின்றது.

4. நச்சுப்பொருட்களைச் சிதைத்து நச்சுத்தன்மையற்றதாக மாற்றுகின்றது.

5. யூரியா மற்றும் அவசியமற்ற அமினோ அமிலங்களை உருவாக்குவதில் பங்கேற்கின்றது.


கணையம் (Pancreas)

செரிமான மண்டலத்தில் உள்ள இரண்டாவது பெரிய சுரப்பி கணையம் ஆகும். நீண்ட, மஞ்சள் நிறமுடைய இது ஒரு கூட்டுச் சுரப்பியாகும். இதில் நாளமுள்ள சுரப்பிகளும் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளும் உள்ளன. இது முன் சிறுகுடலின் 'U' வடிவப் பகுதியின் இரு தூம்புகளுக்கு இடையில் அமைந்துள்ளது. நாளமுள்ள சுரப்புப் பகுதியில் சுரக்கப்படும் கணைய நீரில், கணைய அமைலேஸ், டிரிப்ஸின், கணைய லிபேஸ் போன்ற நொதிகள் உள்ளன. நாளமில்லாச் சுரப்புப் பகுதியான லாங்கர்ஹானின் திட்டுகளில் (Islets of Langerhans) இன்சுலின் மற்றும் குளுக்ககான் (Glucagon) போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. கணைய நீர் நேரடியாக முன் சிறுகுடலில் கணைய நாளத்தின் மூலம் திறக்கின்றது.

தெரிந்து தெளிவோம்

அங்காடிப் பகுதிகளில் கிடைக்கும் உணவில் உள்ள வேதி பதப்படுத்திகள் மற்றும் செயற்கை ஊக்கிகள் ஆகியனவற்றை பட்டியலிடவும். கேடு விளைக்கும் இத்தகு பொருட்களை எவ்வாறு தவிர்க்க முடியும்.

11th Zoology : Chapter 5 : Digestion and Absorption : Digestive glands in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : செரிமானச் சுரப்பிகள் (Digestive Glands) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்