Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | உணவூட்டப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்புக்கள் (Nutrients, Vitamins and Minerals)
   Posted On :  06.01.2024 11:40 pm

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

உணவூட்டப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்புக்கள் (Nutrients, Vitamins and Minerals)

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் பேரூட்ட உணவுப் பொருட்கள், நுண்ணூட்ட உணவுப்பொருட்கள் ஆகியவை உள்ளடங்கி உள்ளன.

உணவூட்டப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்புக்கள் (Nutrients, Vitamins and Minerals) 

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் பேரூட்ட உணவுப் பொருட்கள், நுண்ணூட்ட உணவுப்பொருட்கள் ஆகியவை உள்ளடங்கி உள்ளன. அதிக அளவில் தேவைப்படும் உணவூட்டப் பொருட்கள் பேரூட்டப் பொருட்கள் என்றும், சிறு அளவில் தேவைப்படுபவை நுண்ணூட்டப் பொருட்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. நம் உடல் உற்பத்தி செய்ய இயலாத பொருட்கள் தேவையான உணவூட்டப் பொருட்கள் எனப்படும். இப்பொருட்கள் கண்டிப்பாக நாம் உண்ணும் உணவில் சேர்த்தாக வேண்டும். கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவை பேரூட்டப் பொருட்கள் ஆகும். வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் போன்றவை நுண்ணூட்டப் பொருட்கள் ஆகும். உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்காற்றும் நீர், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கின்றது.

உடலின் அடிப்படை செயல்பாட்டுக்குத் தேவையாக உள்ள அளவை விட மிகக் கூடுதலான அல்லது குறைவான அளவு உணவை எடுத்துக்கொள்வதே ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition) ஆகும். உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளுக்குத் தேவையான எல்லா ஊட்டப்பொருட்களும் சரியான விகிதத்தில் இருப்பது சரிவிகித உணவு எனப்படும். அதாவது, ஆற்றலை அளிப்பதற்காகக் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், வளர்ச்சி மற்றும் புதுப்பித்தலுக்காகப் புரதம், மற்றும் உடற்செயலியல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த வைட்டமின்கள் தாதுப்புகள் மற்றும் நீர் ஆகியவை உணவில் இருக்க வேண்டும்.


வைட்டமின்கள் (Vitamins)

இயற்கையில் காணப்படும் கரிமப் பொருட்களான வைட்டமின்கள் இயல்பான உடல் நலத்தைப் பேண மிகக்குறைந்த அளவில் தேவைப்படுகின்றன. இதுவரை இனம் காணப்பட்ட வைட்டமின்கள் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் (A, D, E மற்றும் K) என்றும் நீரில் கரையும் வைட்டமின்கள் (B மற்றும் C) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கொழுப்பில் கரையும் வைட்டமின்களைத் தேவைக்கு அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் குறைபாட்டிற்குப் பொதுவாக ஹைப்பர் வைட்டமினோசிஸ் என்று பெயர்.

உங்களுக்குத் தெரியுமா?

N.I லுனின் வைட்டமின்களைக் கண்டறிந்தாலும் வைட்டமின் என்ற பெயரைத் தந்தவர் Dr. ஃபங்க் (1912) ஆவார். இவர் முதன் முதலில் பிரித்தெடுத்த வைட்டமின் B1 ஆகும். முதன் முதலில் நொதித்தல் முறையில் அசிட்டோபாக்டர் பாக்டீரியாக்களில் இருந்து வைட்டமின் C உருவாக்கப்பட்டது.


தாதுப்புகள்:

இவை கனிம வேதிப்பொருட்கள் ஆகும். கால்சியம், இரும்பு, அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், மற்றும் கந்தகம் போன்றவை நமது உடலின் பல்வேறு உடற்செயல் பணிகளை ஒழுங்குபடுத்தத் தேவையான தாதுப்புகள் ஆகும். உடலுக்கு அதிக அளவு தேவைப்படும் தாதுப்புக்களை முதன்மைத் தாதுப்புகள் (சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம் மற்றும் குளோரின்) என்றும் குறைந்த அளவு தேவைப்படும் தாதுப்புகள் நுண் தாதுப்புகள் (இரும்பு, செம்பு, துத்தநாகம், கோபால்ட், மாங்கனீசு, அயோடின், ஃபுளுரின்) எனவும் இரு பிரிவுகளாகக் கொள்ளலாம். நமது உடல் திரவத்தில் மிக அதிக அளவில் காணப்படும் அயனி சோடியம் ஆகும்.





11th Zoology : Chapter 5 : Digestion and Absorption : Nutrients, Vitamins and Minerals - Human Digestion and Absorption in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : உணவூட்டப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்புக்கள் (Nutrients, Vitamins and Minerals) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்