Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | உணவுப்பாதையின் அமைப்பு (Structure of the Alimentary Canal)
   Posted On :  06.01.2024 07:22 am

11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

உணவுப்பாதையின் அமைப்பு (Structure of the Alimentary Canal)

நீண்ட, தசையாலான உணவுப்பாதையானது முன்பக்கத்தில் வாயில் துவங்கிப் பின்பக்கத்தில் மலத்துளையில் முடிகிறது.

உணவுப்பாதையின் அமைப்பு (Structure of the Alimentary Canal)

நீண்ட, தசையாலான உணவுப்பாதையானது முன்பக்கத்தில் வாயில் துவங்கிப் பின்பக்கத்தில் மலத்துளையில் முடிகிறது. உணவுப்பாதையில் வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, குடல், மலக்குடல் மற்றும் மலத்துளை ஆகியன அடங்கும். (படம் 5.1) வாயானது உணவைப் பெறும் பகுதியாகும் அது வாய்க்குழிக்குள் திறக்கிறது. வாய்க்குழியில் பற்கள், நாக்கு ஆகியவற்றின் மூலம் உணவு அரைக்கப்படுகின்றது. உமிழ்நீர்ச் சுரப்பிகளால் சுரக்கப்படும் உமிழ்நீரில் உள்ள நொதிகள் வேதிய செரித்தலைத் துவக்குகின்றன.


ஒவ்வொரு பல்லும் தாடை எலும்பில் உள்ள குழியினுள் பதிந்துள்ள முறைக்குத் தீக்கோடான்ட் (Thecodont) என்று பெயர். மனிதன் உட்படப் பல பாலூட்டிகள் தன் வாழ்நாளில் இருமுறை பற்கள் முளைக்கும் தன்மையுடையன. இதற்கு டைபியோடான்ட் (Diphyodont) என்று பெயர். முதலில் தோன்றும் 20 தற்காலிகப் பால் பற்கள் (Milk teeth) உதிர்ந்து பின்னர் 32 நிரந்தரப் பற்கள் தோன்றும். நிரந்தரப் பற்களில் உளி வடிவ வெட்டும் பற்கள் (Incisors) (I), கூரிய கிழிக்கும் தன்மை கொண்ட கோரைப்பற்கள் (canines) (C), அரைத்தலுக்கான முன்கடைவாய் பற்கள் (Premolar) (PM) மற்றும் பின் கடைவாய் பற்கள் (Molar) (M) எனும் வகைகளில் உள்ள தன்மைக்கு ஹெட்டிரோடான்ட் (Heterodont) என்று பெயர். மேற்படி அமைவைக் குறிக்கும் மனிதனின் பற்சூத்திரம் 2123/ 2123 x 2 ஆகும்.

கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை பற்களின் மேல் படிந்து டார்டர் (tartar) அல்லது கால்குலஸ் (Calculus) என்னும் கடினமான படிவை ஏற்படுத்துகிறது.இந்தப் படிவிற்குப்பற்றுப்படலம். பிளேக் (Plaque) என்று பெயர். இந்தப் படிவை நீக்காவிடில், பல்லின், ஈறு மற்றும் எனாமல் பகுதிகளுக்கிடையில் உள்ள இடைவெளியில் இது பரவி வீக்கத்தைத் தோற்றுவிக்கும். இதற்கு ஈறுவீக்க நோய் (Gingivitis) என்று பெயர். ஈறுகள் சிவந்து ரத்தக் கசிவு ஏற்படுதல் மற்றும் வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும். உணவு மெல்லுதலில் பயன்படும் பற்களின் உறுதியான பகுதி எனாமல் ஆகும்.

தடித்த தசையிலான நாக்கு, வாய்க்குழியின் பின் முனையில் ஒட்டியும் முன் முனையில் ஒட்டாமலும் நன்கு அசையும் வண்ணம் உள்ளது. நாக்கின் பின்பகுதி வாய்க்குழியின் தரைப்பகுதியில் ஃபிரினுலம் (Frenulum) என்ற அமைப்பின் மூலம் ஒட்டப்பட்டுள்ளது. பொதுவாகப் பல்லை தூய்மைப்படுத்தும் அமைப்பான நாக்கு, உணவை உள்ளே தள்ளவும், மெல்லவும், உமிழ்நீருடன் கலக்கவும், விழுங்கவும் மற்றும் பேசவும் பயன்படும் ஒரு உறுப்பு ஆகும். நாக்கின் மேற்பரப்பில் சிறு முகிழ்ப்புகள் காணப்படுகின்றன. சுவை மொட்டுக்களையுடைய இவற்றுக்குப் பாப்பில்லா (Papillae) என்று பெயர்.

வாய்க்குழி, தொண்டை எனும் சிறிய பாதையில் திறக்கின்றது. இது உணவு மற்றும் காற்றைக் கடத்தும் பொதுப்பாதையாகும். உணவுக்குழலும் மூச்சுக்குழலும் தொண்டையில் திறக்கின்றன. தொண்டையின் பின்பகுதியில் உள்ள கல்லட் (Gullet) எனும் அகன்ற உணவுக்குழல் திறப்பின், வழியே உணவு உட்செலுத்தப்படுகின்றது. மூச்சுக்குழலின் திறப்பான கிளாட்டிஸின் (Glottis) மேற்பகுதியில் குருத்தெலும்பினாலான குரல்வளை மூடி (Epiglottis) உள்ளது. இது விழுங்கும் செயலின் போது மூச்சுக்குழலுக்குள் உணவு சென்று விடாமல் பாதுகாக்கின்றது. இதன் இருபுறமும் டான்சில்கள் (Tonsils) என்னும் நிணநீரியத்திசுத் தொகுப்புகள் உள்ளன (படம் 5.2).


உணவுக்குழல் ஒரு நீண்ட தசையினாலான குழலமைப்பு ஆகும். இது, கழுத்து, மார்புப்பகுதி மற்றும் உதரவிதானத்தின் ஊடே சென்று J வடிவ இரைப்பைக்கு உணவைக் கடத்தப் பயன்படுகிறது. உணவுக்குழல் இரைப்பையில் திறக்கும் திறப்பை கார்டியாக் சுருக்குத்தசைகள் நெறிப்படுத்துகிறது (படம் 5.1). இரைப்பை உணவைக் கடையும் போது இந்தச் சுருக்குத் தசைகள் சரியாகச் சுருங்காத நிலை ஏற்பட்டால் அமிலத்தன்மை கொண்ட இரைப்பை நீர் உணவுக் குழலுக்குள் மீண்டும் நுழைகிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு இரைப்பை உணவுக்குழல் பின்னோட்ட நோய் (Gastro Oesophagus Reflex Disorder - GERD) என்று பெயர்.

வயிற்றறையின் இடது மேற்பகுதியில் உள்ள இரைப்பை உணவைச் சேமிக்கும் உறுப்பாகும். இரைப்பையில் கார்டியாக் (Cardiac) பகுதி,ஃபன்டிக் (Fundic) பகுதி மற்றும் பைலோரிக் (Pyloric) பகுதி என மூன்று பகுதிகள் உள்ளன. இரைப்பை உணவுக்குழலுடன் இணையும் பகுதி கார்டியாக் பகுதியாகும். இங்கு கார்டியாக் சுருக்குத் தசைகள் உள்ளன. முன் சிறுகுடலுடன் இணையும் இரைப்பையின் பகுதி பைலோரிக் பகுதி எனப்படும். இங்குப் பைலோரிக் சுருக்குத் தசைகள் உள்ளன. இத்தசைகள் அவ்வப்போது இரைப்பையிலிருந்து வரும் ஓரளவு செரித்த உணவை முன் சிறுகுடலுக்குள் அனுப்புவதுடன் சிறுகுடலிலிருந்து உணவு பின்னோக்கி வருவதையும் தடுக்கின்றது. இரைப்பையின் கொள்ளளவை அதிகரிக்க இரைப்பை சுவற்றில் பல தசை மடிப்புகள் (Gastric rugae) உள்ளன. அதிக அளவு உணவு இரைப்பையை அடையும் போது இம்மடிப்புகள் தளர்ந்து அதிக உணவுக்கு இடமளிக்கின்றன.

சிறுகுடல் உணவு செரித்தலை நிறைவு செய்வதுடன் செரித்த உணவின் பகுதிப் பொருட்களை உட்கிரகிக்கும் பணியையும் செய்கின்றது. உணவு செரிமான மண்டலத்தின் மிக நீண்ட பகுதியான சிறுகுடல், முன் சிறுகுடல், இடைச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. U வடிவ முன்சிறுகுடல் (Duodenum) ஏறத்தாழ 25 செ.மீ. நீளமும், நீண்ட இடைச்சிறுகுடல் (Jejunum)

ஏறத்தாழ 2.4மீ நீளமும் மற்றும் பின்சிறுகுடல் (Ileum) ஏறத்தாழ 3.5 மீ நீளமும் உடையன. முன்சிறுகுடல் சுவரில் உள்ள புருன்னர்ஸ் சுரப்பி (Brunner's gland) கோழை மற்றும் நொதிகளைச் சுரக்கின்றது. சிறுகுடலின் மிக நீண்ட பகுதியான பின்சிறுகுடல் பை போன்ற பெருங்குடல் பிதுக்கத்தில் திறக்கின்றது. பின்சிறுகுடலின் கோழைப்படலத்தில் எண்ணற்ற இரத்த நாளச் செறிவுடைய குடலுறிஞ்சிகள் (Villi) உள்ளன. இவை செரிக்கப்பட்ட உணவினை உட்கிரகிக்கும் பரப்புகள் ஆகும். இந்த நீட்சிகளின் உட்பகுதியில் எண்ணற்ற நுண் குடலுறிஞ்சிகள் (Microvilli) உள்ளன. இதன் விளிம்பு 'புருசு விளிம்பு' போல் உள்ளதால் உட்கிரகிக்கும் பரப்பு வெகுவாக அதிகரிக்கின்றது. நுண்குடலுறிஞ்சிகளுடன் பின்சிறுகுடலின் கோழைப்படலத்தில் கோழையைச் சுரக்கும் கோப்பை வடிவ (Goblet) செல்களும் லிம்போசைட்டுகளை உருவாக்கும் நிணநீர்த் திசுவான பேயரின் திட்டுகளும் (Peyer's batches) உள்ளன. சிறுகுடலின் குடலுறிஞ்சிகளின் அடிப்பகுதியில் சக்கஸ் எண்டிரிகஸ் (Succus entricus) எனும் சிறுகுடல் நீரைச் சுரக்கும் லிபர்கன் மடிப்புகளும் (Crypts of Leiberkuhn) உள்ளன (படம் 5.3).


பெருங்குடலில், பிதுக்கப்பகுதி, (Caecum) பெருங்குடல் பகுதி (Colon) மற்றும் மலக்குடல் (Rectum) எனும் மூன்று பகுதிகள் உள்ளன. சிறுகுடல், பெருங்குடலுடன் பிதுக்கப் பகுதியில் இணைகிறது. இதன் அடிப்பகுதியில் உள்ள குறுகிய விரல் போன்ற குழல் தன்மை கொண்ட நீட்சி குடல்வால் (Vermiform appendix) எனப்படும். தாவர உண்ணிகளில் குடல் பிதுக்கப்பகுதியும் குடல் வால் பகுதியும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. இங்குள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செல்லுலோஸ் செரித்தலுக்கு உதவுகின்றன. கோலன் எனும் பெருங்குடலானது, ஏறுகுடல், கிடைமட்டக்குடல், இறங்கு குடல் மற்றும் சிக்மாய்டு குடல் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. பெருங்குடலின் உட்பகுதியில் உள்ள பை போன்ற விரிவுகள் ஹாஸ்டிரா (Haustra) (ஒருமையில் ஹாஸ்டிரம் - Haustrum) எனப்படும் (படம் 5.4)


'S'வடிவ சிக்மாய்டு குடலின் தொடர்ச்சியாக மலக்குடல் உள்ளது. மலக்குடலில் மலப்பொருட்கள் வெளியேற்றப்படும் வரை சேமிக்கப்படுகின்றது. மலக்குடல் மலத்துளையில் திறக்கின்றது. மலத்துளை ஈரடுக்கு சுருக்குத் தசைகளால் ஆனது. மலத்துளையை சுற்றியுள்ள கோழைப்படலம் பல செங்குத்தான மடிப்புகளால் ஆனது. இம்மடிப்புகளில் தமனிகளும் சிரைகளும் உள்ளன. இவ்விடத்தில் ஏற்படும் புடைப்புகளால், மூலம் (Piles) அல்லது ஹெமராய்டுகள் (Haemorrrhoids) தோன்றுகின்றது.


11th Zoology : Chapter 5 : Digestion and Absorption : Structure of the alimentary canal in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : உணவுப்பாதையின் அமைப்பு (Structure of the Alimentary Canal) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 5 : செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்