Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

பருவம் 2 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் | 6th Social Science : History : Term 2 Unit 1 : Vedic Culture in North India and Megalithic Culture in South India

   Posted On :  28.08.2023 03:47 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 1 : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் வழியாக, ❖ ஆரியர்களின் பூர்வீகம், அவர்கள் இந்தியாவிற்குள் குடியேறுதல் ஆகியவற்றை அறிந்து கொள்ளல். ❖ வேதகாலம் குறித்து கற்றுக் கொள்வதற்கான சான்றுகளை அடையாளம் காணல். ❖ தொடக்க மற்றும் பின்வேதகால அரசியல், பொருளாதார மத வடிவங்களின் உருவாக்கத்தைப் புரிந்து கொள்ளல், ❖ தொடக்க மற்றும் பின்வேதகால மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் கண்டறிதல் ❖ தொடக்க வேதகாலத்திற்கும் பின்வேதகாலத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளல். ❖ தமிழ்நாட்டின் பெருங்கற்கால இரும்புக்காலப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளல்.

வரலாறு

அலகு 1

வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்



 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் வழியாக,

ஆரியர்களின் பூர்வீகம், அவர்கள் இந்தியாவிற்குள் குடியேறுதல் ஆகியவற்றை அறிந்து கொள்ளல்.

வேதகாலம் குறித்து கற்றுக் கொள்வதற்கான சான்றுகளை அடையாளம் காணல்.

தொடக்க மற்றும் பின்வேதகால அரசியல், பொருளாதார மத வடிவங்களின் உருவாக்கத்தைப் புரிந்து கொள்ளல்,

தொடக்க மற்றும் பின்வேதகால மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் கண்டறிதல்

தொடக்க வேதகாலத்திற்கும் பின்வேதகாலத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளல்.

தமிழ்நாட்டின் பெருங்கற்கால இரும்புக்காலப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளல்.

 

வேதகாலம்

சிந்துவெளி நாகரிகத்தின் சரிவோடு இந்தியாவில் நகரமயமாதலின் முதல் கட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. ஆரியரின் வருகையால் வேதகாலம் எனும் காலகட்டம் தொடங்கியது.

வேதகாலம் இந்திய வரலாற்றில் கி.மு. (பொ.ஆ.மு) 1500 - 600 காலகட்டம். 'வேதங்கள்' என்பதில் இருந்து இப்பெயரைப் பெற்றது.

 

ஆரியர்கள் என்போர் யார்?

ஆரியர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும், இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர். இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலையலையாகக் இந்துகுஷ் மலைகளிலுள்ள குடிபெயர்ந்து கைபர் கணவாய் வழியாக வந்தனர்.

கால்நடைகளை மேய்ப்பதே இவர்களின் முதன்மைத் தொழில் என்றாலும் அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையையும் (slash and burn agriculture) பின்பற்றினர்.




அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண்முறை (Slash and Burn Agriculture)

இம்முறையில் நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும். அந்நிலத்தில் குறுகிய காலகட்டத்திற்கு வேளாண்மை செய்து அதன்பின் அந்நிலம் கைவிடப்படும். பின்னர் மக்கள் மற்றொரு இடத்தில் இதே போன்று வேளாண்மை செய்யத் தொடங்குவர்.


ஆரியர்களும் இந்தியாவில் அவர்களின் வாழ்விடங்களும்:

ரிக்வேதகால ஆரியர்கள் நாடோடிகள் ஆவர். அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தினரான அவர்களுக்கு கால்நடைகளே முக்கிய சொத்து ஆகும்.

ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும். அப்போது அப்பகுதி 'சப்த சிந்து அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி என்றழைக்கப்பட்டது.

ஏறத்தாழ கி.மு (பொ.ஆ.மு) 1000-இல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்து கங்கைச் சமவெளியில் குடியமர்ந்தனர்.

இரும்புக் கோடரி, இரும்பினாலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றைப் பரவலாக பயன்படுத்தினர்.

 

நான்கு வேதங்கள்: 

ரிக், 

யஜுர், 

சாம, 

அதர்வன.


சான்றுகள்

வேத கால இலக்கியங்கள்

வேத கால இலக்கியங்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. சுருதிகள் -  நான்கு வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும். அவைகள் புனிதமானமவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை எனக் கருதப்பட்டவை. சுருதி என்பது கேட்டல் (அல்லது எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது; இவை வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

2. ஸ்மிருதிகள் - தாந்திரீகங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகளைக் கொண்ட நூல்களாகும். அவை நிலையானவை அல்ல, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.

'ஸ்மிருதி' என்பதன் பொருள் இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.


 

இந்தியாவின் தேசிய குறிக்கோள்

சத்யமேவ ஜெயதே "வாய்மையே வெல்லும் என்ற வாக்கியம் உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

 

தொல்பொருள் சான்றுகள்:

சிந்து மற்றும் கங்கை நதிப்பகுதிகளிலும் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொல்லியல் ஆய்விடங்களிலும் கிடைத்துள்ள இரும்புக் கருவிகள், மட்பாண்டங்கள் ஆகியன.



வேதகாலப் பண்பாடு

அரசியலும் சமூகமும்

ரிக் வேத கால அரசியல் ரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். குலம் (clan) என்பதே அரசியலின் அடிப்படை அலகாகும். அதன் தலைவர் குலபதி ஆவார். பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கிராமம் ஆகும். கிராமத்தின் தலைவர் கிராமணி ஆவார். பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு 'விஸ்' (குலம்) என்றழைக்கப்பட்டது. இதற்கு விசயபதி தலைவர் ஆவார். 'ஜனா' (இனக்குழு)வின் தலைவர் ராஜன் ஆவார். இவர் ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலர்) எனப்பட்டார். ரிக் வேத காலத்தில் பல இனக்குழு அரசுகள் (ராஷ்டிரம்) இருந்தன. (பரதர், மத்சயர், புரு).

 

அரசர்

தனது இனக்குழுவைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதே ராஜனின் முக்கியப் பொறுப்பாகும். அவருடைய அதிகாரம் இனக்குழு மன்றங்களான விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டது. இவைகளில் விதாதா (இனக்குழுவின் பொதுக்குழு) மிகப் பழமையானதாகும்.

சபா - மூத்தோர்களைக் கொண்ட மன்றம்.

சமிதி - மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.

அரசர் தனக்கு உதவி செய்வதற்காக புரோகிதர் (தலைமை குரு) ஒருவரை பணியில் அமர்த்திக் கொண்டார்.அரசியல்,பொருளாதாரம்,இராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசனுக்கு சேனானி (படைத் தளபதி) உதவி செய்தார். கிராமங்களின் தலைவர் கிராமணி ஆவார்.

ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கை, யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறியபோது தொடக்ககாலக் குடியேற்றங்கள் மாற்றம் பெற்று பிரதேச அரசுகளாயின. பரம்பரை அரசுரிமை தோன்றியது. முடியாட்சி முறையில் அரசரின் அதிகாரங்கள் அதிகரித்தன. அரசர் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள பல சடங்குகளையும் யாகங்களையும் நடத்தினார்.

பின்வேதகாலத்தில் பல ஜனாக்கள்அல்லது இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் உருவாயின. சமிதி, சபா ஆகியவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன. விதாதா என்ற மன்றம் இல்லாமல் போனது. புதிய அரசுகள் தோன்றின. பாலி (Bali) என்பது மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்துவந்த காணிக்கையாகும். பின்வேதகாலத்தில் இது ஒரு வரி ஆக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது. குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலம் இது. மேலும் அயோத்தி, இந்திரப்பிரஸ்தம், மதுரா போன்ற நகரங்களும் இக்காலத்தில் உருவாயின.

பாலி - இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.

 

சமூக அமைப்பு

வேதகால சமூகம் தந்தை வழிச் சமூகமாகும். வெள்ளைநிறத்தோல்கொண்ட ஆரியர்கள்,கருப்பு நிறத் தோல் கொண்ட ஆரியரல்லாதவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டனர். கருப்பு நிற ஆரியர் அல்லாத மக்களை தசயுக்கள், தாசர்கள் என்று அழைத்தனர். தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் மூன்று பிரிவுகள் (Treyi) காணப்பட்டன. பொது மக்கள் விஸ் என்று அழைக்கப்பட்டனர். போர்வீரர்கள் சத்ரியர்கள் எனவும் மதகுருமார்கள் பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். பிற்கால கட்டத்தில் திறன் கொண்ட, ஆரியரல்லாத மக்களை ஆரியர்கள் தமது சமுதாய ஏற்பாட்டுக்குள் கொண்டுவர நேர்ந்தது. அப்போது நான்கு இறுக்கமான வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது. மதகுருவான பிராமணர், போரிடும் சத்ரியர், நில உடைமையாளர்களான வைசியர், வேலைத் திறன் கொண்ட சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் கொண்ட சமூக அமைப்பு உருவானது. இவ்வாறு நான்கு படிநிலைகள் கொண்ட சமூக ஒழுங்கு உருவாக்கப்பட்டது.

வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் இருக்கின்றபோதிலும், பயன்பாட்டுப் பொருள் சான்றுகள் போதுமான அளவு இல்லை.

 

பெண்களின் நிலை

ரிக்வேதகால சமூகத்தில், பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர். மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார். பெண்கள் தனது கணவருடன் தமது வீட்டில் சடங்குகள் நடத்தினார். குழந்தைத் திருமணத்தையும், உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை. கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளத் தடைகள் இல்லை. இருந்தபோதிலும் பெற்றோரிடமிருந்து சொத்துக்களைப் பெறும் சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது. பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்தப் பங்கும் வகிக்கவில்லை.

 

பின்வேதகாலத்தில் சமூகத்தில் மட்டுமின்றி, குடும்பத்திலும் கூட பெண்களின் அவர்களுக்கான நிலையும் பங்கும் குறைந்துபோனது. பெண்கள் குடும்பத்தில் சடங்குகளை நடத்த முடியாத நிலை உருவானது. திருமணம் தொடர்பான விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது. கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை. பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. கலப்புத் திருமணம் நிராகரிக்கப்பட்டது.

 

பொருளாதார வாழ்க்கை

வேதகாலப் பொருளாதாரமானது கால்நடை மேய்ச்சலும் வேளாண்மையும் கலந்ததாகும். ரிக்வேதகால ஆரியர்களின் முதன்மைத் தொழில் கால்நடைகள் மேய்ப்பது என்றாலும் மரவேலை செய்வோரும், தேர்கள் செய்வோரும், மட்பாண்டங்கள் செய்வோரும், உலோக வேலை செய்வோரும், துணி நெய்வோரும், தோல்வேலை செய்பவர்களும் இருந்தனர். பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் இக்காலத்தைச் சேர்ந்ததாகும். குதிரைகள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், காளைகள் மற்றும் நாய்கள் வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தப்பட்டன.


சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஆரியர்கள் நிரந்தரமாகக் குடியேறியபின் அவர்கள் வேளாண்மை செய்யத் தொடங்கினார். (பார்லி) அவர்களின் முதன்மை பயிராகும். கோதுமை, பருத்தி ஆகியவை சிந்துவெளி மக்களால் பயிர் செய்யப்பட்ட போதிலும் ரிக் வேதத்தில் அவைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் இருபோகம் சாகுபடி செய்யப்பட்டது.

பின்வேத காலத்தில் ஆரியர்கள் வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை மட்டுமல்லாமல் யானைகளையும் பழக்கப்படுத்தினர். தொடக்க வேத கைவினைஞர்களோடு நகை செய்வோர், சாயத்தொழில் செய்வோர், உலோகங்களை உருக்குவோர் போன்றோரும் சமூகத்தில் இடம் பெற்றிருந்தனர். இக்காலப் பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.

இரும்புக் கொழுமுனை கொண்ட கலப்பை மற்றும் இரும்புக் கோடாரி ஆகியவற்றின் உதவியோடு அதிக அளவிலான நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டது. நெல், கோதுமை, பார்லி ஆகியன பயிர் செய்யப்பட்டன. வேளாண்மை வளர்ச்சி பெற்றதால் நிலத்தின் மீது தனியுரிமை உருவானது. புதிய தொழில்களும், கலைகளும் வளர்ந்து உபரி உற்பத்தி ஏற்பட்டு வணிகத்துக்கு இட்டுச் சென்றன.

வணிகம் பெருகியது. பண்டமாற்றுமுறை பரவலாகக் காணப்பட்டது. (ஒரு பொருளைக் கொடுத்து வேறொரு பொருளை வாங்குவது). அவர்கள் நிஷ்கா, சத்மனா என்னும் தங்க நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர்.

 

ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்

• தங்கம் (ஹிரண்யா

• இரும்பு (சியாமா)

• தாமிரம்/செம்பு (அயாஸ்)

 

மதம்

ரிக்வேதகால ஆரியர்கள் பெரும்பாலும் நிலமற்றும் ஆகாய கடவுளர்களை வழிபட்டனர். பிருத்வி (நிலம்), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன் (இடி) போன்றவற்றை வணங்கினர். மேலும் அதிதி (நித்தியக் கடவுள்), உஷா (விடியற்காலைத் தோற்றம்) ஆகிய குறைவான பெண் தெய்வங்களை வணங்கினர். அவர்களின்மதம் சடங்குமுறைகளைமையமாகக் கொண்டது. வேத மந்திரங்களைப் பாராயணம் செய்வதே வழிபாட்டு முறையாக இருந்தது. குழந்தைகள் (பிரஜா), பசு (கால்நடைகள்), செல்வம் (தனா) ஆகியவற்றின் நலனுக்காக மக்கள் தெய்வங்களை வணங்கினர். பசு புனிதமான விலங்காகக் கருதப்பட்டது. அக்காலத்தில் கோவில்கள் இல்லை. சிலை வழிபாடும் வழக்கத்தில் இல்லை.

பின்னாளில் மதகுருவாக இருப்பது ஒரு தொழிலாகவும், அது பரம்பரைத் தொழிலாகவும் ஆனது. ஆரியர் அல்லாத கடவுள்களும் ஏற்கப்பட்டிருக்கலாம். இந்திரனும், அக்னியும் முக்கியத்துவத்தை இழந்தனர். பிரஜாபதி (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்), ருத்ரன் (அழிப்பவர்) ஆகிய கடவுளர்கள் முக்கியத்துவம் பெற்றனர். வேள்விகளும், சடங்குகளும் மிகவும் விரிவடைந்தன.

 

கல்வி

குருகுலக் கல்வி முறை


குருகுலக் கல்வி முறை என்பது பழங்கால கற்றல் முறை ஆகும்.

குருகுலம் என்னும் சொல் குரு (ஆசிரியர்), குலம் (குடும்பம் அல்லது வீடு) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும். 

 இம்முறையில் மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்வதோடு கல்வியும் கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.


வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர். கற்றவை அனைத்தையும் மாணவர்கள் மனப்பாடம் செய்தனர்.

நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன.

ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இரு பிறப்பாளர்கள் (Dvijas) மட்டுமே குருகுலத்தில் மாணவர்களாகச் சேர்க்கப்படுவர். பெண்களுக்கு பொது கல்வி அளிக்கப்படவில்லை.

 

 

நான்கு ஆஸ்ரமங்கள்: (வயதின் அடிப்படையில்)

பின்வேதகால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகள் (நான்கு ஆஸ்ரமங்கள்) என்ற கோட்பாடு உருவாயின.

பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்)

கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை)

வனப்பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்)

சன்னியாசம் (வீடுபேறு அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்)

சிந்துவெளி மற்றும் வேதகால நாகரிகங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கூறுக.


 

தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சமகாலத்தில் நிலவிய பண்பாடுகள்

வடஇந்தியாவின் தொடக்ககால வேதப் பண்பாடு இந்தியத் துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் நிலவிய செம்புக்கால பண்பாட்டோடு ஒத்துப்போகிறது. மக்கள் செம்பையும் (chalco) கல்லையும் (lithic) ஒரே காலகட்டத்தில் பயன்படுத்தியதால் இது செம்புக் காலகட்டம் Chalcolithic Culture என்று தமிழில் அழைக்கப்படுகின்றது.

இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடு முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாட்டின் சமகாலப் பண்பாடாகும். ஹரப்பா பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பின்னருங்கூட, செம்புக் காலப் பண்பாடு தொடர்ந்து நிலவியது. வடஇந்தியாவின் பின்வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவின் இரும்புக் காலமும் சமகாலத்தைச் சேர்ந்தவை ஆகும். இரும்புக் காலத்தின் முடிவில் மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டினுள் கி.மு. (பொ.ஆ.மு) 600 - கி.பி. (பொ.ஆ) 100 இல் காலடி எடுத்து வைத்தனர்.

பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம், சங்ககாலத்திற்கு முந்தைய காலத்தோடு ஒத்துப்போகிறது. கருப்பு மற்றும் சிவப்புநிற மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் ஒரு கூறாக உள்ளது.

 

தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் / இரும்புக்காலம்.

பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. Megalith என்பது கிரேக்கச் சொல்லாகும். 'Mega' என்றால் பெரிய, lith என்றால் 'கல்' என்று பொருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியததால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள பெருங்கற்கால/இரும்புக்கால தொல்லியல் ஆய்விடங்கள்.

ஆதிச்சநல்லூர்-தூத்துக்குடி மாவட்டம்

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.

வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன.


மட்பாண்டங்கள் செய்தல், கல் மற்றும் மரங்களைப் பயன்படுத்தி பொருட்கள் செய்தல் போன்ற திறன்களை மக்கள் பெற்றிருந்தனர்.


 

கீழடி - சிவகங்கை மாவட்டம்

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திருப்புவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன. மேலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல் படிகம், முத்துக்கள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இரு மாதிரிகளை கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறையில் கணிக்க அமெரிக்காவில் புளோரிடா என்னும் இடத்தில் உள்ள பீட்டா அனாலடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியது. அச்சோதனையில் இப்பொருள்கள் கி.மு (பொ.ஆ.மு) 200ஐச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இங்கு ரோம்b நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவை இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே நிலவிய வணிகத் தொடர்பிற்கு மேலும் சில சான்றுகளாகும்.

தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் 'அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பன குறித்தும் பெரிப்பிளஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.




பொருந்தல் - திண்டுக்கல் மாவட்டம்

கிடைத்துள்ள பொருட்கள்: புதைகுழிப் பொருட்கள், கண்ணாடி மணிகள் (வெள்ளை, சிகப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் இரும்பு வாள்கள், தமிழ் - பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், அரிசி நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள், ஓரளவு அரிதான கற்களான படிகக்கல், சிவப்பு நிற மணிக்கற்கள், சங்கு மற்றும் கண்ணாடி வளையல்கள்,

இரும்பினாலான கதிர் அறுக்கும் அரிவாள், ஈட்டி, கொழுமுனைகள் ஆகியவை தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கு சான்றுகளாய் உள்ளன. இங்கு கிடைத்துள்ள அரிசி நிரம்பிய பானை, மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.



பையம்பள்ளி - வேலூர் மாவட்டம்

இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் - இரும்பினால் செய்யப்பட்ட தொல் பொருட்களோடு பெருங்கற்காலத்து கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ரேடியோ கார்பன் முறையில் இப்பண்பாட்டின் காலம் கி.மு. (பொ.ஆ.மு) 1000 என கணிக்கப்பட்டுள்ளது.

 

கொடுமணல்-ஈரோடு மாவட்டம்

பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள கொடுமணல் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட முந்நூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் நூல் சுற்றி வைக்கப்பயன்படும் சுழல் அச்சுக்கள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள், அணிகலன்கள், மணிகள் முக்கியமாக சிவப்பு நிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். புதைகுழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுக் கல் (Menhir) பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்

புதிய கற்காலத்தின் கடைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலப் புதைப்பு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இம்முறையின்படி இறந்தவர்களின் உடல் பெரிய மட்பாண்டத்தில் வைக்கப்படும். ஏனைய சில பொருட்களும் அதனுடன் வைக்கப்படும். இந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இரும்பைக் குறித்த அறிவைப் பெற்றிருந்த, சமூகமாக கூடி வாழத் தெரிந்திருந்த மிகவும் முன்னேறிய தமிழ் நாகரிகத்திற்கான சாட்சிகளாகும்.


கற்திட்டைகள் (Dolmens):

இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானைகள் ஆகும். இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறம் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின்மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். இக்கற்திட்டைகள் (காஞ்சிபுரம் மாவட்டம்) வீரராகவபுரம் கும்மாளமருதுபட்டி (திண்டுக்கல் மாவட்டம்) நரசிங்கம்பட்டி (மதுரைமாவட்டம்)ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.


நினைவு கற்கள் (Menhir)

பிரிட்டானிய (Breton) மொழியில் 'மென்' என்றால் கல், 'கிர்' என்றால் "நீளமான" என்று பொருள். ஒரே கல்லிலான இத்தூண்கள் இறந்தோரின் நினைவாக செங்குத்தாக நடப்படும்.

திருப்பூர் மாவட்டம் சிங்கரிபாளையம், தேனி மாவட்டம் வெம்பூர் ஆகிய இடங்களில் இவ்வாறான நினைவுத் தூண்கள் உள்ளன. இவை உப்பாற்றின் இரு கரைகளிலும் பழங்கால வாழ்விடங்கள் இருந்ததைக் சுட்டிக்காட்டுகின்றன. மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியிலும், ஈரோடு மாவட்டம் குமரிக்கல் பாளையத்திலும், கொடுமணலிலும் இது போன்ற நினைவுத் தூண்கள் உள்ளன.


நடுகற்கள்

இறந்துபோன வீரனின் நினைவைப் வகையில் நடப்படும் கல் போற்றும் நடுகல்லாகும் தனதுv கிராமத்தை கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய வீரர்களின் நினைவாக நடப்படுவது ஆகும். திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகேயுள்ள மானூர், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் புலிமான் கோம்பை ஆகிய இடங்களில் நடுகற்கள் காணப்படுகின்றன.

 

 

 

மீள்பார்வை

₹ ஆரியர்கள் ஏறத்தாழ கி.மு. (பொ.ஆ.மு) 1500ல் (பொ.ஆ.மு) 1500ல் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தனர். இக்காலகட்டத்திற்கு வேத நூல்கள் முக்கியச் சான்றுகளாகும்.

₹ வேதகால அரசியல் இரத்த உறவை அடிப்படையாகக் கொண்டது.

₹  ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது அங்கிருந்த தொடக்ககாலக் குடியேற்றங்கள் பிரதேச அரசுகளாக மாறின.

₹ இரும்புக் கலப்பையும் இரும்புக் கோடரியும் அதிக அளவிலான நிலங்களை வேளாண்மையின் கீழ் கொண்டுவர உதவின.

₹ புதிய கைவினைத் தொழில்களும் கலைகளும் வளர்ந்தன. கங்கைச் சமவெளிப் பகுதிகளில் நகரங்கள் தோன்றுவதற்கு இவைகள் வழி வகுத்தன.

₹ வடஇந்தியாவின் பிற்கால வேத சமூகமும் தென்னிந்தியாவின் இரும்புக்காலச் சமூகமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவையாகும்.

 

அருஞ்சொல் விளக்கம்

நிலையான - Eternal

இரத்த உறவு - Kinship

தந்தை வழிச் சமூகம் - Patriarchal

தெய்வம் - Deity

சமகாலத்தில் - Contemporary

உலோகவியல் - Metallurgy

Tags : Term 2 Unit 1 | History | 6th Social Science பருவம் 2 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : History : Term 2 Unit 1 : Vedic Culture in North India and Megalithic Culture in South India : Vedic Culture in North India and Megalithic Culture in South India Term 2 Unit 1 | History | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 1 : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் - பருவம் 2 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 1 : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்