Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | உயிரினங்களின் வகைப்பாடு

வகைப்பாட்டிற்கான அடிப்படை - இரு பெயரிடும் முறை - உயிரினங்களின் வகைப்பாடு | 9th Science : Living World of Animals - Diversity in Living Organism - Kingdom Animalia

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : விலங்குலகம்

உயிரினங்களின் வகைப்பாடு

உயிரினங்களை அவற்றின் ஒற்றுமை, வேறுபாடுகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள இனத் தொடர்புகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்தல் வகைப்படுத்துதல் எனப்படும்.

உயிரினங்களின் வகைப்பாடு

உயிரினங்களை அவற்றின் ஒற்றுமை, வேறுபாடுகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள இனத் தொடர்புகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்தல் வகைப்படுத்துதல் எனப்படும். ஐந்துலக வகைப்பாடு, மொனிரா, புரோடிஸ்டா, பூஞ்சைகள், பிளான்டே மற்றும் அனிமாலியா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இக்குழுக்களானவை, செல் அமைப்பு, உணவூட்ட முறை, உடற் கட்டமைப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

வகைப்பாட்டின் படிநிலையின் அடிப்படையில் உயிரினங்கள் சிறிய சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறிய குழுவே வகைப்பாட்டியலின் அடிப்படை அலகாகும்.

சிற்றினம் (Species): இது வகைப்பாட்டியலின் கடைசியான வகையாகும். .கா: மிகப் பெரிய இந்திய கிளி (Psittacula eupatra) மற்றும் பச்சைக்கிளி (Psittacula kerameri) ஆகியவை இரண்டு வேறுபட்ட பறவை இனங்களாகும். இவை, இரண்டும் தனித்தனி இனத்தைச் சார்ந்தவை, (யுபாட்ரா மற்றும் க்ராமேரி). ஆதலால் இவ்விரண்டும் இணை சேர இயலாது. பேரினம் (Genus): இது நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களை உள்ளடக்கியுள்ளது. இது சிற்றினத்திற்கு அடுத்த உயர்ந்த அலகாகும். .கா: இந்தியாவின் நரி (Canis pallipes) மற்றும் குள்ள நரி (Canis aures) ஆகிய இரண்டும் ஒரே பேரினத்தைச் சார்ந்தவை.

 குடும்பம் (Family): பல பொதுவான பண்புகளையுடைய, பல்வகை ஜெனிராக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பத்தை உருவாக்குகின்றன. .கா: சிறுத்தை , புலி மற்றும் பூனை ஆகிய மூன்றும் பொதுவான பண்புகளைப் பெற்றுள்ளன. ஆகையால், இவை ஒரு பெரும் குடும்பமான ஃபெலிடெவில் (Felidae) உள்ளடக்கப்பட்டுள்ளன.

வரிசை (Order): பொதுவான பண்புகளால் ஒன்றோடொன்று தொடர்புடைய பல வகுப்புகள் அனைத்தும் ஒரு வரிசையில் வைக்கப்படுகின்றன. குரங்குகள், வாலற்ற பெருங்குரங்குகள், மனிதக் குரங்குகள் மற்றும் மனிதன் போன்ற பல்வேறுபட்ட வகுப்புகளைச் சார்ந்த அனைத்தும் பிரைமேட்டுகள் என்னும் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் சில பொதுவான பண்புகளைப் பெற்றுள்ளதால் ஒரே வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகுப்பு (Class): ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய அல்லது ஒரே மாதிரியான வரிசைகள் ஒன்று சேர்ந்து வகுப்பினை உருவாக்குகின்றன. முயல், எலி, வௌவால், திமிங்கலம், மனிதக் குரங்கு மற்றும் மனிதன் போன்ற ஒரே வரிசையைச் சார்ந்த வெவ்வேறு விலங்குகள் தோல் மற்றும் பால் சுரப்பிகளை பொதுவான பண்புகளாகக் கொண்டுள்ளன. எனவே, இவை அனைத்தும் பாலூட்டிகள் என்னும் வகுப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தொகுதி (Phylum): ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகைகள் தொகுதிகளாகின்றன. இவ்வாறு பல வகையைச் சார்ந்த விலங்குகளான பாலுட்டிகள், பறவைகள், ஊர்வன, தவளைகள் மற்றும் மீன்கள் ஆகியவை முதுகு நாண் உள்ளவை என்னும் ஒரே தொகுதியைச் சேர்ந்துள்ளன. இவற்றில் முதுகு நாண் அல்லது முதுகெலும்புத் தொடர் உள்ளது.

உலகம் (Kingdom): இது மேம்பட்ட வகையாகவும் மிகப்பெரிய பிரிவாகவும் உள்ளது. இதில் நுண்ணுயிரிகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளடங்கியுள்ளன. ஒவ்வொரு உயிருலகமும் மற்ற உயிர் உலகத்திலிருந்து வேறுபடுகிறது. இருப்பினும் ஒரே பொதுப் பண்புகள் அந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படுகின்றன.

உயிரினங்களின் வகைப்பாட்டியல் கீழே உள்ள படி நிலைகளைக் கொண்டுள்ளது.

உலகம்

தொகுதி

 வகுப்பு

வரிசை

குடும்பம்

 பேரினம்

சிற்றினம்


 

1. வகைப்பாட்டிற்கான அடிப்படை

விலங்குலகமானது கட்டமைப்பு நிலைகள் (செல்களின் தொடர் வரிசை அமைப்பு), சீரமைப்பு, கரு மூல அடுக்கு மற்றும் உடற் குழியின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.

கட்டமைப்பு நிலை: செல், திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்கள் ஒரு செல் உயிரிகள் அல்லது பல செல் உயிரிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 சமச்சீர்: இது உடல் உறுப்புகள் அமைந்துள்ள முறை ஆகும். இது இரு வகைப்படும். அவை: ஆரச் சமச்சீர் மற்றும் இருபக்கச் சமச்சீர். ஆரச் சமச்சீர் முறையில் விலங்குகளின் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும். உயிரியின் உடலை எந்த ஒரு திசையில் பிரித்தாலும் ஒத்த சமமான இரண்டு பாகங்களாக பிரிக்க முடியும். .கா: ஹைட்ரா, ஜெல்லி மீன், நட்சத்திர மீன். இருபக்கச் சமச்சீர் முறையில் ஒரு உயிரியின் உடல் உறுப்புகள் மைய அச்சின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும். மைய அச்சின் வழியாக உடலைப் பிரித்தால் மட்டுமே இரு சமமான பாகங்களாகப் பிரிக்க இயலும். .கா தவளை.


கரு மூல அடுக்குகள்: இவை கரு உருவாக்கத்தின் பொழுது உருவாக்கப்படுகின்றன. கருமூல அடுக்குகளிலிருந்து உடல் உறுப்புகள் தோன்றி ஒரு முதிர் உயிரி உருவாகின்றது.

புற அடுக்கு, அக அடுக்கு என்ற இரண்டு கருப்படலங்களைக் கொண்ட உயிரிகள் ஈரடுக்கு உயிரிகள் எனப்படும். .கா: ஹைட்ரா. புற அடுக்கு, நடு அடுக்கு, அக அடுக்கு என மூன்று கருப்படலங்களைக் கொண்ட உயிரிகள் மூவடுக்கு உயிரிகள் எனப்படும். .கா: முயல்.

மேலும் அறிந்துகொள்வோம்

முதுகு நாண்: இது கருவளர்ச்சியின் போது உடலில் உள்ள நடு முதுகுப் பகுதியில் உருவாக்கப்படும் நீண்ட கோல் வடிவ அமைப்பு ஆகும். இது முதன்மை உயிரிகளில் மட்டும் நிலைத்திருக்கும். ஆனால், மற்ற விலங்குகளில் முதுகெலும்புத் தொடராக மாற்றமடைகிறது.

உடற்குழி: உடலினுள்ளே திரவத்தினால் நிரப்பப்பட்ட குழி உடற்குழி எனப்படும். இது உடல் சுவற்றிலிருந்து உணவுப்பாதையைப் பிரிக்கிறது. உண்மையான உடற்குழி அல்லது சீலோம் (Coelom) என்பது நடு அடுக்கினுள்ளே அமைந்துள்ளது. உடற்குழியின் தன்மையின் அடிப்படையில் விலங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

i. உடற்குழி அற்றவை. .கா நாடாப்புழுக்கள்

ii. பொய்யான உடற்குழி கொண்டவை. .கா உருளைப்புழுக்கள்

 iii. உண்மையான உடற்குழி உடையவை. .கா: மண்புழு, தவளை.

முதுகு நாணின் அடிப்படையில் விலங்குகள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:

i. முதுகு நாணற்றவை (Invertebrata)

 ii. முதுகு நாணுள்ள வை (Chordata) - முதல் முதுகு நாணுள்ளவை (Prochordata) மற்றும் முதுகெலும்பிகள் (Vertebrata).

முதுகு நாண் இல்லாத விலங்குகள் முதுகு நாணற்றவை என்றும், முதுகு நாண் உள்ள விலங்குகள் முதுகு நாணுள்ளவை என்றும் அழைக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு செல் உயிரியான புரோட்டோசோவா பற்றி படித்துள்ளீர்கள்.


 

2. இரு பெயரிடும் முறை

கரோலஸ் லின்னேயஸ் என்பார் உயிரினங்களுக்கு இரு பெயர்களிடும் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் முதல் பெயர் பேரினம் (Genus) எனப்படும். அதன் முதல் எழுத்து பெரியதாக (Capital letter) இருக்கும். இரண்டாவது பெயர் சிற்றினம் (Species) ஆகும். இப்பெயர் சிறிய எழுத்துக்களில் (Small letters) எழுதப்படும். சில விலங்குகளின் இரு சொல் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


Tags : வகைப்பாட்டிற்கான அடிப்படை - இரு பெயரிடும் முறை.
9th Science : Living World of Animals - Diversity in Living Organism - Kingdom Animalia : Classification of Living Organisms in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : விலங்குலகம் : உயிரினங்களின் வகைப்பாடு - வகைப்பாட்டிற்கான அடிப்படை - இரு பெயரிடும் முறை : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : விலங்குலகம்