Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | செவியின் அமைப்பு

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி

செவியின் அமைப்பு

நாம் எவ்வாறு ஒலியைக் கேட்கிறோம்? செவி எனப்படும் மிக நுண்ணிய உணர் உறுப்பின் மூலம் நாம் ஒலியைக் கேட்கிறோம்.

செவியின் அமைப்பு

நாம் எவ்வாறு ஒலியைக் கேட்கிறோம்? செவி எனப்படும் மிக நுண்ணிய உணர் உறுப்பின் மூலம் நாம் ஒலியைக் கேட்கிறோம். கேட்கக்கூடிய அதிர்வெண்களைக் கொண்ட காற்றினில் ஏற்படும் அழுத்த மாறுபாடுகளை மின்சார சைகைகளாக மாற்றுவதற்கு இவை உதவுகின்றன. இந்த சைகைகள், காது நரம்புகள் வழியே மூளையைச் சென்றடைகின்றன. செவியானது ஒலியைக் கேட்கும் விதமானது கீழே விளக்கப்பட்டுள்ளது.


செவியின் வெளிப்பகுதி செவிமடல் என்று அழைக்கப்படுகிறது. இது சுற்றுப்புறத்திலிருந்து ஒலியைச் சேகரிக்கின்றது. சேகரிக்கப்பட்ட ஒலியானது, வெளிச் செவிக் குழாய் மூலம் செவிக்கு உள்ளே செல்கிறது. வெளிச் செவிக் குழாயின் முடிவில், செவிப்பறை (tympanic membrane) உள்ளது. காற்று ஊடகத்தில் ஒரு நெருக்கமானது உண்டாகும்போது, செவிப்பறையின் வெளிப்பகுதியிலுள்ள அழுத்தமானது அதிகரித்து, செவிப்பறையானது உட்புறம் தள்ளப்படுகிறது. அதுபோலவே, காற்று ஊடகத்தில் ஒரு நெகிழ்ச்சி உண்டாகும்போது, செவிப்பறையானது, வெளிப்புறம் தள்ளப்படுகிறது. இவ்வாறாக செவிப்பறையானது அதிர்வடைகின்றது. இந்த அதிர்வானது, நடுச்செவியிலுள்ள மூன்று எலும்புகளால் (சுத்தி, பட்டை மற்றும் அங்கவடி) பலமுறை பெருக்கமடைகிறது. ஒலி அலையிலிருந்து பெறப்பட்டு பெருக்கமடைந்த அழுத்தவேறுபாடானது, நடுச்செவிலிருந்து உட்செவிக்குக் கடத்தப்படுகிறது. உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்தவேறுபாடானது, காக்ளியா (Cochlea) மூலம் மின்சைகைகளாக மாற்றப்படுகின்றது. இந்த மின் சைகைகள் காது நரம்பு வழியே மூளைக்கு செலுத்தப்படுகின்றன. மூளையானது அவற்றை ஒலியாக உணர்கின்றது.



நினைவில் கொள்க

பொருள்களின் அதிர்வினால் ஒலி உண்டாகிறது.

ஒலியானது ஒரு ஊடகத்தின் வழியே நெட்டலைகளாகப் பரவுகிறது.

ஒலியானது நெருக்கமாகவும் நெழிச்சியாகவும் ஊடகத்தின் வழியே பரவுகிறது.

  ஒலி பரவும் போது ஆற்றல் மட்டுமே பரவுகிறது. ஊடகத்திலுள்ள துகள்கள் நகர்வதில்லை .

 வெற்றிடத்தின் வழியே ஒலி செல்வதில்லை.

  அலைநீளம் (λ), அதிர்வெண் (n) மற்றும் வேகம் (v) இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு: v = n λ

ஒலியின் வேகமானது அது பரவக் கூடிய ஊடகம் மற்றும் வெப்பநிலையைச் சார்ந்தது.

ஒலி எதிரொலித்தல் விதிப்படி ஒலிபடும் திசை, ஒலி எதிரொலிக்கும் திசை மற்றும் செங்குத் கோடு இவை மூன்றும் ஒரே தளத்தில் அமையும். படுகோணமும் மீள் கோணமும் எப்போதும் சமமாகவே இருக்கும்.

எதிரொலியை தெளிவாகக் கேட்க வேண்டுமானால், முதன்மை ஒலிக்கும், எதிரொலிக்கப்பட்ட ஒலிக்கும் இடையேயான கால இடைவெளி 0.1 வினாடியைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

  பன்முக எதிரொலிப்பினால் ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர் முழுக்கம் எனப்படும்.

  செவியுணர் ஒலியின் அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை உள்ளது.

செவியுணர் ஒலியின் அதிர்வெண்ணை விட குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி குற்றொலி என்றும், செவியுணர் ஒலியின் அதிர்வெண்ணை விட அதிக அதிர்வெண் கொண்டவை மீயொலி என்றும் அழைக்கப்படுகின்றன.

சோனார் (Sonar) கடலின் ஆழத்தைக் காணவும், நீருக்கு அடியிலுள்ள குன்றுகள், சமவெளிகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றைக் கண்டறியவும் பயன்படுகிறது.

 

A-Z சொல்லடைவு

அலை : ஊடகத்தின் வழியாகப் பரவும் தொடர்ச்சியான பாதிப்புகள்

நெட்டலைகள் : நெருக்கம் மற்றும் நெகிழ்ச்சி மூலம் பரவும் அலை.

நெருக்கம் : அதிக அழுத்தப் பகுதி

 நெகிழ்ச்சி : குறைந்த அழுத்தப் பகுதி

வீச்சு : துகளின் பெரும இடப்பெயர்ச்சி.

அதிர்வெண் : ஒரு வினாடி நேரத்தில் உண்டாகும் அலைகளின் எண்ணிக்கை.

அலைவு நேரம்  : ஒரு அலை உருவாக ஆகும் காலம்.

அலை நீளம் : அடுத்தடுத்த நெருக்கம் அல்லது நெகிழ்ச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு.

திசை வேகம் () வேகம் : ஒரு வினாடி நேரத்தில் அலை கடக்கும் தொலைவு.

தரம் : ஒரே மாதிரியான உரப்பு மற்றும் கருதியைக் கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்த உதவும் பண்பு.

சுருதி  : அதிர்வெண்ணைச் சார்ந்த ஒலியின் ஒரு பண்பு.

எதிரொலி : ஒலி எதிரொலித்தலின் விளைவு மூலம் கேட்கப்படும் ஒலி.

எதிர்முழக்கம் : பன்முக எதிரொலிப்பின் காரணமாக ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை.

மீயொலி : 20,000 ஹெர்ட்ஸ்க்கு அதிகமான அதிர்வெண்ணைக் கொண்ட ஒலி அலைகள்.

9th Science : Sound : Structure of human ear in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி : செவியின் அமைப்பு - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி