Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | நோய்களும் நுண்ணுயிரிகளும்
   Posted On :  17.09.2023 04:38 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம்

நோய்களும் நுண்ணுயிரிகளும்

நோய் என அழைக்கப்படும் பதமானது ஆங்கிலத்தில் 'disease' எனப்படுகிறது. இதில் dis என்பது 'எதிரானது' (against) என்ற பொருளையும் ease என்பது வசதியாக' (comfort) என்ற பொருளையும் பெற்று வசதிக்கு எதிரானது (disease) எனப்படுகிறது.

நோய்களும் நுண்ணுயிரிகளும்

நோய் என அழைக்கப்படும் பதமானது ஆங்கிலத்தில் 'disease' எனப்படுகிறது. இதில் dis என்பது 'எதிரானது' (against) என்ற பொருளையும் ease என்பது வசதியாக' (comfort) என்ற பொருளையும் பெற்று வசதிக்கு எதிரானது (disease) எனப்படுகிறது. ஓர் உயிரியின் சாதாரண நிலையைக் குலைத்தோ அல்லது மாற்றியோ, உடலின் முக்கிய பணிகளைச் செய்யவிடாமல் பழுதடையவைக்கும் அல்லது தவறாக வேலை செய்யவைக்கும் நிலையே நோய் என வரையறுக்கப்படுகிறது. நோயானது கீழ்க்காண்பவற்றின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.

(i) பரவியிருக்கும் நிலையைக் கொண்டு நோய்கள் வட்டார நோய் (என்டெமிக்), கொள்ளை நோய் (எபிடெமிக்), பெருங்கொள்ளை நோய் (பான்டெமிக்) மற்றும் தொடர்பற்ற நோய் (ஸ்பொராடிக்) என பிரிக்கப்பட்டுள்ளன.

(ii) பரவும் நிலையைக்கொண்டு தொற்றும் தன்மையுடைய அல்லது தொற்றும் தன்மையற்ற நோய்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

(ii) நோய்க்கிருமியின் வகைகளைக்கொண்டு பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது புரோட்டோசோவாக்களால் தோற்றுவிக்கப்படும் நோய்கள் எனப் பிரிக்கப் பட்டுள்ளன.

(iv) நோயினைக் கடத்தும் காரணிகளைக் கொண்டு காற்றின் மூலம், நீரின் மூலம் அல்லது கடத்திகள் (கொசு போன்ற) மூலம் பரவும் நோய்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

உங்களுக்குத் தெரியுமா?

உலக சுகாதார தினம் - ஏப்ரல் 7

உலக மலேரியா தினம் - ஏப்ரல் 25

உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1

உலக காச நோய் எதிர்ப்பு தினம் - மார்ச் 24

 

1. நோய் காணப்படுவதின் அடிப்படையிலான வகைப்பாடு

 வட்டார நோய் (என்டெமிக்): இது புவிப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறைவான மக்களை மட்டும் தாக்குகின்றநோயாகும்(குறைவாக நிகழ்ந்துள்ளது). .கா. இமயமலைப் பிரதேசத்தின் அடிவாரப் பகுதியிலுள்ளவர்களுக்கு முன் கழுத்துக் கழலை (காய்டர்) நோய்.

கொள்ளை நோய் (எபிடெமிக்): இது புவியின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் தோன்றி அதிகமான எண்ணிக்கையில் மக்களைப் பாதிக்கும் வகையைச் சார்ந்த நோயாகும். .கா. இன்புளுயென்சா.

பெருங்கொள்ளை நோய் (பான்டெமிக்): உலகம் முழுவதும் பரவி அதிகளவு சேதத்தை ஏற்படுத்தும் நோய் பான்டெமிக் நோயாகும். .கா. எய்ட்ஸ்

தொடர்ச்சியற்ற நோய் (ஸ்பொராடிக்): இது எப்போதாவது தோன்றுகிற ஒரு நோயாகும். .கா. மலேரியா மற்றும் காலரா.

 

2. நோயின் வெளிப்பாடு நோய்களின் பரவும் தன்மை

தொற்றும் தன்மையுடைய நோய்கள் பரவும் நோய்கள் எனப்படுகின்றன. இவை புறக்காரணிகளான (பாக்டீரியா, வைரஸ், கடத்திகள், ஒட்டுண்ணிகள்) தீங்குயிரிகளின் மூலமாக உடலில் ஊடுருவி நோயினைத் தோற்றுவிக்கின்றன. .கா. இன்புளுயன்சா, காசநோய், பெரியம்மை, காலரா, நிமோனியா, மலேரியா மற்றும் பல.

தொற்றாத நோய்கள் பரவாத நோய்களாகும். இவை உடற் காரணிகளாகிய முறையாக இயங்காத உறுப்புகள், மரபுக் காரணங்கள், ஹார்மோனின் அளவில் காணப்படும் ஏற்றத்தாழ்வு நிலை மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பிலுள்ள குறைபாடு போன்றவற்றால் ஏற்படுகின்றன. .கா. நீரழிவு நோய், இதயம் சார்ந்த நோய்கள், உடல்பருமன், புற்றுநோய், முன்கழுத்துக் கழலை முதலியன.

நோய்த்தொற்றின் பிறப்பிடம் மற்றும் தொற்றுப்பகுதி

நோய்த் தொற்றினை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் பல்வேறு வழிமுறைகளில் உடலினுள் நுழைகின்றன. இவ்வாறாக நோய் பரப்பும் கிருமிகள், மாசடைந்த காற்று, நீர், உணவு, மண், உடல் தொடர்பு, பாலியல் தொடர்பு மற்றும் நோய்வாய்ப்பட்ட பிற விலங்குகள் ஆகியவற்றின் மூலம் மனித உடலுக்குள் நுழைந்து நோயினை அதிகரிக்கச்செய்கின்றன. நமது உடலில் நுண்ணுயிரிகள் தங்கியுள்ள இடத்தைப் பொறுத்து, இத்தொற்றானது, குறிப்பிட்ட உறுப்பையோ அல்லது தசையையோ தாக்கக்கூடியதாக உள்ளது.

நோய்த் தொற்றின் தேக்கம்

நோய்த் தொற்றின் தேக்கம் என்பது, நோய்க்கிருமிகள் நோயைப் பரப்பாமல் நல்லமுறையில் வளமுடன் தங்கி பலுகிப்பெருகும் குறிப்பிட்ட சூழ்நிலையைக் குறிப்பதாகும். வேறு விதமாகக் கூறினால், இந்நிலை நுண்கிருமிகளின் வளர்ப்பு இடமாகக் காணப்படுகிறது. .கா. நீர், மண் மற்றும் விலங்குகள்

நோயரும்பு காலம்

நோய் தொற்றும் காலத்திற்கும் நோயின் முதல் அறிகுறி வெளிப்படும் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் நோய் அடைகாக்கும் அல்லது நோயரும்பும் காலம் எனப்படுகிறது. இது சில மணி நேரம் முதல் பல நாட்கள் வரை வேறுபட்டுக் காணப்படும்.

நோய்த்தொற்று மற்றும் நோய்நிலை

மனித உடலில் அல்லது விலங்குகளில் நோய் உருவாக்கும் காரணியானது நுழைந்து, வளர்ச்சியடைதல் அல்லது பெருக்கமடைதலையே நோய்த்தொற்று என்கிறோம்.

 

3. நுண்ணுயிரிகளின் தீங்கான விளைவுகள்

திசுக்கள் பாதித்தல், நஞ்சு சுரத்தல் என இரண்டு வழிகளில் தீங்குயிரிகள் நோயினை ஏற்படுகின்றன.

திசுக்களைப் பாதித்தல்

பல்வேறு நோய்கிருமிகள் திசுக்களையோ அல்லது உறுப்புக்களையோ அழித்து அமைப்பு ரீதியாகவும் செயல்படுதலிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, நுரையீரல் சார்ந்த காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நுரையீரல் செல்களை சேதப்படுத்துகின்றன. மேலும், மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் வைரஸ்கள் கல்லீரல் திசுக்களை அழிக்கின்றன.

நஞ்சு சுரத்தல்

 பல நுண்ணுயிரிகள் விஷத் தன்மையுடைய பொருள்களைச் சுரக்கின்றன. இது நச்சு என அழைக்கப்படுகின்றது. இதன்மூலம் திசுக்கள் சேதப்படுவதால் நோயானது தோன்றுகிறது.

ஒரு சில காற்றுவழி, நீர்வழி, கடத்திவழி மற்றும் பாலுறவினால் பரவும் நோய்களுக்கான காரண உயிரி, நோய்தாக்கும் முறைமை, நோய் காணப்படுதல், அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளை இப்பகுதியில் காணலாம்

உங்களுக்குத் தெரியுமா?

பாக்டீரியாவியலின் தந்தை என்று அழைக்கப்படும் இராபர்ட் கோஃ என்பவர் ஜெர்மானிய மருத்துவராவார். இவர் முதன் முதலில் நுண்கிருமிகள் எப்படி நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பதை கற்றவராவார். 1876 ஆம் ஆண்டு செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது பேசில்லஸ் ஆந்தராசிஸ் என்ற உயிரியால் உருவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

9th Science : World of Microbes : Microbes and Diseases in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம் : நோய்களும் நுண்ணுயிரிகளும் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம்