Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | கணினியின் பாகங்கள்

பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - கணினியின் பாகங்கள் | 6th Science : Term 2 Unit 7 : Parts of Computer

   Posted On :  20.09.2023 10:34 pm

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள்

கணினியின் பாகங்கள்

கணினியின் பாகங்கள் 1. உள்ளீட்டகம் (Input Unit) 2 மையச்செயலகம் (CPU) 3. வெளியீட்டகம் (Output Unit)

அலகு 7

கணினியின் பாகங்கள்




 

கற்றல் நோக்கங்கள்

உள்ளீட்டகம், மையச்செயலகம் மற்றும் வெளியீட்டகம் பற்றி அறிந்துகொள்ளுதல்

நினைவகத்தின் அலகுகள் பற்றி அறிதல்

உள்ளீட்டு, வெளியீட்டுக் கருவிகளைப் பற்றி அறிதல்

கணினியின் பாகங்களை எவ்வாறு இணைப்பது என்பதை அறிந்துகொள்ளுதல்


கணினி - அறிமுகம்

பரந்து விரிந்து கிடக்கும் இந்த பூமியை ஒரு புள்ளியில் இணைப்பது என்பது எளிதானதா? எளிதெனில், அதனை நிறைவேற்ற இயலுமா? இவ்விரு வினாவுக்கும் விடை அது கணினி. கணினியின் உதவியுடன், உலகின் எந்த மூலையிலிருந்தும் நம் செயல்களை எளிதாக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு பரவலாகப் பயன்படுத்தப்படும் கணினியின் தேவையை நாம் அறிந்திருப்போம். எனினும், அக்கணினி எப்படி இயங்குகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா! பொதுவாகவே, கணினியில்மிகமுக்கியமான மூன்றுபாகங்கள் உள்ளன. அம்மூன்று பாகங்களையும் ஒன்றாக இணைக்கும்போதுதான், கணினியை நம்மால் முழுமையாக இயக்க முடியும். அம்மூன்று பாகங்கள் எவை எவை? அவற்றை எவ்வாறு இணைக்க வேண்டும்? என்பதைப் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.

 

கணினியின் பாகங்கள்

1. உள்ளீட்டகம் (Input Unit)

2 மையச்செயலகம் (CPU)

3. வெளியீட்டகம் (Output Unit)


 

1. உள்ளீட்டகம்

கணினிச் செயலாக்கத்துக்குத் தரவுகளையும் கட்டளைகளையும் உள்ளீடு செய்வதே உள்ளீட்டகம் (input Unit). அவ்வாறு தரவுகளை உள்ளீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையே உள்ளீட்டுக்கருவிகள் என்றழைக்கிறோம்.

விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), வருடி (Scanner), பட்டைக் குறியீடு படிப்பான் (Barcode reader), ஒலிவாங்கி (Microphone- Mic.), இணையப் படக்கருவி (Web Camera), ஒளி பேனா (Light Pen) போன்றவைதான் உள்ளீட்டுக்கருவிகள்.

மேற்காணும் உள்ளீட்டுக் கருவிகளில் விசைப்பலகையும், சுட்டியும் மிக முக்கியமானவை. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போமா?

 

விசைப்பலகை


முதலில் விசைப்பலகையைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நாம் பயன்படுத்தும் எல்லா வகைக் கணினியிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுவது விசைப்பலகை. ஏனெனில் 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்னும் கூற்று, மொழிக்கு மட்டுமின்றி கணினிக்கும் பொருந்துவதாகும். அப்படிப்பட்ட எண்ணையும் எழுத்தையும் கணினியில் உள்ளீடு செய்வதற்கு வெளியீட்டகம் விசைப்பலகையே ஆதாரமாகும். அவ்விசைப்பலகையில் இரண்டு விதமான விசைகள் (பொத்தான்கள் ) உள்ளன. எண்களைக் கொண்ட விசைகளை எண்விசை (Number Key) என்றும், எழுத்துகளைக் கொண்ட விசைகளை எழுத்து விசை (alphabet key) என்றும் வழங்குவர்.


சுட்டி


விசைப்பலகையைப் போன்றே சுட்டியும் நம் கணினிப் பயன்பாட்டுக்கு இன்றியமையாததாகும். பொதுவாக சுட்டியில் இரண்டு பொத்தான்களும் அவ்விரண்டிற்கும் நடுவில் நகர்த்தும் உருளையும் காணப்படும். கணினியில் குறிமுள்ளை இயக்குவதே இதன் முக்கிய பணி.

கோப்புகளைத் திறப்பதற்கு வலது பொத்தானையும் (right button), கோப்புகளைத் தேர்வு செய்வதற்கும், தேர்வு செய்யப்பட்ட கோப்புகளில் நமக்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு இடது பொத்தானையும் (left button) பயன்படுத்த வேண்டும். கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு நகர்த்தும் உருளையையும் (scroll ball) பயன்படுத்தலாம்.


2. மையச் செயலகம் (CPU - Central Processing Unit)

மனிதனின் உடலை இயக்கும் மூளையைப் போன்று, கணினியின் செயல்பாடுகளை இயக்குவது மையச்செயலகம். இது கணினியின் உள்ளீட்டுக் கருவிகள் கொடுக்கும் உள்ளீடுகளைப் (தரவுகளைப்) பெற்றுத் தகவல்களாக வெளியீட்டுக் கருவிகள் மூலம் வழங்குகின்றது. இம்மையச்செயலகமானது,

1. நினைவகம் (Memory Unit)

2 கணிதத் தருக்கச் செயலகம் (ALU-Arithmetic Logic Unit)

3. கட்டுப்பாட்டகம்( Control Unit)

ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

 

கட்டுப்பாட்டகம் (Control Unit)

கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது இதன் பணி, மென்பொருள் வாயிலாகக் கொடுக்கப்படும் கட்டளைகளை ஏற்று, அதற்கேற்றவாறு சமிக்ஞைகளை அனுப்பி வைக்கிறது.


கணிதத் தருக்கச் செயலகம் (ALU)

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எல்லாவிதமான எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன.

 

நினைவகம் (Memory Unit)

மனிதன் தனக்குத் தேவைப்படும் செய்திகளை, நிகழ்வுகளைத் தன் நினைவகத்தில் சேமித்து வைப்பதைப் போல் கணினியும் தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்கிறது. அதனையே கணினியின் நினைவகம் என்கிறோம். கணினியில் உள்ள நினைவகத்தை முதன்மை நினைவகம் (Primary Memory), இரண்டாம் நினைவகம் (Secondary Memory) என் இரண்டாகப் பிரிக்கலாம். இதுமட்டுமல்லாது, கணினியின் மற்ற தற்காலிக நினைவகத்தைக் குறுவட்டு (compact disk), விரலி (pen drive) போன்றவற்றைக் கொண்டு மேலும் விரிவுபடுத்தலாம்.

 

3. வெளியீட்டகம் (Output Unit)

மையச் செயலகத்திலிருந்து ஈரடிமானக் குறிப்புகள் (Binary signals) பெறப்படுகின்றன. இக்குறிப்புகளைக்\ கணினியானது, பயனருக்குக் கொண்டு செல்ல, வெளியீட்டகம் பயன்படுகின்றது.

குறுவட்டில் (CD) சேமிக்கும் தகவல்களை விட, 6 மடங்கு அதிகமாக DVD தட்டில் சேமிக்க முடியும்.

கணினித்திரை (Monitor), அச்சுப்பொறி (Printer),ஒலிபெருக்கி (Speaker), வரைவி(Plotter) போன்றவை வெளியீட்டகத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றன.

பல்வேறுபட்ட வெளியீட்டுக் கருவிகள் இருந்தாலும்,கணினியின்பாகங்களுள்ஒன்றாக இணைந்து செயல்படும் கணினித்திரை மிக முக்கியமான வெளியீட்டுக் கருவியாகும். இது பார்ப்பதற்குத் தொலைக்காட்சி பெட்டியின் திரை போன்றே இருக்கும். சுட்டியைஇயக்குதல், விசைப்பலகையில் தட்டச்சு   செய்தல், படம், கேளிக்கைச் சித்திரங்கள் மற்றும் காணொளிகளை நம் கண்களுக்குக் காட்சிப்படுத்துவதே கணினித் திரையின் முக்கிய பணி. அடிப்படையில் இரண்டு வகையான கணினித் திரைகள் உள்ளன. அவை,

1. CRT திரை (Cathode Ray Tube)

2. TFT திரை (Thin Film Transistor)

CRT  திரைகளைக் காட்டிலும் TFT குறைந்த அளவில் வெப்பத்தை வெளிப்படுத்துவதோடு, குறைந்த அளவிலான இடமே இதற்குப் போதுமானதாக இருக்கிறது. ஆகையால் தற்போதுள்ள கணினிகளில் TFT திரையின் பயன்பாடே அதிகமிருக்கிறது.

Tags : Term 2 Unit 7 | 6th Science பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 7 : Parts of Computer : Parts of Computer Term 2 Unit 7 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள் : கணினியின் பாகங்கள் - பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள்