அளவாய்வு செய்தல் - புவியியல் - சாய்வுமானி | 12th Geography : Chapter 9 : Surveying
சாய்வுமானி (Clinometer)
சாய்வுமானியை பயன்படுத்தி ஒரு பொருளின் உயரத்தை எவ்வாறு அளவிடுவது என்பதை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கற்றுக் கொள்ளலாம். இதற்குத் தேவையானவை: சாய்வுமானி, அளவை நாடா, காகிதம், பேனா அல்லது பென்சில் மற்றும் உதவியாளர்.
ஒரு பொருளை அளவிட ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இது ஒரு மரம் அல்லது மின் கம்பமாக அல்லது தொலைபேசி கம்பமாக இருக்கலாம். அந்த பொருளிலிருந்து அதன் உச்சியை உங்களால் பார்க்க கூடிய தொலைவில் நீங்கள் இருக்க வேண்டும். அந்தப் பொருளின் அடிப்பகுதியுடன் சேர்ந்த சமதளப் பரப்பில் நீங்கள் நிற்கவேண்டும்.
இந்நிலையில்தான் எளிய சாய்வுமானியை பயன்படுத்த தொடங்குகிறோம். அதிலுள்ள ஸ்ட்ராவின் (குழாய்) வழியாக நீங்கள் அளவிட வேண்டிய பொருளை அல்லது மரத்தின் உச்சியைக் காண வேண்டும். எடையுடன் கூடிய நூல் சாய்வுமானியில் பொருத்தப்பட்டுள்ள பாகைமானியில் தொடும் கோணத்தை குறித்துக் கொள்ள வேண்டும். காட்டப்படும் கோணத்தைக் குறித்து 900 ஆல் கழித்துக் கிடைப்பதை உங்களுடைய கண் வரையிலான உயரத்தோடு கூட்ட வேண்டும். (கோணத்தைக் குறித்துக் கொள்ள உதவியாளரை பயன்படுத்திக் கொள்ளலாம்). ஒரு தாளில் அதன் முடிவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்திலிருந்து உங்கள் சாய்வுமானி 55° காட்டுகிறது என வைத்துகொள்வோம். இந்த கோண அளவை 90 லிருந்து கழித்தால் மரத்தின் உச்சியின் கோண அளவு 35° ஆகும்.
கோண அளவை கண்டறிந்த பிறகு நாம் இருக்கும் இடத்திலிருந்து அளவிட வேண்டிய பொருள் இருக்கும் இடத்திற்கு இடையே உள்ள தூரத்தை உதவியாளாரின் துணையோடு அளவை நாடாவால் அளக்க வேண்டும். நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதால் உயரத்தை துல்லியமாக கணக்கிட முடியும். நாம் இருக்கும் இடத்திலிருந்து மரம் இருக்கும் தொலைவு 15.6 மீட்டர் என்று வைத்துக் கொள்வோம்.
இறுதியாக நாம் தரையில் இருந்து நம்முடைய கண்வரையிலான உயரத்தை அளவிட வேண்டும். இதற்கு அளவை நாடாவை பயன்படுத்த வேண்டும். (உ.ம்) கண்வ ரையிலான உயரம் 1.64 மீட்டர் என வைத்துக் கொள்வோம்.
வரையப்பட்ட படத்தில் பெறப்பட்ட புள்ளி விவரங்களை குறிக்கவும். இது நீங்கள் எடுத்துக் கொண்ட பொருளின் உயரத்தை அளவிட உதவியாக இருக்கும்.
அடுத்ததாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் எளிய முறையான முக்கோண மாதிரியை வரைந்துக் கொள்ள வேண்டும். வரையப்பட்ட முக்கோணத்தில் நாம் நிற்கும் இடம், அளவிடப்படும் பொருளின் கோண அளவு, நாம் இருக்கும் இடத்திலிருந்து அந்த பொருள் இருக்கும் தொலைவு போன்றவற்றை குறிக்க வேண்டும். (தற்போது கண்வரையிலான உயரத்தை குறிக்க வேண்டாம்).
இந்த முக்கோணத்தில் Xன் மதிப்பை கண்டுபிடிக்க (தரையிலிருந்து கண்வரை உள்ள உயரம்) எளிய முக்கோணவியல், குறிப்பாக முக்கோணத்தின் தொடுகோட்டு விகிதத்தைப் (tangent) பயன்படுத்த வேண்டும்.
தொடுகோட்டு கோணம் = X / தூரம்
இருபுறமும் உள்ள தூரத்தை பெருக்கினால் உங்களுக்கு கிடைப்பது,
X = தொடுகோட்டு கோணம் X தூரம்.
கால்குலேட்டரை பயன்படுத்தி பெருக்கினால் நமக்கு ஒரு தசம் மதிப்பு கிடைக்கும்.
(எ.கா.)
தொடுகோடு (35°) = X / 15.6
X = தொடுகோடு (35°) X 15.6
X = 10.92 மீட்டர்கள்
தேர்வு செய்யப்பட்ட பொருளின் உயரத்தை கண்டுபிடிக்க, நாம் Xன் மதிப்பை மீண்டும் அசல் வரைபடத்திற்குள் கொண்டு வந்து குறிக்க வேண்டும். நாம் தேர்வு செய்த பொருளின் உயரம் h, Xன் மதிப்புக்கு சமமானது. இப்பொழுது நாம் பொருளின் உயரத்தோடு கண் வரையிலான உயரத்தைக் கூட்ட வேண்டும். உயரம்
(h) = X + (கண்ணின் உயரம்)
இந்த எடுத்துக்காட்டில்,
உயரம் (h) = 10.92மீ + 1.64மீ
உயரம் (h) = 12.56 மீட்டர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் உயரத்தை கண்டுபிடிக்கவும். (கண் வரையிலான உயரம் 1.5மீ மற்றும் கட்டிடத்திற்கும் நீங்கள் நிற்குமிடத்திற்கும் இடையேயான தூரம் 18மீ) அல்லது உனது பள்ளி வளாகத்தில் உள்ள மரம் அல்லது கட்டிடம் அல்லது மின்கம்பத்தின் உயரத்தை கண்டுபிடிக்கவும்.