Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | இலக்கணம்: ஆகுபெயர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: ஆகுபெயர்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum

   Posted On :  14.07.2022 07:56 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்

இலக்கணம்: ஆகுபெயர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : இலக்கணம்: ஆகுபெயர்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : கற்கண்டு : ஆகுபெயர்)


பாடநூல் மதிப்பீட்டு வினா 


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகிவருவது ----------- 

அ) பொருளாகுபெயர்

ஆ) சினையாகுபெயர் 

இ) பண்பாகுபெயர்

ஈ) இடவாகுபெயர் 

[விடை : அ. பொருளாகுபெயர்]


2. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ---------- 

அ) முதலாகுபெயர்

ஆ) சினையாகுபெயர் 

இ) தொழிலாகு பெயர்

ஈ) பண்பாகுபெயர் 

 [விடை : ஆ. சினையாகுபெயர்]


3. மழை சடசடவெனப் பெய்தது. - இத்தொடரில் அமைந்துள்ளது ----- 

அ) அடுக்குத்தொடர்

ஆ) இரட்டைக்கிளவி 

இ) தொழிலாகுபெயர்

ஈ) பண்பாகுபெயர் 

[விடை : ஆ. இரட்டைக்கிளவி]


4. அடுக்குத்தொடரில் ஒரே சொல் ---------- முறை வரை அடுக்கி வரும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) நான்கு 

ஈ) ஐந்து

[விடை : இ. நான்கு]


குறுவினா: 

1. ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?

ஒரு பெயர்ச்சொல் அதன் பொருளைக் குறிக்காமல், அதனோடு தொடர்பு உடைய வேறு ஒன்றிற்கு வரும் போது அது ஆகுபெயர் ஆக மாறும். 

சான்று : வெள்ளை - வெண்மை நிறம், வெள்ளை அடித்தான் - வெள்ளை நிறமுடைய சுண்ணாம்பிற்குரியது. 


2. இரட்டைக்கிளவி என்பது யாது ? சான்று தருக.

இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி ஆகும்.

சான்று : விறுவிறு, மளமள.


சிறுவினா

1. பொருளாகுபெயரையும் சினையாகுபெயரையும் வேறுபடுத்துக. 


பொருளாகு பெயர்

1. ஒரு பொருளின் பெயர் சினை (உறுப்பு) க்கு ஆகிவருவது பொருளாகு பெயர்.

2. சான்று : மல்லிகை சூடினாள்

மல்லிகை என்பது பொருளின் பெயர். அது அதன் உறுப்பாகிய மலருக்கு ஆகி வந்துள்ளது.

சினையாகு பெயர் 

1. சினையின் பெயர் பொருளுக்குக்கு ஆகிவருவது சினையாகுபெயர். 

2. சான்று : தலைக்கு ஒரு பழம் கொடு 

தலை என்பது சினையின் பெயர். அது அதன் பொருளுக்கு ஆகி  வந்துள்ளது. 


2. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் ஒப்பிடுக. 


அடுக்குத்தொடர்

தனிச்சொற்களாகப் பிரித்தால் பொருள் தரும்.

ஒரு சொல் நான்கு முறை வரை அடுக்கி வரும்.

சொற்கள் தனியே நிற்கும்.

விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருளில் வரும்.

இரட்டைக்கிளவி 

தனிச்சொற்களாகப் பிரித்தால் பொருள் தராது. 

ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும். 

சொற்கள் இணைந்தே நிற்கும். 

வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் மட்டுமே வரும்.




கற்பவை கற்றபின்


1. பள்ளி நூலகத்திலிருந்து நூல் ஒன்றை எடுத்து வந்து அந்நூலில் ஆகுபெயர்களாக இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்களைத் தொகுக்க. 


நூல் : பெரியாரின் பெண்ணியக் கனவுகள் 

ஆசிரியர் : ச. சேட்டு மதார்சா 

பொருளாகுபெயர்               

1. முல்லைக் கொடி துவண்டது போல்

2. வெப்பங்காயாய் கசந்தது.

இடவாகுபெயர்

1. இந்தியா விடுதலை பெற்றது.

2. தமிழ்மண் மகிமை

காலவாகுபெயர் 

1. ஞாயிறு போனது. 

சினையாகுபெயர் 

1. தலை நிமிரவேண்டும்

பண்பாகுபெயர் 

1. வெள்ளையனைத் துரத்தினர்

தொழிலாகுபெயர் 

----- 


2. அன்றாடப் பேச்சுவழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றைத் தொகுக்க.

அடுக்குத்தொடர்  

போ போ  

வா வா 

பார்த்து பார்த்து  

பார் பார்  

ஓடு ஓடு 

செல் செல் 

நன்று நன்று 

அருமை அருமை 

இரட்டைக்கிளவி 

பரபரப்பாக

சொரசொரன்னு 

தகதகன்னு

சலசலப்பு 

மடமடன்னு 

விறுவிறு

வலவலன்னு 

நெகுநெகுன்னு



மொழியை ஆழ்வோம்

கேட்க. மனித நேயம் பற்றித் தலைவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ்க. 


கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

உண்மை

வணக்கம். உண்மை என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். வாய்மையே வெல்லும் என்பது நம் நீதித் துறையின் அடிப்படைக் கொள்கை. உண்மையை மட்டுமே இந்த உலகம் ஏற்கும். உண்மை பேசுபவனுக்குத் தான் நாளை சொர்க்கம் கிடைக்கும். வள்ளுவர் கூட உண்மைக்கு என்றே வாய்மை என்ற அதிகாரத்தையே வகுத்துள்ளார். பத்துக் குறளில் உண்மையை அழகாக வள்ளுவர் விளக்குகின்றார். உண்மை பேசி உயர்ந்தவன் மன்னன் அரிச்சந்திரன். உண்மை பேசி உலக உத்தமர் ஆனார் காந்தியடிகள். எனவே நாமும் உண்மை பேசுவோம்! வாழ்வில் உயர்வோம்! நன்றி. 


சொல்லக் கேட்டு எழுதுக. 

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. 

2. குயில் குளிரில் நடுங்கியது, மழையில் ஒடுங்கியது, வெயிலில் காய்ந்தது. 

3. இரக்கம் உடையோர் அருள் பெற்றவர் ஆவர். 

4. காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் “சமுதாய வழிகாட்டி” என்று பொருள். 

5. விடியும் போது குளிரத் தொடங்கியது. 


கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கவிதை எழுதுக. 

அன்பு 

பண்பு மூவெழுத்து

பரிவு மூவெழுத்து 

உறவு மூவெழுத்து

நட்பு மூவெழுத்து

இவை இணையும்

அன்பு மூவெழுத்து.

தன்னம்பிக்கை

ஒற்றைக்காலில் நிற்பது 

பூவின் தன்னம்பிக்கை.. 

முள்ளில் மலர்வது 

ரோஜாவின் தன்னம்பிக்கை.. 

உருகியும் ஒளிதருவது 

மெழுகுவர்த்தியின் தன்னம்பிக்கை.. 

வறுமையில் சாதனையே

மனிதனின் தன்னம்பிக்கை! 


சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக. 

(எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும் ) 

(எ.கா.) காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்ய விரும்பாதவர். ஏனெனில் அவர் எளிமையை விரும்பியவர். 

1. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். இல்லையென்றால் துன்பப்பட நேரிடும். 

2. குயிலுக்குக் கூடுகட்டத் தெரியாது. ஆகையால் காக்கையின் கூட்டில் முட்டையிடும்.

3. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ஏனெனில் மரங்கள் தான் மழைக்கு அடிப்படை. 

4. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். எனவே பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம். 

5. தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது. மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.


கடிதம் எழுதுக. 

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

54, குறிஞ்சி வீதி, 

தமிழ்நகர், 

மதுரை - 2.

03.6.2019. 

அன்புள்ள அத்தைக்கு,

உங்கள் அன்பு அண்ணன் மகன் எழுதும் கடிதம். நானும் என் அப்பா, அம்மா ஆகியோரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம் முதல் வாரம் முதல் எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது. ஒரு வாரம் இத்திருவிழா நடைபெறும். ஊரே அலங்காரமாக இருக்கும். பூச்சாட்டல், காப்புக்கட்டல், பூமிதித்தல், அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம் கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும் அழைப்பார்கள். அன்புடன் முடிக்கின்றேன். உடன் பதில் எழுதுங்கள்.

இப்படிக்கு, 

அன்புள்ள அண்ணன் மகன்,

அ. முரளி. 


உறைமேல் முகவரி

ச. தமிழரசி, 

12, திரு.வி.க. நகர், 

சென்னை - 5. 



மொழியோடு விளையாடு



குறிப்புகளைக் கொண்டு இடமிருந்து வலமாகக் கட்டங்களை நிரப்புக.


1. நூலகத்தில் இருப்பவை நூல்கள் நூல்கள் நிறைந்துள்ள இடம் நூலகம் 

2. உலகப்பொது மறை திருக்குறள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 

3. முனைப்பாடியார் இயற்றியது அறநெறிச்சாரம்  நீதி நெறி விளக்கம் பாடியவர் குமரகுருபரர் 

4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் குற்றாலக்குறவஞ்சி சுரதா என்பதன் விரிவாக்கம் சுப்புரத்தினதாசன். 

5. குற்றாலக்குறவஞ்சியைப் பாடியவர் திரிகூடராசப்பக்கவிராயர் 


கீழ்க்காணும் படங்களைப் பார்த்து இரட்டைக் கிளவி அமையுமாறு தொடர் உருவாக்குக.


(எ.கா.) மழை சடசட வெனப் பெய்தது. 

பறவை படபட வெனப் பறந்தது. 

புகைவண்டி சடசட வெனச் சென்றது. 

மரக் கிளை சடசட வென முரிந்தது.


கீழ்க்காணும் அறிவிப்பைப் படித்து அதன்பின் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க.

தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

வீடுகளிலும் பொது இடங்களிலும் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப் பட்டிருக்கவேண்டும்

பொது இடங்களில் தீத்தடுப்பு எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப் பட்டிருக்கவேண்டும்

எச்சரிக்கை ஒலி எவ்வாறு இருக்கும் என்பதைப் பணியாளர்கள் அறிந்திருக்கவேண்டும்

தரமான மின் சாதனங்களையே பயன்படுத்தவேண்டும்

சமையல் செய்யும் போது இறுக்கமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்

பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர்களின் மேற்பார்வையில்தான் வெடிக்க வேண்டும்

நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்

பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசரகால வழிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்


தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை 

உடனடியாகத் தீயணைப்பு மீட்புப் பணித் துறைக்குத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.  

அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பொழுது தீவிபத்து ஏற்பட்டுள்ள இடத்தினைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்

தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்

தீ விபத்து ஏற்பட்ட உடனே அங்குள்ள தீயணைப்பான்களைக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே தீயை அணைக்க முயற்சி செய்யவேண்டும்

உடுத்தியிருக்கும் ஆடையில் தீப்பிடித்தால் உடனே தரையில் படுத்து உருளவேண்டும்

தீக்காயம் பட்ட இடத்தை உடனடியாகத் தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்

பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடைந்து ஓடாமல், அவசரகால வழியில் வெளியேற வேண்டும்

அருகில் இருக்கும் கட்டடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்யவேண்டும்.


தீ விபத்து ஏற்படும் போது செய்யக் கூடாதவை 

தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தின் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது.

எண்ணெய் உள்ள இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.  

தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை போன்றவற்றைத் தடவக்கூடாது.


வினாக்கள்

1. தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

2. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?

3. பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.

4. தீ விபத்து ஏற்பட்டால் செய்யக்கூடாதவை யாவை?

5. உடலில் தீப்பற்றினால் செய்யவேண்டிய முதலுதவி யாது?


தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும் 

வினாக்கள் மற்றும் விடைகள்

1. தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

வீடு மற்றும் பொது இடங்களில் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். தரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.சமையல் செய்யும் போது இருக்கமான உடைகளை அணிய வேண்டும். பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். பணியாளார்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். 


2. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?

தீயணைப்புத் துறைக்குத் தகவல் சொல்ல வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மின் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும். தீ அணைப்பான்கள் கொண்டு தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும். ஆடையில் தீப்பிடித்தால் தரையில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும். 


3. பொது இடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.

தீ விபத்து ஏற்பட்டால் அவசர கால வழியில் செல்ல வேண்டும். அருகில் உள்ள கட்டிடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்.


4. தீ விபத்து ஏற்பட்டால் செய்யக் கூடாதவை யாவை?

மின் தூக்கியைப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய்த் தீயில் நீரை ஊற்றக் கூடாது. தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை ஆகியவற்றைத் தடவக் கூடாது. 


5. உடலில் தீப்பற்றினால் செய்ய வேண்டிய முதலுதவி யாது?

உடலில் தீப்பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.


நிற்க அதற்குத் தக...

என் பொறுப்புகள்.... 

1. நான் எப்போதும் எளிமையைக் கடைப்பிடிப்பேன்

2. அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்

3. என் பணிகளை நேர்மையாகச் செய்வேன்

4. நான் என்றும் பொறுமையுடன் இருப்பேன்.


கலைச்சொல் அறிவோம் 

சமயம் - Religion 

ஈகை - Charity 

கொள்கை - Doctrine 

நேர்மை - Integrity 

உபதேசம் - Preaching

எளிமை - Simplicity

கண்ணியம் - Dignity

தத்துவம் - Philosophy

வாய்மை - Sincerity

வானியல் - Astronomy


இணையத்தில் காண்க

மனிதநேயத்தை வலியுறுத்தும் நிகழ்வுகளை இணையத்தில் தேடிக் காண்க.

Tags : Term 3 Chapter 3 | 7th Tamil பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum : Grammar: Aahu peyar: Questions and Answers Term 3 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : இலக்கணம்: ஆகுபெயர்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்