விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | அறிவியல் - நினைவில் கொள்க | 9th Science : Organ Systems in Animals
நினைவில் கொள்க
❖ உறுப்புமண்டலங்கள் அனைத்தும் இணைவாக செயலாற்றி உயிரினத்தின் உடலினை சீரான சமநிலையில் (ஹோமியோஸ்டேசிஸ்) பராமரிக்கிறன. பல உறுப்பு மண்டலங்களுக்கு இடையில் பணிப் பங்கீடு காணப்படுகின்றது.
❖ உணவுப் பாதை ஒரு தசையாலான, சுருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும். இவ்வுணவுப் பாதையில் வாய், வாய்குழி, தொண்டை ,
உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல் (முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் உள்ளடங்கியது).
பெருங்குடல் (முன்பெருங்குடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளடங்கியது) மற்றும் மலவாய் போன்ற உறுப்புகள் காணப்படுகின்றன.
❖ நமது உடலில் செரிமானமானது ஐந்து படிகளில் நிகழ்கிறது. அவையாவன: உணவு உட்கொள்ளல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாதல் மற்றும் மலம் வெளியேற்றுதல்.
❖ சிறுகுடலானது, செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது.
❖ மனித கழிவுநீக்க மண்டலம் ஓரிணை சிறுநீரகங்களைக் கொண்டுள்ளது. இதிலிருந்து சிறுநீரானது உருவாகிறது.
❖ மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது. கிளாமருலார் வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சப்படுதல் மற்றும் குழல்களில் சுரத்தல்.
❖ ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் விந்தகம் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலமானது, அண்டகங்கள் கொண்ட முதன்மை பாலின உறுப்புகளாக வேறுபட்டுக் காணப்படுகின்றன.
A-Z சொல்லடைவு
பால்மமாக்கம் : பெரிய கொழுப்புத் துளிகளை சிறியதாக மாற்றுதல்.
நொதிகள் : உயிர்வாழும் உயினங்களால் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட உயிர்வேதியியல் வினைகள் நடைபெறுவதற்கு வினையூக்கியாக செயல்படும் பொருள்கள்.
ஹோமியோஸ்டேஸிஸ் (சீர்ச் சமநிலை) : வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் உடலானது உள் சூழ்நிலையில் ஓர் சமநிலையை ஏற்படுத்த முயலுகின்ற போக்கு ஆகும்.
மெல்லுதல் : உணவானது பற்களினால் நொறுக்கப்படுதல்.
வளர்ச்சிதை மாற்றம் : ஓர் உயிரினத்தில் நிகழும் முழு வேதியியல் மற்றும் ஆற்றல் மாற்றங்கள்.
சவ்வூடு பரவல் சீராக்கல் : நீர் மற்றும் உப்பின் செறிவுகளின் கட்டுப்பாட்டினால் ஓர் உயிரினத்தில் உள்ள திரவத்தில் நிலைத்த சவ்வூடு பரவல் அழுத்தத்தைப் பராமரிப்பது.
எதிர்க்களித்தல் அல்லது வாந்தி : விழுங்கப்பட்ட உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வரும் செயல்.
நச்சுப் பொருள்கள் : உயிர் வாழும் உயிரினங்களின் உடல் நலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது நச்சுத்தன்மையுடையதாக இருக்கும் பொருள்கள்.