Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : விதைத் திருவிழா

பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : விதைத் திருவிழா | 5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam

   Posted On :  22.07.2023 02:25 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்

உரைநடை : விதைத் திருவிழா

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : உரைநடை : விதைத் திருவிழா | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

உரைநடை

விதைத் திருவிழா


காலை வழிபாட்டுக் கூட்டத்தில், தலைமையாசிரியர் கூறிய செய்தி, மாணவர்களின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அடுத்த வாரம் அவர்களை அழைத்துச் செல்லப் போகிறார்கள். அன்று முழுவதும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளைத் தம் நண்பர்களுடன் கண்டு மகிழலாம் அல்லவா!

விதைத் திருவிழா தொடர்பான துண்டு விளம்பரத் தாள்களைத் தலைமையாசிரியர் வகுப்பாசிரியர்களிடம் வழங்கினார். நம் பள்ளியிலிருந்து விதைத் திருவிழாவில் மாணவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினார்.

தலைமையாசிரியரிடமிருந்து பெற்ற விளம்பரத் தாள்களை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர். துண்டு விளம்பரத்தாளிலுள்ள செய்திகளைப் படித்துப் பார்க்கச் செய்தனர்.

மாணவர்கள், விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டனர். விதைத் திருவிழாவில் தங்களுடைய பள்ளி சார்பாக என்னென்ன படைப்புகளை வழங்கலாம் எனக் குழுவில் கலந்துரையாடினர். பின்னர், தாங்கள் திரட்டிய படைப்புகளை ஆசிரியரிடம் காண்பித்து அனுமதி பெற்றனர். விதைத் திருவிழாவுக்குச் செல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர்.


மாணவர்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது, பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல, வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்களின் கனிவான பேச்சு, மாணவர்களுக்கு உற்சாகம் தந்தது.

ஆசிரியர்: மாணவர்களே, நாம் விதைத் திருவிழா நடைபெறும் அரங்கை நெருங்கி விட்டோம். நமது படைப்புகளைக் கண்காட்சியில் வைப்பதற்கு நான் உதவுகிறேன். வாருங்கள்.

ரமணன்: எனக்கு இந்த விதைத் திருவிழா பெருமகிழ்ச்சியைத் தருகிறது, மாலா, ரெஹானா விதைகளையெல்லாம் பாருங்களேன். இத்தனை வகைகளா? வியப்பாக இருக்கிறதே!

மாலா: ஆமாம், ரமணா! வகை வகையான விதைகள் என்பதைவிட, இந்த விதைகளை நாம் எப்படி சேகரிக்க வேண்டும், அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், அவற்றை எவ்வாறு முறைப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் எழுதி வைத்துள்ளார்கள். விதைகள் எல்லாம் தரமானவையாக உள்ளன. இந்த விதைகள் மூலம் கிடைக்கும் சத்துக்கள், மருத்துவப் பயன்கள் பற்றியும் விளக்கமாகக் கூறுகிறார்கள், மேலும், விளக்கப் பலகைகளும் வைத்திருப்பது, மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.

மணிமொழி: முகிலா, நெல் விதைகளின் பெயர்களைப் பார்த்தாயா? நாட்டு நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா முதலான பல்வேறு மரபு நெல் விதைகள், நாட்டுக்கம்பு, குதிரைவாலி, சோளம் போன்ற சிறு தானியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலை, உளுந்து, முந்திரி, நாட்டுப்பருத்தி விதைகள், சிறுதானிய விதைகள் மட்டுமல்லாமல் அரிய மூலிகைச் செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்ப்பதை நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.

நிலவளத்தைக் காப்போம்! நீர்வளத்தைப் பெருக்குவோம் ! பூமித்தாயைப் போற்றுவோம்.!

இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமை

350க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் சேகரிப்பு

இயற்கை வேளாண் பொருள்கள்

இயற்கை இடு பொருள்கள்

இயற்கை பருத்தி ஆடைகள்

இயற்கை கைவினைப் பொருள்கள்

மண்ணோடு மட்கக்கூடிய பொருள்கள்

மண்ணின் ஊட்டச்சத்து நீர் மேலாண்மை

சூழலியல்

தோட்டக்கலை

பண்ணை அமைப்பு

உணவுப் பாதுகாப்பு

இயற்கை வேளாண்மை

அனைவரையும் சுண்டி இழுக்கும் 27 அரங்கங்கள்

பாரதி: மணிமொழி அதோ, அங்கே பார்! அந்த அரங்கில் இயற்கை இடுபொருள்கள் இயற்கை உணவுகள், வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான குறிப்புகளும் தருகிறார்கள். வாங்க, வாங்க, என்ன சொல்கிறார்கள் எனக் கேட்போம்.

மணிமொழி: ரமணா, பாதிப்பு என்று இந்த அரங்கத்தில் எழுதியிருக்கே, என்னவாக இருக்கும்?

ரமணா: இரசாயன விதைகள், இரசாயனப் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும்விளைவுகளைத்தாம் பாதிப்பு என்று சொல்கிறார்கள். இதனால், மண்ணின் தன்மை கெடுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

ரெஹானா: பாரதி, இங்கே பார்! சமையல் பாத்திரங்கள். இவை சாதாரண பாத்திரங்கள் அல்ல, பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட செம்பு, மரத்தாலான சமையல் பாத்திரங்கள், கருவிகள். இவற்றையும் நாம் பார்வையிடுவதற்காக வைத்துள்ளனர்.

ஆசிரியர்: மாணவச் செல்வங்களே, அனைத்துக் கூடங்களையும் பார்த்தீர்களா? இந்த விதைத் திருவிழா, உங்களுக்கு மிகுந்த பயனைத் தந்திருக்குமென நினைக்கிறேன்.


(மாணவர்கள் அனைவரும் "ஆமாம், ஐயா" என்று கூறுகின்றனர்.)

பாரதி: ஐயா! அங்கே பாருங்கள். இயற்கை உணவுப்பொருள்கள் என்று எழுதப்பட்ட அந்த அரங்கத்தில் எல்லாரும் ஏதோ சுவைக்கிறார்கள். நாமும் அங்கே செல்லலாமா?

மணிமொழி: விழாவிற்கு வந்தவர்களுக்கு இயற்கை முறையில் தயாரித்த நவதானிய உணவுகளான இனிப்பு உருண்டை, பிட்டு, பொங்கல், கேழ்வரகுக் கூழ், கேழ்வரகு அடை, முளைகட்டிய பாசிப்பயறு, நவதானிய சுண்டல். கொண்டைக்கடலை, தட்டைப்பயறு, மொச்சை போன்ற தின்பொருள்களை வழங்குகிறார்கள்

ஆசிரியர்களுடன் மாணவர்களும் அந்த அரங்கில் நுழைந்தார்கள். இயற்கை உணவுகளைச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.

"இந்த விதைத் திருவிழா எங்களுக்குப் பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நாள் எங்களுக்கு இனிய நிகழ்வாகவும் அமைந்தது. இங்குப் பார்த்தவற்றை நாங்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்" என்று மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்கக் கூறினார்கள். விதைத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி கூறி, மீண்டும் தங்களுடைய பள்ளிக்குத் திரும்பிச் சென்றார்கள்.

Tags : Term 2 Chapter 3 | 5th Tamil பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam : Prose: Vithai thiruvila Term 2 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : உரைநடை : விதைத் திருவிழா - பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்