Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

பருவம் 3 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் | 6th Social Science : History : Term 3 Unit 1 : Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age

   Posted On :  30.08.2023 07:58 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 1: பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் வழியாக, • பண்டைக்காலத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முக்கியச் சான்றான சங்க இலக்கியத்தைப் பற்றிய அறிவைப் பெறுதல். • மூவேந்தர்கள் எனும் சேர, சோழ, பாண்டிய அரசர்களின் ஆட்சி குறித்தும் அவர்களின் சமகாலத்தவர்களான குறுநில மன்னர்கள் பற்றியும் தெரிந்துகொள்ளுதல் • பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகமுறை, சமூக-பொருளாதார நிலைகள் குறித்து கற்றுக்கொள்ளுதல். • களப்பிரர் காலத்தைப் புரிந்துகொள்ளுதல்.

வரலாறு

அலகு 1

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்



 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் வழியாக,

• பண்டைக்காலத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முக்கியச் சான்றான சங்க இலக்கியத்தைப் பற்றிய அறிவைப் பெறுதல்.

• மூவேந்தர்கள் எனும் சேர, சோழ, பாண்டிய அரசர்களின் ஆட்சி குறித்தும் அவர்களின் சமகாலத்தவர்களான குறுநில மன்னர்கள் பற்றியும் தெரிந்துகொள்ளுதல்

• பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகமுறை, சமூக-பொருளாதார நிலைகள் குறித்து கற்றுக்கொள்ளுதல்.

• களப்பிரர் காலத்தைப் புரிந்துகொள்ளுதல்.


சங்க காலம்

சங்கம் என்னும் சொல் மதுரைப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ்ப் புலவர்களின் குழுமத்தைச் சுட்டுகிறது. இப்புலவர்கள் இயற்றிய பாடல்கள் மொத்தமாகச் சங்க இலக்கியம் என அறியப்படுகிறது. இப்பாடல்கள் இயற்றப்பட்ட காலம் சங்க காலம் என அமைக்கப்பற்கின்றன.

ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாணம்) தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்) உ.வே.சாமிநாத அய்யர் ஆகியோர் அரும்பாடுபட்டு பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டனர்.

 

1. சான்றுகள்  - கலிங்கநாட்டு அரசன் காரவேலனுடைய ஹதிகும்பா கல்வெட்டு, புகளூர் (கரூர்க்கு அருகே) கல்வெட்டு, அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பேராணைக் கல்வெட்டுகள். மேலும் மாங்குளம், அழகர் மலை, கீழவளவு ஆகிய ஊர்களிலுள்ள (இவ்வூர்கள் அனைத்தும் மதுரைக்கு அருகேயுள்ளன) கல்வெட்டுகள்.

2. செப்பேடுகள் - வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள்

3. நாணயங்கள் - சங்க காலத்தைச் சேர்ந்த சேர, சோழ, பாண்டிய அரசர்களாலும், குறுநில மன்னர்களாலும் வெளியிடப்பட்ட நாணயங்களும், ரோமானிய நாணயங்களும்

4. பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் - புதைவிடங்கள், நடுகற்கள்

5. அகழ்வாய்விலிருந்து பொருட்கள்கிடைத்த இடங்கள் - ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்.

6. இலக்கியச் சான்றுகள் - தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி ஆகியவை. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள்.

7. அயல்நாட்டவர் குறிப்புகள் - எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ் (The Periplus of Erythrean Sea) பிளினியின் இயற்கை வரலாறு (Natural History) தாலமியின் புவியியல் (Geography), மெகஸ்தனிஸின் இண்டிகா, ராஜாவளி, மகாவம்சம், தீபவம்சம் ஆகியன.

தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கண நூலாகும். அது சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுகிறது.


கால அளவு - கி.மு. (பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் - கி.பி. (பொ.ஆ 3 ) ஆம் நூற்றாண்டு வரை

தமிழகத்தின் புவியியல் பரப்பு -  வடக்கே வேங்கடம் (திருப்பதி) முதல் தெற்கே கன்னியாகுமரி வரை கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லைகளாகக் கொண்டிருந்தது.

காலம் -  இரும்புக் காலம்

பண்பாடு - பெருங்கற்காலப் பண்பாடு

அரசுமுறை -  முடியாட்சி

ஆட்சி புரிந்த அரச வம்சங்கள் - சேரர், சோழர், பாண்டியர்

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பார் தமிழ்மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழைமையானது எனும் கருத்தைக் கொண்டுள்ளார். ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக அது உருபெற்று எழுந்துள்ளது என அவர் கூறுகிறார்.

 

சேரர்

சங்க காலத்தின்போது மூவேந்தர்கள் தமிழகப் பகுதிகளைக் ஆட்சி புரிந்தனர். வேந்தர் எனும் சொல் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சேரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர், கொச்சி, தெற்கு மலபார், கொங்கு மண்டலம் ஆகியவற்றை ஆண்டனர். பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன. சேர அரசன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். சிலப்பதிகாரக் காவியப் பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களைக் தெரியவந்துள்ளது. கொண்டுவந்தார் பத்தினித் வழிபாட்டை அவர் அறிமுகம் எனத் தெய்வ செய்தார். இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பியாவார். அவர்தான் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர். சேரல் இரும்பொறை எனும் அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார். சில சேர நாணயங்களில் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்

• உதயன் சேரலாதன்

• இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

• சேரன் செங்குட்டுவன்

• சேரல் இரும்பொறை

 

சோழர்

சங்க காலத்தில் சோழ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்தது. காவிரி கழிமுகப்பகுதி சோழ நாட்டின் மையப்பகுதியாக விளங்கியது. இப்பகுதி பின்னர் சோழ மண்டலம் என அறியப்பட்டது. சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால் வளவன் அல்லது கரிகாலன் ஆவார். அவர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தார்.

அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார். வேளாண்மையை மேம்படுத்து- வதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார். சோழர்களின் துறைமுகமான புகார், இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களை அதன்பால் ஈர்த்தது. பட்டினப்பாலை எனும் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல், கரிகாலனின் ஆட்சியின்போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.

கல்லணை

இது கற்களால் கட்டப்பட்ட ஆகும். பாசனத்திற்காகக் தடுப்பணை கழிமுகப் வழியாக நீரைத் திருப்பிவிடுவதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே இவ்வணை கட்டப்பட்டது. கல்லணை கட்டப்பட்டபோது 69,000 ஏக்கர் நிலத்திற்கு அது நீர்ப்பாசன வசதியை வழங்கியது.


முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள்

₹  இளஞ்சேட்சென்னி

₹  கரிகால் வளவன்

₹  கோச்செங்கணான்

₹  கிள்ளிவளவன்

₹  பெருநற்கிள்ளி

 

பாண்டியர்

பாண்டியர் இன்றைய தென்தமிழகத்தை ஆட்சி செய்தனர். பாண்டிய அரசர்கள் தமிழ்ப்புலவர்களையும் அறிஞர்களையும் ஆதரித்தனர். பல பாண்டிய அரசர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளன. நெடுஞ்செழியன் மிகவும் புகழ்பெற்ற  போர்வீரராகப் போற்றப்படுகிறார். அவர் சேரர், சோழர், ஐந்து வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தார். அவர் கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுகின்றார்.

பாண்டிய நாடு முத்துக்குளிப்புக்குப் புகழ் பெற்றதாகும். பாண்டிய அரசர்கள் பல நாணயங்களை வெளியிட்டனர். அவர்களின் நாணயங்கள், ஒருபுறத்தில் யானையின் உருவத்தையும் மற்றொருபுறத்தில் மீனின் உருவத்தையும் கொண்டுள்ளன. முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசர் பல வேதவேள்விகளை நடத்தியதைக் கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்.

முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள்

₹  நெடியோன்

₹  நன்மாறன்

₹  முதுகுடுமிப் பெருவழுதி

₹  நெடுஞ்செழியன்



 

அரசுரிமைச் சின்னங்கள்

செங்கோல் (Scepter), முரசு (Drum), வெண்கொற்றக்குடை (white umbrella) ஆகியன அரசு அதிகாரத்தின் சின்னங்களாகும்.



குறுநில மன்னர்கள் – ஆய், வேளிர், கிழார்

முடிசூடிய இம்மூன்று அரசர்களைத் தவிர, பல சுதந்திரமான, நெஞ்சுரம் மிக்க சிறிய குறுநிலமன்னர்களும் இருந்தனர். ஆய் என்னும் பெயர் பழந்தமிழ்ச் சொல்லான ஆயர்


(பொருள்: ஆநிரை மேய்ப்போர்) என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்களின் பெயர்கள் அந்திரன், திதியன், நன்னன் ஆகியனவாகும்.

வேளிர்கள் – வேளாளர் காலத் தமிழகத்தில் – ஆட்சி பண்டைய செய்த நிலவுடைமைப் பிரிவினர் ஆவர். புகழ்பெற்ற வேளிர்கள் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி ஆகியோராவர். அவர்கள் தமிழ்ப்புலவர்களைப் பெருந்தன்மையுடன் தாராளமாக ஆதரித்தமைக்காகப் புகழப்பட்டவர்கள் ஆவர்.

கிழார் என்பவர் கிராமத் தலைவர் ஆவார்.

 

சங்க கால ஆட்சியமைப்பு

அரசுரிமை

அரசுரிமை பரம்பரையானது. அரசர் 'கோ' என அழைக்கப்பட்டார். அது கோன் எனும் சொல்லின் சுருக்கமாகும். வேந்தன், கோன், மன்னன், கொற்றவன், இறைவன் எனும் வேறு பெயர்களாலும் அரசர் அழைக்கப்பட்டார். பொதுவாக ஆட்சி புரிந்துகொண்டிருக்கும் அரசரின் மூத்தமகனே அடுத்து அரியணை ஏறினார். பட்டம் சூட்டப்படும் விழா 'அரசுக்கட்டிலேறுதல்' அல்லது முடிசூட்டுவிழா எனப்பட்டது. பட்டத்து இளவரசர் கோமகன் எனவும் அவருக்கு இளையோர் இளங்கோ, இளஞ்செழியன், இளஞ்சேரல் எனவும் அழைக்கப்பட்டனர். அரசர் தினந்தோறும் அரசவையைக் (நாளவை) கூட்டினார். அங்கு அவர் விவாதங்களைச் செவிமடுத்து அனைத்து வழக்குகளையும் தீர்த்துவைத்தார். அரசின் வருமானம் வரிகள் மூலம் பெறப்பட்டன. நிலவரியே வருவாயின் முக்கிய ஆதாரமாகும். அது 'இறை' என அழைக்கப்பட்டது. இதைத்தவிர அரசு சுங்கவரி, கப்பம், தண்டம் ஆகியவற்றையும் வசூல் செய்தது.

அரசர்களும் வீரர்களும் வீரக்கழல் அணிந்திருந்தனர். அதன்மீது அணிந்திருப்பவரின் பெயரும், அவரின் சாதனைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. ஒற்றர்கள் நாட்டுக்குள் நடப்பனவற்றவை மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடப்பனவற்றையும் தெரிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்டனர்.

புறமுதுகில் காயமடைவது அவமானமாகக் கருதப்பட்டது. போரின்போது புறமுதுகில் காயம்பட்டதற்காக அரசர்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.


சபை

அரசருடைய சபை அரசவை என அழைக்கப்பட்டது. அரசர் 'அரியணை' என்றழைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது வழக்கம். அரசவையில் அரசரைச் சுற்றி சிறப்பு விருந்தினர்கள், அவைப்புலவர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அரசர்கள் ஐந்து விதக் கடமைகளைச் செய்தனர். கல்விகற்பதை ஊக்குவிப்பது, சடங்குகளை நடத்துவது, பரிசுகள் வழங்குவது, மக்களைப் பாதுகாப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது முதலியன ஐந்து வகையான கடமைகளாகும். தூதுவர்கள் அரசரால் பணியில் அமர்த்தப்பட்டனர். தூதுவர்கள் முக்கியமான பங்கு வகித்தனர். அரசருக்கு நிர்வாகத்தில் பல அதிகாரிகள் உதவி செய்தனர். அவர்கள் ஐம்பெருங்குழு (ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு) எண்பேராயம் (எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு) என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.


படை

அரசருடைய படை என்று அழைக்கப்பட்ட இராணுவம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவை காலாட்படை, என் அழைக்கப்பட்டார். குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என்பனவாகும். படைத்தலைவர் 'தானைத் தலைவன்' அக்காலப்பகுதியில் தோமாரம் (எறியீட்டி) பயன்படுத்தப்பட்ட ஈட்டி, வில், அம்பு முக்கியமான ஆயுதங்கள் வாள், கேடயம், ஆகியனவாகும். தோமாரம் எனப்படுவது சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையைப் போன்று வீசப்படுவதாகும். ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் 'படைக் கொட்டில்' என அழைக்கப்பட்டது. கோட்டைகள் அரண்களாலும் ஆழமான அகழிகளாலும் பாதுகாக்கப்பட்டன. போர்முரசும் கடவுளாகவே கருதி வணங்கப்பட்டது.


சட்டமும் நீதியும்

அரசரே இறுதியான மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆவார். தலைநகரில் நீதிமன்றம் 'அவை' என்றழைக்கப்பட்டது. கிராமங்களில் 'மன்றங்கள்' என்பவை தீர்ப்பு வழங்கப்படும் இடங்களாயிருந்தன. தண்டனைகள் எப்போதும் கடுமையாகவே இருந்தன. திருட்டு வழக்குகளில் மரணதண்டனை வழங்கப்பட்டது. தலையைத் துண்டித்தல், உடல் உறுப்புக்களைத் துண்டித்தல், சித்திரவதை செய்வது, சிறையில் அடைப்பது, அபராதம் (தண்டம்) விதிப்பது ஆகியவை குற்றங்களுக்காக வழங்கப்பட்ட தண்டனைகளாகும்.

உள்ளாட்சி நிர்வாகம்

ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் 'மண்டலம்' என்றழைக்கப்பட்டது. மண்டலங்கள் நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. நாடு பல கூற்றங்களாகப் (கூற்றம்) பிரிக்கப்பட்டன. ஊர் என்பது கிராமம் ஆகும். அவை பேரூர் (பெரிய கிராமம்), சிற்றூர் (சிறிய கிராமம்), மூதூர் (பழமையான கிராமம்) என அழைக்கப்பட்டன. கடற்கரையோர் நகரங்களுக்குப் பட்டினம் எனப் பெயர். 'புகார்' என்பது துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும்.

 

முக்கிய நகரங்கள்

புகார், உறையூர், கொற்கை, மதுரை, முசிறி, வஞ்சி அல்லது கரூர், காஞ்சி ஆகியன.


திணை (நிலம்) சார்ந்த சங்க காலச் சமூகம்

நிலம் ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

மண்ணின் வளத்தைப் பொறுத்து நிலங்கள் வகைப்படுத்தப்பட்டன. மருதநிலம் 'மென்புலம்' (நன்செய்)  அழைக்கப்பட்டது. அதில் நெல்லும் கரும்பும் விளைந்தன. நெய்தல் தவிர மற்றவை 'வன்புலம்' (புன்செய்) என அழைக்கப்பட்டன. அவற்றில் தானியங்களும் பருப்பு வகைகளும் விளைந்தன.



பெண்களின் நிலை

சமூக வாழ்வில் பெண்களுக்குக்கட்டுப்பாடுகள் இல்லை. கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர். நாற்பது பெண்புலவர்கள் வாழ்ந்து அரியநூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர். திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது. இருந்தபோதிலும் 'கற்பு' பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றிருந்தனர்.

சங்க காலப் பெண்பாற்புலவர்கள்

அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார், ஆதி மந்தியார், பொன்முடியார்.

 

மத நம்பிக்கைகள் மற்றும் சமூகப் பிரிவுகள்

மக்களின் முதன்மைக் கடவுள் சேயோன் அல்லது முருகன். சங்க காலத்தில் வழிபடப்பட்ட ஏனைய கடவுளர் சிவன், மாயோன் (விஷ்ணு), இந்திரன், வருணன் மற்றும் கொற்றவை ஆகியோராவர். நடுகல் வழிபாடும் வழக்கத்தில் இருந்தது. பௌத்தமும் சமணமும் கூட உடனிருந்தன. வட பகுதிகளில் வளர்ந்திருந்ததைப் போன்று தமிழகத்தில் சாதிமுறை வளர்ந்திருக்கவில்லை. ஒப்பீட்டளவில் வர்ணாசிரம முறை (தொழிலை அடிப்படையாகக் கொண்ட) திராவிடத் தென்னாட்டில் பின்னர் வந்ததே ஆகும்.

வீரக்கல் / நடுகல்

பண்டைக்காலத் தமிழர்கள் போர்க்களத்தில் மரணமுற்ற வீரர்கள்மேல் பெரும்மரியாதை கொண்டிருந்தனர். போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடுகற்கள் நடப்பட்டன.



உடை மற்றும் அணிகலன்கள்

பொருளாதார வசதிமிக்க மக்கள் மஸ்லின், பட்டு மற்றும் நேர்த்தியான பருத்தியிழைத் துணிகளிலால் ஆன ஆடைகளை அணிந்தனர். சாதாரண மக்கள் பருத்தியினாலான இரு துண்டுகளான ஆடைகளை அணிந்தனர். சங்க இலக்கியங்கள் பாம்பின் தோலைக் காட்டிலும் மென்மையான துணிகளைப் (கலிங்கம்) பற்றிக் குறிப்பிடுகின்றன. பெண்கள் தங்கள் கூந்தலை பூக்களால் அலங்கரித்துக்கொண்டனர். ஆண்களும் பெண்களும் விதவிதமான அணிகலன்களை அணிந்தனர். அவை தங்கம், வெள்ளி, முத்துகள், நவரத்தினக் கற்கள், சங்கு, பாசிமணிகள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன.


 

கலைகள்

பலவிதமான இசைக்கருவிகளான முரசு, புல்லாங்குழல், யாழ் போன்றவை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. கரிகாலன் இசையின் ஏழு சுவரங்கள் குறித்து பெரும்புலமை பெற்றிருந்தான் (ஏழிசை வல்லான்). பாடல்கள் பாடும் புலவர்கள் 'பாணர்', 'விறலியர்' என அழைக்கப்பட்டனர். 'கணிகையர்'நடனங்களை நிகழ்த்தினர். கூத்து (நாட்டுப்புற நாடகம்) சங்ககால மக்களுடைய மிக முக்கியமான பண்பாட்டு அம்சமாக விளங்கியது. அவர்கள் முத்தமிழ் எனும் கோட்பாட்டை உருவாக்கினர் (இயல், இசை, நாடகம்).

 

தொழில்

மக்களின் மிக முக்கியமான தொழில்கள் வேளாண்மை, ஆநிரை மேய்த்தல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகியவையாகும். மேலும் கைவினைத் தொழில் செய்வோரான தச்சர், கொல்லர், பொற்கொல்லர், மட்பாண்டம் செய்வோரும் இருந்தனர். நெசவு செய்வது விவசாயம் செய்வோரின் மிகப் பொதுவான பகுதிநேரத் தொழிலாகவும், பலருக்கு அன்றாட முழுநேரத் தொழிலாகவும் இருந்தது.

 

விழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்

மக்கள் பல்வேறு விழாக்களைக் கொண்டாடினார்கள். அறுவடைத் திருநாள் (பொங்கல்), கார்த்திகை தீப விழா ஆகியன அவற்றில் சிலவாகும். இந்திரவிழா தலைநகரில் கொண்டாடப்பட்டது. பல வேடிக்கை நிகழ்ச்சிகளும் விளையாட்டுக்களும் நடைபெற்றன. நடனமாடுதல், எருதுச் சண்டை, சேவல் சண்டை, தாயமாடுதல், வேட்டையாடுதல், மல்யுத்தம் செய்தல், ஊஞ்சலாடுதல் ஆகியன அவற்றில் முக்கியமானவை ஆகும். குழந்தைகள் பொம்மை வண்டிகளோட்டியும், மணல்வீடு கட்டியும் விளையாடினர்.

 

வணிகம்

வணிகம் உள்ளூர், உள்நாட்டில், கடல் கடந்து வெளிநாட்டில் என மூன்று நிலைகளில் நடைபெற்றது. இக்காலப்பகுதியில் தமிழகம் மேற்கொண்ட விரிவான மற்றும் இலாபகரமான வெளிநாட்டு வணிகம், தமிழ்மக்கள் மிகச் சிறந்த கடலோடிகள் என்பதை மெய்ப்பிக்கின்றது. கடற்கரையோரமாகப் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகப் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டன. முக்கியத் துறைமுகங்களில் 'கலங்கரை இலங்குசுடர்' எனும் ஒளிவிளக்குக் கோபுரங்கள் இருந்தன.

வணிகர்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பல இடங்களுக்கு எருதுகள் பூட்டிய கூண்டு வண்டிகளில் எடுத்துச் சென்றனர். பண்டமாற்றுமுறை பரவலாக வழக்கத்தில் இருந்தது. புகார், மதுரை போன்ற முக்கியமான நகரங்களில் இரண்டு வகையான சந்தைகள் இருந்தன. மதுரையில் 'நாளங்காடி' எனப்படும் காலைநேரச் சந்தையும் 'அல்லங்காடி' எனப்படும் மாலைநேரச் சந்தையும் இருந்துள்ளன. இச்சந்தைகளில் பல்வகைப்பட்ட பொருட்கள் பெரும் அளவில் விற்கப்பட்டன; வாங்கப்பட்டன.


மலபார் கருமிளகு

எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது, தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியினுள்ளும் அடிவயிற்றிலும் கருமிளகுக்கதிர் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். (இவ்வாறு பதப்படுத்தி உடலைப் பாதுகாப்பது பண்டைய பின்பற்றப்பட்ட முறையாகும்).

 

முக்கியத் துறைமுகங்கள்

முசிறி, தொண்டி, கொற்கை

முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்

₹ உப்பு, மிளகு, முத்துக்கள், தந்தம், பட்டு, நறுமணப் பொருட்கள், வைரம், குங்குமப்பூ, விலைமதிப்பு மிக்க கற்கள், மஸ்லின், சந்தனக் கட்டை.

முக்கிய இறக்குமதிப் பொருட்கள்

₹ புஷ்பராகம், தகரம், கண்ணாடி, குதிரைகள்.

 

இந்திய வணிகர்களால் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்யப்பட்ட பட்டு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. ரோமப்பேரரசர் ஆரிலியன் இந்தியப் பட்டானது, எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என அறிவித்தார்.

 

கடல்கடந்த நாடுகளுடன் வாணிகத் தொடர்பு

தமிழகத்திற்கும் கிரேக்கம், ரோம், எகிப்து, சீனா, தென்கிழக்காசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குமிடையே வணிக உறவுகள் அகழ்வாய்வுகள் நிலவியதைத் தொல்லியல் மெய்ப்பித்துள்ளன.

 

முசிறி - முதல் பேரங்காடி

ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு (Natural History) எனும் நூலில் முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்டுள்ளார். ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்காகக் கோவிலொன்று கட்டப்பட்டிருந்தது.

கி.மு. (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் ஒப்பந்தப் பத்திரத்தில் (வியன்னாவிலுள்ள உள்ளது) அருங்காட்சியகத்தில் அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கும் முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

களப்பிரர்கள்

கி.பி. (பொ.ஆ.) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் படிப்படியாகத் தனது சரிவைச் சந்தித்தது. சங்க காலத்தைத் தொடர்ந்து களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். களப்பிரர்களைப் பற்றி அறிய நமக்குக் குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச்சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரியபுராணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும். தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது. சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது. பதினெண் கீழ்கணக்கைச் சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. இக்காலத்தில் வணிகமும் வர்த்தகமும் தொடர்ந்து செழித்தோங்கின.


எனவே களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்திரிக்கப்பட்டதைப் போன்று இருண்ட காலம் அல்ல.


பாடச்சுருக்கம்

₹ சங்கம் என்னும் சொல் புலவர்களின் குழுமத்தை குறிக்கிறது. இவ்வமைப்பு மதுரையில் பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கியது

₹ சங்க காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் தமிழகப்பகுதிகளை ஆட்சி செய்தனர்.

₹ இம்மூன்றுமுடியரசர்களுக்கு அப்பாற்பட்டு, தமிழகப் பகுதிகள் பல்வேறு சுதந்திரமான குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டன.

₹ தொல்லியல் அகழ்வாய்வுகள் தமிழகத்திற்கும் அயல் நாடுகளுக்கும் இடையே இருந்த வணிக உறவுகளை உறுதி செய்கின்றன.

₹ கி.பி. (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்க காலம் முடிவுறத் தொடங்கியது. தமிழகத்தைக் களப்பிரர்கள் கைப்பற்றினர். அவர்களின் ஆட்சிக்கான ஆதாரங்கள் சமண, பௌத்த இலக்கியங்களில் காணப்படுகின்றன.



Tags : Term 3 Unit 1 | History | 6th Social Science பருவம் 3 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : History : Term 3 Unit 1 : Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age : Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age Term 3 Unit 1 | History | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 1: பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் : பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் - பருவம் 3 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 1: பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்