Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | இந்திய அரசமைப்புச் சட்டம்

பருவம் 2 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - இந்திய அரசமைப்புச் சட்டம் | 6th Social Science : Civics : Term 2 Unit 2 : The Constitution of India

   Posted On :  28.08.2023 06:25 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 2 : இந்திய அரசமைப்புச் சட்டம்

இந்திய அரசமைப்புச் சட்டம்

கற்றல் நோக்கங்கள் • இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி அறிதல். • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தை அறிந்து வியத்தல். • இதன் சிறப்பம்சங்களை அறிந்து போற்றுதல். • அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றுதல்.

அலகு 2

இந்திய அரசமைப்புச் சட்டம்



 

கற்றல் நோக்கங்கள்

• இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி அறிதல்.

• இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தை அறிந்து வியத்தல்.

• இதன் சிறப்பம்சங்களை அறிந்து போற்றுதல்.

• அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றுதல்.

 

நுழையுமுன்

இப்பாடம் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானதை விளக்குகிறது. இந்திய அரசு நிர்வாகத்திற்கு வழிகாட்டும் மற்றும் இந்திய குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் உறுதிப்படுத்தியும் பாதுகாத்தும் வருகின்ற இந்திய அரசமைப்புச் சட்டதை விளக்குகிறது.

யாழினியனும் சுடராளியும் சகோதரர்கள். யாழ் ஆறாம் வகுப்பிலும் சுடர் நான்காம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ் அடுத்தநாள் தனக்கிருக்கும் வகுப்புத் தேர்விற்காக வாசித்துக் கொண்டிருந்தான். அனைத்து வீட்டுப் பாடங்களையும் செய்து முடித்திருந்த மகிழ்ச்சியில் சுடர் தொலைக்காட்சியில் சிறுவருக்கான திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தான். தொலைக்காட்சியின் ஒலியை மிகவும் அதிக அளவில் வைத்திருந்தான் சுடர். அதுமட்டுமின்றி

அந்தப் படத்தில் பெரிதும் லயித்தவனாய் சத்தமாய் சிரித்தபடியும் கைகளைத் தட்டியபடியும் ரசித்துக் கொண்டிருந்தான். அந்த இரைச்சல் யாழை அவனது படிப்பில் கவனத்தைக் குவிக்க விடாமல் தடுத்தது.

எனவே அவன் தொலைக்காட்சியின் ஒலி குறைக்குமாறும், அளவைக் சத்தமிடாமல் அமைதியாக பார்க்குமாறும் சுடரைக் கேட்டுக் கொண்டான். யாழினியனது கோரிக்கையைச் சுடரொளி காது கொடுத்து கேட்டானில்லை.


திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும் சுடர் தொலைக்காட்சியின் ஒலி அளவையோ தனது இரைச்சலையோ குறைத்துக் கொள்ளவில்லை. சுடர் மறுப்பதையும் தனக்கு அடுத்த நாள் வகுப்புத் தேர்வு இருப்பதையும் அப்பாவிடம் சென்று முறையிட்டான்.

"அண்ணன் தேர்வுக்கு படிக்கிறான்தானே. அவனைப் படிக்கவிடாமல் தொந்தரவு செய்தால் தவறுதானே" என்றார்.

"நான்தான் திரைப்படம் பார்க்கிறேன்ல. இவன் மட்டும் என்னை படம் பார்க்கவிடாமல் தொந்தரவு செய்யலாமா?" என்றான் சுடர்.

"படிப்பதும் படம் பார்ப்பதும் ஒன்றல்ல தம்பி"என்றார் தந்தை.

ஆனால் இதற்கு உடன்படவில்லை சுடர். யாழிற்கு போலவே இது தனக்கும் வீடுதான் என்றும் அவனுக்குப் படிக்க உரிமை இருக்கிறது என்றால் தனக்குப் படம் பார்ப்பதற்கு உரிமை இருப்பதாகவும் கூறினான்.

இருவருக்குமே வீட்டில் சம உரிமை இருக்கிறது என்பதை அவர்களது தந்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஒருவரது உரிமை அடுத்தவரது சுதந்தரத்தைக் காயப்படுத்தக் கூடாது என்று விளக்கினார். அப்போதும் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சுடர் அடம் பிடித்தான்.

"இங்க பாரு சுடர். இது உன் வீடு. படத்தைச் சத்தமாகப் பார்க்க உனக்கு உரிமை இருக்கிறது.

அப்படித்தானே?"

'ஆமாம் அப்பா'

"அதே போல் இது யாழினியனின் வீடு. அவனுக்குப்பிடித்தபாடலைத்தொலைக்காட்சியில் சத்தமாக வைத்துக் கேட்கலாம்தானே?"

"அதெப்படிப்பா, நான்தான் படம் பார்க்கிறேனே. அவனும் சத்தமாகப் பாட்டு கேட்டால் நான் எப்படி படம் பார்க்க முடியும்?"

"இப்ப புரியுதா உன் உரிமைனு நீ சத்தமா படம் பார்க்கலாம்னா அவனும் பாட்டு கேட்கலாம் என்பதும் அவனது உரிமைதான் சுடர்"

"அப்ப எப்படி நான் படம் பார்ப்பேன்?"

"அப்ப எப்படி அவன் படிப்பான்?"

ஆமாம்ல. சரிப்பா நான் இனிமே படம் பார்க்கல"

"அப்படி இல்ல சுடர். நீ படம் பார்க்கலாம். ஆனால் அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்"

"கோவித்துக் கொள்ளாதடா யாழ். இனி தொந்தரவு தராமல் படம் பார்க்கிறேன். நீ போய் படிடா

சுடரது தோளைத் தட்டிக் கொடுத்தாவாறே யாழ் புன்னகை தவழ நகர்ந்தான்.

இந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களது தாய், "ஏங்க, இந்த சின்ன வீட்ட நிர்வகிப்பதற்கே இத்தனை சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் தேவைப்படுகிறதே. இத்தனை பெரிய இந்தத் தேசத்தைக் கட்டுக்கோப்பாக நிர்வகிப்பதற்கு எத்தனை சட்டங்களும் நெறிகளும் தேவைப்படும்" என்று வியப்பின் உச்சிக்கே சென்றார்.

"அது ஒரு கடல் தீபா. பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள், பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் ஒரு நாட்டில் அனைவரையும் சமத்துவமாக நிர்வகிப்பதற்கு வலுவான், தெளிவான வழிமுறைகளும் தேவை. சட்டங்களும் அதைத்தான் அரசமைப்புச் சட்டம் என்கிறோம்" என்றார்.

அடுத்த வேலை நாளில் இருவரும் பள்ளி சென்றனர். அன்று குடியரசு நாளுமாகும்.

அங்குக் குடியரசுதினக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. ஆசிரியர்களும் கொடிமரத்தைச் சுற்றி வரிசையாக மாணவர்களும், நின்றுகொண்டிருந்தனர். கொடியேற்றப்பட்டவுடன் சிறப்பு விருந்தினர் சமூக அறிவியலாளர் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடல் தொடங்கியது.


"தங்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!" என்றார் சமூக அறிவியலாளர்.

"தங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள் ஐயா!" என்றனர் மாணாக்கர்கள்.

“நாம் ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா?"

"நமது அரசமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதைத்தான் நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்." என்றார் வரலாற்று ஆசிரியை மலர்மதி.

"ஆம். தாங்கள் கூறியது சரிதான். ஆனால் அந்த நாளில் நம்முடைய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு வேறு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக 1929-ஆம் ஆண்டு லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை (PURNA SWARAJ) அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 1930, ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக்(Purna Swaraj Day) கொண்டாடப்பட்டது. பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது. என்றார் சமூக அறிவியலாளர் ஆறுமுகம்.

"அரசமைப்புச் சட்டம் என்றால் என்ன?" என்று கேட்டான் நத்தர்.


“அதுபற்றித் முன்னால் தெரிந்துகொள்வதற்கு நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். அதற்குப் பதில் கூறுங்கள். பிறகு நான் உங்கள் கேள்விக்குப் பதில் கூறுகிறேன்." என்றார்

எல்லோரும் "சரி" என்றபடி அவரதுnகேள்விகளை எதிர்கொள்ளத் தயாராயினர்.

"நீங்கள் உங்கள் வீடுகளில் ஏதேனும் விதிகளைப் பின்பற்றுகிறீர்களா?"

"ஆம்." என்றனர்.

"நீங்கள் உங்கள் பள்ளியில் ஏதேனும் விதிகளைப் பின்பற்றுகிறீர்களா?"

"ஆம்." என்றனர்.

"இரண்டும் ஒன்றா வேறுவேறா?"

"பெரும்பாலும் வேறுவேறானவை.'

"பொது இடத்தில் நாம் சில விதிகளைப் பின்பற்ற வேண்டியதிருப்பது அவசியமா?"

“ஆம்’.

"ஏன் அவை அவசியம்?"

"நாம் அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க." என்றாள் தமிழ்ச்செல்வி.

"நம்மை அடுத்தவர்கள் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்தான்." என்றான் செல்வா.

"ஆம். நீங்கள் கூறிய காரணங்கள் ஏற்புடையவைதான். அதே நேரம் விதிகளைப் பின்பற்றச்சொல்லி யாரேனும் உங்களைக் கட்டாயப்படுத்தினால் அப்போது எப்படி உணர்வீர்கள்?"

"கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்."

"உங்களுக்கான விதிகளை நீங்களே உருவாக்கும்போது எப்படி உணர்வீர்கள்?"

"மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கும்."

எல்லோரும் ஆமோதிப்பதைப்போல் தலையசைத்தனர்.

"அரசமைப்புச் சட்டம் ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை உரிமைகள், உருவாக்கி ஆவணப்படுத்துவதோடு, தனது குடிமக்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது. பிறகு அச்சட்டத்தின் துணையோடுதான் அந்நாடு ஆளப்படும்."

“ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எவையெல்லாம் இடம்பெற்றுள்ளன? என்று கேட்டாள் தீபிகா.

“'இந்திய அரசமைப்புச் சட்டம்தான் நமது நாட்டின் உயர்ந்தபட்ச சட்டமாக விளங்குகிறது. அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுப்பது, கட்டமைப்புகள், வழிமுறைகள், அதிகாரம் ஆகியவற்றை விளக்குவது, அரச நிறுவனங்களின் கடமைகளைப் பட்டியலிடுவது, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயம் செய்வது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது ஆகியவற்றின் வழியே ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்குத் தருகிறது.

“இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் எப்போது தொடங்கப்பட்டன?" என்று கேட்டான் கிறிஸ்டோபர்.


"அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 389 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக முனைவர் ராஜேந்திரபிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்."

"வேறு யாரெல்லாம் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தார்கள்?"

"ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா ஆஸாத், எஸ். ராதாகிருஷ்ணன், விஜயலக்ஷ்மி பண்டிட், சரோஜினி நாயுடு உட்படப்பலர் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தனர்."

“இந்த அமைப்பில் பெண்கள் எத்தனை பேர் இருந்தனர்?" என்று கேட்டான் குணசேகர்.


"15 பெண் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தனர்".

"ஏழு பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதற்கான ஆலோசகராக பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார். இக்குழுவின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. அன்றே அரசமைப்புச் சட்டத்தை எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டன".

உங்களுக்குக் தெரியுமா?

அண்ணல் அம்பேத்கர் 'இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.

"எதை அடிப்படையாகக் கொண்டு இதை எழுதினார்கள்?"

"இக்குழுவினர் இங்கிலாந்து, அமெரிக்கா, அன்றைய சோவியத் ரஷ்யா, ஃப்ரான்ஸ், சுவிட்சர்லாந்து உட்பட 60 நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை வாசித்து, அவற்றில் இருந்த சிறப்பான பகுதிகளை முன்மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்.

"ஒரே மூச்சில் இதை எழுதினார்களா?"

'இல்லை. அரசமைப்புச் சட்டம் இறுதி முன்னர் செய்யப்படுவதற்கு சுமார் இரண்டாயிரம் திருத்தங்கள் (amendments) அதில் மேற்கொள்ளப்பட்டன."

"எப்போதுஇச்சட்டம்எழுதிமுடிக்கப்பட்டது?"

"2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் கடந்த நிலையில், 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாரானது .


"இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் நமது அரசமைப்புச் சட்டத்தை அன்று தான் ஏற்றுக்கொண்டது. ஆகையினால் தான் அந்த நாளை அரசமைப்புச்சட்ட நாளாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடுகிறோம். இல்லையா?" என்று கேட்டான் கார்த்திகேயன்.

"ஆம்." என்றார் ஆறுமுகம்.

"அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?" என்று கேட்டான் நத்தர்.

"64 லட்சம் ரூபாய் இதற்கென செலவிடப்பட்டது."

"நமது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் என்ன?"

"நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வோர் இந்தியருக்குமான நீதி, தன்செயலுரிமை, சமத்துவத்தை உறுதி செய்வதோடு சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது."

“முகப்புரை என்றால் என்ன?"

"அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது. அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச் சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது."


இறையாண்மை என்பது எதைக் குறிக்கிறது?"

அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது. இப்படியாக ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்."

"மதச் சார்பின்மை என்பது..?"

"மக்கள் தங்கள் விருப்பப்படி வெல்வேறு இறை, மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க அனுமதிக்கும் சட்டம், அவர்களுக்கு ஒரே விதமான பாகுபாடற்ற உரிமைகளை வழங்குகிறது. அரசிற்கான மதம் என்று ஒன்று கிடையாது என்பதால் அரசு அனைத்து மதங்களையும் ஒரே தளத்தில் வைத்தே பார்க்கிறது."

“இந்திய அரசு சட்டமன்றத்தின் (நாடாளுமன்றத்தின்) வழியேதான் ஆளப்படுகிறது. இல்லையா?"

"ஆம். இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் சட்டமன்ற ஆட்சிமுறையைப் (parliamentary form of government) பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த அமைப்பின்படி, நிறைவேற்று அதிகாரம் சட்டமன்றத்தின்(நாடாளுமன்றத்தின்) கூட்டுப்பொறுப்பாக இருக்கும். அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆட்சியமைக்கும்."

"அடிப்படை உரிமை என்றால் என்ன?"

“ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத்தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன."

"அவை என்னென்ன?"

“சம உரிமை, சுதந்திரமாகச் செயல்படும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சுதந்திர சமய உரிமை, கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை, சட்டத்தீர்வு பெறும் உரிமை ஆகியவை இன்றியமையாத உரிமைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன."

"வழிகாட்டு நெறிமுறை என்று கூறினீர்களே. அப்படி என்றால் என்ன?"


"அரசுகள் சட்டமியற்றும்போதும், ஆட்சி செய்யும்போதும் கவனத்தில் கொள்ளவேண்டிய சில வழிகாட்டல்களை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இவை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அல்ல என்றாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

"வயது வந்தோர் வாக்குரிமை என்பது?"

"பதினெட்டு வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் ஓட்டளிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். இந்த உரிமையை அவர்கள் பெறுவதற்கு ஜாதி, மதம், பாலினம், பொருளாதார அடுக்கு உட்பட எதுவும் தடையாக இருக்க முடியாது.'

"உரிமைகளைப் போலவே ஒவ்வொரு குடிமகனுக்குமான கடமைகளும் இருக்கும் இல்லையா?"

"ஆம். இருக்கின்றன. தேசியக்கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது, எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேணுவது, சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களைப் பின்பற்றி நடப்பது, நாட்டைப் பாதுகாப்பது, நாட்டுக்காகத் தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருப்பது, சாதி, மத, மொழி, இன, எல்லை கடந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் இருப்பது, நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது, காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கையையும் வன் விலங்குகளையும் பாதுகாப்பது, அறிவியல், மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வளர்ப்பது, வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது, குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தருவது ஆகியவற்றை அரசியல் சட்டம் நமது கடமைகளாக அறிவித்துள்ளது.'  என்று முடித்தார் சமூக அறிவியலாளர் ஆறுமுகம்.

 

தகவல் பேழை

•அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் பி. ஆர். அம்பேத்கர், என்.கோபாலசாமி. கே.எம். முன்ஷி, சையது முகம்மது சாதுல்லா, என். மாதவ ராவ், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஆகிய சட்ட வல்லுனர்கள் இடம்பெற்றிருந்தனர்.

• அக்குழுவின் தலைவரான பி. ஆர். அம்பேத்கர் நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.

• நமது அரசியல் சட்டம் உருவானபோது, 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன. தற்போது 448 உறுப்புகள், பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன.

• அரசமைப்புச் சட்டம் 16.9.2016-வரை 101 முறை திருத்தப்பட்டுள்ளது.

 

சிந்தனை வினா

உடனடியாக செய்ய வேண்டிய கடமைகளாக நீ எவற்றைப் பட்டியலிடுவாய்?

 

உள்களுக்குக் தெரியுமா

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

கலைச்சொற்கள்

மக்களாட்சி - மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசுமுறை

வரைவுக்குழு - அரசமைப்புச் சட்ட வரைவை உருவாக்க அமைக்கப்பட்ட குழு

முகப்புரை - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கான அறிமுகம்

மதச்சார்பின்மை - அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் சமமாக நடத்துதல்

சமத்துவம் - அனைத்து மக்களுக்கும் சமத்துவ பொருளாதார நிலை சமத்துவ வாய்ப்பு அளித்தல்

இறையாண்மை - அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரம் 

 

மீள்பார்வை

ஜனவரி 26 குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படை கருத்துகளையும் கொள்கைகளையும் சட்டத்தையும் கொண்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஆவார்.

அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது.

இந்தியா ஒரு இறையாண்மையுடைய சமய சார்பற்ற மக்களாட்சி குடியரச நாடாகும்.

அனைத்து குடிமக்களும் அவரவர் மதத்தைப் பின்பற்றலாம்.

நிர்வாகத்துறை சட்டமன்றத்திற்கு முழு பொறுப்புடையதாக உள்ளது.

அடிப்படை உரிமைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அரசு நெறிமுறை கோட்பாடுகள் மக்களுக்கு வழிகாட்டுகிறது.

வயது வந்தோர் வாக்குரிமை 18 வயதை அடைந்தவர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குகிறது.

அனைத்து குடிமக்களுக்கும் சில அடிப்படை உரிமைகளும் உண்டு


இணையச் செயல்பாடு

இந்திய அரசியலமைப்புச் சட்டம்


படி-1 கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி The Constitution of India என்னும் இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி-2  திரையில் தோன்றும் 60 என்பதைச் சொடுக்கி, கொடுக்கப்படும் வினாக்களைத் தேர்வு செய்து, கருப்பொருளை அறிக

படி-3 மேலும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதற்கு வலப்பக்கத்தின் கீழ் உள்ள Next என்பதைச் சொடுக்குக.

படி -4 அடுத்த கருத்தை அறிந்து கொள்ள வலப்பக்கம் மேற்பகுதியில் உள்ள E என்பதைச் சொடுக்குக.


உரலி:

http://mocomi.com/constitution-of-india/

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

Tags : Term 2 Unit 2 | Civics | 6th Social Science பருவம் 2 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 2 Unit 2 : The Constitution of India : The Constitution of India Term 2 Unit 2 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 2 : இந்திய அரசமைப்புச் சட்டம் : இந்திய அரசமைப்புச் சட்டம் - பருவம் 2 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 2 : இந்திய அரசமைப்புச் சட்டம்