Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | புகைபிடித்தலால் ஏற்படும் தீய விளைவுகள் (Effects of Smoking)

மனித சுவாசம் | விலங்கியல் - புகைபிடித்தலால் ஏற்படும் தீய விளைவுகள் (Effects of Smoking) | 11th Zoology : Chapter 6 : Respiration

   Posted On :  07.01.2024 07:41 am

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்

புகைபிடித்தலால் ஏற்படும் தீய விளைவுகள் (Effects of Smoking)

இன்றைய இளைஞர்கள் ஆர்வக்கோளாறினால், சாகசங்கள் செய்வதாய் நினைத்து விளையாட்டுத்தனமாகப் புகைபிடிக்கத் தொடங்கி இறுதியில் மீளமுடியாத போதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.

புகைபிடித்தலால் ஏற்படும் தீய விளைவுகள் (Effects of Smoking) 

இன்றைய இளைஞர்கள் ஆர்வக்கோளாறினால், சாகசங்கள் செய்வதாய் நினைத்து விளையாட்டுத்தனமாகப் புகைபிடிக்கத் தொடங்கி இறுதியில் மீளமுடியாத போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். 80% நுரையீரல் புற்றுநோய் புகைபிடித்தலால் மட்டுமே ஏற்படுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. புகையிலையை எரிப்பதால் உருவாகும் புகையை உள்ளிழுப்பதே புகைத்தல் எனப்படும். புகைபிடித்தலால் வெளியாகும் புகையில் ஆயிரக்கணக்கான தீங்குதரும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. எடுத்துக்காட்டாக, நிக்கோடின், தார், கார்பன் மோனாக்சைட், அம்மோனியா, கந்தக டைஆக்சைடு மற்றும் மிகச்சிறிய அளவில் ஆர்சனிக் போன்ற பொருட்கள் இப்புகையில் அடங்கியுள்ளன. கார்பன் மோனாக்சைட் மற்றும் நிக்கோடின் போன்றவை இரத்தக் குழாய்களை மிகக்கடுமையாகச் சேதப்படுத்துகின்றன. புகையிலையின் தார் நச்சுப் பொருள் சுவாசத்தின்வாயுப்பரிமாற்றத்தைப்பாதிக்கிறது. நிக்கோடின், புகைபிடித்தலைத் தூண்டக்கூடிய போதைப்பொருளாகும். இது இதயத்துடிப்பை அதிகரிப்பதுடன், இரத்த நாளங்களைக் குறுகச் செய்து, மிகைஇரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்களை (Coronary heart diseases) தோற்றுவிக்கின்றது. கார்பன் மோனாக்ஸைடு திசுக்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தைக் குறைக்கிறது. புகைபிடிக்காதவர்களை விடப் புகைபிடிப்பவர்கள் நுரையீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டைப்புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் புகைபிடித்தலால் வயிறு, கணையம் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளிலும் புற்று நோய் உண்டாகிறது. அதுமட்டுமல்லாது விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கின்றது.

புகைபிடித்தல், சுவாசப்பாதை மற்றும் காற்றுப்பைகளையும் சிதைப்பதால் நுரையீரல் அடைப்பு மற்றும் நாள்பட்ட மார்புச்சளி நோய் ஆகியவற்றை உண்டாக்கும். இவ்விரு நோய்களும் ஆஸ்துமாவுடன் இணைந்து முற்றிய நுரையீரல் பாதை அடைப்பு நோய் (Chronic Obstructive Lungs Disease- COLD) என அழைக்கப்படுகிறது. ஒருவர் புகைபிடித்தலால் வெளியேறும் 85% புகை அவராலேயே உள்ளிழுக்கப்படுகிறது. அவருக்கு அருகில் இருப்பவர்கள் இப்புகையை உள்ளிழுத்து மறைமுகப் புகைபிடிப்பவர்களாகி (Passive smokers) அவர்களும், இதனால் பாதிக்கப்படுகிறார்கள். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதலும் கருத்துரையும் (Counselling) வழங்குவதால் இப்பழக்கத்திலிருந்து அவர்களை மீட்க இயலும்.


Tags : Human Respiration | Zoology மனித சுவாசம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 6 : Respiration : Effects of Smoking Human Respiration | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : புகைபிடித்தலால் ஏற்படும் தீய விளைவுகள் (Effects of Smoking) - மனித சுவாசம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்