Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்

வலிமையும், வலிமையின்மையும் - இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் | 11th Economics : Chapter 7 : Indian Economy

   Posted On :  06.10.2023 07:46 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்

இந்தியப் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் வலிமையும், வலிமையின்மையும் 


1. இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை 

இந்தியா பொருளாதாரத்தின் வலிமையை கீழ்காணும் தலைப்புகளில் ஆராயலாம் 

1. இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்:

இந்தியப் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் பொருள் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படுவது. ஒரு புறம் மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. அதே சமயம் பொருளாதார தாராள மயமாக்கலின் விளைவாக தனியார் துறையின் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் தனியார் துறையும் பொதுத்துறையும் ஒரே கட்டமைப்பின் கீழ் இணைந்து செயல்பட ஏதுவாகின்றது

2. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:

இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது. பசுமைப்புரட்சி, பசுமை மாறா புரட்சி மற்றும் உயிரி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் வேளாண்மையில் தன்னிறைவு அடைந்ததுடன் அல்லாமல் உபரி உற்பத்தி அடைந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருட்கள், தாவர எண்ணெய், புகையிலை, விலங்குகளின் தோல் போன்ற இந்திய வேளாண் பொருட்கள் பன்னாட்டு வாணிபத்தின் மூலம் நமது பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கின்றன.


3. வளர்ந்து வரும் சந்தை: 

முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் சந்தை பிற நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. நிலைத்த உள்நாட்டு உற்பத்தியை தொடர்ந்து தக்க வைத்து கொண்டிருப்பதால், பிற நாடுகள் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (FII) வழியாக முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. இது இன்னொரு வகையில் இந்தியப் பொருளாதாரம் வலிமையாக மாறுவதற்கு உதவி செய்து வருகிறது. இந்தியா குறைந்த முதலீட்டில், குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாத்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறி இருக்கிறது

4. வளர்ந்து வரும் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏழாவது இடத்தையும், வாங்கும் சக்தியில் (PPP) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.

5. வேகமாக வளரும் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினை கொண்டது. 2016-17ல் சீன மக்கள் குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% பெற்றதன் வாயிலாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே, இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது.

6. வேகமாக வளரும் பணிகள் துறை : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும். தகவல் தொழில்நுட்பம், BPO போன்ற தொழில்நுட்ப சேவைகள் பேரளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தகைய வளர்ந்து வரும் பணிகள் துறைகள், நாட்டை உலக அளவில் கொண்டு செல்லவும் மற்றும் பணிகள் துறையின் பிரிவுகளை உலகம் முழுவதும் பரவச் செய்யவும் துணை நிற்கின்றன.


7. பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி: 

நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதால், உள்நாட்டு நுகர்வுப் பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்ந்ததால் மக்களின் வாழ்க்கை முறை மாறி உள்ளது.

8. நகரப்பகுதிகளின் விரைவான வளர்ச்சி: 

பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் நகர்ப்புறங்கள் விரைவான வளர்ச்சி பெற்று வருகின்றன. மேம்பட்ட போக்குவரத்து மற்றும் தொடர்புகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நகரமயமாதலை மேலும் விரைவுபடுத்துகின்றன

9. நிலையான பேரளவு பொருளாதாரம்

உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. நடப்பாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை இந்தியப் பொருளாதாரத்தை "நிலைத்த, உறுதிவாய்ந்த, சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்" என்று குறிப்பிடுகிறது. பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2014-2015 க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும் உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6% ஆக இருந்தது. இதன்மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவு பொருளாதார வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது

10. மக்கள் தொகை - பகுப்பு : 

இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இதன் பொருள் இந்தியா, அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இளைஞர்களே வளர்ச்சியின் அடிப்படை. இந்திய இளைஞர்களின் திறமை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது. நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனிதவளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. மேலும் இது வெளிநாட்டு முதலீட்டையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் ஈர்க்கிறது.



2. இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையின்மை

1. அதிக மக்கள் தொகை: 

மக்கள் தொகைப் பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்த இரண்டாவது நாடாக உள்ளது. வரும் காலத்தில் சீன மக்கள் தொகையையும் மிஞ்சக்கூடும். மக்கட்தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் அது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் 1.7 என்ற வீதத்தில் அதிகரிக்கிறது. ஆண்டு தோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது.

2. ஏற்றத்தாழ்வும் வறுமையும்:

இந்திய பொருளாதாரத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வுநிலை நீடிக்கிறது. அதிக அளவில் வருமானம் மற்றும் சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்கள் மேலும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இது சமுதாயத்தில் மீதமுள்ள அதிக அளவு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கும், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வீதம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது. பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவும் நீடிக்கின்றனர்

3. அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு: 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருந்த போதும். அத்தியாவசியப் பண்டங்களின் விலை தொடர்ந்து உயர்கிறது. இந்த தொடர் விலை ஏற்றத்தால் வாங்கும் சக்தி குறைவதோடு மட்டுமல்லாமல் இது நிரந்தர வருமானம் இல்லாத ஏழை மக்களை பாதிக்கிறது

4. உள்கட்டமைப்பு பலவீனம்: 

கடந்த பத்து இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் மின் ஆற்றல், போக்குவரத்து, பண்டங்கள் பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது

5. வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை: 

அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது. உற்பத்தியில் ஏற்படும் வளர்ச்சி வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே, இந்தியப் பொருளாதாரம்வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி " என்ற பண்பைக் கொண்டுள்ளது.

6. பழமையான தொழில் நுட்பம்: 

வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப நிலை இன்னும் பழமையானதாகவும், வழக்கொழிந்ததாகவும் உள்ளது.


3. இந்தியாவில் மக்கள் தொகை போக்குகள் 

மக்கள் தொகை அம்சங்கள் பற்றி அறிவியல் நெறிப்படி படிப்பதே மக்கள் தொகையியல் எனப்படும். இந்திய மக்கள் தொகை போக்கின் பல்வேறு கூறுகளாவன

மக்கள் தொகை அளவு 

வளர்ச்சி வீதம் 

பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் 

மக்கள் தொகை அடர்த்தி 

பாலின விகிதம் 

வாழ்நாள் எதிர்பார்ப்பு 

எழுத்தறிவு விகிதம்


. மக்கள் தொகை அளவு 

அட்டவணை 7.1 மக்கள் தொகை அளவு


(Source: Registrar General of India)

கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு மடங்கு மக்கள் தொகை அளவு அதிகரித்து உலக அளவில் சீனாவிற்கு அடுத்து 2 ஆம் நிலையை அடைந்துள்ளது. உலகின் புவிப்பரப்பில் 2.4% பரப்பளவு மற்றும் உலக வருவாயில் 1.2% வருவாயைப் பெற்றுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17.5% ஐக் தன்னகத்தே கொண்டுள்ளது. வேறு வகையில் கூறினால் உலக மக்கள் தொகையில் 6ல் ஒருவர் இந்தியர். உண்மையில் உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் மக்கட்தொகை மக்கள் தொகையில் மூன்றாம் இடம் பிடிக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட அதிகம். இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள் தொகை உலகின் பல்வேறு நாடுகளின் மக்கட் தொகையை விட அதிகளவு உடையது.

காலரா, பிளேக், இன்ஃபுளூயனசா போன்ற கொள்ளை நோய்கள் மற்றும் பஞ்சம் காரணமாக 1911-1921 காலகட்டத்தில் மக்கள்தொகை எதிர்மறையாகக் குறைந்தது. 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு "பெரும் பிரிவினை ஆண்டு" என அழைக்கப்படுகிறது.

1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைப் பெருக்க வீதம் 1.33% லிருந்து 1.25% ஆக குறைந்து வந்தது. ஆகையால் இது "சிறு பிளவு ஆண்டு" என அழைக்கப்படுகிறது.

1961- ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும். ஆகையால் 1961 ஆம் ஆண்டை "மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு" என்கிறோம். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு பில்லியன் (100 கோடி) அளவைக் கடந்தது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இளைஞர்களின் மக்கட் தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதுமக்கட் தொகை மாறுதலைக்' குறிக்கிறது


. பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்

குழந்தைகள் பிறப்பு விகிதம்: இது 1000 மக்கள் தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

இறப்பு விகிதம்: இது 1000 மக்கள் தொகைக்கு இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்

வெவ்வேறு ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதங்கள்.

அட்டவணை 7.2: 

பிறப்பு மற்றும் இறப்பு வீதம்


 (Source: Registrar General of India)

1951 ஆம் ஆண்டில் 39.9ஆக இருந்த பிறப்பு விகிதம் 2011 ஆம் ஆண்டு 21.8 ஆக குறைந்தது. பிறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் குறிப்பிடப்படும் படியானதாக இல்லை. இறப்பு விகிதம் 1951ல் 27.4 ஆக இருந்தது, 2011ல் 7.1 ஆக குறைந்தது. மேற்கண்ட அட்டவணை பிறப்பு விகிதத்தின் குறைவானது, இறப்பு விகிதத்தின் குறைவைவிட குறைவாக உள்ளதைக் காட்டுகிறது.

கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தையும் (14.7) மற்றும் உத்திரபிரதேசம் (29.5)அதிக அளவு பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தையும் (6.3), ஒரிசா அதிக இறப்பு விகிதத்தையும் (9.2) கொண்டுள்ளது. மாநிலங்களிடையே பத்தாண்டுகளில் (2001-2011) பீகார் அதிக மக்கள் தொகை பெருக்கத்தையும் கேரளா குறைந்த பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. பீகார்(BI), மத்திய பிரதேசம்(MA), ராஜஸ்தான் (R), உத்திரபிரதேசம்(U) ஆகிய நான்கு மாநிலங்கள் "BIMARU" பிமாரு மாநிலங்கள் எனப்படுகின்றன. அவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் ஆகும்.


. மக்கள் தொகை அடர்த்தி

மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. அதாவது நிலம் மற்றும் மனிதன் விகித அளவைக் குறிக்கிறது. மொத்த நிலப்பரப்பு மாறாதிருக்கும் போது அதிகரிக்கும் மக்கள் தொகையானது மக்கள் தொகையின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.

மக்கள் தொகை அடர்த்தி = மொத்த மக்கள் தொகை / அப்பகுதியின்  நிலப்பரப்பு 


அட்டவணை 7.3 

மக்கள் தொகை அடர்த்தி


நாம் விடுதலை அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி 100க்கும் குறைவு. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் மக்கள் தொகை அடர்த்தியானது 1951ல் 117ஆக உயர்ந்து பின் 2001ல் 325 ஆக அதிகரித்தது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மக்கள் தொகை அடர்த்தி 382 ஆகும். இவ்வாறு மக்கள் தொகை அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது. கேரளா, மேற்குவங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் சராசரி அடர்த்தியை விட மக்கள் தொகை அடர்த்தி மிகுந்து காணப்படுகிறது. பீகார் மிகவும் அதிக மக்கள் தொகை அடர்த்தியுடன், ஒரு சதுர கிமீக்கு 1,102 என உள்ளது. அதனை அடுத்ததாக மேற்கு வங்காளம் 880 மக்கள் தொகை அடர்த்தி கொண்டுள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 17 நபர்கள் என்ற அளவில் அருணாசலப் பிரதேசம் மிக குறைவான மக்கள் தொகை அடர்த்தியைப் பெற்றுள்ளது.


. பாலின விகிதம்

இது 1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் பெண் பாலின விகிதத்தை அளவிடவும், பாலினச் சமநிலையை பிரபலப்படுத்தவும் இது முக்கியமான சுட்டிக் காட்டியாகும்

அட்டவணை 7.4 பாலின விகிதம்


(Source: Registrar General of India)

இந்தியாவில் பெண்களை விட ஆண்களின் பெருக்க விகிதம் அதிக சாதகமாக உள்ளது. இறுதியாக 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி பாலின விகிதம் அதிகரித்து உள்ளது. 2011ன் படி ஹரியானாவில் 877 யும் பாலின விகிதம் மிக குறைவாக இருந்தது. கேரளா மற்ற மாநிலங்களை விட பெண்கள் பாலின விகிதம் அதிகமாக 1000 ஆண்களுக்கு 1084 பெண்களைக் கொண்டுள்ளது.


. பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு

பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே வாழ்நாள் எதிர்பார்ப்பு எனக் குறிக்கப்படுகிறது. வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் போது வாழ்நாள் காலம் குறைவாகவும், மாறாக இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் போது வாழ்நாள் காலம் அதிகமாகவும் உள்ளது. வேறு வகையில் கூறுவதானால் அதிக வாழ்நாள் காலம், குறைந்த இறப்பு விகிதத்தையும், குறைந்த வாழ்நாள் காலம் அதிக இறப்பு விகிதத்தையும் குறிப்பிடுகின்றது

அட்டவணை 7.5 வாழ்நாள் எதிர்பார்ப்பு


(Source: Registrar General of India)

1901 - 1911 ஆம் ஆண்டுகாலங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் 23 வருடங்கள் மட்டுமே ஆகும். இது 2011ல் 63.5 வருடங்கள் என்ற அளவில் அதிகரித்தது இதற்கு முக்கியக் காரணம் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததே ஆகும். ஆயினும் மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் குறைவே ஆகும்.


. எழுத்தறிவு விகிதம்

இது மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதத்தை குறிப்பிடுகிறது. 1951 ஆம் ஆண்டில் ஆண்களில் நான்கில் ஒருவர் மற்றும் பெண்களில் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது. சராசரியாக ஆறு பேருக்கு ஒருவர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர் ஆவார். 2011ல் ஆண்கள் 82% மற்றும் பெண்கள் 65.5% என்ற அளவில் ஒட்டு மொத்த எழுத்தறிவு விகிதம் 74.04% ஆகும். இது மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் இலங்கையைக் காட்டிலும் கூட மிகவும் குறைவு

அட்டவணை 7.6-எழுத்தறிவு விகிதம் 


 (Source: Registrar General of India)

கேரளா (94%) உடன் அதிக எழுத்தறிவு விகிதமும், மிசோரம் (91.3%) அடுத்தப்படியாக கோவா (88.7%) எழுத்தறிவு விகிதமும் கொண்டிருந்தன. ஹிமாச்சலபிரதேசம் (82.8%) மகாராஸ்டிரா (82.3%) சிக்கிம் (81.4%) மற்றும் தமிழ்நாடு (80.1%) 2011ன்படி பீகார் (61.8%) குறைவான எழுத்தறிவு விகிதம் பெற்ற மாநிலமாக உள்ளது.

Tags : Strengths and Weakness of Indian Economy, Demographic trends in India வலிமையும், வலிமையின்மையும்.
11th Economics : Chapter 7 : Indian Economy : Features of Indian Economy Strengths and Weakness of Indian Economy, Demographic trends in India in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம் : இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - வலிமையும், வலிமையின்மையும் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்