3. இந்தியாவில் மக்கள் தொகை போக்குகள்
மக்கள் தொகை அம்சங்கள் பற்றி அறிவியல் நெறிப்படி படிப்பதே மக்கள் தொகையியல் எனப்படும். இந்திய மக்கள் தொகை போக்கின் பல்வேறு கூறுகளாவன
• மக்கள் தொகை அளவு
• வளர்ச்சி வீதம்
• பிறப்பு மற்றும் இறப்பு விகிதம்
• மக்கள் தொகை அடர்த்தி
• பாலின விகிதம்
• வாழ்நாள் எதிர்பார்ப்பு
• எழுத்தறிவு விகிதம்
அ. மக்கள் தொகை அளவு
அட்டவணை 7.1 மக்கள் தொகை அளவு
(Source: Registrar General of India)
கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு மடங்கு மக்கள் தொகை அளவு அதிகரித்து உலக அளவில் சீனாவிற்கு அடுத்து 2 ஆம் நிலையை அடைந்துள்ளது. உலகின் புவிப்பரப்பில் 2.4% பரப்பளவு மற்றும் உலக வருவாயில் 1.2% வருவாயைப் பெற்றுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17.5% ஐக் தன்னகத்தே கொண்டுள்ளது. வேறு வகையில் கூறினால் உலக மக்கள் தொகையில் 6ல் ஒருவர் இந்தியர். உண்மையில் உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் மக்கட்தொகை மக்கள் தொகையில் மூன்றாம் இடம் பிடிக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட அதிகம். இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள் தொகை உலகின் பல்வேறு நாடுகளின் மக்கட் தொகையை விட அதிகளவு உடையது.
காலரா, பிளேக், இன்ஃபுளூயனசா போன்ற கொள்ளை நோய்கள் மற்றும் பஞ்சம் காரணமாக 1911-1921 காலகட்டத்தில் மக்கள்தொகை எதிர்மறையாகக் குறைந்தது. 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு "பெரும் பிரிவினை ஆண்டு" என அழைக்கப்படுகிறது.
1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைப் பெருக்க வீதம் 1.33% லிருந்து 1.25% ஆக குறைந்து வந்தது. ஆகையால் இது "சிறு பிளவு ஆண்டு" என அழைக்கப்படுகிறது.
1961- ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும். ஆகையால் 1961 ஆம் ஆண்டை "மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு" என்கிறோம். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு பில்லியன் (100 கோடி) அளவைக் கடந்தது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இளைஞர்களின் மக்கட் தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது ‘மக்கட் தொகை மாறுதலைக்' குறிக்கிறது.
ஆ. பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்
குழந்தைகள் பிறப்பு விகிதம்: இது 1000 மக்கள் தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
இறப்பு விகிதம்: இது 1000 மக்கள் தொகைக்கு இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
வெவ்வேறு ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதங்கள்.
அட்டவணை 7.2:
பிறப்பு மற்றும் இறப்பு வீதம்
(Source: Registrar General of India)
1951 ஆம் ஆண்டில் 39.9ஆக இருந்த பிறப்பு விகிதம் 2011 ஆம் ஆண்டு 21.8 ஆக குறைந்தது. பிறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் குறிப்பிடப்படும் படியானதாக இல்லை. இறப்பு விகிதம் 1951ல் 27.4 ஆக இருந்தது, 2011ல் 7.1 ஆக குறைந்தது. மேற்கண்ட அட்டவணை பிறப்பு விகிதத்தின் குறைவானது, இறப்பு விகிதத்தின் குறைவைவிட குறைவாக உள்ளதைக் காட்டுகிறது.
கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தையும் (14.7) மற்றும் உத்திரபிரதேசம் (29.5)அதிக அளவு பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தையும் (6.3), ஒரிசா அதிக இறப்பு விகிதத்தையும் (9.2) கொண்டுள்ளது. மாநிலங்களிடையே பத்தாண்டுகளில் (2001-2011) பீகார் அதிக மக்கள் தொகை பெருக்கத்தையும் கேரளா குறைந்த பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. பீகார்(BI), மத்திய பிரதேசம்(MA), ராஜஸ்தான் (R), உத்திரபிரதேசம்(U) ஆகிய நான்கு மாநிலங்கள் "BIMARU" பிமாரு மாநிலங்கள் எனப்படுகின்றன. அவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் ஆகும்.
இ. மக்கள் தொகை அடர்த்தி
மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. அதாவது நிலம் மற்றும் மனிதன் விகித அளவைக் குறிக்கிறது. மொத்த நிலப்பரப்பு மாறாதிருக்கும் போது அதிகரிக்கும் மக்கள் தொகையானது மக்கள் தொகையின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.
மக்கள் தொகை அடர்த்தி = மொத்த மக்கள் தொகை / அப்பகுதியின் நிலப்பரப்பு
அட்டவணை 7.3
மக்கள் தொகை அடர்த்தி
நாம் விடுதலை அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி 100க்கும் குறைவு. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் மக்கள் தொகை அடர்த்தியானது 1951ல் 117ஆக உயர்ந்து பின் 2001ல் 325 ஆக அதிகரித்தது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மக்கள் தொகை அடர்த்தி 382 ஆகும். இவ்வாறு மக்கள் தொகை அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது. கேரளா, மேற்குவங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் சராசரி அடர்த்தியை விட மக்கள் தொகை அடர்த்தி மிகுந்து காணப்படுகிறது. பீகார் மிகவும் அதிக மக்கள் தொகை அடர்த்தியுடன், ஒரு சதுர கிமீக்கு 1,102 என உள்ளது. அதனை அடுத்ததாக மேற்கு வங்காளம் 880 மக்கள் தொகை அடர்த்தி கொண்டுள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 17 நபர்கள் என்ற அளவில் அருணாசலப் பிரதேசம் மிக குறைவான மக்கள் தொகை அடர்த்தியைப் பெற்றுள்ளது.
ஈ. பாலின விகிதம்
இது 1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் பெண் பாலின விகிதத்தை அளவிடவும், பாலினச் சமநிலையை பிரபலப்படுத்தவும் இது முக்கியமான சுட்டிக் காட்டியாகும்.
அட்டவணை 7.4 பாலின விகிதம்
(Source: Registrar General of India)
இந்தியாவில் பெண்களை விட ஆண்களின் பெருக்க விகிதம் அதிக சாதகமாக உள்ளது. இறுதியாக 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி பாலின விகிதம் அதிகரித்து உள்ளது. 2011ன் படி ஹரியானாவில் 877 யும் பாலின விகிதம் மிக குறைவாக இருந்தது. கேரளா மற்ற மாநிலங்களை விட பெண்கள் பாலின விகிதம் அதிகமாக 1000 ஆண்களுக்கு 1084 பெண்களைக் கொண்டுள்ளது.
உ. பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு
பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே வாழ்நாள் எதிர்பார்ப்பு எனக் குறிக்கப்படுகிறது. வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் போது வாழ்நாள் காலம் குறைவாகவும், மாறாக இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் போது வாழ்நாள் காலம் அதிகமாகவும் உள்ளது. வேறு வகையில் கூறுவதானால் அதிக வாழ்நாள் காலம், குறைந்த இறப்பு விகிதத்தையும், குறைந்த வாழ்நாள் காலம் அதிக இறப்பு விகிதத்தையும் குறிப்பிடுகின்றது.
அட்டவணை 7.5 வாழ்நாள் எதிர்பார்ப்பு
(Source: Registrar General of India)
1901 - 1911 ஆம் ஆண்டுகாலங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் 23 வருடங்கள் மட்டுமே ஆகும். இது 2011ல் 63.5 வருடங்கள் என்ற அளவில் அதிகரித்தது இதற்கு முக்கியக் காரணம் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததே ஆகும். ஆயினும் மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் குறைவே ஆகும்.
ஊ. எழுத்தறிவு விகிதம்
இது மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதத்தை குறிப்பிடுகிறது. 1951 ஆம் ஆண்டில் ஆண்களில் நான்கில் ஒருவர் மற்றும் பெண்களில் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது. சராசரியாக ஆறு பேருக்கு ஒருவர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர் ஆவார். 2011ல் ஆண்கள் 82% மற்றும் பெண்கள் 65.5% என்ற அளவில் ஒட்டு மொத்த எழுத்தறிவு விகிதம் 74.04% ஆகும். இது மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் இலங்கையைக் காட்டிலும் கூட மிகவும் குறைவு.
அட்டவணை 7.6-எழுத்தறிவு விகிதம்
(Source: Registrar General of India)
கேரளா (94%) உடன் அதிக எழுத்தறிவு விகிதமும், மிசோரம் (91.3%) அடுத்தப்படியாக கோவா (88.7%) எழுத்தறிவு விகிதமும் கொண்டிருந்தன. ஹிமாச்சலபிரதேசம் (82.8%) மகாராஸ்டிரா (82.3%) சிக்கிம் (81.4%) மற்றும் தமிழ்நாடு (80.1%) 2011ன்படி பீகார் (61.8%) குறைவான எழுத்தறிவு விகிதம் பெற்ற மாநிலமாக உள்ளது.