விலங்கியல் - சுவாசம் | 11th Zoology : Chapter 6 : Respiration

   Posted On :  07.01.2024 04:34 am

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்

சுவாசம்

வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டு, நுரையீரலிலிருந்து கார்பன் டைஆக்ஸைடை வளிமண்டலத்திற்கு வெளியேற்றுவதும் உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜனானது நொதிகள் உதவியுடன் செல்களில் உள்ள கரிம உணவூட்டப் பொருட்களைச் சிதைத்து ஆற்றலை வெளிப்படுத்துதலும் சுவாசம் எனப்படும்.

அலகு - III

பாடம் - 6

சுவாசம்



பாடஉள்ளடக்கம்

6.1. சுவாசத்தின் பணிகள்

6.2. பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகள்

6.3. சுவாசம் நடைபெறும் முறை

6.4. வாயு பரிமாற்றம்

6.5. வாயுக்கள் கடத்தப்படுதல்

6.6. சுவாசத்தை நெறிப்படுத்துதல்

6.7 ஆக்ஸிஜன் கடத்துதலில் உள்ள சிக்கல்கள்

6.8 சுவாச மண்டலக் கோளாறுகள்

6.9 புகைபிடித்தலின் தீய விளைவுகள்

ஆழ்சுவாசத்தையும் சுவாச வீதத்தையும் அதிகரிக்க உடற்பயிற்சி உதவுகிறது. இதன் மூலம் தசைகளுக்கு கூடுதல் ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு, திசுக்களிலிருந்து கூடுதல் கார்பன் டைஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது.

கற்றலின் நோக்கம்:

மனிதனின் வாயு பரிமாற்ற மண்டலத்தின் அமைப்பை விளக்கக் கற்றல்.

சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய உறுப்புகள் மற்றும் திசுக்களை அறிதலும் படம் வரைதலும்.

வாயுப் பரிமாற்றம் மற்றும் வாயு கடத்தப்படுதல் ஆகிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளல்.

ஆக்சிஜன் கடத்தப்படுதல் தொடர்பான சிக்கல்களை அறிதல்.

புகைப் பிடிப்பதினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த அறிவைப் பெறல்.


உண்ணும் உணவும், எந்நாளும் சுவாசிக்கும் காற்றும், உயிர்வாழ்வில் முக்கிமானவை. ஏனெனில் உயிரிகளின் பல்வேறு உடற்செயலியல் செயல்பாடுகளுக்கும் தேவையானது ஆற்றல் ஆகும். அவ்வாற்றல் எங்கிருந்து வருகிறது? நாம் சுவாசிக்கும்போதும், பின்னரும் நடைபெறுவதென்ன? மேற்கண்டவை தொடர்பில்லாத கேள்விகளாகத் தோன்றினாலும், சுவாசத்திற்கும் உணவின் மூலம் ஆற்றல் உருவாக்கப்படுவதற்குமிடையே உள்ள பிணைப்பை அறிந்து கொள்வது தேவையாகும். ஆக்ஸிஜனைப் பயன்படுத்திக் குளுக்கோஸ் போன்ற உயிர் மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு, ஆற்றல் உருவாக்கப்படுகிறது. அப்போது வெளிப்படும் கார்பன் டைஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. ஆகவே செல்களுக்கு ஆக்சிஜன் அளிக்கப்படுவதும் கார்பன் டைஆக்சைடு உடனடியாக வெளியேற்றப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறுவது தேவையாகிறது. எனவே உயிர்வாழச் சுவாச மண்டலத்தின் தேவை அவசியமாகிறது.

முந்தைய பாடங்களில் வளர்ச்சிக்கும், திசு புதுப்பித்தலுக்கும் தேவையான ஆற்றலை உணவு எவ்வாறு தருகிறது என்பது விளக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெற ஆக்ஸிஜன் அவசியம். எனவே இந்தப் பாடத்தில் மனிதச் சுவாச மண்டல உறுப்புகள்,மூச்சு விடுதல், காற்று பரிமாற்றமுறை, வாயுக்கள் கடத்தப்படுதல் மற்றும் சில சுவாசக் கோளாறுகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டு, நுரையீரலிலிருந்து கார்பன் டைஆக்ஸைடை வளிமண்டலத்திற்கு வெளியேற்றுவதும் உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜனானது நொதிகள் உதவியுடன் செல்களில் உள்ள கரிம உணவூட்டப் பொருட்களைச் சிதைத்து ஆற்றலை வெளிப்படுத்துதலும் சுவாசம் எனப்படும்.


Tags : Zoology விலங்கியல்.
11th Zoology : Chapter 6 : Respiration : Human Respiration: Introduction Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : சுவாசம் - விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்