Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பொருளாதார கட்டமைப்பு வசதிகள்
   Posted On :  06.10.2023 08:54 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்

பொருளாதார கட்டமைப்பு வசதிகள்

பொருளாதார கட்டமைப்பு வசதிகள் நாட்டின் உற்பத்தி மற்றும் பகிர்வு வசதிக்கு பயன்படுவதாகும்.

பொருளாதார கட்டமைப்பு வசதிகள்

பொருளாதார கட்டமைப்பு வசதிகள் நாட்டின் உற்பத்தி மற்றும் பகிர்வு வசதிக்கு பயன்படுவதாகும்.

உதாரணமாக, இருப்புப் பாதைகள், சரக்கு வாகனங்கள், தபால் மற்றும் தொலை தொடர்பு நிலையங்கள், துறைமுகங்கள், கால்வாய்கள், மின் உற்பத்தி நிலையங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை பொருளாதார கட்டமைப்புக்கு உதவுகின்றன. இவை பண்டங்கள், பணிகள் உற்பத்திக்கு உதவுகின்றன.


1. போக்குவரத்து

உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து இடங்களையும் நன்றாக இணைக்ககூடிய திறன்மிகு போக்குவரத்து முறை தேவைப்படுகிறது.

இந்தியா இருப்புப் பாதை, சாலை, கடல்வழி (கப்பல் போக்குவரத்து) மற்றும் வான்வழி போக்குவரத்தின் நல்ல கட்டமைப்பை பெற்றுள்ளது. சாலைப் போக்குவரத்தில் 30 லட்சம் கி.மீ நீளம் கொண்ட சாலைகளால் உலகத்தின் மிகப்பெரிய சாலை போக்குவரத்து கொண்ட நாடாக திகழ்கிறது. ஆசியாவில் மிகப்பெரிய இருப்புப் பாதை வழிகளிலும், உலகின் நான்காவது பெரிய போக்குவரத்து அமைப்பாகவும் விளங்குகிறது. இந்தியாவின் இருப்புப் பாதை நீளம் 63,000 கி.மீ; இதில் 13,000 கி.மீ மின் மயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான துறைமுகங்களான கொல்கத்தா, மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், கோவா ஆகிய இடங்களில் 90% கடல் வழி வாணிபம் நடைபெறுகிறது. இவை உலகின் பல பகுதிகளிலிருந்தும் சரக்கு கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் பொருட்கள் இறக்கும் இடங்களாகவும், உலகின் அதிக பயணிகள் வந்து போகும் இடங்களாகவும் உள்ளன. இந்தியாவின் வான் வழி போக்குவரத்து நாட்டின் பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களை இணைக்கின்றன. உள்நாட்டு விமானச் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் விமான சேவைகள் செய்து வருகின்றன. பன்னாட்டு விமானப்போக்குவரத்தை ஏர் இந்தியன் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்திய இரயில்வே முதல் Wi-fi - வசதியை பெங்களுருவில் தொடங்கியது

இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை 27-8-2007 அன்று ஒன்றாக இணைந்தன.

துறைமுகங்களின் மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்கு, குறிப்பாக சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட 1950ல் தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்டது.


2. ஆற்றல்

நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும். இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மின்சாரம் இன்றி நம்மால் வாழ்வது சிரமம். மின் உற்பத்திக்கு பயன்படுத்துக் கிடைக்கக்கூடிய மூல வளங்கள் அடிப்படையில் அவை இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன

1. புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள் 

2. புதுப்பிக்கக்கூடிய மின்ஆற்றல் மூல வளங்கள் 


1. புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூலங்கள்

இதன் பெயருக்கு ஏற்றார் போல் இத்தகைய வளங்களை நாம் மறுபடியும் பயன்படுத்த முடியாது. அவை தீர்ந்து விட்டால் மறுபடியும் உருவாக்க முடியாது. இத்தகைய ஆற்றல் மூலங்கள் தொடர்ந்து பயன்படுத்திட அவை காலப்போக்கில் தீர்ந்து போகும். உதாரணம் நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் பல


2. புதுப்பிக்கக்கூடிய மின்சக்தி மூல வளங்கள் : இத்தகைய வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் ஏனென்றால் இத்தகைய வளங்கள் தீர்ந்து போகாதவை. இவை ஏராளமாகவும், முற்றுப் பெறாதவைகளாகவும் இருக்கின்றன

அவை 

1. சூரிய ஒளியாற்றல் 

2. காற்று ஆற்றல்

3. அலைகள் ஆற்றல் 

4. புவி வெப்ப ஆற்றல் 

5. உயிரி எரிவளி (வாயு) ஆற்றல்

சில நேரங்களில் புதுப்பிக்க கூடிய வளங்களை, வழக்கில் இல்லாத ஆற்றல் எனவும் அழைப்பதுண்டு. காரணம் இவ்வளங்கள் கொண்டு முன்காலங்களில் மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்பட வில்லை அல்லது வழக்கத்தில் இல்லை எனலாம்.







தொகுப்புரை

இப்பாடம், இந்திய பொருளாதாரம் மற்றும் அதன் வளங்கள் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆற்றல் பற்றிய பார்வையை மையப்படுத்துகிறது. இந்திய பொருளாதார சிந்தனையாளர்களின் தத்துவங்களைப் பற்றி விவரிப்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் சிறந்த பொருளியல் அறிஞர்களின் நல்ல நூல்களை வாசிப்பார்கள்.


சொற்களஞ்சியம்

பொருளாதார வளர்ச்சி

மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்து முன்னேறாத நிலையிலிருந்த ஒரு பொருளாதாரம் முன்னேறிய நிலையை அடைவது.

பொருளாதார முன்னேற்றம் / மேம்பாடு 

தலா வருமானத்தைப் பொறுத்து ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் நாட்டு நலன் ஆகியவை அதிகரிப்பது

மொத்த உள்நாட்டு உற்பத்தி 

ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு

தலா வருமானம் 

ஒரு குடிமகனின் சராசரி தலா வருமானம் என்பது நாட்டு வருமானத்தை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பது.

இயற்கை வளங்கள்

இயற்கையில் கிடைக்கும் பண்டங்கள், பணிகள் அல்லது இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள்.

புதுப்பிக்கப்படக் கூடிய வளங்கள் 

ஒரு குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் உருவாக்கப்படக்கூடிய வளங்கள்

புதுப்பிக்கப்பட முடியா வளங்கள் 

புதுப்பிக்கப்பட முடியாத தீர்ந்து போகக் கூடிய வளங்கள்

காடுகளை அழித்தல்

வனங்களை அழித்து வனத்தின் நிலங்களை வனமல்லாத பயன்பாட்டிற்கு உருவாக்குவது.

எரிசக்திப் பிரச்சனை

சக்தி வளங்கள் தேவைக்கு குறைவாக இருப்பதால் உருவாகும் பற்றாக்குறை

அறக்கட்டளைக் கொள்கை

நன்கொடையாளர்கள் வியாபாரம் மற்றும் சொத்துக்களுக்கு  அறக்காவலர்களாக செயல்படுவது.

11th Economics : Chapter 7 : Indian Economy : Indian Economic Infrastructure in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம் : பொருளாதார கட்டமைப்பு வசதிகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்