பருவம் 3 அலகு 3 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சாலை பாதுகாப்பு | 6th Social Science : Civics : Term 3 Unit 3 : Road Safety

   Posted On :  05.07.2023 05:14 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 3 : சாலை பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு

கற்றல் நோக்கங்கள் • சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளல். • சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து குறியீடுகள் குறித்து அறிந்து கொள்ளல். • சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உத்திகளை உள் வாங்கி கொள்ளுதல் மற்றும் உயிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.

அலகு 3

சாலை பாதுகாப்பு

 

கற்றல் நோக்கங்கள்

•  சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளல்.

•  சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து குறியீடுகள் குறித்து அறிந்து கொள்ளல்.

•  சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உத்திகளை உள் வாங்கி கொள்ளுதல் மற்றும் உயிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.

 

'எச்சரிக்கையாகவும் அக்கறையாகவும் இருங்கள் விபத்துகளைக் குறைத்திருங்கள்.'

வாகனங்களை எப்படி, எப்போது, ஏன் இயக்க அனுமதிக்கப்படுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களே சாலைவிதிகள் ஆகும். சாலை பாதுகாப்புக் கல்வி குழந்தைகள் மற்றும் இளையோரின் அணுகுமுறைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. மேலும், அவர்களை ஒரு பொறுப்புமிக்க ஓட்டுனராகவும், பயணியாகவும் பாதசாரிகளாகவும் மிதிவண்டி ஒட்டுபவராகவும் உருவாக்குவதை உறுதி செய்கின்றது.

குழந்தைகளுடன் நாம் இருக்க இயலாத நேரங்களிலும் அவர்களைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது என்பது ஒரு சவால் ஆகும்.

பெற்றோரும் ஆசிரியர்களும் வீடுகள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். ஆனால் இவர்களைச் சாலையில் பாதுகாப்பது யார்? எனவே சாலை பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவது மிகவும் முக்கியமானதாகும். குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்புக் கல்வியினை அவர்கள் வீட்டை விட்டு வெளியே தனியாகச் செல்லத் துவங்கும் வயதிலேயே ஆரம்பிப்பது சிறந்ததாகும்.

 

கட்டாயக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள் மற்றும் அறிவுறுத்தும் குறியீடுகள் என்று மூன்று வகையான போக்குவரத்து குறியீடுகள் உள்ளன.

I கட்டாயக் குறியீடுகள்: நாம் சாலைகளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றிய விதிகளாகும். இவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை. இந்த குறியீடுகள் வட்ட வடிவில் காணப்படுகின்றன.


II. எச்சரிக்கைக் குறியீடுகள்: சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்களுக்கு அறிவிப்பவை எச்சரிக்கைக் குறியீடுகள் ஆகும். இவை பொதுவாக முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றன.


III அறிவுறுத்தும் குறியீடுகள்: திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன. இவை பொதுவாக செவ்வக வடிவத்தில் காணப்படுகின்றன.


நீல நிற வட்டங்கள் நேர்மறை அறிவுறுத்தல்களாக சாலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன.

சிவப்பு வளையங்கள் அல்லது வட்டங்கள் சாலைகளில் நாம் என்ன | செய்யக்கூடாது என்பவற்றை எதிர்மறை அறிவுறுத்தல்களாக வழங்குகின்றன.

 

சாலை பாதுகாப்பு விளக்குகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் எவற்றைக் குறிக்கின்றன?



சிவப்பு – நில்

.நிறுத்தக் கோட்டிற்கு முன் காத்திருக்கவும்

•  நிறுத்தக்கோடு இல்லாத இடங்களில் சாலை போக்குவரத்து விளக்கு தெளிவாக தெரியும்படி சாலையில் நிற்கவும்.

• பச்சை நிற விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவும்.

• சிவப்பு விளக்கு ஒளிரும் நேரத்தில் தடைசெய்யும் குறியீடுகள் இல்லாத போது இடப் பக்கம் திரும்பிச் செல்லலாம். ஆனால் பாதசாரிகளுக்கும், பிற போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

 

மஞ்சள் – க வனி

• நிறுத்தக் கோட்டைத் தாண்டிய பிறகு நிறுத்துவதால் விபத்து ஏற்படும் என்று எண்ணினால் மஞ்சள் விளக்கு ஒளிரும்போது தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ளலாம். எனினும் அதிக கவனத்துடன் செயல்படவும்.

பச்சை - செல்

• பாதை தடையற்று இருப்பதை உறுதி கொண்டு பயணத்தைத் செய்து தொடரலாம்.

•  தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது நீங்கள் வலப் பக்கமாகவோ அல்லது இடப்பக்கமாகவோ திரும்பிச் செல்லலாம். ஆனாலும் மிகுந்த கவனத்துடன் இருந்து, பாதையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

•  பச்சை நிற அம்புக் குறி அது காட்டும் திசை நோக்கிப் பயணிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

 

குறுக்கு சாலைகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்கள்

குழந்தைகள் தாங்கள் விரும்பிய இடங்களில், சாலைகளின் குறுக்கில் ஓடி களிக்கும் தன்மையுடையவர்கள். சாலைகளிலோ சாலைகளின் குறுக்கிலோ ஓடுதல் கூடாது எனும் உணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் விரைவில் திசை திருப்பப்பட்டு, பெற்றோர் கைகளை உதறி விட்டு சாலைகளின் குறுக்கே ஓடிவிடக்கூடிய தன்மையுடையவர்கள்.

 

பாதசாரிகள் கடக்கும் இடம்

பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு பிரிட்டனில் அமைக்கப்பட்டது. சாலைகள் புள்ளிகளால் ஆன கோடுகளால் குறிக்கப்பட்டன. நடைபாதைகளில் பெலிஷா பேக்கன் என்று அழைக்கப்பட்ட ஒளிக்கம்பங்கள் அமைக்கப்பட்டன. இது பிரிட்டனின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எல். ஹோரி பெலிஷா அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டது. ஜீப்ரா கிராசிங் எனப்படும் கருப்பு வெள்ளைகளால் பட்டைகள், கருப்பு வெள்ளைக்கோடுகளாக மாற்றமடைந்தன. உலகப்போருக்குப்பின் தான் கிராசிங் உருவாக்கப்பட்டன.

சாலை குறியீடுகள், அடையாளங்கள், போக்குவரத்து குறியீடுகள் மற்றும் பிற போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை சாலை பயன்பாட்டாளர்களுக்கு விளங்குவதால் இவை வழிகாட்டியாய் சாலைகளின் மொழியாகக் கருதப்படுகின்றன. சாலை பயன்பாட்டாளர்களான பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டுநர், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் ஆகிய யாவரும் போக்குவரத்து கட்டுப்பாட்டுச் சாதனங்கள் குறித்தும் அவற்றின்முக்கியத்துவம் குறித்தும் தெரிந்திருத்தல் அவசியமாகும். சாலை குறியீடுகள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கவும் சாலை பயன்பாட்டாளர்களுக்கு விளங்குகின்றன.

 

நடைபாதையை எப்போதும் பயன்படுத்தவும்

சாலைகளில் வழிகாட்டியாய் நடக்கும்போது நடைபாதையைப் பயன்படுத்த குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.



பாதசாரிகள் செய்யவேண்டியன

• நடைபாதை இருக்கும் இடங்களில் சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்கலாம்.

• நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிர் வரும் வாகனங்களை நோக்கி வலப் பக்க ஓரத்தில் நடக்க வேண்டும்.

• ஜீப்ரா கிராஸிங்குகள், பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்க வழி பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

•  இவ்வசதிகள் இல்லாத பகுதிகளில் சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.


• 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் துணையோடு சாலைகளைக் கடக்க வேண்டும்.

• பாதுகாப்பான தூரத்தில் வாகனங்கள் வரும்போது சாலையைக் கடக்க வேண்டும்.

• இரவு நேரங்களில் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும்.

 

செய்யக்கூடாதவை.

• சாலைகளை ஓடி கடக்கக் கூடாது.

• நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு முன்புறத்திலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ சாலையைக் கடக்கக் கூடாது.

• வாகன ஓட்டுநருக்குத் தெளிவாக தெரியாத மூலைகளிலிருந்தும் வளைவுகளில் இருந்தும் சாலையைக் கடக்கக் கூடாது.

• சாலை தடுப்புகளைத் தாண்டிக் குதித்துச் சாலையைக் கடக்கக் கூடாது.

 

பாதுகாப்பான மிதிவண்டி பயணம்

பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள் மிதிவண்டிகளில் பள்ளிக்குச் செல்கின்றனர். எனவே சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் அறிந்திருத்தல் அவசியம். மேலும் அவர்களதுமிதிவண்டிகளைச் சரியான முறையில் பராமரித்தல் வேண்டும்.



செய்ய வேண்டியவை

• .மிதிவண்டிகளில் உதிரிபாகங்களைப் தரமான பொருத்துதல் வேண்டும். உதாரணமாக மணி, பிரேக் கட்டைகள், கண்ணாடி, முன் மற்றும் பின் மட்கார்டுகள் வெள்ளை நிறம் பூசப்பட்டு இருக்க வேண்டும். பிரதிபலிக்கும் பட்டைகள் மிதிவண்டியின் முன்புறமும் பின்புறமும் ஒட்ட வேண்டும்.

• சாலையின் இடப் பக்க ஓரத்தில் செல்லவும் அல்லது சேவை சாலையைப் பயன்படுத்தவும்.

• போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளைத் தவிர்த்தல் வேண்டும்

• வேகமாக இயங்கும் மோட்டார் வாகனங்களைக் கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டும்.

• மிதிவண்டியை நிறுத்துவதற்கு முன்பாகவும் திரும்புவதற்கு முன்பாகவும் சரியான குறியீடுகள் வழங்குதல் வேண்டும்.

 

செய்யக்கூடாதவை

• மிதிவண்டிகளைக் கொண்டு எவ்விதமான சாகசச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.

• மிக அதிகமான சுமைகளை ஏற்ற வேண்டாம். மிதிவண்டியில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

• வேகமாகச் செல்லும் மற்றொரு வாகனத்தைப் பிடித்துக்கொண்டு மிதிவண்டியில் பயணிக்க வேண்டாம்.

 

பள்ளி வாகனங்களில் பயணிக்கும்போது செய்ய வேண்டியவை.

• காலையில் முன்கூட்டியே எழுந்து இல்லத்திலிருந்து முன்கூட்டியே கிளம்பிவிட வேண்டும்.

• பயணிக்க வேண்டிய பேருந்தில் நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து வரிசையில் நின்று ஏற வேண்டும்.

• பேருந்தில் ஏறிய பிறகு சரியானமுறையில் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

• பேருந்தில் இருக்கும் பிடிமானங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

• நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தத்தில் மட்டுமே இறங்க வேண்டும்.

• பேருந்து முழுவதும் நின்றபிறகு மட்டுமே இறங்க வேண்டும்

• சாலை போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதனைப் பள்ளி நிர்வாகத்தினர்/ பெற்றோர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

 

செய்யக்கூடாதவை

• பேருந்தில் ஓடி ஏறக்கூடாது.

• பேருந்து படிகளில் நின்று பயணம் செய்யக் கூடாது.

• ஓட்டுநரை திசை திருப்பும் விதமான ஒலிகளை எழுப்புதல் கூடாது.

• வாகனத்திற்கு வெளியே தலை, கை, கால்களை நீட்டக்கூடாது.

• ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாது.


இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவராக/உடன் பயணிப்பவராக

• எப்போதும் தலைக்கவசம், இருக்கை பெல்ட் அணிய வேண்டும்.

• வாகன ஓட்டுநருடன் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

• 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளே வாகனத்தின் பின் இருக்கைகளில் அமர்தல் வேண்டும்.


 

பாதுகாப்பான இடங்களில் விளையாடுதல்

• சாலைகளில் விளையாடக்கூடாது

• காலியான இடங்களை அல்லது விளையாட்டு திடல்களை விளையாடுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

• பள்ளி வளாகம், குடியிருப்பு பகுதிகள் அல்லது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தைச் சுற்றி விளையாடக்கூடாது.


இணையச் செயல்பாடு

சாலை பாதுகாப்பு

இச்செயல்பாட்டின் மூலம் சாலை விதிமுறைகள் பற்றியும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் அறிய முடியும்.

 

படிநிலைகள்:

படி -1 கொடுக்கப்பட்ட உரலியைப் பயன்படுத்தி செயல்பாட்டு தளத்திற்கு செல்லலாம்.

படி -2 "Start"என்ற பகுதியை சொடுக்கவும்.

படி -3 அங்கு உள்ள விளையாட்டுக்களில் எதேனும் ஒன்றை தேர்வு செய்து விளையாடவும்.

படி -4 ஒவ்வொரு விளையாட்டையும் படிப்படியாக விளையாடி முடிக்கவும்.


உரலி :

https://www.sdera.wa.edu.au/programs/smart-steps/izzy-games/

* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Term 3 Unit 3 | Civics | 6th Social Science பருவம் 3 அலகு 3 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 3 Unit 3 : Road Safety : Road Safety Term 3 Unit 3 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 3 : சாலை பாதுகாப்பு : சாலை பாதுகாப்பு - பருவம் 3 அலகு 3 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 3 : சாலை பாதுகாப்பு