Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கரைசல்கள்: அறிமுகம்

வேதியியல் - கரைசல்கள்: அறிமுகம் | 11th Chemistry : UNIT 9 : Solutions

   Posted On :  28.12.2023 10:20 am

11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்

கரைசல்கள்: அறிமுகம்

நம் அன்றாட வாழ்வில், பல வேதிப்பொருள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த வேதிப்பொருள்கள் அனைத்தும், திண்மம், நீர்மம் மற்றும் வாயு போன்ற வெவ்வேறு இயற் நிலைமைகளில் காணப்படுகின்றன.

அலகு 9

கரைசல்கள்




பிரான்சுவா - மேரி ரௌலட் ஒரு பிரெஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார்.

இவர் கரைசல்களில் இயற்பண்புகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். கரைப்பொருட்கள் எவ்வாறு கரைசல்களின் உறை நிலையில் தாழ்வினை ஏற்படுத்துக்கின்றன என்பது குறித்து தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். மேலும் கரைசல்களின் ஆவி அழுத்தத்திற்கும் அவற்றில் உள்ள கரைப்பொருளின் மூலக்கூறு எடைக்கும் இடையேயான தொடர்பினை இவர் உருவாக்கினார்.


கற்றலின் நோக்கங்கள்

இந்த பாடப்பகுதியை கற்றறிந்த பின்பு மாணவர்கள்,

பல்வேறு வகை கரைசல்கள் உருவாவதை விளக்குதல்,

கரைசல்களின் செறிவை வெவ்வேறு அலகுகளில் எழுதுதல்.

இருப்புக் கரைசல்களை நீர்க்கச்செய்து தேவையான செறிவுகளையுடைய கரைசல்களை தயாரித்தல்

ஹென்றி மற்றும் ரௌல்ட் விதிகளை கூறுதல்

இயல்புக் கரைசல்கள் ரௌலட் விதியிலிருந்து விலகலடைதலை விளக்குதல்.

கரைசல்களின் தொகைசார் பண்புகளை அவற்றின் கரைபொருள்களின் மோலார் நிறைகளுடன் தொடர்புபடுத்துதல்

அசாதாரண தொகைசார் பண்புகளை விளக்குதல் 

வாண்ட் ஹாஃப் காரணியை வரையறுத்தல் மற்றும் பிரிகையடைதல் / இணைதல் வீதத்தை கணக்கிடுதல்

ஆகிய பண்புகளைப் பெறலாம்.



பாட அறிமுகம்

நம் அன்றாட வாழ்வில், பல வேதிப்பொருள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த வேதிப்பொருள்கள் அனைத்தும், திண்மம், நீர்மம் மற்றும் வாயு போன்ற வெவ்வேறு இயற் நிலைமைகளில் காணப்படுகின்றன. நாம் அவற்றின் இயைபு நிலையை கூர்ந்து ஆராய்ந்தோமானால், அவற்றில் பல பொருள்கள் கலவைகளாகவும், வெகுசில பொருள்கள் தூய சேர்மங்களாகவும் இருப்பதைக் காண இயலும். இயற்நிலைமைகள் எதுவாக இருப்பினும், பெரும்பாலான கலவைகள், ஒருபடித்தான கலவைகளாக அமைந்திருப்பது மற்றொரு சுவாரசியமான அம்சமாகும். அத்தகைய ஒருபடித்தான கலவைகள், கரைசல்கள் என்றழைக்கப்படுகின்றன.

கடல்நீரானது இயற்கையில் காணப்படும் கரைசல்களில் ஒன்று. இது பூமியின் மேற்பரப்பில் 70%க்கும் அதிகமாக காணப்படுகிறது. கடல்நீர் இல்லாத பூமியில் வாழ்க்கையை நாம் கற்பனை கூட செய்ய இயலாது. அது பல்வேறு கரைக்கப்பட்டுள்ள உப்புகளை, முக்கியமாக NaCl ஐக் கொண்டுள்ளது. இயற்கையில் காணப்படும் மற்றொரு முக்கியமான கரைசல் காற்று ஆகும். காற்று என்பது நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டையாக்சைடு மற்றும் குறைந்த அளவு மற்ற வாயுக்கள் அடங்கிய ஒருபடித்தான கலவையாகும். பித்தளை போன்ற திண்ம பொருளும் கூட காப்பர் மற்றும் ஜிங்க் ஆகியவற்றின் ஒருபடித்தான கலவையே ஆகும்.

மேற்காண் எடுத்துக்காட்டுகளில் அதாவது நீர்மம் (கடல்நீர்), வாயு (காற்று) மற்றும் திண்மம் (உலோக கலவைகள்) ஆகிய கரைசல்கள் வெவ்வேறு இயற்நிலைமைகளில் காணப்படுகின்றன. மேலும் மேற்கூறிய அனைத்திற்கும் பொதுவான ஒரு பண்பாக அவைகளின் ஒருபடித்தான நிலைமை அமைந்துள்ளது. ஒருபடித்தான நிலைமை என்பது, அவற்றின் கூறுகள், கலவை முழுவதும் சீராக பரவியுள்ளதை குறிப்பிடுகிறது. இந்த பாடப்பகுதியில் நாம் கரைசல்கள் மற்றும் அவற்றின் பண்புகளை பற்றி கற்க உள்ளோம்.


Tags : Chemistry வேதியியல்.
11th Chemistry : UNIT 9 : Solutions : Solutions: Introduction Chemistry in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள் : கரைசல்கள்: அறிமுகம் - வேதியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்