Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை
   Posted On :  06.10.2023 07:55 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை

இந்தியப் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

1. இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை 

இந்தியா பொருளாதாரத்தின் வலிமையை கீழ்காணும் தலைப்புகளில் ஆராயலாம்


1. இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்:

இந்தியப் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் பொருள் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படுவது. ஒரு புறம் மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. அதே சமயம் பொருளாதார தாராள மயமாக்கலின் விளைவாக தனியார் துறையின் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் தனியார் துறையும் பொதுத்துறையும் ஒரே கட்டமைப்பின் கீழ் இணைந்து செயல்பட ஏதுவாகின்றது


2. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:

இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது. பசுமைப்புரட்சி, பசுமை மாறா புரட்சி மற்றும் உயிரி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் வேளாண்மையில் தன்னிறைவு அடைந்ததுடன் அல்லாமல் உபரி உற்பத்தி அடைந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருட்கள், தாவர எண்ணெய், புகையிலை, விலங்குகளின் தோல் போன்ற இந்திய வேளாண் பொருட்கள் பன்னாட்டு வாணிபத்தின் மூலம் நமது பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கின்றன.



3. வளர்ந்து வரும் சந்தை: 

முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் சந்தை பிற நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. நிலைத்த உள்நாட்டு உற்பத்தியை தொடர்ந்து தக்க வைத்து கொண்டிருப்பதால், பிற நாடுகள் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (FII) வழியாக முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. இது இன்னொரு வகையில் இந்தியப் பொருளாதாரம் வலிமையாக மாறுவதற்கு உதவி செய்து வருகிறது. இந்தியா குறைந்த முதலீட்டில், குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாத்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறி இருக்கிறது.


4. வளர்ந்து வரும் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏழாவது இடத்தையும், வாங்கும் சக்தியில் (PPP) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.


5. வேகமாக வளரும் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினை கொண்டது. 2016-17ல் சீன மக்கள் குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% பெற்றதன் வாயிலாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே, இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது.


6. வேகமாக வளரும் பணிகள் துறை :

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும். தகவல் தொழில்நுட்பம், BPO போன்ற தொழில்நுட்ப சேவைகள் பேரளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தகைய வளர்ந்து வரும் பணிகள் துறைகள், நாட்டை உலக அளவில் கொண்டு செல்லவும் மற்றும் பணிகள் துறையின் பிரிவுகளை உலகம் முழுவதும் பரவச் செய்யவும் துணை நிற்கின்றன.



7. பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி: 

நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதால், உள்நாட்டு நுகர்வுப் பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்ந்ததால் மக்களின் வாழ்க்கை முறை மாறி உள்ளது.


8. நகரப்பகுதிகளின் விரைவான வளர்ச்சி: 

பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் நகர்ப்புறங்கள் விரைவான வளர்ச்சி பெற்று வருகின்றன. மேம்பட்ட போக்குவரத்து மற்றும் தொடர்புகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நகரமயமாதலை மேலும் விரைவுபடுத்துகின்றன.


9. நிலையான பேரளவு பொருளாதாரம்

உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. நடப்பாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை இந்தியப் பொருளாதாரத்தை "நிலைத்த, உறுதிவாய்ந்த, சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்" என்று குறிப்பிடுகிறது. பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2014-2015 க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும் உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6% ஆக இருந்தது. இதன்மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவு பொருளாதார வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது


10. மக்கள் தொகை - பகுப்பு : 

இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இதன் பொருள் இந்தியா, அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இளைஞர்களே வளர்ச்சியின் அடிப்படை. இந்திய இளைஞர்களின் திறமை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது. நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனிதவளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. மேலும் இது வெளிநாட்டு முதலீட்டையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் ஈர்க்கிறது.



11th Economics : Chapter 7 : Indian Economy : Strengths of Indian Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம் : இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்