இரண்டாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - விஜயநகர் அரசுகள் | 7th Social Science : History : Term 2 Unit 1 : Vijayanagar and Bahmani Kingdoms

   Posted On :  18.04.2022 03:52 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : விஜயநகர், பாமினி அரசுகள்

விஜயநகர் அரசுகள்

கற்றலின் நோக்கங்கள் • விஜயநகர், பாமினி அரசுகளின் தோற்றம், விரிவாக்கம் ஆகியவற்றிற்கு சூழ்நிலைகள் எவ்வாறு வழிகோலின என்பதை அறிந்து கொள்ளுதல் • இவ்வரசுகளின் ஆட்சிக்காலத்தில் நிலவிய நிர்வாகமுறை, இராணுவமுறை மற்றும் பொருளாதார வாழ்க்கை ஆகியவை குறித்த நிறைவான செய்திகளைத் தெரிந்து கொள்ளுதல் • இலக்கியம், கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளுக்கு விஜயநகர பாமினி அரசுகள் செய்த - பங்களிப்பை அறிந்து கொள்ளுதல்

வரலாறு 

அலகு -1

விஜயநகர், பாமினி அரசுகள்


கற்றலின்  நோக்கங்கள்

விஜயநகர், பாமினி அரசுகளின் தோற்றம், விரிவாக்கம் ஆகியவற்றிற்கு சூழ்நிலைகள் எவ்வாறு வழிகோலின என்பதை அறிந்து கொள்ளுதல் 

இவ்வரசுகளின் ஆட்சிக்காலத்தில் நிலவிய நிர்வாகமுறை, இராணுவமுறை மற்றும் பொருளாதார வாழ்க்கை ஆகியவை குறித்த நிறைவான செய்திகளைத் தெரிந்து கொள்ளுதல்

இலக்கியம், கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளுக்கு விஜயநகர பாமினி அரசுகள் செய்த - பங்களிப்பை அறிந்து கொள்ளுதல்


விஜயநகர் அரசு

அறிமுகம்

14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், தென்பகுதிகளில் பல புதிய அரசுகள் உதயமாவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளித்தது. முகமது பின் துக்ளக்கின் அடக்குமுறை நடவடிக்கைகள் புதிய சுதந்திர அரசுகள் தோன்றுவதற்கு இட்டுச்சென்றன. இந்தியாவின் தெற்கே விஜயநகரமும், குல்பர்கா அல்லது பாமினி ஆகியவை மாபெரும் அரசுகளாக எழுச்சி பெற்றன. பாமினி அரசு, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் பரவி இருந்தது. பதினெட்டு முடியரசர்களால் ஆளப்பட்ட இவ்வரசு ஏறத்தாழ 180 ஆண்டுகள் நீடித்தது. இவ்வரசு பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரிந்து பீஜப்பூர், அகமது நகர், கோல்கொண்டா , பீடார், பீரார் என ஐந்து சுல்தானியங்களாகப் பிரிந்தது. விஜயநகர அரசு வலுவான அரசாக 200 ஆண்டுகள் கோலோச்சியது. விஜயநகரின் செல்வமும் வளமும், அவ்வரசுக்கு எதிராகத் தக்காண முஸ்லிம் அரசுகளை ஒருங்கிணைத்தது. 1565இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகர் அரசை நசுக்குவதில் இவ்வரசுகள் வெற்றி பெற்றன.


விஜயநகரப் பேரரசு நிறுவப்படுதல்

வெற்றியின் நகரம் என்றறியப்படும் விஜயநகரம் ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் கர்நாடகத்தின் தென்பகுதியில் நிறுவப்பட்டது. துக்ளக் அரசர்களிடம் பணி செய்து வந்த இவர்களை, சிருங்கேரி சைவ மடத்தின் தலைவரான வித்யாரண்யர் என்பார், அப்பணியைக் கைவிட்டு நாட்டை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியாக ஒரு வாய்மொழி வரலாற்று மரபு கூறுகின்றது. இப்புதிய அரசு, இவர்களது ஆன்மீக குருவான வித்யாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் வித்யாநகர் என குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழைக்கப்பட்டது. பின்னர் இவ்வரசு விஜயநகர் என அழைக்கப்பட்டது. இவ்வரசானது சங்கம (1336 - 1485), சாளுவ (1485 - 1505) துளுவ (1505 - 1570), ஆரவீடு (1570-1646) என்ற நான்கு அரச மரபுகளால் ஆளப்பட்டது.


விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவைச் சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு கிருஷ்ணா துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதியும், கிருஷ்ணா -கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதியுமே காரணமாக அமைந்தன. சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலிரண்டு சகோதரர்களான ஹரிஹரர்-புக்கர் ஆகியோரின் பெருந் துணிச்சலே இப்புதிய அரசை அதிக வலிமைமிக்க பாமினி சுல்தானியத்திடமிருந்து காப்பாற்றியது. விஜயநகர் அரசு உருவாகிப் பத்து ஆண்டுகளுக்கு பிறகே பாமினி அரசு நிறுவப்பட்டது.

முதலாம் புக்கருடைய மகனான குமார கம்பணா மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார். குமார கம்பணாவின் மனைவி கங்காதேவியால் எழுதப்பெற்ற மதுரா விஜயம் என்னும் நூலில் விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது.


சங்கம வம்சத்தின் முடிவு

புக்கர் இயற்கை எய்திய போது பரந்த ஒரு நிலப்பரப்பைத் தம் மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆள்வதற்காக விட்டுச்சென்றார். பாமினி அரசிடமிருந்து பெல்காம், கோவா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியதே இவருடைய போற்றத்தகுந்த சாதனையாகும். இவருடைய மகன் முதலாம் தேவராயர் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தார். இவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாம் தேவராயர் சங்கம வம்சத்தின் தலைசிறந்த அரசராவார். தம்மிடம் பணி செய்வதற்காகவும் தம்முடைய படைகளுக்கு நவீனப்போர் முறைகளில் பயிற்சியளிப்பதற்காகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை இவர் தொடங்கி வைத்தார்.


சாளுவ வம்சத்தின் தோற்றம்

இரண்டாம் தேவராயருக்குப் பின்னர், பேரரசு ஆபத்தான சூழலுக்கு உள்ளானது. விஜயநகரப் பேரரசின் திறமைமிக்க படைத்தளபதியான சாளுவ நரசிம்மர் இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டார். அவர் சங்கம வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் விருபாக்சி ராயரைக் கொலை செய்துவிட்டு, தம்மையே பேரரசராக அறிவித்துக் கொண்டார். ஆனால், அவருடைய மரணத்துடன் அவரால் உருவாக்கப்பட்ட சாளுவ வம்சமும் முடிவுக்கு வந்தது. அவருக்குப் பிறகு திறமைமிகுந்த படைத்தளபதியான நரசநாயக்கர் அரியணையைக் கைப்பற்றித் துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கிவைத்தார்.


கிருஷ்ணதேவராயர்

துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இவர் இருபது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரின் முதற்கட்ட தலையாயப் பணியாக இருந்தது. இம்முயற்சியில் வெற்றிபெற்ற பின்னர், குல்பர்காவைக் கைப்பற்றுவது அவரின் இரண்டாவது இலக்கானது இச்சமயத்தில் பாமினி சுல்தான் முகமதுஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார். கிருஷ்ணதேவராயர் அவரை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தார். மேலும் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். சமாதானம் செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்த பிரதாபருத்திரன், தமது மகளைக் கிருஷ்ணதேவராயருக்குத் திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணதேவராயர் தாம் கைப்பற்றிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார். மேலும், போர்த்துகீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் எளிதாகத் தோற்கடித்தார். தொடர்ந்து பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.



சிறந்த கட்டட வல்லுநர்

கிருஷ்ணதேவராயர் மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனக் குளங்களையும், நீர்த்தேக்கங்களையும் உருவாக்கினார். இவர் தமது தலைநகரான ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில், ஹசாரா ராமசாமி கோவில், விட்டலாசுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கட்டினார். போர்களின் மூலம் தாம் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்தியக் கோவில்களுக்கு வழங்கி, அதன் மூலம் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவினார். அவரது பெயருக்குப் புகழை சேர்க்கும் வண்ணம் அவை ராயகோபுரம் என அழைக்கப்பட்டன.


பெரும் படையொன்றை உருவாக்கிய அவர், பல வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார். அரேபியாவிலிருந்தும், ஈரானிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை அவர் இறக்குமதி செய்தார். அவை கப்பல்கள் மூலம் மேற்கு கடற்கரையிலுள்ள விஜயநகர துறைமுகங்களை வந்தடைந்தன. போர்த்துகீசிய, அராபிய வணிகர்களுடன் அவர் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார். அதனால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.


இலக்கியம், கலை, கட்டடக்கலையின் புரவலர்

கிருஷ்ணதேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார். அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர். அவர்களுள் மகத்தானவர் அல்லசானி பெத்தண்ணா ஆவார். மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஆளுமை தெனாலி ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்) ஆவார்.


தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்

கிருஷ்ணதேவராயரைத் தொடர்ந்து அவருடைய இளைய சகோதரர் அச்சுதராயர் ஆட்சிப் பொறுப்பேற்றார். இவருடைய ஆட்சிக் காலத்திலும் இவருக்குப் பின்னர் அரியணை ஏறிய முதலாம் வேங்கடர் காலத்திலும் முக்கிய நிகழ்வுகள் எதுவும் இடம் பெறவில்லை . இவர்களுக்குப் பின்னர் குறைந்த வயதைக்கொண்ட சதாசிவராயர் முடிசூட்டப்பட்டார். பகர ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த ராமராயர் பேரரசின் திறமை மிக்கத் தளபதியாவார். சதாசிவராயருக்கு அரசு பதவி ஏற்கும் வயது வந்த பின்னரும்கூட அவரைப் பெயரளவிற்கு அரசராக வைத்துக் கொண்டு ராமராயரே உண்மையான அரசராக ஆட்சி புரிந்தார். இச்சமயத்தில் விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565 இல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர்கொண்டன. ராக்சச தங்கடி (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. தொடர்ந்து நகரம் கொள்ளையடிக்கப்பட்டதோடு பயங்கரமான மனிதப் படுகொலையும் அரங்கேறியது. அனைத்துக் கட்டடங்களும், அரண்மனைகளும், கோவில்களும் அழிக்கப்பட்டன. அழகிய சிற்பங்களும், நன்கு கலைநயம் மிகுந்த வேலைப்பாடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இறுதியாக, விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.


கிழக்குக் கர்நாடகத்தில், துங்கபத்ரா நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது 'ஹம்பி' என அழைக்கப்படுகிறது. ஹம்பி சீர்குலைந்து இடிபாடுகளாகக் காணப்படுகிறது. யுனெஸ்கோ ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.


ஆரவீடு வம்சம்

ராமராயர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். அவருடைய சகோதரர் திருமலை தேவராயர், அரசர் சதாசிவராயருடன் தப்பித்தார். திருமலை தேவராயர் விலைமதிக்கமுடியா செல்வங்களோடு சந்திரகிரியைச் சென்றடைந்தார். அங்கு அவர் ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கினார். ஆரவீடு வம்சத்தார் பெனுகொண்டாவில் புதியதலைநகரை உருவாக்கிப் பேரரசை சில காலம் நல்லநிலையில் வைத்திருந்தனர். பேரரசில் ஏற்பட்ட உட்பூசல்களாலும் பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் சூழ்ச்சிகளாலும் விஜயநகர அரசு 1646இல் இறுதியாக வீழ்ச்சியுற்றது.


விஜயநகர நிர்வாகம்

அரச பதவி பரம்பரையானதாக இருந்தது அரசர் ஒருவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய மூத்தமகன் அரசபதவியேற்பது என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. சில சமயங்களில் ஆட்சி செய்து வந்த அரசர்கள், தங்களுடைய வாரிசுகளின் பதவியேற்பு அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பட்டத்து இளவரசர்களை நியமித்தனர். சிலசமயங்களில் அரசபதவி முறைகேடான முறையில் அபகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அரச உரிமையைச் சாளுவ நரசிம்மர் முறைகேடாகக் கைப்பற்றியதால் சங்கம வம்சம் முடிவுற்று சாளுவ வம்ச ஆட்சி தொடங்கியது. அரசபதவியேற்றவர் வயதில் சிறியவராக இருந்தால், நிர்வாகப்பணிகளைக் கவனிப்பதற்காகப் பகர ஆளுநரை நியமனம் செய்யும் முறையும் நடைமுறையில் இருந்தது.


அரசமைப்பு

பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்), நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்), கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது. கிராமமே நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபை என்ற அமைப்பிருந்தது. கிராமம் தொடர்பான விடயங்களைக் கௌடா என்றழைக்கப்பட்ட கிராமத்தலைவர் நிர்வகித்தார்.

பேரரசின் இராணுவம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இராணுவம் நவீனமயமாக்கப்பட்டதால் விஜயநகரப் படைகள் வெடிமருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தின. வெடிமருந்து ஆயுதங்களும் குதிரைப்படையும் ஒருங்கிணைக்கப்பட்டதால், இப்படை இந்தியாவில் அதிகம் அச்சுறுத்தக்கூடிய படையாக இருந்தது.


பொருளாதார நிலை

அக்கால உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச்செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்றாக விஜயநகரப் பேரரசு திகழ்ந்த து. 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில் பேரரசிற்கு வருகைபுரிந்த பல அயல்நாட்டுப்பயணிகள், தங்கள் பயணக்குறிப்புகளில் பேரரசின் செல்வம், மேன்மை குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளனர். விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.



வேளாண்மை

சிறந்த நீர்ப்பாசன முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வேளாண்மையை ஊக்குவிப்பதே விஜயநகர அரசர்களின் கொள்கையாக இருந்தது. அரசுக்கு அடுத்தபடியாக வேளாண்மையை முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்டு நிலச்சுவான்தார்கள் கோவில்களிலும், நீர்ப்பாசனத்திலும் முதலீடு செய்தனர் போர்த்துகீசியக் கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாகப் பாரசீகப் பயணியான அப்துர்ரஸாக் குறிப்பிட்டுள்ளார். ஏரியிலிருந்து நகரின் பல பகுதிகளுக்கு ஏரிநீரைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாகக் கால்வாய்கள் கட்டப்பட்டன. நகரத்தில் பல்வகைப்பட்ட வேளாண் பண்டங்கள் பெருமளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.


குடிசைத் தொழில்கள்

விஜயநகரின் வேளாண் உற்பத்திக்கு அதனுடைய பலவகையான குடிசைத் தொழில்கள் உதவிபுரிந்தன. அவற்றுள் மிகவும் முக்கியமானவை நெசவுத்தொழில், சுரங்கத் தொழில், உலோகத்தொழில் ஆகியனவாகும். கில்டுகள் என்றழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் கைவினை, குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின. கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக அப்துர் ரஸாக் குறிப்பிட்டுள்ளார்.


வாணிகம்

உள்நாட்டுக் கடற்கரையோர, கடல்கடந்த வாணிகம் செழித்தோங்கியிருந்தது. இவ்வணிகம் சீனாவிலிருந்து வந்த பட்டு, மலபார் பகுதியைச் சேர்ந்த வாசனைப் பொருட்கள், பர்மாவிலிருந்து பெறப்பட்ட விலையுயர்ந்த ஆபரணக்கற்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கியது. பாரசீகம், தென்னாப்பிரிக்கா, போர்த்துகல், அரேபியா, சீனா, தென்கிழக்காசிய நாடுகள், இலங்கை ஆகிய நாடுகளுடன் விஜயநகரம் வாணிகம் மேற்கொண்டது.


இலக்கியப் பங்களிப்பு

விஜயநகர அரசர்களின் ஆதரவினால் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் சமயம் மற்றும், சமயம் சாரா நூல்கள் எழுதப்பட்டன. கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தைத் தெலுங்கு மொழியில் இயற்றினார். சமஸ்கிருத மொழியில் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலையும் எழுதினார். பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலைத் தெனாலி ராமகிருஷ்ணா எழுதினார். ஸ்ரீநாதர், பெத்தண்ணா, ஜக்கம்மா, துக்கண்ணா போன்ற புலவர்கள் சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்தனர்.

'அமுக்தமால்யதா' தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இது, பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றியதாகும். கடவுள் ரங்கநாதருக்கு அணிவிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட மாலைகளை அவருக்குச் சூடுவதற்கு முன்பாக இவ்வம்மையார் சூடிக்கொள்வார். அமுக்தமால்யதா என்பதற்கு தான் அணிந்த பின்னர் கொடுப்பவர் எனப்பொருள்.


கட்டடக் கலைக்குச் செய்த பங்களிப்பு

விஜயநகர அரசர்களின் கோவில் கட்டுமான நடவடிக்கைககள் ஒரு புதிய பாணியை உருவாக்கின. அது விஜயநகரப்பாணி என அழைக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான வடிவத்தில் பெரிய தூண்களும் அவற்றில் இடம்பெற்றுள்ள சிற்ப, செதுக்கல் வேலைப்பாடுகளும் விஜயநகரப் பாணியின் தனித்துவ அடையாளங்களாகத் திகழ்ந்தன. இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் குதிரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. மேலும் சிறப்பு நிகழ்வுகளின்போது கடவுளர்களைக் காட்சிப்படுத்துவதற்காக உயர்ந்த மேடையுடன் கூடிய மண்டபங்கள் அல்லது திறந்தவெளி அரங்குகள் கட்டப்பட்டன. இக்கோவில்களில் விரிவான அளவில் அழகிய செதுக்கல் வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களைக் கொண்ட கல்யாண மண்டபங்களும் காணப்படுகின்றன.



Tags : Term 2 Unit 1 | History | 7th Social Science இரண்டாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 2 Unit 1 : Vijayanagar and Bahmani Kingdoms : Vijayanagar Kingdoms Term 2 Unit 1 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : விஜயநகர், பாமினி அரசுகள் : விஜயநகர் அரசுகள் - இரண்டாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : விஜயநகர், பாமினி அரசுகள்