இரண்டாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பாமினி அரசு | 7th Social Science : History : Term 2 Unit 1 : Vijayanagar and Bahmani Kingdoms

   Posted On :  18.04.2022 03:59 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : விஜயநகர், பாமினி அரசுகள்

பாமினி அரசு

1347இல் அலாவுதீன் ஹசன் (ஹசன் கங்கு எனவும் அறியப்பட்டார்) தௌலதாபாத் நகரைக் கைப்பற்றி, பாமன்ஷா என்ற பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக் கொண்டார்

பாமினி அரசு

பாமினி அரசு நிறுவப்படுதலும் ஒருங்கிணைக்கப்படுதலும்

1347இல் அலாவுதீன் ஹசன் (ஹசன் கங்கு எனவும் அறியப்பட்டார்) தௌலதாபாத் நகரைக் கைப்பற்றி, பாமன்ஷா என்ற பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக் கொண்டார் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராக இத்துருக்கிய அதிகாரி மேற்கொண்ட கலக நடவடிக்கையை ஏனைய படைத்தளபதிகளும் ஆதரித்தனர். இரண்டு ஆண்டுகளில் அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தமது தலைநகரைக் குல்பர்காவிற்கு மாற்றினார். அவருக்குப் பின் வந்தோர் குல்பர்காவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஓர் அரசை நிறுவுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். எனவே, 1429இல் தலைநகர் மீண்டும் பீடாருக்கு மாற்றப்பட்டது. பாமினி வம்சத்தில் பதினெட்டு அரசர்கள் இடம்பெற்றுள்ளனர்.


அலாவுதீன் ஹசன் பாமன்ஷா (1347 - 1358)

அலாவுதீன் ஹசன் பதினோராண்டுகள் ஆட்சி புரிந்தார் வாரங்கல் அரசிடமிருந்தும், ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகிய ரெட்டி அரசுகளிடமிருந்தும் ஆண்டுதோறும் கப்பம் வசூலிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அடிக்கடி போர்கள் ஏற்பட வழிவகுத்தன. அவர் தமது அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார். அவை தராப் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாண ஆளுநரும் படைகளுக்குத் தலைமையேற்றனர். அப்பகுதியை நிர்வாகம் செய்வதும், வரிவசூல் செய்வதும் அவருடைய பொறுப்பாகும். வலிமை மிகுந்த அரசர்களின் கீழ் இம்முறை சிறப்பாகச் செயல்பட்டது. வலிமைகுன்றிய அரசர்களின் காலத்தில் இம்முறையின் ஆபத்து வெளிப்படையாகவே தெரிந்தது.



முதலாம் முகமது ஷா (1358 - 1375)

பாமன்ஷாவைத் தொடர்ந்து முதலாம் முகமது ஷா அரச பதவி ஏற்றார். விஜயநகரோடு அவர் மேற்கொண்ட இரு போர்களினால் பயனேதும் ஏற்படவில்லை . ஆனால் 1368இல் வாரங்கல் அரசோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட பெரும் செல்வத்தை இழப்பீடாகப் பெற்றார். பின்னர் இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.


பச்சை கலந்த நீலவண்ணக் கல்லானது விலையுயர்ந்த அணிகலன்களில் பயன்படுத்தப்படும் கல்லாகும். பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய வண்ணக்கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமெனப் பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும். கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும். தர்பார் மண்டபத்திலிருந்து குன்றின் கீழே அமைந்துள்ள அரண்மனைக்குச் சுரங்கப்பதை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


முதலாம் முகமது ஷா, பாமினி அரசிற்கு வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அவருடைய அரச அமைப்பு முறையானது, பாமினி அரசு ஐந்து சுல்தானியங்களாகச் சிதறுண்ட பின்னரும் தொடர்ந்தது. அவர் குல்பர்காவில் இரண்டு மசூதிகளைக் கட்டினார். 1367இல் கட்டி முடிக்கப்பெற்ற முதல் மசூதி, மகாமசூதி 216 அடி X 16அடி என்ற அளவில் கட்டப்பட்டதாகும். இம்மசூதி மேல்விதானத்தோடு கூடிய முற்றத்தைக் கொண்டுள்ளது. பெரும் எண்ணிக்கையில் அரேபியரும் துருக்கியரும் குறிப்பாகப் பாரசீகர்களும் தக்காணத்திற்குக் குடிபெயரத் துவங்கினர். அவர்களில் பலர் சுல்தான் முதலாம் முகமதுவின் அழைப்பை ஏற்று வந்தவராவார்கள் தொடர்ந்து வந்த தலைமுறைகளின் காலத்தில் அங்கே இஸ்லாமியக் கலாச்சாரம் வளர்வதில் இவர்கள் பெரும் செல்வாக்கு செலுத்தினர்.


முதலாம் முகமதுவுக்குப் பின்வந்த அரசர்கள்

முகமதுவைத் தொடர்ந்து அவருடைய மகன் முஜாகித் பதவியேற்றார். ஆனால் விஜயநகருக்கு எதிரான போரை முடித்துக்கொண்டு குல்பர்கா திரும்பியபோது கொலை செய்யப்பட்டார். முகமதுவின் மாமானாரும் சதி செய்தவருமான தாவூத் என்பாரின் சகோதரனின் மகன் இரண்டாம் முகமது என்ற பெயரில் 1378இல் அரியணை ஏற்றப்பட்டார். இரண்டாம் முகமதுவின் ஆட்சிக்காலத்தில் அமைதி நிலவியது. அவர் தனது நேரத்தின் பெரும்பகுதியைத் தமது அரசவையைப் பண்பாட்டு, கல்விமையமாக மாற்றுவதில் செலவிட்டார்.

பாமினி அரசு விஜயநகர அரசு இடையே, துங்கபத்ரா கிருஷ்ணா நதிகளின் வளமான பகுதிகளை கைப்பற்றுவது தொடர்பாக தொடர்ந்து போர்கள் நடைபெற்றன. வடபுறத்திலிருந்து குறிப்பாக மாளவம் மற்றும் குஜராத்திலிருந்து அச்சுறுத்தல்கள் வந்தன. எண்பத்தைந்து ஆண்டுகள் (1377-1463) இடைவெளிக்குப் பின்னர், குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரசராக மூன்றாம் முகமது (1463-1482) திகழ்ந்தார். மூன்றாம் முகமது பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இக்காலகட்டத்தில் அரசின் பிரதம அமைச்சராகவும் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாகவும் மகமது கவான் விளங்கினார்.

பாமினி அரசின் எட்டு அமைச்சர்கள்:

1. வக்கீல் - உஸ் - சல்தானா அல்லது அரசின் பிரதம அல்லது முதலமைச்சர் அரசருக்கு அடுத்த நிலையில் துணையதிகாரியாகச் செயல்பட்டவர். 

2. பேஷ்வா நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர். 

3. வஸிரி-குல்ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர். 

4. அமிர் - இ - ஜூம்லா நிதியமைச்சர் 

5. நஷீர் - உதவி நிதியமைச்சர் 

6. வஷிர் - இ - அசாரப் - வெளியுறவுத்துறை அமைச்சர் 

7. கொத்தவால் - காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர் 

8. சதார்-இ-ஜகான்-தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.


மகமது கவான்

பிறப்பால் பாரசீகரான மகமது கவான் இஸ்லாமிய கோட்பாடுகளிலும் பாரசீக மொழியிலும், கணிதத்திலும் பெரும்புலமை பெற்றவராயிருந்தார். மேலும், அவர் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார். அவரின் மேதமையிலும், இராணுவ அறிவு நுட்பத்திலும் மனதைப் பறிகொடுத்த பாமினி அரசர் மூன்றாம் முகமது அவரைப் பணியமர்த்தினார். தமக்குக் கீழ் சிறப்பான தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராகப் பணியாற்றிய அவர் பாமினியரசின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்தார்.

கவான் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவர். பாரசீக வேதியியல் வல்லுநர்களை அழைத்து வந்து வெடிமருந்து தயாரிப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் படையினருக்குப் பயிற்சியளித்தார். பெல்காமில் நடைபெற்ற விஜயநகருக்கு எதிரான போரில் அவர் வெடிமருந்தைப் பயன்படுத்தினார். அடிக்கடி அரசர்களைப் போலவே நடந்துகொள்ளும் மாகாண ஆளுநர்களைக் கட்டுப்படுத்தவும், நிர்வாகத்தைக் கட்டுக்கோப்புடையதாக மாற்றவும் கவான் விரும்பினார். அதன் பொருட்டு பாமினி அரசில் ஏற்கெனவே இருந்த நான்கு மாகாணங்களை எட்டாக மாற்றினார். இதன் மூலம் ஒவ்வோர் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளின் அளவைச் சுருக்கி, மாகாண நிர்வாகத்தை எளிதாக நிர்வாகம் செய்யலாம் என நினைத்தார்.

மாகாணங்களிலிருந்த சில மாவட்டங்களை அவர் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார். மாகாண ஆளுநர்களின் இராணுவ வலிமையைக் கட்டுக்குள் வைப்பதற்காக ஒவ்வோர் ஆளுநரும் ஒரு கோட்டையை மட்டும் தங்கள் வசம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஏனைய கோட்டைகளைச் சுல்தான் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டார். ஊதியத்திற்குப் பதிலாக நிலங்களைப் பெற்றிருந்த உயர் அரசு அதிகாரிகள் தங்கள் வரவு செலவுகள் குறித்துச் சுல்தானுக்குத் தெரிவிக்கும் பொறுப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கவானால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் அரசின் திறனை மேம்படுத்தியது. ஆனால், பிராந்தியத் தலைவர்களின் அதிகாரங்களைக் குறைத்தது. அத்தலைவர்களில் பெரும்பாலோர் தக்காணத்தைச் சேர்ந்தோர் ஆவர். இதனால் தக்காணப் பிரபுக்களுக்கும் தக்காணத்தைச் சுற்றியுள்ளோர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலவிய பகைமை தீவிரமடைந்து மோதல்களாக வெடித்தன. தக்காணப் பிரபுக்கள் கவானின் வெற்றிகளால் அவர் மீது பொறாமை கொண்டனர். அவரைத் தங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கல்லாகக் கருதினர். சுல்தானுக்கு எதிராகக் கவான் சதியில் ஈடுபட்டிருப்பதைப் போன்ற போலிக் கடிதம் ஒன்றைத் தயார் செய்தனர். கவானின் மேலாதிக்கத்தை விரும்பாத சுல்தானும் அவருக்கு மரண தண்டனை வழங்கினார்.


பாமினி அரசின் சரிவு

கவான் தூக்கிலிடப்பட்டதால் அரசின் முதுகெலும்பு எனக் கருதப்பட்ட பல வெளிநாட்டுப் பிரபுக்களைத் தக்காணத்தை விட்டு வெளியேறித் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்லத் தூண்டியது. சுல்தான் மூன்றாம் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிய முகமது அல்லது சிகாபுதீன் முகமுது 1518 இறக்கும்வரை சுல்தானாக ஆட்சி புரிந்தார். அவருடைய நீண்டகால ஆட்சி, அரசு சிதையப் போவதற்கான செயல்பாடுகள் தொடங்கியதைச் சுட்டிக் காட்டின. அவருக்குப்பின் பதவியேற்ற நான்கு சுல்தான்களும் திறமைக் குன்றியவர்களாகப் பெயரளவிற்கே அரியணையில் இருந்தனர். சுல்தானியம் படிப்படியாக ஐந்து சுதந்திரமான தக்காண சுல்தானியங்களாகச் சிதைந்தது. அவை பீடார், பீஜப்பூர், அகமதுநகர், பீரார், கோல்கொண்டா ஆகியனவாகும்.


பாமினி சுல்தானிகளின் பங்களிப்பு

கட்டடக்கலை

கட்டடக்கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பைக் குல்பர்காவில் காணலாம். இப்பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் அரண்மனைகள், அரசர் மக்களைச் சந்திக்கும் மண்டபங்கள், தூதுவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள், வளைவுகள், குவிமாடங்கள், சுவர்கள், அரண்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டன. இக்கண்டுபிடிப்புகள் அவர்களின் கட்டடக்கலைத் திறமையை படம்பிடித்துக் காட்டுகின்றன.


கல்வி

பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார். அவர் அரசரான பின்னர் தமது மகன்கள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார். அவருடைய மகன் முதலாம் முகமது கல்வி கற்பதை ஆதரித்தவராவார். பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்வீரர்களுக்கான கலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார். பாமினி அரசின் எட்டாவது சுல்தானான சுல்தான் பிரோஸ், மொழியியல் அறிஞரும் கவிஞரும் ஆவார். இவருக்குப் பின்வந்த அரசர்கள் குல்பர்கா, பீடார், தௌலதாபாத், காண்டகார் ஆகிய இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவினர். இப்பள்ளிகளில் உண்டு உறைவிட வசதிகள் அரசரின் செலவில் ஏற்படுத்தப்பட்டன.

பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற, மகமது கவானின் மதரசா (கல்வி நிலையம்) 3000 கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட பெரிய நூலகத்தைக் கொண்டிருந்தது. இவையாவும் கல்விக்கும், புலமைக்கும் கவான் அளித்த முக்கியத்துவத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றன.



சுருக்கம்

ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜயநகர அரசு நிறுவப்பட்டதும், அவருக்குப் பின் வந்தோர்களால் குறிப்பாக இரண்டாம் தேவராயரால் அது ஒருங்கிணைக்கப்பட்டதும் விவரிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மன்னரான கிருஷ்ணதேவராயரின் முன்னேற்றமும் சாதனைகளும் கோடிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளன. 

தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகளால் விஜயநகர் தோற்கடிக்கப்பட்டது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

விஜயநகரின் அரசு நிர்வாக முறையும், பொருளாதாரமும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

கலை, இலக்கியம், கட்டடக்கலை ஆகிய துறைகளுக்கு விஜயநகர் செய்த பங்களிப்பு, எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

அலாவுதீன் பாமன் ஷாவால் பாமினி அரசு உருவாக்கப்பட்டதும் அவருடைய திறமை வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் முகமதுவால் அது ஒருங்கிணைக்கப்பட்டதும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. 

பாமன் ஷா அறிமுகம் செய்த நிர்வாக முறையும், முதலாம் முகமது, பின்னர் மூன்றாம் முகமதுவின் காலத்தில் மகமது கவான் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன. 

கட்டடக்கலை, கல்வி ஆகியவற்றிற்குப் பாமினி சுல்தான்களிப்பங்களிப்பு திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.


சொற்களஞ்சியம் 

1. முரண்பாடு / மோதல் - conflict - a serious disagreement

2. ஏறுவரிசையில் – ascending - leading upwards

3. நிகழ்ச்சிக்குப்பிறகு – subsequently - after a particular thing

4. அலங்கரிக்கப்பட்ட - adorned - decorated

5. கொள்ளையடிப்பு – pillaging - robbing, using violence, especially in wartime

6. சதிதிட்டம் / சூழ்ச்சி - intrigue - conspire, plot

7. முதல் குழந்தைக்கு வாரிசுரிமை – primogeniture - the right of succession belonging to the first child

8. கம்பீரம் / சிறப்புவாய்ந்த - splendour - magnificent

9. செழிக்கும் – flourishing - growing successfully

10. முக்கியத்துவம் – prominence - the state of being important

11. உத்திரவாதம்  - indemnity - guarantee, surety


மூலாதார நூல்கள்

1. J.L. Mehta, Advanced Study in the history of Medieval India: Mughal Empire, Vol. II, 1526-1707, Sterling Publishers, 2011. 

2. Burton Stein, Vijayanagara, The New Cambridge History of India, 1989. 

3. Abraham Eraly, The Emperors of Peacock Throne, Penguin, 2007.


Tags : Term 2 Unit 1 | History | 7th Social Science இரண்டாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 2 Unit 1 : Vijayanagar and Bahmani Kingdoms : Bahmani Kingdom Term 2 Unit 1 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : விஜயநகர், பாமினி அரசுகள் : பாமினி அரசு - இரண்டாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : விஜயநகர், பாமினி அரசுகள்