Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | ஆராய்ந்திட வேண்டும்

பருவம் 2 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ் - ஆராய்ந்திட வேண்டும் | 4th Tamil : Term 2 Chapter 6 : Araainthida Vendum

   Posted On :  27.07.2023 07:06 am

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆராய்ந்திட வேண்டும்

ஆராய்ந்திட வேண்டும்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆராய்ந்திட வேண்டும்

6. ஆராய்ந்திட வேண்டும்


'அடடே! வா, மாணிக்கம். என்ன, இன்றைக்குக் காலையிலேயே வந்து விட்டாயே...!"

"ஆமாம், தாத்தா! நேற்று நீங்கள் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் வேறு கதை கேட்கும் ஆவலில் காலையிலேயே வந்துவிட்டேன்.

சரி, மாணிக்கம் இன்று அருமையான கதையொன்று சொல்கிறேன் கேள்.

மன்னர் ஒருவர் தம் குதிரையில் ஏறி அமர்ந்தபடி, ஒரு கிராமத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டி, மன்னர் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

மன்னரைப் போலவே அவரது குதிரையும் இரக்கக் குணம் கொண்டதாகக் காணப்பட்டது.

அக்குதிரையானது சுற்றும் முற்றும் பார்த்தபடியே மன்னரைச் சுமந்துகொண்டு வந்து கொண்டிருந்தது.

அப்போது, நாய் ஒன்று காலில் அடிபட்ட காரணத்தால் நடக்க முடியாமல் நொண்டி, நொண்டி சென்று கொண்டிருப்பதைக் குதிரை பார்த்தது. உடனே அந்த நாய்க்கு உதவி செய்திட வேண்டுமென்று மனத்தில் நினைத்தது.

அதனால், தன் கனைப்பொலியின் மூலம் மன்னரை அழைத்தது குதிரை. "அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எங்குச் செல்லவேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?" என்று கேட்டது,

'குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது" என்றார் மன்னர். உடனே தம் பின்னால் வந்துகொண்டிருந்த காவலர்களிடம் அந்த நாயைத் தூக்கித் தாம் அமர்ந்திருக்கும் இடத்தின் முன்னே வைத்திடுமாறு கூறினார்.

காவலர்களும் அந்த நாயைக் குதிரையின்மீது ஏற்றி மன்னர் முன்னே அமர வைத்தனர்.


மன்னர் முன்னே அமர்ந்து குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்த அந்த நாயானது, மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

குதிரையின் மீது மன்னர் வருவதைக் கண்ட கிராமத்து மக்களெல்லாம் அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார்கள். அதனைக் கவனித்த நாயோ இந்த மக்களெல்லாம் என்னைப் பார்த்துத்தான் வணங்குகின்றார்கள். என் அருகில் இருக்கும் மன்னர், என்னைச் சுமந்துகொண்டிருக்கும் குதிரை இவர்களைவிடவும் நானே சிறந்தவனாகவும், உயர்ந்தவனாகவும் இருக்கின்றேன். இந்த மக்கள் எல்லாம் என்னை வணங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றபோது எனக்கு அளவுக்கு மீறிய உற்சாகம் வருகின்றதே! என்ற மகிழ்ச்சியில் தன்னையே மறந்தது அந்த நாய். மறு நிமிடம் அது தன் தலையைத் தூக்கியபடி 'லொள்', 'லொள்' என்று குரைத்தது.

நாயின் செயலைக் குதிரை கவனித்தது. 'நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால், எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்யமுடியாது" என்றது குதிரை.


" குதிரையே! இந்தக் கிராமத்து மக்கள் என்னை வணங்குகின்ற காட்சியைப் பார்த்ததும் உனக்கு என்மீது பொறாமை ஏற்பட்டுவிட்டது. அதனால்தான், நீ என்னை மட்டம் தட்டுகிறாய்" என்றது நாய்.

'நாயே ! குடிமக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து வணங்கவில்லை. அவர்கள் மன்னரைப் பார்த்து வணங்குகிறார்கள். மன்னர் முன்னே இருக்கின்ற நீ, அதையெல்லாம் பார்த்துவிட்டு உனக்குக்கிடைத்தமரியாதையாக நினைத்துக்கொண்டு உற்சாகமடைந்துவிட்டாய். இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து அமைதியாக இரு" என்றது குதிரை.

'குதிரையே! உனக்கு என்மீது கொண்டுள்ள பொறாமையானது நன்றாக முற்றிவிட்டது. அதனால்தான் எனக்கொரு போலியான விளக்கத்தைக் கொடுக்கின்றாய்! இந்த விளக்கத்தைக் கேட்க நான் தயாராக இல்லை!" என்றபடி மேலும் சத்தமாகக் குரைத்தது அந்த நாய்.

மன்னரின் அருகில் வந்துகொண்டிருந்த காவலர்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினார்கள். அங்கிருந்து நொண்டியபடியே ஓடிய நாய், சற்றுத் தொலைவில்போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது.

தான் இல்லாதபோதும், குடிமக்கள் எல்லாரும் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த நாய்க்கு அப்போதுதான் உண்மை புரிந்தது, தன்னுடைய தவற்றினை நினைத்து வருந்தியது. நாம் ஆராயாமல் முடிவெடுத்தோம். அதனால்தான் நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது என்று எண்ணியது.

"ஆராய்ந்திடாமல் முடிவெடுத்தால் என்ன நடக்கும் என்பதை இக்கதைமூலம் புரிந்துகொண்டாயா, மாணிக்கம்? ' என்றார் தாத்தா. "! நன்றாகப் புரிந்துகொண்டேன்' என்றான் மாணிக்கம்.

என்ன, குழந்தைகளே! இனி, நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். சரிதானே!

Tags : Term 2 Chapter 6 | 4th Tamil பருவம் 2 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 2 Chapter 6 : Araainthida Vendum : Araainthida Vendum Term 2 Chapter 6 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆராய்ந்திட வேண்டும் : ஆராய்ந்திட வேண்டும் - பருவம் 2 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆராய்ந்திட வேண்டும்