பருவம் 3 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ் - அறிவுநிலா | 4th Tamil : Term 3 Chapter 9 : Arivu Nelaa

   Posted On :  02.08.2023 11:42 pm

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா

அறிவுநிலா

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா

9. அறிவுநிலா


 

புதிர்க்கதை

ஓர் ஊரில் அண்ணனும் தம்பியும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் தம்பி வறுமையில் வாடினான். அண்ணனோ செல்வச் செழிப்பில் இருந்தான். தம்பி ஒருநாள், அண்ணனிடம் சென்று, தனக்கு ஒரு பசுவை வழங்குமாறு கேட்டான். தம்பியிடம் பசுவைக் கொடுப்பதற்குமுன் "தன் நிலத்தில் அவன் நாள்தோறும் வந்து, ஓராண்டு உழைக்க வேண்டும்" என்று அண்ணன் சொன்னான்.

தம்பியும் ஏற்றுக்கொண்டான். அண்ணனுடைய நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தபின் தம்பி, அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவைத் திருப்பிக்கேட்டான் அண்ணன்

'ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா, பசு எனக்குத்தான் ! என்றான் தம்பி.

அண்ணன், 'அதெப்படி முடியும்? ஓராண்டுக் காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது" என்றான். இருவருக்கும் வாய்ச்சண்டை முற்றியது. அதனால், இருவரும் தங்களுக்குச் சரியான தீர்ப்பைத் தேடி, பெரியவர் ஒருவரிடம் சென்றனர். வாழ்க்கை விசாரித்த பெரியவர் அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, இவற்றிற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தாம் பசு" என்று கூறிப் புதிரைச் சொன்னார்.

முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள்" என்றார்.

இருவரும் வீட்டிற்குவந்து மூளையைக் குழப்பிச் சிந்தித்தனர் மறுநாள் காலை பெரியவரைச் சந்தித்தனர் மூத்தவனைப் பெரியவர் அழைத்து "என் புதிருக்கு விடை சொல்" என்றார்.

அண்ணன், அவரிடம், 'பெரியவரே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை அறுசுவை உணவு சாப்பிட்டால் வயிறு நிரம்பும் பல மணி நேரம் பசிக்காது.

இரண்டாவது மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம், பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும். மூன்றாவதாக அதி விரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி .முயல்களைக்கூடப் பிடித்த விடுகின்றனவே" என்று சொல்லிவிட்டுப் பெரியவரைப்பார்த்து, "பசு எனக்குத்தானே' என்று கேட்டான்.

மூத்தவனே, நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள் என்றார் பெரியவர்,


இளையவன் அழைக்கப்பட்டான். அவன் பெரியவரைப் பார்த்து, "நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமித்தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம், தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான் மூன்றாவது அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம் அது நாம் விரும்பியபோது, விரும்பிய இடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்" என்றான்.

"ஆஹா! சரியான விடைகள். இந்தப் பசு உனக்குத்தான் என்று பசுவைக் கொடுத்தபின் பெரியவர் கேட்டார்" இந்தப் புதிர்களுக்கு உனக்கு விடை கூறியது யார்? என்றார்.

"என் மகள் கவின்நிலா!"

“அவள் என்ன அவ்வளவு புத்திசாலியா?" என்றார் பெரியவர்

"ஏதோ கொஞ்சம்" என்றான் இளையவன்.

"அப்படியா? என் அளவிற்கு அவளுக்கு அறிவு இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்த்துவிடுகிறேன்" என்ற பெரியவர் பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, இதோ இந்தப் பத்து அவித்த முட்டைகளையும் உன்மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓர் இரவிற்குள் பொரிக்க வைத்து அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போட வைத்து, பத்து முட்டைகளில் மூன்றை எடுத்து அடையாக்கி நாளை காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா என்றார்.

தன் மகள் கவின்நிலாவிடம் சென்று, பெரியவர் சொன்னதை அப்படியே சொன்னான் இளையவன்.

தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப் போகிறாள் என்று கவலைப்பட்டான். ஆனால் அவளோ எதிர் புதிர் போட்டாள். தன்தந்தையிடம் வேகவைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, 'இதில் உள்ளதுவரையை நிலத்தில் விதைத்து முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாகத் தயாராக வைக்கும்படி பெரியவரிடம் கூறுங்கள். "என்றாள் கவின்நிலா. அவளுடைய தந்தையும் அவ்வாறே பெரியவரிடம் சென்று சொன்னார்.

துவரையைப் பார்த்த பெரியவர் அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல்கண்டு ஒன்றைக் கொடுத்து, "இதை ஊறவைத்து,காயவைத்து, நல்ல தரமான துணி தயாரிக்கச் சொல், ' என்றார். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து" இதிலிருந்து நூலை நூற்பதற்கு ஒரு ராட்டினம் செய்து தரும்படி கூறுங்கள்!" என்றாள். அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட பெரியவர்,"உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ சவாரி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ செருப்புடனோ வரக்கூடாது. பரிசுடனோ, பரிசின்றியோ வரக்கூடாது இது கடுமையான உத்தரவு" என்றார்.

மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாடுகளைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றைத் தெரியும்படியும் சிட்டுக்குருவி ஒன்றைத் தெரியாமலும் எடுத்துச் சென்றாள் கவின்நிலா. அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட பெரியவர் அவள்மீது நாய்களை ஏவினார். பதிலுக்கு இவள் முயலை வெளியேவிட நாய்கள் முயலைத் துரத்தின. "இதோ உங்களுக்கு ஒரு சிறிய பரிசு" என்று சிட்டுக் குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்து விட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப்பட்டார் பெரியவர். "கவின்நிலா, நீ புத்திசாலிதான்" என்று பாராட்டிய பெரியவர், அவளுக்குப் பரிசுகள் அளித்து அனுப்பி வைத்தார்.

'நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

Tags : Term 3 Chapter 9 | 4th Tamil பருவம் 3 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 3 Chapter 9 : Arivu Nelaa : Arivu Nelaa Term 3 Chapter 9 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா : அறிவுநிலா - பருவம் 3 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா