Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

மூன்றாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் | 7th Social Science : History : Term 3 Unit 2 : Art and Architecture of Tamil Nadu

   Posted On :  19.04.2022 01:53 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -2 : தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

கற்றலின் நோக்கங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த அறிவினைப் பெறுதல் • தென்னிந்தியாவில் கோவில் கட்டடக் கலையின் பரிணாம வர்ச்சியைப் புரிந்துகொள்வது • தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியம் குறித்த அறிவினைப் பெறுதல் • தமிழ்நாட்டில் கோவில் கலையின் வளர்ச்சிக்கு பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்க அரசர்கள் வழங்கிய பங்களிப்பினை அறிந்துகொள்ளுதல்

அலகு - 2

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்



கற்றலின்  நோக்கங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த அறிவினைப் பெறுதல் 

தென்னிந்தியாவில் கோவில் கட்டடக் கலையின் பரிணாம வர்ச்சியைப் புரிந்துகொள்வது 

தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியம் குறித்த அறிவினைப் பெறுதல்

தமிழ்நாட்டில் கோவில் கலையின் வளர்ச்சிக்கு பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்க அரசர்கள் வழங்கிய பங்களிப்பினை அறிந்துகொள்ளுதல்


அறிமுகம்

திராவிடக் கட்டடக்கலை நம்மண்ணில் பிறந்ததாகும். காலப் போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது. தமிழ் திராவிடக் கட்டடக் கலையின் மரபிற்கு மகாபலிபுரத்திலுள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலத்தில் முந்திய குடைவரைக் கோவில்களே (குகைக்கோவில்கள்) எடுத்துக்காட்டுகளாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் தென்னிந்தியாவிலில்லை. அதற்கு முந்தைய கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டுமெனவும் அதன் காரணமாக இயற்கை சக்திகளால் அழிவுக்கு உள்ளாகி இருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர். 

தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்துகட்டங்களாக நடைபெற்றுள்ளது. அவை: 

1. பல்லவர் காலம் (கி.பி 600 - 850), 

2. முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850 - 1100), 

3. பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 1100-1350),

4. விஜயநகர/நாயக்கர் காலம் (கி.பி.1350-1600), 

5. நவீன காலம் (கி.பி.1600க்கு பின்னர்).


பல்லவர் காலம்

பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக் கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது. குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும்போது முதலில் ஒரு மலையின் பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி வெட்டப்பட்டும் செதுக்கப்பட்டும் தனியொரு பாறையாக ஆக்கப்படும். பின்னர் அப்பாறையே செதுக்கப்பட்டும் குடையப்பட்டும் கோவிலாக வடிவமைக்கப்படும். குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் ஆவார்.


மண்டகப்பட்டிலுள்ள குடைவரைக் கோவிலே அவர் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவிலாகும். குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் அக்கோவிலைத் தாங்கி நிற்கும். குடைவரைக் கோவில்கள் அனைத்திலும் பின்புறச் சுவற்றில் செதுக்கப்பட்ட ஒரு கருவறையையும் அதற்கு முன்பாக ஒருமுன்னோக்கியமண்டபத்தையும் கொண்டுள்ளன. மண்டபத்தின் இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் (வாயிற் காப்போர்) சிலைகள் இடம் பெற்றுள்ளன. குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி.700 க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது. சிற்பிகள் தங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி கல்லிலே கலைவண்ணம் காண, கட்டுமானக் கோவில்கள் அதிக வாய்ப்பினைக் கொடுத்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும், மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோவில்கள் பல்லவ அரசர் இரண்டாம் நரசிம்மவர்மனால் எழுப்பப்பட்டவை ஆகும். அவை தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்களாகும். ஒரே பாறையில் ஒரு கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன. ராஜசிம்மன் என்றும் அறியப்பட்ட பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டுவித்தார். காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது. மகாபலிபுரத்திலுள்ள ஏழு கோவில் குடைவரைக் கோவில்களாக அமைக்கப்படாமல், வெட்டியெடுக்கப்பட்ட கற்களைக்கொண்டு கட்டப்பட்டது. இக்கோவிலில் இரு கருவறைகள் உள்ளன.


ஒன்று சிவபெருமானுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு மகாபலிபுரத்திலுள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரதங்கள் என்றழைக்கப்படும் திரௌபதி இரதம், தர்மராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. இரதங்களில் குறிப்பாக அர்ச்சுன, பீம, தர்மராஜா இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள் மாடக் குழிகளாலும் பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாடக்குழிகள் ஆண், பெண் தெய்வங்கள், அரசர்கள் ஆகியோரின் சிற்பங்களையும் புராணக் காட்சிகளைச் சித்தரிக்கும் சிற்பங்களையும் கொண்டுள்ளன. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி பிரமாண்டமான கலைப் படைப்பாகும். இக்கருங்கல் பாறை ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்டதாகும்.


1984 இல் கடற்கரைக் கோவில் வளாகம் உட்பட மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் - சின்னங்களும் கோவில்களும் மொத்தமாக உலகப் பாரம்பரிய இடமென யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்டது.


பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள்

முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சம காலத்தவராவர். பல்லவர்களைப் போலல்லாமல் பாண்டியர்கள் தங்கள் குடைவரைக் கோவில்களின் கருவறையில் கடவுளர்களின் சிலைகளை நிறுவினர். பாண்டியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குகைக் கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகளில் மிக முக்கியமானவை மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் காணக்கிடைக்கின்றன. இக்குகைக் கோவில்கள் சிவன் விஷ்ணு பிரம்மா கடவுளர்களுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளன. பாண்டியர் காலத்துச் சிவன் கோவில்களின் லிங்கங்கள் தாய்ப் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவையாகும். நந்தியின் உருவமும் தாய்ப்பாறையிலிருந்தே செதுக்கப்பட்டதாகும். சிவலிங்கமானது கருவறையின் மையத்தில், சுற்றிலும் போதுமான இடம் விடப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. கருவறையில் உபயோகித்த நீர் வெளியே செல்ல கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில்களில் உள்ள தூண்கள் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தூண்களில் இடம் பெற்றுள்ள அலங்கார வேலைப்பாடுகளும் ஒரே மாதிரியாக இல்லை. சுவர்களின் வெளிப்பகுதி நான்கு மாடக் குழிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிவன், விஷ்ணு , துர்கை , கணபதி, சுப்பிரணியன், சூரியன், பிரம்மா, சரஸ்வதி ஆகிய கடவுளர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் இருபுறத்திலும் துவாரபாலகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாறை குடைவரைக் கோவில்களும் கட்டுமானக் கேவில்களும் பாண்டியர் கட்டடக் கலையின் சிறப்புமிக்க அம்சங்களாகும். ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு, மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கழுகுமலையில் உள்ள முற்றுப்பெறாத வெட்டுவான் கோவிலாகும்.


கழுகுமலையில் அமைந்துள்ள ஒற்றைக்கல் கோவிலான வெட்டுவான் கோவில் ஒரு பெரும் பாறையின் நான்கு புறங்களிலிருந்தும் செதுக்கி அமைக்கப்பட்டதாகும். கோவிலின் உச்சியில் உமா மகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் பாண்டியர் கட்டடக்கலைப் பாணியைப் பறைசாற்றும் எடுத்துக்காட்டுகளாகும்.


சிற்பங்கள்

பாறை குடைவரைக் கோவில்களில் குகைகளின் சுவர்கள் கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கட்டுமானக் கோவில்களைப் பொருத்தமட்டிலும் கருவறையின் சுவர்களில் அலங்கார வேலைப்பாடுகள் காணப்படவில்லை . மாறாகக் கருவறையின் மேலுள்ள கட்டுமானங்களிலும் தூண்களிலும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சிற்பங்கள் கம்பீரமாகவும், அகன்ற தோள்களோடும் ஒடிசலான உடல்வாகுடனும் அழகான ஆபரணங்களோடும் உயரமான கிரீடங்களோடும் காட்சியளிக்கின்றன.


திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, ஆகிய இடங்களிலுள்ள குடைவரைக் கோவில்களில் சிவன், விஷ்ணு, பிரம்மன், பார்வதி, சுப்பிரமணியன், கணபதி, தட்சிணாமூர்த்தி ஆகிய கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட, முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிலைகள் தற்போது மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


ஓவியங்கள்

புதுக்கோட்டையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சித்தன்னவாசலிலும் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த திருமலைபுரத்திலும் முற்காலப் பாண்டியர்களின் உன்னதமான ஓவியங்கள் உள்ளன. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும். அவர்கள் குகைச் சுவர்களில் சாந்துபூசி, ஈரம் காய்வதற்கு முன்னரே ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். கெடுபயனாக அப்படியான ஓவியங்களில் பலவற்றை நாம் இழந்துவிட்டோம், இருப்பனவற்றுள் தாமரைத் தடாக ஓவியம் அதன் மிகச் சிறந்த வர்ணங்களின் பயன்பாட்டிற்கும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள நேர்த்திக்காகவும் புகழ்பெற்றதாகும். தாமரை மலர்கள், குளமெங்கும் நீரில் பரவிக்கிடக்கும் இலைகள், குளத்தில் காணப்படும் யானை, எருமை, அன்னப்பறவை மற்றும் பூக்களைப்பறிக்கும் ஒரு மனிதன் என விரியும் அவ்வோவியக் காட்சி மனங்களைக் கொள்ளை கொள்வதாய் சிறப்பாக அமைந்துள்ளது.


சித்தன்னவாசல் ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களுடன் சில ஒப்புமைகளைப் பெற்றுள்ளன. திருமலைபுரத்தில் கிடைத்துள்ள முற்காலப் பாண்டியர் ஓவியங்கள் சேதமடைந்த நிலையிலுள்ளன.



முற்காலச் சோழர்கள் காலம்

கி.பி.850 இல் விஜயாலய சோழன் காலத்தில் முக்கியத்துவம் பெறத்துவங்கிய சோழர்கள் தொடர்ந்து அப்பகுதியில் நானூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர். முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலைக்கு தமிழ்நாட்டில் திண்டிவனத்திற்கு அருகேயுள்ள தாதாபுரத்திலுள்ள கோவிலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


முற்காலச் சோழர்களின் கோவில் கட்டக்கலை செம்பியன் மகாதேவி பாணியைப் பின்பற்றி அமைந்தததாகும். கோவில்களில் அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் (மாடக் குழிகள்) இருந்தால் அதை செம்பியன் மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம். செம்பியன் மகாதேவியால் மறுவடிவாக்கம் செய்யப்பட்ட முற்காலக் கோவில்களுக்குத் திருப்புறம்பியத்திலுள்ள கோவில் ஓர் எடுத்துக்காட்டாகும். 


பிற்காலச் சோழர்கள் காலம்

தஞ்சாவூரிலும் கங்கைகொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள இரண்டு உன்னதமான கோவில்கள் சோழர்களின் கட்டடக் கலை முதிர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. ஏறத்தாழ கி.பி.1009இல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரிலுள்ள சிவன் கோவில் ராஜாராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.



தஞ்சாவூர் பெரிய கோவில்

தஞ்சாவூர் பெரிய கோவில் அது கட்டப்பட்டபோது ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது. அதன் விமானம் (கர்ப்பகிரகத்தின் மேலுள்ள கட்டுமானம்) 216 அடிகள் உயரம் கொண்டதாகும். உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் அதுவும் ஒன்று என்பதால் அது குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது. மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள 16 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்.


கங்கைகொண்ட சோழபுரம்

சோழர்கள் வீழ்ச்சியடைந்து, பாண்டியர்கள் எழுச்சி பெறும்வரை சுமார் 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகராக விளங்கிற்று. ராஜேந்திரசோழனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் எழுப்பப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் ஐயப்பாட்டிற்கு இடமில்லாமல் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் வழித் தோன்றலாகும். இக்கோவிலின் உயரம் 55 மீட்டராகும். இக்கோவிலின் கருவறை தஞ்சாவூர் பெரிய கோவிலின் கருவறையைப் போலவே இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது. வெளிச்சுவர்களின் மூன்று பக்கங்களிலும் சற்றே முன்புறம் நீண்ட மாடக் குழிகளும் இடையில் உள்ளொடுங்கிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. மாடக்குழிகளில் சிவன், விஷ்ணு, ஏனைய, கடவுளர்களின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கோவில் வளாகத்தில் சண்டிகேஸ்வரர், கணேசன், மகிஷாசுரமர்த்தினி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.


தாராசுரம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் பிற்காலச் சோழர்களின் கோவில் உள்ளது. பேரழகுமிக்க கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்ட இக்கோவில் ஐராவதீஸ்வரருக்கு (இந்திரனின் யானை வழிப்பட்ட கடவுள்) படைத்தளிக்கப்பட்டதாகும். சோழ அரசன் இரண்டாம் ராஜராஜன் இக்கோவிலைக் கட்டுவித்தார். இக்கோவில் சோழர்களின் கட்டடக் கலைக்கு மற்றுமொரு சிறந்த அடையாளமாகும். கோவிலின் மகாமண்டபம் வடிவத்தில் பெரியதாக உள்ளது. இக்கோவிலின் ஒட்டுமொத்த வடிவம் ஒரு தேர்போலக் காட்சியளிக்கிறது. ஏனெனில் மகாமண்டபத்தின் கீழ்ப்பகுதியில் நான்கு சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையிலும் தூண்களிலும் புராண இதிகாசக் கதாபாத்திரங்கள் சிற்றுருவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலைச் சுற்றி கோபுரத்துடன் கூடிய சுற்றுச் சுவர் உள்ளது.



பிற்காலப் பாண்டியர்கள்

தென்னிந்தியக் கலைக்கு பிற்காலப் பாண்டியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகும். அதற்குச் சிறந்த சான்றாக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிள்ளையார்பட்டியிலுள்ள (தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு அருகே) குடைவரைக் கோவிலாகும். இங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகிய இரண்டிற்காகவும் இக்கோவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நுழைவாயிலைப் பார்த்தவண்ணம் அழகான கணேசனின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. தேசிவிநாயகம் என குகைக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இச்சிற்பத்தின் சிறப்பு யாதெனில் இரண்டு கைகளைக் கொண்டுள்ள கணபதியின் தும்பிக்கை வலதுபுறமாகத் திரும்பியுள்ளது.




விஜயநகர காலம்

விஜயநகர அரசர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடம் கட்டும் முறை உருவானது, கோவில்களில் மண்டபங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் கடவுளர்களின் திருவுருவச் சிலைகள் மண்டபங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. கோவிலுக்கு வெளிப்புறத்தில் கட்டப்பட்ட தூண்களுடன் கூடிய இம்மண்டபங்கள் பொது நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டவையாகும். கோவிலுக்கு கிழக்கே பொதுமக்கள் கூடுவதற்காகக் கட்டப்பட்ட இம்மண்டபங்கள் பொற்குடத்திற்கு பொட்டு வைத்தாற்போல் கோவிலுக்கு மேலும் அழகு சேர்த்தன. மண்டபத்திலுள்ள ஒற்றைக்கல் தூண்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன. இத்தூண்களில் குதிரைகள், சிங்கங்கள் மற்றும் கடவுளர்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வேலூரிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் ஆகியவற்றிலுள்ள கல்யாண மண்டபங்கள் குறிப்பிடத்தகுந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்றது மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபமாகும்.


பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர, நாயக்க கட்டடக் கலையின் முக்கியக் கூறுகளாகத் திகழ்பவை அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத்தூண்கள் மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள், ஆகியனவாகும். மேலும் கோவில்களோடு சேர்ந்து தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களுக்கான நுழைவாயில்கள் நான்குபுறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் கட்டப்பட்டன.

சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது. பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை அமைக்கும்முறை அதிகரித்தது என்பதை திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில், திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ண கோவில் ஆகியவற்றில் காணமுடியும். ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் கோவிலிலுள்ள தெற்குவிழா மண்டபம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் முகப்பில் மேற்கூரையுடன் அமைந்துள்ள புகுமுக மண்டபம் ஆகியவை குறிப்பிடத்தகுந்த எடுத்துக்காட்டுகளாகும்.


தமிழ்நாட்டில் கோவில்களின் மையப்பகுதிகளிலும் அவற்றையொட்டி அமைந்திருக்கும் பத்திகளிலும் இடம்பெற்றிருந்த தெய்வங்களின் உருவச் சிலைகள் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறத் துவங்கின. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள 1000-கால் மண்டபம், புதுமண்டபம், திருக்குறுங்குடி,


நாங்குநேரி வானமாமலையார் கோவில் ஆகியவற்றிலுள்ள இரதிமண்டபம் ஆகியவை இக்கால மண்டபக் கட்டடக்கலைக்கு சிறப்புமிக்க எடுத்துக்காட்டுகளாகும்.

இக்காலப்பகுதியைச் சேர்ந்த தூண்கள் முந்தைய காலப்பகுதியைச் சேர்ந்தவைகளைக் காட்டிலும் அதிகம் அலங்கரிக்கப்பட்டவைகளாக உள்ளன. ஒற்றைக்கல்லில் மிகப்பெரிய யாளி, குதிரை வடிவச்சிலைகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் புராண இதிகாசக் காட்சிகள் அரசகுடும்ப உறுப்பினர்களின் இயற்கை வடிவ அளவிலான முழுமையான உருவங்கள், சாதாரண மனிதர்களின் வடிவங்கள், விலங்குகள், பூவேலைப்பாடுகள் ஆகியவை செதுக்கப்பட்டன. இக்காலப் பகுதியின் மற்றொரு சிறப்பம்சம் இசைத்தூண்களாகும். மண்டபங்களிலுள்ள தூண்களின் மேற்பகுதி சிங்கம் அமர்ந்திருப்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது ஒரு பொதுவான கூறாகும். கர்ப்பகிரகத்தின் சுவர்களிலும் மண்டபங்களிலும் கற்சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், திண்டுக்கல்லுக்கு அருகே தாடிக்கொம்பில் அமைந்துள்ள கோவில்கள், திருநெல்வேலிக்கு அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கோவில், தஞ்சாவூரில் பெரிய கோவிலுக்குள் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவில் ஆகியவை இக்காலப்பகுதியைச் சேர்ந்த சிறப்பித்துச் சொல்லவேண்டிய, கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய மிகப்பெரும் கலைப்படைப்புகளாகும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மதுரை கூடல் அழகர் கோவில், திருவில்லிபுத்தூர், திருவெள்ளரை, அழகர்கோவில், திருவண்ணாமலை, திருவரங்கம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இவற்றில் இதிகாசக் கதைகள், பெரும்பாலும் ராமாயணக் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.



நவீன காலம் கி.பி.1600க்குப் பின்னர்

மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களாக இராமநாதபுரம் பகுதியை ஆண்டு வந்த சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது. இக்கோவில் மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது. கோவிலின் வெளிப்பிரகாரம் ஏறத்தாழ 7 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. வெளிப்பிரகாரத்தின் கிழக்கு மேற்குப் பிரகாரங்கள் 120 மீட்டர் நீளமுடையவைகளாக உள்ளன. வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிரகாரங்கள் 195 மீட்டர் நீளமுடையவைகளாக உள்ளன. வெளிப்பிரகாரத்தைத் தாங்கிநிற்கும் 1200க்கும் மேற்பட்ட தூண்கள் தனிச்சிறப்பு கொண்டனவாகும். மேலும் இத்தூண்களில் பெரும்பாலானவை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. இம்மூன்று பிரகாரங்களில் உட்புறம் அமைந்துள்ள பிரகாரமே மிகப் பழைமையானதாகும்.



சுருக்கம்

பாறைகளில் சிற்பங்களைப் படைப்பது பல்லவர்கால சிறப்புக்கூறாக அமைந்திருந்தது. முற்காலச் சோழர்களின் காலம் பேரழகுமிக்க விமானங்களுக்குப் பெயர்பெற்றதாகும். பிற்காலச் சோழர்கள் காலம் பொலிவுமிக்க கோபுரங்களுக்காகப் புகழ்பெற்றது. மண்டபங்கள் விஜயநகர காலப்பகுதியின் தனிச்சிறப்பாகும். நவீனகாலத்தில் பிரகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.


மூலாதார நூல்கள் 

1. K.A. Nilakanta Sastri, A History of South India: From Pre-Historic Times to the Fall of Vijayanagar Empire (Oxford University Press, 1997) - with an introduction by R. Champakalakshmi. 

2. Burton Stein, A History of India, Oxford University Press, 2004. 

3. Crispin Branfoot, "The Architectural Sculpture of the South Indian Temples, 1500-1700," Artibus Asiae, vol. 62, No.2, 2002. 

4. Crispin Branfoot, "The Tamil Gopura: From Temple Gateway to Global Icon." ARS Orientalis, vol. 45, 2015.

5. https://www.britannica.com.


கலைச்சொற்கள் 

1. சுதேசம், உள் நாடுindigenous - native 

2. சகாப்தம், வரலாற்றின் ஒரு காலகட்டம் – epoch - era, age 

3. கருவறைsanctum - a sacred place set apart in a temple 

4. சீர்கேடான - decadent - corrupt, a state of moral decline 

5. எடுத்துக்காட்டாய் திகழ்கிறது - exemplified - illustrated, represented 

6. சிலை வைக்கப்படும் இடம் – niche - a cavity, especially in a wall to display a statue 

7. கலைப்பண்புக் கூறு – motif - a decorative design forming a pattern in an artistic work 

8. பெரிய கற்பாறை, பாறாங்கல் - boulder - a very large rock

9. சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் – contemporaries - living or occurring at the same time 

10. செதுக்கப்பட்ட – hewn - cut out and shaped 

11. சுவற்றில் செதுக்கப்படும் சிற்பம் - bas-relief - a sculpture carved into a wall

12. செயல் திறன், ஒன்றைச் செய்து முடித்தல் - execution - carrying out

13. உட்பகுதிகள், இடைவெளிகள் - recesses - hollow spaces inside the wall or a structure


Tags : Term 3 Unit 2 | History | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 3 Unit 2 : Art and Architecture of Tamil Nadu : Art and Architecture of Tamil Nadu Term 3 Unit 2 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -2 : தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் : தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் - மூன்றாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -2 : தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்