இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு - சீனப் புரட்சி 1949 | 12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies
சீனப் புரட்சி 1949
மிக நீண்டவரலாற்றைக் கொண்ட சீனா பல்வேறு வரலாற்று
காலங்களில் ஐரோப்பாவைக் காட்டிலும் மிகவும் மேம்பட்ட ஒரு நாடாகும். ஆனால் 1900 வாக்கில்
சீனா பல நிலைகளிலும் பின் தங்கியிருந்தது. அதன் வீழ்ச்சிக்கு குறிப்பிடத்தக்க காரணம்
என்னவென்றால் 1650ஆம் ஆண்டு முதல் அந்நாட்டை மிக நீண்டகாலமாக ஆண்டுவந்த மஞ்சு அரசின்
நேர்மையற்ற மற்றும் திறமையற்றதுமான ஆட்சிமுறையே ஆகும். கற்றுத் தேர்ந்து அதிகார மையமாக
விளங்கிய மாண்டரின்கள் என்றழைக்கப்பட்ட நிலக்கிழார்கள் வர்க்கம், அந்நாட்டின் நிலை
அவ்வாறே தொடர்ந்து தாங்கள் பெற்றுவந்த சலுகைகளுக்கு பாதிப்பில்லாமல் இருப்பதையே விரும்பியது.
விவசாயம் சார்ந்த பெருவாரியான மக்கள் அதிகமான வாடகையாலும், வரிகளாலும், நிலப் பற்றாக்குறையாலும்
பாதிக்கப்பட்டிருந்தனர். விவசாய உற்பத்தி தேக்கமடைந்தது. பயிரிடப்பட்ட பகுதிகள் மக்கள்தொகை
அடர்த்தி நிறைந்ததாக அமைந்திருந்ததோடு பெருவாரியான வேளாண் நிலங்கள் ஒரு ஏக்கருக்கும்
குறைவானதாகவே இருந்தன. சீனாவில் நிலக்கரியும் இரும்புத்தாதுவும் தேவைக்கு மிதமிஞ்சி
இருந்தாலும் தொழில் வளர்ச்சி மிக மெதுவான ஒன்றாகவே இருந்தது.
அரசியல் மற்றும் பொருளாதார அடக்குமுறையானது
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல எழுச்சிகளுக்கு வழிவகுத்திருந்தது. அதில் மிகவும் தீவிரமானது
தைபிங் கிளர்ச்சியாகும் (1850-1864). அதனை ஒடுக்க அரசிற்கு பதினான்கு ஆண்டுகள் பிடித்தது
என்பதே அரசின் பலவீனத்தைக் காட்டுவதாகும். வளர்ந்துவரும் ஐரோப்பிய நெருக்கடியானது பிரிட்டிஷாரில்
துவங்கி பிரெஞ்சு, ஜெர்மானிய, ரஷ்ய மற்றும்
அமெரிக்க நாடுகளின் கட்டாயத்தினால் சீனா வெளிநாடுகளுக்கு அதன் துறைமுகங்களில் வணிக உரிமையை வழங்கும் நிலையேற்பட்டது. பிரிட்டிஷார் இருமுறை சீனர்களுடன் போர் புரிந்தனர் (அபினிப் போர்). இக்காலகட்டத்தில் சீனா தைபிங் கிளர்ச்சியை ஒடுக்க தனது சக்தி முழுமையையும் செலுத்திக் கொண்டிருந்ததால் அது வெளிநாடுகளை தடுத்து நிறுத்த இயலாத சூழலை உருவாக்கியது. ஹாங்காங்கிலிருந்து ஆர்தர் துறைமுகம் வரையான பரந்து விரிந்த பரப்பு ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அதிலும் செழுமைக்கு பெயர்பெற்ற துறைமுகமாக ஷாங்காய் மாறிப்போயிருந்தது.
புதிதாக நவீனயுகத்திற்குள் நுழைந்த ஜப்பான் 1894ஆம் ஆண்டு முதல் தனது ஆதிக்க செயல்களை துவங்கியதும் சீனாவின் வலுவிழந்த நிலையை தெளிவுப்படுத்துவதாகவே அமைந்தது. பார்மோசா ஜப்பானை சென்று சேரவும், கொரியா சுதந்திரமடையவும் 1895இல் கையெழுத்திடப்பட்ட அமைதி உடன்படிக்கையே காரணமாக அமைந்தது. அதன்பின் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய வியாபாரிகள் சீன வணிகத்தில் சுரண்டலைக் கையாண்டார்கள். கிறித்தவ சமய போதகர்கள் சீனாவில் கால்பதித்து உள்நாடு வரை தங்கள் நம்பிக்கையைப் பரப்பினார்கள். ஐரோப்பியர்களின் செயல்பாடுகளும் அவர்கள் உள்ளூர் நிர்வாகத்தில் மேற்கொண்ட குறுக்கீடுகளும் சீனர்களுக்கு அவர்கள் மீது வெறுப்பைப் பெற்றுத் தந்தது. வெளிநாட்டினர் மீது வெறுப்பு உச்சத்தில் இருந்த 1900ஆம் ஆண்டின் காலகட்டத்தில் தொடர்ந்து இரு விளைச்சல் தோல்வியும், மஞ்சள் ஆற்றின் வெள்ளத்தால் நேர்ந்த இழப்புகளும் வந்து சேர்ந்தன. இதையடுத்து பாக்ஸர் கிளர்ச்சி வெடித்தது.
தைபிங் (பெரும் அமைதி என்று பொருள்) கிளர்ச்சி ஒரு விவசாய கிளர்ச்சியாக மட்டுமே துவங்கியது. ஆனால் விரைவில் அது ஹங் ஹிஸியு-சுவான் என்ற வேளாண் பின்புலத்தைக் கொண்டு பள்ளி ஆசிரியரின் தலைமையில் ஒரு புரட்சி இயக்கமாகவே வடிவெடுத்தது. அவர் மக்களிடையே சமத்துவம், நிலத்தை சமமாக பகிர்தல், பழைய சமூக வேற்றுமைகளுக்கு முடிவுகட்டல் போன்ற கருத்துக்களை எடுத்துச் சென்றார். 1853இல் இவ்வியக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்ற அளவை எட்டி நான்கிங் பகுதியை வெற்றிகரமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றதோடு நாட்டின் 40 சதவீதப் பகுதிகளை தனிநாடாக பாவித்து இயக்கமே நிர்வகிக்கலானது. ஆனால் தைபிங்கின் தலைமை விவசாய குடிகளின் ஏற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்தது. மறுசீரமைக்கப்பட்ட சீனப் பேரரசின் படைகள், பிரிட்டனாலும், பிரான்சாலும் வழங்கப்பட்ட நவீன ஆயுதங்களைக் கொண்ட பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான மேஜர் கோர்டன் தலைமையில் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. நான்கிங் 1864இல் மீண்டும் பேரரசோடு இணைக்கப்பட்டது.
அபினிப் போர்கள் : சீனாவில் போதைக்கு உள்ளானோரின் இறப்பால் ஏற்பட்ட மனித இழப்பின் அளவு எல்லையை மீறியபோது சட்டத்திற்குப் புறம்பான அபினி வியாபாரத்தை ஒடுக்க சீன அரசு முயன்றது. பிரிட்டிஷ் வணிகர்களே சீனாவில் அபினி விநியோகத்தின் முதன்மை ஆதாரமாக இருந்தனர். முதலாம் அபினிப் போரின் (1842) இறுதியில் கையெழுத்திடப்பட்ட நான்கிங் உடன்படிக்கை பிரிட்டனுக்கு சீனாவின் கதவுகளைத் திறந்துவிட்டது. சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக ஒரு தொகையையும் வழங்கியது. முதல் போர் சீன அதிகாரிகள் கான்டன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷாரின் பதிவுசெய்யப்பட்ட ஆரோ (Arrow) என்ற கப்பல் ஒன்றின் மாலுமிகளை கள்ள கடத்தல் குற்றத்திற்காக கைது செய்தமைக்காகவே மூண்டது. கப்பல் சீனர்களுக்கு சொந்தமானது என்பதோடு அதில் இருந்த மாலுமிகளும் சீனர்களே. ஆனால் ஹாங்காங் அரசுகொடுத்த அனுமதியின் பெயரில் பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. அனுமதி அளிக்கப்பட்டிருந்த காலவரம்பும் முடிவடைந்திருந்தது. ஆனபோதிலும் ஏதாவது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி போர் நெருக்கடி கொடுத்தால் அதன் வாயிலாக அதிக சலுகைகள் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன் இந்நிகழ்வின் எதிரொலியாக தனது போர்கப்பல் ஒன்றை அனுப்பியது. போர் மூண்ட காலகட்டத்தில் தனது நாட்டின் சமய போதகர் ஒருவர் சீனாவில் கொல்லப்பட்டதாக (பிப்ரவரி 1856) காரணம்காட்டிய பிரான்சும் பிரிட்டனோடு இணைந்து தாக்குதல் தொடுத்தது. இம்முறை பிரிட்டிஷாரையும், பிரெஞ்சுக்காரர்களையும் உள்ளடக்கிய படை பீகிங்கின் கோடைக்கால அரண்மனையை அழித்தது. இறுதியாக 1860இல், சீனா பிரிட்டனின் உயர்வான படைபலத்திற்கு கட்டுப்பட்டு பெய்ஜிங் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. அது சீனாவின் துறைமுகங்கள் வியாபாரத்திற்கு திறக்கப்படவும், யாங்ட்சே வரை வெளிநாட்டுக் கப்பல்கள் செல்லவும், சமய போதகர்கள் தடையின்றி தங்களுடைய பணியை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. மிக முக்கியமாக அது சீனாவில் பிரிட்டிஷார் சட்டத்திற்கு உட்பட்டு அபினி வியாபாரம் மேற்கொள்ள வசதி செய்தது.
பாக்ஸர் கிளர்ச்சி (1899-1901) : பாக்ஸர் என்பது ஈஹிகுவான் என்ற சீன இரகசிய சங்கத்தை குறிக்க அயல்நாட்டினர்
பயன்படுத்திய சொல்லாகும் (Yihequan எனும் பதம் "நியாயம் மற்றும் ஒருமைப்பாட்டின்
கரம்" என்ற பொருள் கொண்டது). பாக்ஸர்கள் பல்வேறு பின்புலத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும்
பெரும்பான்மையானோர் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஷான்டுங் மாகாணத்தை பிறப்பிடமாக
கொண்ட விவசாயிகளேயாவர். பாக்ஸர்களின் முக்கிய குறிக்கோள் என்பது மஞ்சு வம்சத்தை முடிவிற்குக்
கொண்டு வருவதோடு முறைகேடாக சலுகைகளைப் பெற்று வந்த மேற்கத்தியர்களை சீனாவைவிட்டு அப்புறப்படுத்துவதுமாகும்.
பாக்ஸர்கள் தேவாலயங்களையும், -அயல்நாட்டினரின் வீடுகளையும் தீக்கிரையாக்கி கிறித்தவ
சமயத்தை தழுவிய சீனர்களைப் பார்த்த இடத்திலேயே கொன்று குவித்தார்கள். பன்னாட்டுப் படை
ஒன்று பீகீங் நகரை சூறையாடியதில் பேரரசியும் அவர்தம் அவையாரும் ஓட்டம்பிடித்தனர். ஏறக்குறைய
100,000 மக்கள் மடிந்தனர். இறந்தோரில் - பெரும்பான்மையானோர் சாதாரண குடிமக்கள் என்பதும்,
அதில் ஆயிரக்கணக்கான சீன கிறித்தவர்களும், 200 முதல் 250 வரையான அயல் நாட்டினரும்
(பெரும்பாலும் சமய போதகர்கள்) அடங்குவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
பாக்ஸர் கிளர்ச்சி 1901 செப்டம்பர் 7இல் கையெழுத்திடப்பட்ட
பாக்ஸர் முதன்மை குறிப்போடு (Boxer Protocol) முறையான முடிவிற்கு வந்தது. இதன்படி பெய்ஜிங்
நகரைச் சுற்றி அரணாக அமைந்திருக்கும் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்றானது.
பாக்ஸர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்ட சீன அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டனர். அயல்நாட்டு
தூதரகங்கள் தங்களின் சுயபாதுகாப்பிற்காக பெய்ஜிங்கில் படைகளை நிறுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு சீனா ஆயுதங்களை இறக்குமதி செய்யக்கூடாதெனவும், போரில் பாதிக்கப்பட்ட
நாடுகளுக்கு $330 மில்லியனுக்கும் மேலான ஒரு தொகையை சீனா இழப்பீடாக வழங்கவும் முதன்மை
குறிப்பு சரத்துக்களைக் கொண்டிருந்தது.
1911 அக்டோபர் மாதம், வூச்சங்கில் நிறுத்தப்பட்டிருந்த
துருப்புகள் கலகத்தில் இறங்கியதே புரட்சி முறையாக துவங்கியதற்கான அறிகுறியாக கொள்ளப்படுகிறது.
கலகக்காரர்கள் விரைந்து வூச்சங்கின் நாணயச்சாலையையும் ஆயுதக்கிடங்கையும் கையகப்படுத்தியவுடன்
ஒவ்வொரு நகராக மஞ்சுக்கள் மீது போர்ப் பிரகடனம் செய்தார்கள். புரட்சி யாங்சே பள்ளத்தாக்கில்
வெடித்துக் கிளம்பி விரைவாகவே மத்திய மற்றும் தென் சீனாவின் பெரும் பகுதிக்குப் பரவியது.
புரட்சியில் ஈடுபட்டிருந்த மாகாணங்கள் 1912இல் புத்தாண்டுப் பிறப்பின் போது நான்கிங்கை
தலைநகராகக் கொண்டு ஒரு குடியரசு பிறந்துவிட்டதாக பிரகடனப்படுத்தின. இக்கலகச் செய்தியை
அறிந்த சன் யாட்- சென் ஷாங்காய் நகரை வந்தடைந்ததும் அங்கே அவர் சீன குடியரசின் தற்காலிக
குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மஞ்சுக்களின் ஆட்சியில் அமைச்சராக பதவி
வகித்த யுவான் ஷி-காயை, குழந்தையாக இருந்த பேரரசரின் பிரதிநிதி புரட்சியை அடக்கும்
பொறுப்பை ஏற்க அழைப்புவிடுத்தார். ஆனால் மக்களின் எண்ணப்போக்கை உணர்ந்த யுவான் பேரரசரை
பதவி துறக்க வலியுறுத்தினார்.
1912 பிப்ரவரி 12இல் பதவி துறத்தலுக்கான அரசாணையை
வெளியிட்டு மஞ்சு வம்சம் (குங் அரசு) சீன அரசியல் காட்சியில் இருந்து விடைபெற்றது.
தொடர்ந்து வந்த மாதத்தில் இராணுவ கட்டுப்பாட்டை யுவானே வைத்துக் கொண்டிருந்ததால் தேசிய
நலன் கருதி அவருக்கு சாதகமாக சன் யாட்- சென் இராஜினாமா செய்தார்.
தனது நான்கு வருட நிர்வாக காலத்தில் யுவான்
ஷி-காய் தான் ஜனநாயகத்திற்கும் குடியரசிற்கும் விரோதமானவர் என்பதை நிரூபித்தார். அவர்
கோமின்டாங்கையே தடை செய்யுமளவிற்குச் சென்று அதன் ஆட்சி நடந்த மாகாணங்களை எல்லாம் தன்வசப்படுத்த
முயன்றார். யுவான் 1913 அக்டோபர் 10இல் சீன குடியரசின் முழுமையான குடியரசுத் தலைவராக
பதவியேற்றார். சரியாக
சன் யாட்-சென் (1866-1925)
ஒரு ஏழ்மையான குடும்பத்தில்
பிறந்தடாக்டர் சன் யாட்- சென் ஒரு மிஷன் பள்ளியில் பயின்று பின் மருத்துவரானார். அரசியலில்
அவர் கொண்ட ஆர்வம் அவரை கிங் அரசிற்கு எதிரான 1895ஆம் ஆண்டின் கிளர்ச்சியில் ஈடுபட
தூண்டியது. அக்கிளர்ச்சி தோற்றதால் சன் யாட்-சென் அடுத்த பதினாறு ஆண்டுகளை நாடு துறந்து
கழிக்கும்படி ஆயிற்று. சீன மாணவர்களிடமும், வெளிநாடு வாழ் சீனர்களிடமும் அவரது புரட்சிகர
கருத்துக்களைப் பரப்புவதில் தனது நேரத்தை செலவிட்டார். அவர் 1905ஆம் ஆண்டு டோக்கியோ
நகரில் உருவாக்கிய அரசியல் கட்சி கோமின்டாங் அல்லது தேசிய மக்கள் கட்சி என்று ஆனது.
-சன் யாட்-சென் மூன்று சித்தாந்தங்களை வலியுறுத்தினார்: தேசியவாதம், ஜனநாயகம், மற்றும்
சோஷலிஸம். சன் யாட்-சென் 1894ஆம் ஆண்டு சீன மறுமலர்ச்சி சங்கத்தை உருவாக்கி அதில் அவர்களின்
பெருமைக்கு விதிவிலக்காக சீனா மீது அயல்நாடுகளால் திணிக்கப்பட்ட சமநிலை மீறிய இரு ஒப்பந்தங்களை
சுட்டிக் காட்டினார். இச்சங்கம் அதிவேகத்தில் வளர்ந்ததோடு அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்தது.
அது 1912ஆம் ஆண்டு தனது பெயரை கோ-மின்-டாங் என்று மாற்றிக் கொண்டது. இவ்வமைப்பின் உந்து
சக்தியாக விளங்கிய சன் யாட்- சென் ஒரு குடியரசை விரும்பினாரேயன்றி அரசியல் சாசனத்திற்கு
உட்பட்ட மன்னராட்சியை அல்ல.
மூன்று மாதங்களுக்குப்பின் அவர் தேசிய அவையை
கலைத்துவிட்டு அதனிடத்தில் அரசியல் குழு ஒன்றை உருவாக்கி அதன் வழியே பொருத்தமான அரசியல்
சாசனத்தை (Constitutional Compact) வரைவிக்கவைத்து குடியரசுத் தலைவர் பதவியை சர்வாதிகாரமிக்கதாக
மாற்றினார். இதனால் யுவான் அவரது ஆயுட்காலம் முழுவதும் குடியரசுத் தலைவராக பதவி வகிக்க
வழி ஏற்படுத்தப்பட்டது. மஞ்சூரியா மற்றும் ஷாண்டுங்கின் பொருளாதார கட்டுப்பாட்டை ஜப்பான்
கொண்டிருக்க வேண்டும் என்ற ஜப்பானிய கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டபோது யுவான் மக்களின்
வெறுப்புக்கு ஆளானார். 1916ஆம் ஆண்டு யுவான் இறந்தபின் ஒரு புதிய குடியரசுத் தலைவர்
நியமிக்கப்பட்டார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பெயரளவில் மட்டுமே நடுவண் தன்மை
கொண்டதாக அரசு விளங்கியது. அது சீர்குலைவின் காலமானது. அதே சமயம் சீனாவின் வடபகுதியில்
மார்க்சிய சிந்தனை வலுப்பெறவும், கடற்கரை நகரங்களான ஷாங்காய்க்கும், கான்டனுக்குமிடையே
சன் யாட்- சென்னின் செயல்பாடுகள் சூடுபிடிக்கவும் செய்தது.
முதல் உலகப்போரின் காலத்தில் யுவான் ஷி-காய்
மறைந்ததும், வெவ்வேறு அதிகாரபலமும் போட்டி மனோபாவமும் கொண்ட சீன இராணுவத் தலைவர்களால்
நாடு பிளவுபட்டது. அறிவார்ந்த மக்கள் பலரும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தாராளவாத கொள்கை
மீது நம்பிக்கை கொண்டு அதுவே இச்சிக்கலை தீர்க்க சரியான வழி என்று கருதினர். ஆனால்
அவர்கள் எதிர்பார்த்திருந்தப் பலன்கள் கிடைக்கவில்லை என்றானதும் ஏமாற்றமடைந்தனர். லட்சக்கணக்கான
மக்கள் தங்களின் ஏமாற்றத்தை பேரணிகள் நடத்தியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் வெளிப்படுத்தினாலும்
மாணவர்களே இவற்றுள் தலையாயப் பணிகளை மேற்கொண்டார்கள். ரஷ்யப் புரட்சி 1917இல் வெடித்து
கிளம்பியதன் பாதிப்பில் அறிவார்ந்த மக்கள் மத்தியில் மார்க்ஸ், லெனின் போன்றவர்களின்
எழுத்துக்களும், உரைகளும் பிரபலமாயின. சீனாவின் வளர்ந்துவரும் தொழில்துறை தொழிலாளர்
வர்க்கம் வலிமையைப் பெற்று வேலை நிறுத்தங்கள் மற்றும் புறக்கணிப்புகள் மூலம் அதை வெளிப்படுத்தியதால்
மார்க்சிய சிந்தனை மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1918ஆம் ஆண்டில் மார்க்சியத்தைப்
படிப்பதற்கான ஒரு சங்கம் பீகிங் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பயிலரங்குகளில்
பங்கெடுத்த மாணவர்களில் இளம் உதவி நூலகரான மா சே- துங்கும் ஒருவர்.
சீனாவில் 1922ஆம் ஆண்டு தொடர் வேலை நிறுத்தங்கள்
வெடித்தன. இராணுவ சட்டப் பிரகடனம் நடைமுறையில் இருந்தும் ஹாங்காங்கில் ஏறத்தாழ
2,000 மாலுமிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சிறிது காலத்தில் 1,20,000 தொழிலாளர்கள்
கலந்து கொண்ட பொது வேலை நிறுத்தமாக உருப்பெற்று முதலாளிகளே அமைதி கோரும் நிலைக்கு கொண்டு
வந்து நிறுத்தியது. ஹாங்கெளவில் பிரிட்டிஷ் காவலர்களுக்கும் பிரிட்டிஷாருக்கு சொந்தமான
ஆலையின் ஊழியர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சண்டையையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சுட்டதில்
35 இரயில்வே ஊழியர்கள் கொல்லப்பட்டது மட்டுமன்றி தொழிற்சங்க கிளை செயலர் ஒருவர் தூக்கிலிடப்பட்டார்.
இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொழிலாளர் வர்க்கத்தின் இயக்கத்தை தற்காலிகமாக மிதப்படுத்தியதேயன்றி
அவர்களின் எதிர்ப்புணர்வை ஒழித்துவிடவில்லை. மாறாக அது வர்க்க உணர்வை அதிகப்படுத்தியது.
மா சே-துங் (1893-1976)
தென்-கிழக்கு சீனாவில் அமைந்த
ஹுனான் பகுதியில் மாவோ பிறந்தார். அவரது தந்தையார் ஒரு வசதியான விவசாயி என்பதோடு அவர்
மஞ்சு அரசவழியின் தீவிர ஆதரவாளர் ஆவார். மாவோ புரட்சி நடந்த ஆண்டில் (1911) சாங்ஷாவில்
இருந்த இளையோர் கல்லூரியில் சேர்ந்தார். அவர் புரட்சிப் படையில் சேர்ந்தாலும் சாங்ஷாவில்
அமையப்பெற்ற ஆசிரியப் பயிற்சி கல்லூரியில் சேரும் பொருட்டு அதிலிருந்து வெளியேறினார்.
அங்கே 1918 வரை இருந்த மாவோ நூலகத்தில் நீண்ட நேரத்தினை செலவிட்டார். பின்னர் பீகிங்கிற்குப்
பயணப்பட்ட அவர் பீகிங் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பொறுப்புவகித்தார். அதற்கு
அடுத்த ஆண்டு முழுமையான அரசியல் செயல்பாட்டாளராக மாறிய மாவோ, ஹுனானில் அமைப்பாளராக
பொறுப்பேற்றதோடு தீவிர பொதுவுடைமைவாதியாகவும் உருப்பெற்றார்.
இதற்கிடையே சன் யாட்- சென் அரசியல் சாசன அடிப்படையில்
ஒரு அரசை நிறுவியிருந்தார். ஆனால் அதன் நிலை வலுவற்றதாக இருந்தது. அதனால் அவர் தனது
கோமின்டாங்கை மறுசீரமைக்க சோவியத் நாட்டின் உதவியைக் கோரினார். சோவியத் நாடு மைக்கேல்
பரோடினை சீனாவுக்கு அனுப்பியது. தேர்ந்த பொதுவுடைமைவாதியான பரோடின் கோமின்டாங்கை மறுசீரமைப்பிற்கு
உட்படுத்தி அதை மையப்படுத்தப்பட்ட மக்கள் கட்சியாக்கியதோடு ஒரு புரட்சிப் படையை உருவாக்கவும்
உதவினார். சோவியத் அதிகாரிகளின் துணை கொண்டு கான்டனில் வம்போவா இராணுவக்கழகம் உருவாக்கப்பட்டது.
அதன் முதல் இயக்குனராக சியாங் கே -ஷேக் பதவியேற்றார். சீன பொதுவுடைமை கட்சிக்கும்,
கோமின்டாங்கிற்கும் ஏற்பட்ட கூட்டணியால் சூ-யென்லாய் அக்கழகத்தில் அரசியல் செயல்பாடுகளுக்கான
பொறுப்பு ஊழியராக்கப்பட்டார்.
1925ஆம் ஆண்டு சன் யாட்- சென் மறைந்த பின்
கோமின்டாங் பொதுவுடைமை கட்சி போன்று அமைக்கப்பட்டதேயொழிய அதன் கொள்கைகள் பொதுவுடைமை
சிந்தனையை உள்ளடக்கியதாக இல்லை. கோமின்டாங்கின் தலைவராக சியாங் கே-ஷேக் இருந்தபோது
பொதுவுடைமை கட்சி மா சே - துங் மற்றும் சூ- யென் லாயின் கட்டுப்பாட்டில் இருந்தது.
பொதுவுடைமைவாதிகளின் செல்வாக்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே பெருகி அதன் இராணுவத்திற்கு
வெகுவாக ஆட்களைப் பெற்றது. கோமின்டாங் நிலக்கிழார்கள் மற்றும் முதலாளிகளின் ஆர்வங்களை
பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது.
வடக்கத்தியப் பயணம் என்று அறியப்படும் அணிதிரண்டப்
பயணத்தை கான்டன் நகரில் துவக்கிய சியாங் கே -ஷேக் 1925ஆம் ஆண்டின் கடைசியில் ஹாங்கோ
நகரை கைப்பற்றினார். 1927 மார்ச் மாதத்தில் பயணம் ஷாங்காய் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது
6,00,000 ஊழியர்கள் எழுச்சிபெற்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு அவர்களின் தொழிற்சங்கங்கள்
நகரின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டு வந்தன. சியாங் கே -ஷேக் ஏற்கனவே கான்டன் நகரில்
ஊழியர்கள் இயக்கத்தை கடுமையாக ஒடுக்கயிருந்ததோடு பொதுவுடைமைவாத செயல்பாட்டாளர்கள் பலரையும்
கைது செய்தும், அவர்களின் தொழிற்சங்கங்களை மோசமாக அச்சுறுத்தவும் செய்திருந்தார். ஷாங்காய்
நகரில் வெற்றிக்களிப்பில் இருந்த போராட்ட சக்திகளிடமிருந்து நகரின் கட்டுப்பாட்டைப்
பெற்றுக்கொண்ட அவர் சூழ்ச்சியாக குற்றப் பின்புலம் கொண்ட கும்பல்களையும், சீன வியாபாரிகளையும்,
அயல்நாட்டு சக்திகளின் பிரதிநிதிகளையும் இணைத்து விடியலுக்கு முன்பான எதிர்பாராத தாக்குதலை
முக்கியமான இடதுசாரி தொழிற்சங்க அலுவலகங்களின் மீது தொடுக்கவைத்தார். தொழிலாளர்களது
காவல்காரர்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டதோடு அவர்களது தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது எந்திரத் துப்பாக்கி கொண்டு சுடப்பட்டதில்
ஆயிரக்கணக்கான செயல்வீரர்கள் எதிர்த்துப் போராடி இறந்தனர். செல்வாக்குமிக்க வியாபாரிகளும்,
நிதியாளர்களும் கொடுத்த அழுத்தத்தில் சியாங் கே - ஷேக் கோமின்டாங் கட்சியிலிருந்த அனைத்து
பொதுவுடைமைவாதிகளையும் வெளியேற்றினார். அவர் 1928இல் பீகிங் நகரை வெற்றிகரமாக ஆக்கிரமித்தார்.
சீனாவில் மீண்டும் ஒரு நடுவண் அரசு உருவானது. ஆனால் அடுத்த 18 ஆண்டுகளுக்கு அவரது அரசு
ஊழல் மலிந்ததாகவும், வன்முறை கும்பல்களின் பிடியில் சிக்கியும் சீரழிந்தது.
கோமின்டாங்கின் பிடி நகர்புறங்களில் இறுக்கமாக
இருப்பதை உணர்ந்த மாவோ, விவசாயக்குடிகளை ஒன்று திரட்டுவதில் தனது கவனத்தைச் செலுத்தினார்.
கியாங்ஸிக்கும் ஹுனானுக்குமிடைப்பட்ட காடுகளால் சூழப்பெற்ற மலைப்பகுதிகளில் அவர் தஞ்சமடைந்தார்.
இப்பகுதியில் மாவோவும், அவரது தோழர்களும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இருந்தனர். அடியோடு
அழித்தொழிக்கும் நோக்கோடு ஐந்து படையெடுப்புகளை கோமின்டாங் நடத்தி இருந்தாலும் அவர்களால்
அம்மலைப் பகுதியில் ஊடுருவ முடியவில்லை என்பதோடு மாவோவின் படைபலம் நாளுக்கு நாள் விரிவடைந்தது.
பொதுவுடைமைவாதிகளுக்கு இப்புதுதளத்தில் சியாங் கே-ஷேக்கின் தாக்குதல்களில் இருந்து
பாதுகாப்பு கிடைத்ததோடு ஜப்பானியர்களிடமிருந்து தொடர்ச்சியாக எழுந்து கொண்டிருந்த அச்சுறுத்தல்களில்
இருந்தும், போரையே தொழிலாக கொண்டிருந்த கிழார்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பாக
இருந்தது.
பொதுவுடைமைவாதிகளின் நிலைகளைச் சுற்றி வளைத்து
சியாங் கே-ஷேக் அரண் எழுப்பியிருந்ததால் மாவோ பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹுனானை விட்டு
அகல முடிவுசெய்தார். இதையடுத்து 1934இல் பொதுவுடைமை இராணுவம் மேற்கொண்டதே நீண்ட பயணம்
என்றழைக்கப்படுகிறது. அணிவகுத்து சென்றோர் வழிநெடுகிலும் கோமின்டாங் இராணுவத்தாலும்,
போர்க்கிழார்களின் படைகளாலும், தோழமையற்ற பழங்குடியினர்களாலும் தொடர் துயரங்களுக்கு
ஆளானார்கள். கோமின்டாங் படையினரின் எந்திர துப்பாக்கியின் உக்கிரமும், காதுகளை செவிடாக்கும்
ஆற்றின் சீற்றங்கொண்ட ஓசையும் நகர்ந்து கொண்டிருந்தோருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
கிளம்பி சென்ற 1,00,000 நபர்களில் 1935ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏறக்குறைய 6,000 மைல்கள்
என்ற தூரத்தை கடந்து 20,000 நபர்களே வடக்கு ஷேன்ஸியை வந்தடைந்தார்கள். அங்கு மேலும்
பல பொதுவுடைமைவாத இராணுவங்கள் அவர்களோடு இணைந்ததில் 1937ஆம் ஆண்டுவாக்கில், மா சே
- துங் 10 மில்லியன் மக்களின் ஆட்சியாளரானார். ஷேன்ஸி மற்றும் கன்ஸூவில் அமைந்த கிராமங்களில்
மாவோ தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குழுக்களை அமைத்து பொதுவுடைமைவாதிகள் சீனாவில்
ஆட்சியை கைப்பற்றுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தினார்.
ஜப்பானியர்கள் மஞ்சூரியாவை இராணுவத் தளமாகக்
கொண்டு சீனாவின் வடக்கு மாகாணங்களைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்.
மாவோ ஜப்பானியர்களை எதிர்க்கும் பொருட்டு சில காலம் சியாங்க் கேஷேக்கின் கோமின்டாங்கை
அரவணைத்து செல்லவேண்டும் என்று நினைத்தார். நடைமுறை சூழலுக்கேற்ற இந்நிலைப்பாட்டால்
பொதுவுடைமைவாதிகள் மீதான தாக்குதல் படிப்படியாக குறைந்தது. எனினும் ஜப்பானியர்களின்
விரிவாக்கத் திட்டத்தை முறியடிக்க கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.
எனினும், கோமின்டாங்கின் படைகள் எளிதாக வீழ்ந்ததால் இரண்டாம் உலகப்போரின் போது கிழக்கு
சீனாவின் பாதியை ஜப்பான் ஆக்கிரமித்துக் கொண்டது. சியாங் கே -ஷேக் தனது தலைநகரை சுங்கிங்
நகருக்கு மாற்ற நிர்பந்தம் ஏற்பட்டது.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால்
1945இல் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தவுடன் சீனாவில் இருந்த இரு அணிகளும் ஜப்பானின் கட்டுப்பாட்டில்
இருந்த பகுதிகளை ஆக்கிரமிக்க உடனடி நடவடிக்கையில் இறங்கினர். இப்போட்டியின் போக்கைக்
கண்ட அமெரிக்க ஐக்கிய நாடு இரு அணிகளையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அறிவுறுத்தியது.
1946இல் தளபதி ஜார்ஜ் மார்ஷல் இருமுறை போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும்
எந்தப் பயனும் இல்லாமல் போனது. அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய பெரும் ஆதரவால் கோமின்டாங்
அரசு பொது நிர்வாகத்தையும் துறைமுகங்களையும் தகவல் தொடர்பையும் தனது கட்டுப்பாட்டில்
வைத்துக் கொண்டது. ஆனால் வேளாண் பின்புலத்தைக் கொண்ட கோமின்டாங்கின் வீரர்கள் ஏமாற்றத்தோடும்
அதிருப்தியோடும் இருந்தார்கள். இதற்கு மாறாக மாவோவின் படை மனவுறுதியுடனும் மிகுந்த
ஒழுக்கத்துடனும் திகழ்ந்தது. உள்நாட்டுப் போர் வெடித்தவுடன் சியாங் கே -ஷேக்கின் படைகள்
சிதைவடைந்ததுடன் அதன் தளபதிகள் கட்சிமாறவும் துவங்கினார்கள். நகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக
விழத் துவங்கின. சியாங் கே -ஷேக் 1949ஆம் ஆண்டின் இறுதியில் முக்கிய நிலப்பகுதியை விட்டு
அகன்று தைவானில் தஞ்சம் புகுந்தார். சீன மக்கள் குடியரசு 1949இல் நிறுவப்பட்டது.