வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் | 12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்காணும் அம்சங்களோடு அறிமுகமாதல்
•இரண்டாம் உலகப்போருக்கான காரணங்கள், அதன் போக்கு மற்றும் விளைவுகள்
•சீனப் புரட்சி
•இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சில் உருவான தேசியவாத இயக்கங்களும்
சுதந்திரத்திற்கான போராட்டங்களும்
அறிமுகம்
முதல் உலகப்போருக்குப் பின் கூட்டுப் பாதுகாப்பை
முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பன்னாட்டு அமைப்பு தகர்ந்தது. 1939 செப்டம்பரில் ஐரோப்பா,
மீண்டும் ஒரு பெரும் போரை எதிர்கொண்டது. 1939 முதல் 1945 வரை நடந்த போர், இதற்குமுன்
1914 முதல் 1918 வரை நடந்த உலகப்போரை விஞ்சியதாக இருந்தது. இதற்கு ஜப்பான் எடுத்த நிலைப்பாடும்
முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். அதன் விளைவாக கடுமையான அளவிற்கு உயிரிழப்பும், பொருள்
சேதமும், போர் செலவினங்களும் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் காலனிய நாடுகளில்
ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டு தேசியவாத கிளர்ச்சிகள் சூடுபிடித்தன. இதனால் ஆசியாவிலும்,
ஆப்பிரிக்காவிலும் காலனியாதிக்க நீக்கம் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவில், டச்சு
ஒரு தோல்வியுற்ற போரை நடத்தியது, ஆனால் இறுதியாக முந்தைய டச்சு காலனி நாடாக இருந்த
கிழக்கிந்தியத் தீவுகளான இந்தோனேசியாவுக்கு 1949இல் விடுதலை அறிவிக்கப்பட்டது. இப்பாடம்
இந்தோனேசியாவிலும், அமெரிக்க காலனியான பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களை
அணுகுபொருளாக எடுத்துவிளக்குகிறது. சீனாவில் ஊழல்வாதிகளும், திறமையற்றவர்களுமாக இருந்த
தேசியவாதிகளை மக்கள் புறந்தள்ளினார்கள். அங்கு நடந்த உள்நாட்டுப் போரின் விளைவாக மா
சே - துங்கின் தலைமையில் சீன மக்கள் குடியரசு உருவாக வழிவகுத்தது.