புவியியலை வரையறுத்தல்
புவியியல் உலகின் மிகத் தொன்மையான புவி அறிவியல்களுள்
ஒன்றாகும். புவியியல் கருத்துக்களின் ஆரம்பம் கிரேக்க தத்துவவியலாளர்களிடமிருந்து
தான் தொடங்குகிறது. எரட்டோதெனிஸ் (Eratosthenes) எனும் கிரேக்க
அறிஞர் புவியியல் என்ற சொல்லை வடிவமைத்தார். கிரேக்க மொழியில் 'புவி' எனப்
பொருள்படும் 'ஜியோ'(Geo)
என்ற சொல்லையும், விவரித்தல்
எனப்பொருள்படும் கிராபின் (Graphien) என்ற
சொல்லையும் இணைத்து புவியியல் எனும் சொல்லை உருவாக்கினார். கால வளர்ச்சியில்
புவியியலானது புவியின் இயற் தன்மைகள் மற்றும் மனித இனம் எவ்வாறு புவியின் தன்மைக்கேற்ப
மாறிக் கொண்டு புவியையும் மாற்றி வருகின்றது என்பன போன்ற கருத்துக்களை
எடுத்துரைக்கும் ஓரு கலை மற்றும் அறிவியல் பாடமாக உருமாறி வந்துள்ளது.
ஆய்வுப்பயணம் மற்றும் புதிய கண்டங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் புவியியல்
பிறந்தது. முன்பு புதிய நிலப்பரப்பு மற்றும் கடல் வழியைக் கண்டுபிடித்து
நிலவரைபடம் தயாரித்து அவற்றை விளக்குவதுதான் புவியியலின் நோக்கமாக இருந்தது.
பின்னர் புவியியல் புவியின் நிலத்தோற்றங்கள், பேராழிகள், வளிமண்டலம்
குறித்த அறிவியல்ரீதியான கருத்துக்களையும், மனித இனம்
புவிச் சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் வலியுறுத்தத் தொடங்கியது. புவியியலின்
கருத்துக்களும், அவற்றைக் கண்டறியும் முறைகளும் அடிக்கடி மாறிக்கொண்டே
இருக்கின்றன.
சுருக்கமாக கூறினால்
புவியியலானது,
• ஒரு
பன்முகத்தன்மை கொண்டது.
• புவியின் கோளங்களிலும், கோளங்களுக்கு
இடையேயும் உள்ள தொடர்புகளையும் குறித்துப் படிப்பது.
• தகவல் திரட்டுதல் மற்றும் ஆய்தல் மூலமாக நிலவரைபடங்களையும், படங்களையும் உருவாக்குவதில் புதிய உத்திகளையும் கருவிகளையும் செயல்படுத்துதல்.
• சுற்றுச்சூழல் மற்றும் மனிதப் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வு காணும் செயல்
என வரையறுக்கலாம்.