Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | தமிழ் நாட்டில் புவியியல் கல்வி
   Posted On :  14.05.2022 07:06 pm

11 வது புவியியல் : அலகு 1 : புவியியலின் அடிப்படைகள்

தமிழ் நாட்டில் புவியியல் கல்வி

தமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் புவியியலில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நெடுங்காலமாக வழங்கி வருகின்றன.

தமிழ் நாட்டில் புவியியல் கல்வி

தமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் புவியியலில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நெடுங்காலமாக வழங்கி வருகின்றன. இவற்றில் சில துறைகள் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுத் திட்ட வரைவை மேற்கொள்கின்றன. இத்துறைகள் குறுகிய மற்றும் நீண்டகாலப் பயிற்சிகள் மற்றும் பணிமனைகளை நடத்தி சமீபத்திய புவியியல் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை மாணாக்கருக்கும், ஆய்வு மேற்கொள்பவர் களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் கற்பித்து வருகின்றன.


புவியியலை கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான புள்ளிவிவரங்கள்

பேரிடர், சுற்றுச்சூழல் சிக்கல், இயற்கை வளம் மற்றும் உலகளாவிய மற்றும் உள்ளூர் இன்னல்கள் பற்றி புவியியலாளர் கவலை கொண்டுள்ளனர். பெரும்பாலும் இவ்வகை இன்னல்களைப் பற்றி வகுப்பறைக்குள் விவாதிக்கப்படுகின்றன. இவ்வகையான இடர்பாடுகளை புரிந்துகொள்வதற்கும் அவற்றிற்கு நல்ல முடிவுகள் காண்பதற்கும் அவை தொடர்பான புள்ளிவிவரங்கள் பெருமளவு  தேவைப்படுகின்றன. இவ்வகையான மதிப்பு மிக்க தகவல்களை சிறப்பு வெளியீடுகள் மூலம் மாணவ சமுதாயத்திற்கு கொண்டு செல்வதில் இந்தியாவில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் போன்றவை இதுபோன்ற நிறுவனங்களில் பதிவு செய்து எழுதி அனுப்பி சிற்றேடுகள், துண்டுப் பிரசுரங்கள், செயற்கைக்கோள் படிமங்கள், கையேடுகள் போன்றவற்றைப் பெறமுடியும். இந்த நிறுவனங்கள் நடத்தும் குறுகிய கால பயிற்சிகள், களப்பயணம், பணிமனைகள் போன்றவற்றில் பங்கெடுக்கப் பதிவு செய்துகொள்ளலாம்.

விண்வெளியிலிருந்து புவியின் மேற்பரப்பைக் காணவும், போக்குவரத்து அடர்த்தி, மாசடைதலின் அளவு போன்றவற்றையும் தற்போது உள்ள மற்றும் மாறும் நிலப் பரப்புகளை வரைவதற்கு இதுபோன்ற நிறுவனங்களிடமிருந்து இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களையும், செயற்கைக்கோள் படிமங்களையும் மாணவர்கள் பெற்றுப் பயன்பெறலாம்.


உங்களுக்குத் தெரியுமா?

பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழக மாணவர்களுக்கான வருடாந்திர புவியியல் செயல்திறன் தேர்வு.

இந்திய புவியியல் சங்கம் இளநிலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செயல்திறன் தேர்வு நடத்தி இந்திய புவியியல் சங்க நிறுவனர் திரு என். சுப்பிரமணியம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக புவியியல் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் ஏ. ரமேஷ் ஆகிய இருவரின் பெயரில் முதல் மூன்று இடங்களைப் பெறும் B.Sc மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், முதல் மூன்று இடங்களைப் பெறும் M.Sc மாணவர்களுக்கு 15,000 ரூபாய் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்குகின்றது. அத்துடன் இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

இந்திய புவியியல் ஆசிரியர் சங்கம் பள்ளி மாணாக்கருக்கு ஆண்டுதோறும் புவியியல் செயல்திறன் தேர்வு நடத்துகிறது. இந்தத் தேர்வு இருநிலைகளில் நடத்தப்படுகிறது. இளையோர் (Junior Level) நிலையில் 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணாக்கர்கள் பங்கேற்கிறார்கள். மூத்தோர் (Senior Level) நிலையில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணாக்கர்கள் பங்கேற்கிறார்கள். அதிக மதிப்பெண் பெறும் மாணாக்கருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.


11th Geography : Chapter 1 : Fundamentals of Geography : Geography in Tamil Nadu in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 1 : புவியியலின் அடிப்படைகள் : தமிழ் நாட்டில் புவியியல் கல்வி - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 1 : புவியியலின் அடிப்படைகள்