பருவம் 3 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மக்களாட்சி | 6th Social Science : Civics : Term 3 Unit 1 : Democracy

   Posted On :  31.08.2023 07:48 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 1 : மக்களாட்சி

மக்களாட்சி

கற்றல் நோக்கங்கள் • மக்களாட்சி என்பதன் பொருளை அறிதல் • மக்களாட்சியின் வகைகளை அறிந்து கொள்ளல் • நம் அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை அறிந்து வியத்தல் • மக்களாட்சியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளல்

குடிமையியல்

அலகு 1

மக்களாட்சி


 

கற்றல் நோக்கங்கள்

• மக்களாட்சி என்பதன் பொருளை அறிதல்

• மக்களாட்சியின் வகைகளை அறிந்து கொள்ளல்

• நம் அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை அறிந்து வியத்தல்

• மக்களாட்சியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளல்

 

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு'

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாதந்தோறும் நடைபெறும் 'சமூகம் அறிவோம்' நிகழ்விற்கான இறுதிக்கட்ட வேலைகளை ஆசிரியர்கள் செய்து கொண்டிருந்தனர். அங்கிருந்த சிங்காரவேலர் அரங்கம் மாணாக்கர்களால் நிரம்பியிருந்தது. தலைமையாசிரியர் ஜீவா அன்றைய சிறப்பு விருந்தினரான வழக்குரைஞர் திருராஜசேகரன் அவர்களை வரவேற்று அழைத்து வந்தார். அங்கே சட்டென்று அமைதி நிலவியது.

வரலாற்று ஆசிரியர் பிரிட்டோ அனைவரையும் வரவேற்று அமர, ராஜசேகரன் மாணாக்கர்களுடன் பேச எழுந்தார்.

"அன்பான தம்பி, தங்கைகளே! இந்த நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி. இன்றைய நிகழ்வில் நான் உரையாற்றப்போவதில்லை." என்று சொல்லி இடைவெளிவிட, எல்லோரும் அவரை வியப்புடன் பார்த்தனர்.

"எப்போதும் எங்கும் ஜனநாயகம் வேண்டும் இல்லையா? அதனால், இந்நிகழ்வில் உங்கள் எல்லோருடனும் உரையாடப்போகிறேன்." என்று கூறிவிட்டு ஒலிவாங்கி ஒன்றை மாணாக்கர்களிடம் தருமாறு கேட்டுக்கொண்டார்.

"முதலில் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆதிமனிதன் எப்படிப்பட்ட சமூக அமைப்பில் வாழ்ந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார் ராஜசேகரன்.


“தொடக்கத்தில் அவர்கள் வேட்டைச் சமூகமாகவும் உணவு சேகரிப்போராகவும் வாழ்ந்தனர். பிறகு ஆற்றோரம் குடியேறி விவசாயம் செய்யத்தொடங்கினர்." என்றாள் ஆறாம் வகுப்பு மாணவி தீபிகா.

"ஆமாம். மனிதர்கள் அப்படிக் குழுக்களாக வாழத்தொடங்கியதும், பழங்குடி அமைப்பு தோன்றியது.ஒவ்வொருகுழுவிற்கும் தனித்தனித் தலைவர்கள் உருவானார்கள். நிலம், நீர், வளம் இவற்றை முன்னிறுத்தி குழுக்களுக்கு இடையில் மோதல்கள் உருவாகின. அதில் வென்றவர்கள் பழங்குடி இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசுகளை உருவாக்கினர். இப்படிப்பட்ட சிறுஅரசுகளின் ஒருங்கிணைப்பில் பேரரசுகள் உருவாகின"

"இப்போது தலைவன் என்பவன் அரசர் என்ற நிலையை அடைந்திருப்பான். இல்லையா?" என்று கேட்டான் அருண்.

ஆம். அப்படித்தான் அரசர்களின் தலைமையில் இயங்கும் மன்னராட்சி முறை தோன்றியது."

" நமது நாட்டிலும் இப்படித்தான் மன்னராட்சி ஏற்பட்டதா?" என்று கேட்டாள் சுகன்யா.

"ஆம். உலகெங்கும் இப்படியான அமைப்பே  உருவாகி நீடித்தது. அரசர்கள் மற்றும் பேரரசர்களால் ஆளப்பட்ட நமது நாடு, பின்னர் இங்கிலாந்தின் ஆட்சியதிகாரத்தின்கீழ் வந்து சேர்ந்தது."

"நாம் பல்லாண்டுகாலம் போராடி, பல்வேறு தியாகங்களுக்குப் பிறகு இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றோம்." என்று ஒருமித்த குரலில் கூறினர் மாணாக்கர்கள்.

‘நாடு விடுதலை அடைந்ததும், நாம் மக்களாட்சி முறையை ஏற்றுக்கொண்டோம்." என்றார் ராஜசேகரன்.

"மக்களாட்சி என்றால் என்ன?" என்று அவரிடம் கேள்வி எழுப்பினான் தேவராஜன்.

 

உங்களுக்குக் தெரியுமா?

"மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி"

- ஆப்ரகாம் லிங்கன்.


"நீங்கள் ஒரு விளையாட்டு மன்றம் ஒன்றை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அதன் பொறுப்புகளை உங்களுக்குள் பிரித்துக்கொள்வீர்கள். பிறகு வரவு செலவுகள் மற்றும் பயன்களை எல்லோரும் அனுபவிப்பீர்கள். இல்லையா?"

“ஆம்”.

"அதேபோல், ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்பதையும்தான் மக்களாட்சி என்கிறோம். மக்களாட்சி அமைப்பில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகாரம் மக்களிடம் இருக்கும். அவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடவும், அரசின் முடிவெடுக்கும் நடைமுறைகளில் பங்குபெறவும் இயலும். மக்களாட்சியில் சில வகைகள் உண்டு.


உங்களுக்குக் தெரியுமா?

"மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்".

Democracy என்ற ஆங்கில சொல் Demos மற்றும் Cratia என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். |Demos என்றால் மக்கள் என்றும் Cratia என்றால் அதிகாரம் அல்லது ஆட்சியைக் குறிக்கும்.

"மக்களாட்சியில் வகைகளா!"

"ஆமாம். உலகெங்கும் பல்வேறு முறைகளில் மக்களாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் நேரடி மக்களாட்சி (Direct Democracy), மறைமுக மக்களாட்சி (அல்லது) பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy) ஆகிய இரண்டும் பிரபலமான முறைகள்."

"நேரடி மக்களாட்சி என்றால்?" என்று கேட்டான் சிராஜுதீன்.

"நேரடி மக்களாட்சி முறையில் மக்களே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள். உதாரணமாக உங்களுடைய விளையாட்டு மன்றத்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி விவாதித்து மன்றத்திற்கான விதிகளை உருவாக்கிவிட முடியும். மேலும் இம்முறையில் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் வெளிப்படும். ஆனால் இறுதி முடிவினை எப்படி எடுப்பீர்கள்?"


நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றர். அனைத்து சட்டத்திருத்தங்களையும் மக்கள்தான் அங்கீகரிப்பர். அரசியல்வாதிகள் நாடாளுமன்ற செயல்முறைகளின்படி ஆட்சி செய்வர். நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.

உயர்சிந்தனை வினா

நேரடி மக்களாட்சி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்த இயலுமா?

"பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரிக்கும் ஒன்றை முடிவாக ஏற்றுக்கொள்வோம். எஞ்சியவர்களும் அம்முடிவிற்குக் கட்டுப்படுவார்கள்." என்றான் செல்வா.

"ஆம். இம்முறைதான் நேரடி மக்களாட்சி என்றுஅழைக்கப்படுகிறது. என்றார்ராஜசேகரன். "பிரதிநிதித்துவ மக்களாட்சி என்றால் என்ன?"

"உங்களுடைய விளையாட்டு மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இப்போது பெருகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தினசரி கூடி விவாதித்து முடிவுகள் எடுப்பது சாத்தியமா?"

'இல்லை.'

“அப்படியான சூழல் வரும்போது உறுப்பினர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும். இல்லையா?"

'ஆமாம்.'' என்று ஒரே குரலில் மாணாக்கர்கள் ஆமோதித்தனர்.


"அக்குழுவினர் உறுப்பினர்கள் சார்பில் மன்றத்தை நிர்வகிப்பர். அவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடைபெறும். உதாரணமாக தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்குப் பலரும் போட்டியிடுவர். முடிவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றவர் அந்தந்தப் பதவிகளை அடைவார்கள். அவர்களுக்கு ஏனைய உறுப்பினர்கள் சார்பாக ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடைக்கும். இதையே மக்களாட்சி என்று கூறுகிறோம்."


ஜனநாயக ரீதியாக முடிவெடுப்பது (Democratic Decision making) என்றால் என்ன?" என்று கேள்வி எழுப்பினாள் ஜூடித்.

"மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது. மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம்தான் இருக்கும். சட்டதிட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு இயங்கும் அக்குழு, தொடர்புடையோர் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்கும். பின்னர் அவர்களிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டதும் இறுதி முடிவினை எடுக்கும். இதைத்தான் ஜனநாயக ரீதியாக முடிவெடுத்தல் என்கிறோம்."

ஒரு குழுவிற்கான விதிகள் இருப்பதுபோல் நமது நாட்டை நிர்வகிப்பதற்கான விதிகளும் இருக்கும். இல்லையா?"


2007ல் ஐ.நா.சபை செப்டம்பர் 15 ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது.

“ஆம். இந்தியா போன்றதொரு மக்கள்தொகை மிக்க நாட்டில் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் விதிகள், வழிமுறைகள், உரிமைகள் மற்றும் கடமைகளை அறிந்து பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. நமது அரசமைப்புச்சட்டம் அத்தகைய வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளது. அவை நமது நாட்டின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன."

"அரசமைப்புச்சட்டம் நமக்கு என்ன மாதிரியான உரிமைகளை வழங்கியுள்ளது?"

“அது இந்தியர் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதிபெறும் உரிமையை உறுதி செய்துள்ளது."

“வேறு எவையெல்லாம் அதில் இடம்பெற்றுள்ளன?"

"அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுத்துள்ளதோடு, அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு, அவை பின்பற்றவேண்டிய வழிமுறைகள், அவற்றின் அதிகாரம் மற்றும் கடமைகளையும் விளக்குகிறது. மேலும் குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது. இப்படியாக அது ஒரு சிறப்பான கட்டமைப்பை நமக்கு வழங்கியுள்ளது.

"நமது அரசமைப்புச்சட்டம் இவ்வளவு விளக்கமானதா?" என்று வியப்புடன் கேட்டாள் தமிழ்ச்செல்வி.

"இந்திய அரசமைப்புச்சட்டம்தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகப் பெரியது. இதை டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியது. அதனால்தான் அவர் நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்." என்று முடித்தார் ராஜசேகரன்.

மாணாக்கர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரித்தனர். இறுதியில் மக்களாட்சி குறித்து எளிமையாக விளக்கியமைக்கு தெரிவித்தனர்.

 

மக்களாட்சியின் நோக்கம்

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியமைப்பு அழைக்கப்படுகிறது.


மக்களாட்சி அமைப்பில் அதிகாரம் மக்களிடம் இருக்கும். அதற்கு அவர்கள் முடிவெடுக்கும் உரிமையைப் பெற வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுக்கும் வழிமுறைகளில் நேரடியாகப் பங்கேற்க இயலாது என்பதால் முடிவெடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களாட்சி அரசில், 18 வயது நிறைவுற்ற அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் மக்கள் நலனைக் காப்பதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்டும்.

 

உலகெங்கும் மக்களாட்சி

உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (New zealand) ஆகும் (1893). ஐக்கிய பேரரசில் (United Kingdom) 1918ஆம் ஆண்டும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United states of America) 1920-ஆம் ஆண்டும்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி உட்படப்பலதலைவர்கள்அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இன்று இந்தியாவில் 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. (உலகளாவிய வயதுவந்தோர் உரிமைகளின்படி)

இந்தியகுடிமக்களில் 79% பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உலக அளவிலான இப்பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.



கலைச்சொற்கள்

மக்களாட்சி தேர்தல் - மக்களால் நடத்தப்படும் ஆட்சி மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை

தீர்மானித்தல் – ஒருவர் மனதளவில் முடிவெடுத்தல்

அரசாங்கம் - ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரம் கொண்ட மக்கள் குழு

 

மீள் பார்வை

܀ மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி ஆகும்.

܀ நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி எனமக்களாட்சி இருவகைப்படும்.

܀ நம் அரசமைப்புச் சட்டம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி பெறும் உரிமையை உறுதி செய்துள்ளது.

܀ இந்திய அரசமைப்புச் சட்டம்தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகப் பெரியது.

܀ இந்தியாவில் 18 வயது நிரம்பிய எந்த ஒரு குடிமகனும் வாக்களிக்கலாம்.



இணையச் செயல்பாடு

மக்களாட்சி


இச்செயல்பாட்டின் மூலம் மக்களாட்சி பற்றியும் இந்திய அரசின் ஆட்சி அமைப்பு முறை பற்றியும் அறிய முடியும்.

படிநிலைகள்:

படி -1 கொடுக்கப்பட்ட உரலியைப் பயன்படுத்தி செயல்பாட்டு தளத்திற்கு செல்லலாம்.

படி -2 "political systems" என்ற பகுதியை சொடுக்கவும்.

படி -3 தளத்தின் மேலே உள்ள "English' என்ற பகுதியை சொடுக்கவும்.

படி -4 தோன்றும் இந்திய வரைபடத்தில் "Tamilnadu"-ஐ தேர்ந்தெடுத்து வரைபடத்தை காணவும்.


உரலி :

http://www.elections.in/

* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க

Tags : Term 3 Unit 1 | Civics | 6th Social Science பருவம் 3 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 3 Unit 1 : Democracy : Democracy Term 3 Unit 1 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 1 : மக்களாட்சி : மக்களாட்சி - பருவம் 3 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 1 : மக்களாட்சி