மின்னோட்டத்தின் விளைவுகள்
ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாயும் போது, பலவித விளைவுகளை அது ஏற்படுத்துகிறது. அவற்றுள் முதன்மையானவை: வெப்ப விளைவு,
வேதி விளைவு மற்றும் காந்த விளைவு.
செயல்பாடு 2
அலுமினிய மென்தகடு ஒன்றினை அம்புக்குறி வடிவத்தில் வெட்டவும்.
அதன் முனை கூராக இருக்கட்டும்.
அதன் பின்பக்கத்தில் காகிதம் ஏதேனும் இருப்பின், அதை அகற்றவும்.
இப்போது மென் தகட்டை மரப்பலகையின் மீது வைக்கவும்.
இரு மெல்லிய ஊசிகளுடன் கம்பிகளை இணைத்து அவற்றை ஒரு மின்கலத்துடன்
(9V) இணைக்கவும்.
ஒரு ஊசியை மென்தகட்டின் கூர்முனையில் வைத்து அழுத்தவும்; இன்னொன்றை 1 அல்லது 2 மிமீ தள்ளி வைத்து அழுத்தவும்.
அலுமினிய மென் தகட்டின் கூர்முனை உருகுகிறதா?
கவனம் (எச்சரிக்கை )
வெப்ப விளைவு, வேதி விளைவு ஆய்வுகளை 9V மின்னியக்கு விசை கொண்ட மின்கலங்களைக் கொண்டுதான் செய்ய வேண்டும். ஏனெனில் 9V மின்கலம் மின் அதிர்ச்சியைத் தராது.
மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளில் கொடுக்கப்படும் 220 V மாறுமின்னோட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. - அவ்வாறு பயன்படுத்தினால், பெரும் மின் அதிர்ச்சி ஏற்பட்டு உடல் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும்.
மின்னோட்டத்தின் பாய்வு 'எதிர்க்கப்படும்போது, வெப்பம் உருவாகிறது. ஒரு கம்பியிலோ அல்லது மின்தடையத்திலோ எலக்ட்ரான்கள் இயங்கும் போது அவை தடையை எதிர்கொள்கின்றன. இதைக் கடக்க வேலை செய்யப்பட வேண்டும். இதுவே வெப்பஆற்றலாக மாற்றப்படுகிறது. மின்னாற்றல் வெப்பஆற்றலாக மாற்றப்படும் இந்நிகழ்வு ஜூல் வெப்பமேறல் அல்லது ஜூல் வெப்பவிளைவு எனப்படும். ஏனெனில்,
இவ்விளைவை ஜூல் என்ற அறிவியலறிஞர் விரிவாக ஆய்வு செய்தார். மின்சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி, (ரொட்டி) வறுதட்டு உள்ளிட்ட மின்வெப்ப சாதனங்களின் அடிப்படையாக இவ்விளைவே விளங்குகிறது. மின் இணைப்புக் கம்பிகளில் கூட சிறிதளவு மின்தடை காணப்படுவதால்தான் எந்தவொரு மின் சாதனமும் இணைப்புக் கம்பியும் பயன்படுத்திய பின் சூடாகக் காணப்படுகின்றன.
செயல்பாடு 3
பாதியளவு தாமிர சல்பேட்டு கரைசலால் நிரப்பப்பட்ட குடுவையை எடுத்துக் கொள்ளவும்.
உலர் மின் கலத்தில் பயன்படுத்தப்படும் கார்பன் தண்டை எடுக்கவும்.
அதன் ஒரு முனையில் இணைப்புக் கம்பியைச் சுற்றவும்.
தடிமனான தாமிரக்கம்பி ஒன்றை எடுத்து சுத்தம் செய்து பின்னர் சுத்தியலால் நன்கு அடித்து அதைத் தட்டையாக்கவும்.
தாமிரக்கம்பி மற்றும் கார்பன் தண்டு இரண்டையுமே தாமிர சல்பேட்டுக் கரைசலில் அமிழ்த்தவும்.
கார்பன் தண்டை மின்கலத்தின் எதிர் மின்வாயுடனும் தாமிரக்கம்பியை நேர் மின்வாயுடனும் இணைக்கவும்.
கார்பன் தண்டும் தாமிரக்கம்பியும் அருகில் உள்ளவாறும் அதே சமயம் ஒன்றையொன்று தொடாத வண்ணமும் பார்த்துக்கொள்ளவும்.
சற்று பொறுத்திருந்து பார்க்கவும்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கார்பன் தண்டின் மீது தாமிரப் படிவத்தைக் காணலாம்.
இதுவே மின்னாற்பூச்சு
(அல்லது மின் முலாம் பூசுதல்)
எனப்படும்.
இது மின்னோட்டத்தின் வேதி விளைவினால் ஏற்படும் நிகழ்வாகும்.
இதுவரை நாம் பார்த்த நிகழ்வுகளில் மின்னோட்டம் எலக்ட்ரான்களினால் மட்டுமே கடத்தப்படுவதைக் கண்டோம். ஆனால்,
தாமிர சல்பேட்டுக் கரைசலில் மின்னோட்டம் பாயும்போது எலக்ட்ரான் மற்றும் தாமிர நேர் அயனி இரண்டுமே மின்னோட்டத்தைக் கடத்துகின்றன. கரைசல்களில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு 'மின்னாற்பகுப்பு' எனப்படும். மின்னோட்டம் பாயும் கரைசல் 'மின்பகு திரவம்' எனப்படும். கரைசலில் அமிழ்த்தப்படும் நேர் மின்வாய் 'ஆனோடு' எனவும் எதிர் மின்வாய் 'கேதோடு' எனவும் அழைக்கப்படுகின்றன. இங்கு குறிப்பிடப்பட்ட ஆய்வில் தாமிரக்கம்பி ஆனோடாகவும் கார்பன் தண்டு கேதோடாகவும் செயல்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
மனித உடலில் மின்னூட்டத் துகள்களின் இயக்கத்தால் மிகவும் வலிமை குன்றிய மின்னோட்டம் உருவாகிறது.
இதை நரம்பு இணைப்பு சைகை என்பர்.
இத்தகைய சைகைகள் மின் வேதிச்செயல்களால் உருவாகின்றன.
மூளையிலிருந்து பிற உறுப்புகளுக்கு நரம்பியல் மண்டலம் மூலமாக இவை பயணிக்கின்றன.
மின்னோட்டம் தாங்கிய கடத்தி, அதற்குக் குத்தான திசையில் ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இதையே மின்னோட்டத்தின் காந்த விளைவு என்பர். அய்ர்ஸ்டெட் (Oersted) என்ற அறிவியலறிஞரின் கண்டுபிடிப்பு மற்றும் வலதுகை கட்டைவிரல் விதி ஆகியவை இந்தப் புத்தகத்தில் 'காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்' என்ற அலகில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
மின்னோட்டத்தின் திசை வலதுகை கட்டை விரலினால் காண்பிக்கப்படுகிறது. படம் 4.12-ல் உள்ளவாறு மின்னோட்டத்தின் திசை வலதுகை கட்டைவிரலின் திசையிலும் காந்தப்புலத்தின் திசை வலதுகையின் மற்ற விரல்களின் திசையிலும் இருக்கும்.