மின்னூட்டமும் மின்னோட்டமும் - அறிமுகம் | 9th Science : Electric charge and electric current
அலகு 4
மின்னூட்டமும் மின்னோட்டமும்
கற்றலின் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ மின்னூட்டம், மின்புலம், கூலூம் விதி ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல்.
❖ மின்னோட்டம், மின்னழுத்தம், மின்தடை, ஓம் விதி ஆகியவற்றை விளக்குதல்.
❖ தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்புச் சுற்றுகள் போன்றவற்றை வரைதல்.
❖ மின்னோட்டத்தின் விளைவுகளான வெப்ப விளைவு,
வேதி விளைவு, காந்த விளைவு ஆகியவற்றை விளக்குதல்.
❖ நேர் மின்னோட்டம் மற்றும் மாறுதிசை மின்னோட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்.
❖ மின்சாரம் சார்ந்த பாதுகாப்புக் கூறுகளை அறிதல்.
அறிமுகம்
நிறை, நீளம் ஆகியவற்றைப் போலவே மின்னூட்டமும் அனைத்துப் பருப்பொருள்களுக்கும் உரிய ஒரு அடிப்படைப் பண்பாகும். பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களாலும், மூலக்கூறுகளாலும் ஆனவை என்பது நாம் அறிந்ததே. அணுக்கள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டுள்ளன. இயற்கையில், எலக்ட்ரான்கள் எதிர் மின்னூட்டமும், புரோட்டான்கள் நேர் மின்னூட்டமும் பெற்றுள்ளன. நியூட்ரான்களுக்கு மின்சுமை இல்லை. இந்த மின்னூட்டங்களின் இயக்கமே மின்னோட்டம் ஆகும். தற்காலத்தில் மின்சாரம் என்பது முக்கியமான ஆற்றல் மூலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இப்பாடத்தில் மின்னூட்டம், மின்னோட்டம், மின்சுற்றுப் படங்கள் மற்றும் மின்னோட்டத்தின் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி கற்க இருக்கிறோம்.