Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

முதல் பருவம் அலகு 2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் | 7th Social Science : History : Term 1 Unit 2 : Emergence of New Kingdoms in North India

   Posted On :  18.04.2022 02:02 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 2 : வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

கற்றலின் நோக்கங்கள் • வடஇந்தியாவின் ராஜபுத்திர அரசுகள் மற்றும் அவற்றைப் போன்ற ஏனைய அரசுகள் குறித்த அறிவினைப் பெறுதல் • இந்தியப் பண்பாட்டிற்கு ராஜபுத்திரர்கள் மற்றும் பாலர்களின் பங்களிப்பினை மதிப்பிடுதல் • அராபியர் மற்றும் துருக்கியரின் தொடக்கக்கால இராணுவப் படையெடுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுதல்

அலகு - II

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்


கற்றலின்  நோக்கங்கள்

வடஇந்தியாவின் ராஜபுத்திர அரசுகள் மற்றும் அவற்றைப் போன்ற ஏனைய அரசுகள் குறித்த அறிவினைப் பெறுதல் 

  இந்தியப் பண்பாட்டிற்கு ராஜபுத்திரர்கள் மற்றும் பாலர்களின் பங்களிப்பினை மதிப்பிடுதல் 

அராபியர் மற்றும் துருக்கியரின் தொடக்கக்கால இராணுவப் படையெடுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுதல்


அறிமுகம்

ராஜபுத்திரர்களின் வீரதீரம், அஞ்சாமை குறித்த கதைகள் ஏராளம் உள்ளன. ராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது சித்தூர் ஆகும். அனைத்து ராஜபுத்திர இனக்குழுவினரும் ஒருங்கிணையும் மையமாகச் சித்தூர் விளங்கிற்று. மாளவம், குஜராத் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் சித்தூர் சிறியதே. இருந்தபோதிலும் ராஜபுத்திரர்கள் இந்த அரசுகளிலும் ஆட்சி செய்தனர். சித்தூரின் ராணா (அரசர்) மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக 'ஜெய ஸ்தம்பா' எனும் வெற்றித்தூண் சித்தூரில் நிறுவப்பட்டது. பிரதிகாரர்கள் மேற்கிந்தியப் பகுதியிலும், பாலர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் வலிமைமிக்க அரசுகளை நிறுவியிருந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டில் ராஜஸ்தான், கன்னோஜ் ஆகிய பகுதிகளின் மேல் இறையாண்மை கொண்ட சக்தியாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் அளவிற்குப் பிரதிகார அரசவம்சம் வளர்ச்சி பெற்றிருந்தது.


பிரதிகார அரசின் வீழ்ச்சி, வங்காளத்தில் பாலர்களின் எழுச்சிக்கும் வடமேற்கு இந்தியாவில் சௌகான்களின் எழுச்சிக்கும் வித்திட்டது.

கி.பி. (பொ.ஆ) 712இல் சிந்துப் பகுதியை அராபியர் கைப்பற்றியதிலிருந்தே இந்தியாவில் இஸ்லாமியர் காலக்கட்ட வரலாறு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கன்னோஜை ஆண்ட அரசர்களின் குறிப்பாக, யசோவர்மனின் (ஏறத்தாழ கி.பி.(பொ.ஆ) 736) எதிர்ப்பின் காரணமாகவும் அவர்களுக்குப் பின்னர் பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வட இந்தியாவின் பெரும்பகுதியையும் கன்னோஜையும் கட்டியாண்ட ராஜபுத்திர அரசர்கள் மற்றும் தலைவர்களின் எதிர்ப்பின் விளைவாலும் இந்தியாவில் இஸ்லாமியரின் காலக்கட்டம் கி.பி.(பொ.ஆ)1200இல் தான் தொடங்கிற்று.


ராஜபுத்திரர்களின் தோற்றம்

ராஜபுத் எனும் சொல் 'ரஜ்புத்ர' எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.


அதன் பொருள் அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல் என்பதாகும். கி.பி.(பொ.ஆ) 647இல் ஹர்சரின் மறைவைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு ராஜபுத்திர இனக்குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக்கொண்டன. ராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்தகாலத்திலிருந்து தொடங்குகின்றனர். அவர்களின் மிக முக்கியமான மூன்று குலங்கள் 'சூரிய வம்சி' எனும் சூரிய குலம், 'சந்திர வம்சி' எனும் சந்திர குலம், அக்னி குலம் (நெருப்பிலிருந்து தோன்றியவர்கள்) என்பனவாகும். சூரிய குல, சந்திர குல வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் பந்தேல்கண்டின் சந்தேலர்கள் ஆவர். ஹரியானா பகுதியில் தோமரர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஆனால் 12ஆம் நூற்றாண்டில் இவர்கள் சௌகான்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்.

ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசைப் புலமையாளர் கி.பி.(பொ.ஆ)1829இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் நான்கு குலங்கள் சிறப்புத்தகுதி பெற்றவையாகும். அவர்கள் பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள் என்றழைக்கப்பட்ட சாளுக்கியர்கள் (தக்காணச் சாளுக்கியரிடமிருந்து வேறுபட்டவர்கள்), பவாரைச் சேர்ந்த பரமாரர்கள் எனப்படுவோராவர். இந்நான்கு குலமரபினரும் அக்னிகுலத் தோன்றல்கள் ஆவர்.


பிரதிகாரர்கள்

நான்கு முக்கிய குலமரபுகளைச் சார்ந்த ராஜபுத்திரர்களில் ஒரு பிரிவினரான பிரதிகாரர் அல்லது கூர்ஜரப் பிரதிகாரர் கூர்ஜராட்டிராவிலிருந்து (ஜோத்பூரில் உள்ளது) ஆட்சி புரிந்தனர். கி.பி. (பொ.ஆ) ஆறாம் நூற்றாண்டில் ஹரிச்சந்திரா என்பவர் கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டினார். பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் முதலாம் நாகபட்டர் என்பவராவார். கி.பி எட்டாம் நூற்றாண்டில் பரூச், ஜோத்பூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த அவர் தனது ஆட்சிப்பரப்பைக் குவாலியர்வரை விரிவுபடுத்தினார். சிந்துவின் மீது அராபியர் மேற்கொண்ட படையெடுப்பை அவர் முறியடித்து அவர்களின் விரிவாக்க நடவடிக்கைகளைத் தடுத்தார். அவருக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற வத்சராஜா ஒட்டுமொத்த வட இந்தியாவின் மேல் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டார். கன்னோஜைக் கைப்பற்ற அவர் மேற்கொண்ட முயற்சி வங்காளப் பகுதியின் பாலவம்ச அரசரான தர்மபாலாவுடன் பகை ஏற்பட வழிவகுத்தது.

மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர். இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.

வத்சராஜாவைத் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டாம் நாகபட்டர், ராமபத்ரா ஆகியோர் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் எதுவும் புரியவில்லை . ராமபத்திராவுக்குப் பின்னர் அவருடைய மகனான மிகிரபோஜா அல்லது போஜா என்பவர் அரியணை ஏறினார். பதவியேற்ற சில ஆண்டுகளுக்குள் பிரதிகாரர்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார். ஒரு வலிமை மிகுந்த அரசராக அவர் தனது நாட்டில் அமைதியைப் பராமரித்தார். அராபியரின் அச்சுறுத்தல்களை உறுதியுடன் சமாளித்தார். போஜாவுக்குப் பின்னர் ஒரு நூற்றாண்டு காலம் பிரதிகாரப் பேரரசு புகழோடும், கீர்த்தியோடும் விளங்கியது.

அரேபியர்களை வெற்றிகரமாக எதிர்த்த பிரதிகாரர்கள் தங்கள் கவனத்தைக் கிழக்கு நோக்கித் திருப்பினர். முதல் ஆயிரமாண்டின் இறுதியில் ராஜஸ்தான் மற்றும் மாளவத்தின் பெரும் பகுதியை அவர்கள் ஆண்டனர். கன்னோஜையும் சிலகாலம் தங்கள் வசம் வைத்திருந்தனர் பதினொன்று. பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் ராஜபுத்திரர்கள் தங்களுக்கிடையிலேயே முடிவற்ற போர்களை மேற்கொண்டனர். இச்சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திப் பல உள்ளூர் சிற்றரசர்கள் சுதந்திர அரசர்கள் ஆயினர்.


பாலர்கள்

தர்மபாலர் (கி.பி.(பொ.ஆ) 770- 810)

பால அரசவம்சத்தை உருவாக்கியவர் கோபாலர். அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பின்னணி அவருக்கில்லை. அவரது திறமையின் காரணமாக மக்கள் அவரை அரசராகத் தேர்வு செய்தனர் கி.பி.(பொ.ஆ) 750 முதல் 770 வரையிலான ஆட்சிக்காலத்தில் அவர் வங்காளத்தில் பாலர்களின் எதிர்கால மேன்மைக்கான அடித்தளத்தை அமைத்தார். அவருடைய மகன் தர்மபாலர், பால அரசை வட இந்திய அரசியலில் ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்கினார். கன்னோஜுக்கு எதிராக வெற்றிகரமான படையெடுப்பை அவர் மேற்கொண்டார். அவர் மிகச் சிறந்த பெளத்த ஆதரவாளராவார். அவரால் உருவாக்கப்பட்ட விக்கிரமசீலா மடாலயம் பௌத்தக் கல்விக்கான மிகச் சிறந்த மையமாயிற்று.


தர்மபாலரைத் தொடர்ந்து அவருடைய மகன் தேவபாலர் ஆட்சிப்பொறுப்பேற்றார். அவர் பாலர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கிழக்கு நோக்கி காமரூபம் (அஸ்ஸாம்) வரை விரிவுபடுத்தினார். அவரும் தலைசிறந்த பௌத்த ஆதரவாளர் ஆவார். அவர் பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடையாக வழங்கினார். அவரும் மகதத்தில் மடாலயங்களையும் பல கோவில்களையும் நிறுவினார். "தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்" என வரலாற்றறிஞர் ஆர்.சி. மஜும்தார் கருத்துக் கூறியுள்ளார்.

தேவபாலருக்குப் பின்னர் ஐந்து அரசர்கள் அப்பகுதியைச் சிறப்பித்துச் சொல்ல இயலாத அளவிற்கு ஆட்சி புரிந்தனர். ஆனால் 988ஆம் ஆண்டு முதலாம் மகிபாலர் அரியணை ஏறியதைத் தொடர்ந்து பாலர் அரசு முன்னெப்போதுமில்லாத பெயரையும் புகழையும் பெற்றது.


முதலாம் மகிபாலர் (988-1038)

முதலாம் மகிபாலர் பால வம்சத்தின் மிகச் சிறந்த, வலிமை மிக்க அரசர் ஆவார். அவர் இரண்டாம் பால வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். பிரதிகாரர்களின் வீழ்ச்சியானது மகிபாலருக்கு வடஇந்திய அரசியல் நிகழ்வுகளில் முதன்மையான பாத்திரத்தை வகிக்கும் வாய்ப்பை வழங்கியது. ஆனால் தென்னிந்திய அரசரான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் காரணமாய் வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த அவரால் இயலாமல் போயிற்று. பாலவம்சத்தின் பண்டைய புகழையும் பெயரையும் மகிபாலர் மீட்டெடுத்தார். வாரணாசி, சாரநாத், நாளந்தா ஆகிய இடங்களில் சமயம் சார்ந்த ஏராளமான கட்டடங்களைக் கட்டுவித்த மகிபாலர் பழைய கட்டடங்களையும் புனரமைத்தார்.

மகிபாலரின் இறப்பைத் தொடர்ந்து பால வம்சம் வீழ்ச்சியுற்று சேனா வம்சத்தின் வருகைக்கு வழிவிட்டது.


சௌகான்கள்

சௌகான்கள் கி.பி.(பொ.ஆ) 956 முதல் 1192 வரை இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளைச் சாகம்பரி நகரில் தலைநகரை நிறுவி ஆட்சி புரிந்தவர்களாவர். இந்த ராஜபுத்திர அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் சிம்மராஜ் என்பவராவார். இவர் ஆஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர் எனவும் அறியப்படுகின்றார்.

சௌகான்கள் பிரதிகாரர்களுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர்களாய் இருந்தவராவர். அராபியரின் படையெடுப்பின்போது பிரதிகாரர்களுடன் தோளோடு தோள் நின்றவராவர். சௌகான் வம்சாவளியின் கடைசி அரசனான பிருதிவிராஜ் சௌகானே அவ்வரச வம்சாவளி அரசர்களுள் தலைசிறந்தவரெனக் கருதப்படுகின்றார். அவர் 1191ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தரெய்ன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார். இருந்தபோதிலும் 1192இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் அவர் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

பிருதிவிராஜ் செளகானின் மறைவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் "பிருதிவிராஜ ராசோ" எனும் பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார். காவியம் கூறும் கதை பின்வருமாறு : கன்னோஜின் அரசனுடைய மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். அவள் தனது கணவனைத் தேர்வு செய்வதற்கெனச் சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கெனவே பிருதிவிராஜனிடம் காதல்வயப்பட்டிருந்த இளவரசி அவரையே மணந்துகொள்ள விரும்பினாள். ஆனால் பிருதிவிராஜ் அவள் தந்தையின் எதிரியாவார். பிருதிவிராஜை அவமானப்படுத்தும் நோக்கத்தில் கன்னோஜின் அரசர் அவருக்கு அழைப்பு அனுப்பவில்லை. மேலும் பிருதிவிராஜ் சௌகானைப் போன்று ஒரு சிலை செய்து தனது அரச சபையின் வாயிலில் வாயிற்காப்போனைப் போல நிறுத்தி வைத்தார். கூடியிருந்தோரெல்லாம் அதிர்ச்சி அடையும் வண்ணம் இளவரசி அங்கிருந்த இளவரசர்களை மறுத்து பிருதிவிராஜின் சிலைக்கு மாலையிட்டுத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாள். - சற்று தொலைவில் மறைந்திருந்த பிருதிவிராஜ் இளவரசியை அழைத்துக்கொண்டு குதிரையில் தப்பினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


கலை மற்றும் கட்டடக்கலைக்கு ராஜபுத்திரர்களின் பங்களிப்பு


கலை


ராஜபுத்திர அரசவைகள் பண்பாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. அங்கு இலக்கியம், இசை,நடனம், ஓவியம், சிற்பம் ஆகியகலைகளும் கவின் கலைகளும் செழிப்புற்றன. பெரும்பாலும் சமயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட பாணியிலான ஓவியக்கலை மரபு ராஜபுத்திர அரசவைகளில் தோற்றம் பெற்றது. இப்பாணியிலான ஓவியங்கள் "ராஜஸ்தானி" என என்றழைக்கப்படுகின்றன. ராஜஸ்தானி பாணியிலான ஓவியங்கள் பிக்கனேர், ஜோத்பூர் (இவ்விரு இடங்களும் ராஜஸ்தானில் உள்ளன), மேவார் (உதய்பூர்), ஜெய்சால்மர் (ராஜஸ்தான்), புரி (ஹரியானா) ஆகிய இடங்களில் காணக்கிடைக்கின்றன.


கட்டடக்கலை


கட்டடங்கள் கட்டுவதில் ராஜபுத்திரர் தலைசிறந்தவராவர். சித்தோர்கார், ரான்தம்பூர், கும்பல்கார் (இவையனைத்தும் ராஜஸ்தானில் உள்ளன),மாண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார் (இவையனைத்தும் மத்தியப்பிரதேசத்தில் உள்ளன) ஆகிய இடங்களிலுள்ள வலிமை மிகுந்த கோட்டைகள் ராஜபுத்திரர்களின் கட்டடங்களுக்குச் சில எடுத்துக்காட்டுகளாகும்.

ராஜபுத்திரர்களின் குடியிருப்புக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் (ஜெய்ப்பூர்) கோட்டை, உதய்பூரில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை ஆகியவைகளாகும். ராஜபுத்திரர்களின் பல நகரங்களும் அரண்மனைகளும் மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள கோட்டைகளிலும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அழகிய ஏரிகளின் அருகேயும் அமைக்கப்பட்டுள்ளன. ஜோத்பூரில் (ராஜஸ்தான்) உள்ள மாளிகை எளிதில் ஏறமுடியாத மலைப்பாறையின் மேல், நகரை நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜபுத்திர அரசர்கள் கட்டியுள்ள கோவில்கள் கலை விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி அவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. கஜுராகோ எனும் இடத்திலுள்ள கோவில்கள், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள தில்வாரா சமணக்கோவில், மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தர்யா கோவில் ஆகியன ராஜபுத்திரர்களின் கோவில் கட்டடக்கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுகளாகும்.




பந்தேல்கண்டிலுள்ள கஜுராகோ வளாகத்தில் மொத்தம் 30 கோவில்கள் அமைந்துள்ளன. கஜுராகோ கோவில்களின் சிகரங்கள் எழில் மிகுந்தவையாகும். கோவிலின் வெளிப்புறமும், உட்புறமும் மிக நேர்த்தியான சிற்பங்களைக் கொண்டுள்ளன. இக்கோவில்கள் சமண தீர்த்தங்கரர்களுக்கும், சிவன், விஷ்ணு ஆகிய இந்துக் கடவுள்களுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன.


ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவிலுள்ள ஓசியான் என்னுமிடத்தில் பதினாறு இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ளன. அபு குன்றின் மேலுள்ள சமணக் கோவிலில் வெண்மைநிறச் சலவைக் கற்களால் கட்டப்பட்ட கூடம் உள்ளது. அதன் மையத்தில் பதினொரு பொதுமைய வட்டங்களைக் கொண்ட குவிமாடம் அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள தூண்களும் விதானமும் அழகிய செதுக்கல் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.




பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு

பாலர்கள் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றியவராவர். பௌத்தக் கோவில்களையும் புகழ்பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா ஆகிய பல்கலைக்கழகங்களையும் அவர்கள் பரந்த மனப்பான்மையுடனும் ஈகைக் குணத்தோடும் ஆதரித்தனர். அவர்களின் சமயப் பரப்பாளர்கள் மூலம் திபெத்தில் பௌத்தம் நிறுவப்பட்டது. பெயரும் புகழும் பெற்ற பௌத்தத் துறவியும், திபெத்திய பெளத்தத்தைச் சீர்திருத்தம் செய்தவருமான அதிசா (981 - 1054) விக்கிரமசீலா மடாலயத்தின் தலைவராக இருந்தார். சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த சைலேந்திர அரசுடன் பாலர்கள் சுமூகமான உறவைப் பேணினர்.

பாலர்களின் ஆதரவால் தனித்தன்மை வாய்ந்த புதிய பாணியைக் கொண்ட கலைப்பள்ளி ஒன்று உருவானது. இது "பாலர்களின் கலை" அல்லது "கிழக்கு இந்தியக் கலை" என்று அழைக்கப்பட்டது. பாலர்களின் இக்கலைப்பாணி இன்றைய பீகார், மேற்குவங்கம், அண்டை நாடான பங்களாதேஷ் ஆகிய பகுதிகளில் தழைத்தோங்கியது. இக்கலைப்பாணி பெரும்பாலும் செப்புச் சிலைகளிலும், பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் எனும் வடிவங்களில் வெளிப்பட்டன. இவை புத்தரையும் ஏனைய கடவுளர்களையும் புகழ்பாடுவதாய் அமைந்துள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த பாலர்களின் செப்புச் சிலைகள் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியப் பண்பாடு பரவியதில் முக்கியப்பங்கு வகித்தன.


ரக்க்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும். ' ரஷா' எனில் பாதுகாப்பு என்றும், 'பந்தன்' என்பது கட்டுதல் அல்லது உறவு என்னும் பொருளாகும். இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழாவாகும். ஒரு பெண் ஒர் ஆடவனின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டிவிட்டால் அப்பெண் அந்த ஆடவனை சகோதரனாகக் கருதுகிறாள் என்று பொருள். அப்படியான ஆடவர்கள் அப்பெண்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். 

1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். அவ்விழாவில் இந்து மற்றும் முஸ்லீம் பெண்கள் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த ஆடவர் கைகளில் ராக்கியைக் கட்டி அவர்களைச் சகோதரர்களாக ஏற்கவைத்தார். இந்து, முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.



இஸ்லாமின் தோற்றம் 

ஒரு சமய நம்பிக்கையாக இஸ்லாம் அரேபியாவிலுள்ள மெக்காவில் தோன்றியது. இதனைத் தோற்றுவித்தவர் இறைதூதர் முகமது நபிகள் நாயகமாவார். இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள் முஸ்லீம்கள் என அழைக்கப்படுகின்றனர். ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு கலீஃபத் என்றழைக்கப்பட்டது. கலீஃபா என்னும் சொல்லுக்கு, இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி என்று பொருளாகும். "உமையத்துகளும்" "அப்பாசித்துகளும்" தொடக்கக்கால கலீஃபத்துகளாகும். உமையதுக்களும், அப்பாசித்துக்களும் தனித்தனியே தங்கள் படையெடுப்புகளின் மூலமும் இஸ்லாமின் கோட்பாடுகளைப் பரப்பியதன் வழியாகவும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர்.

எட்டாம் நூற்றாண்டு இந்தியாவில் சிந்து பகுதியைக் கைப்பற்றிய முஸ்லீம் படைவீரர்களாகவே அராபியர்கள் முதன்முதலாக அறிமுகமாயினர். கங்கைச் சமவெளி மற்றும் தக்காண அரசர்களின் எதிர்ப்பின் விளைவாய் அராபியர்களால் சிந்துவைத் தாண்டி தங்கள் ஆட்சியை விரிவுபடுத்த இயலவில்லை . ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்பாசித் கலீஃபாக்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஏனைய பகுதிகளிலும் இருந்த அராபிய ராணுவத் தளபதிகள் கலீஃபாக்களின் அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சுதந்திரமான சுல்தான்களாக ஆட்சிபுரியத் தொடங்கினர்.

கஜினியைத் தலைநகராகக் கொண்ட துருக்கிய ஆளுநர் அல்ப் - டஜின் அவர்களில் ஒருவர். அவருக்குப் பின்னர் ஆட்சிப்பொறுப்பேற்ற அவருடைய மருமகன் சபக்டிஜின் வடமேற்குத் திசை வழியாக இந்தியாவைக் கைப்பற்ற விரும்பினார். ஆனால் அவரது விருப்பத்தை அவரது மகன் மாமூது தான் நிறைவேற்றினார்.


கஜினி மாமூது (கி.பி.(பொ.ஆ) 997-1030) 

கஜினி மாமூது இந்தியாவின் மீது சூறையாடலை நோக்கமாகக் கொண்ட திடீர் படையெடுப்புகளைப் பதினேழு முறை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் வட இந்தியா பல சிற்றரசுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுள் ஒன்றான ஷாகி அரசு பஞ்சாப் முதல் காபூல் வரை பரவியிருந்தது. கன்னோஜ் , குஜராத், காஷ்மீர், நேபாளம், மாளவம், பந்தேல்கண்டு ஆகியன ஏனைய முக்கிய அரசுகளாகும். ஷாகி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளில் அதன் அரசர் ஜெயபாலர் 1001ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார். இத்தோல்வியைப் பெருத்த அவமானமாகக் கருதிய ஜெயபாலர் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார். அவருக்குப்பின் வந்த ஆனந்தபாலர் மாமூதுக்கு எதிராகப் போரிட்டார். 1008ஆம் ஆண்டு பெஷாவருக்கு அருகேயுள்ள வைகிந்த் எனுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். வைகிந்தில் பெற்ற வெற்றியின் விளைவாக கஜினி மாமூது பஞ்சாப் வரை தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் மீது அவர் மேற்கொண்ட படையெடுப்புகள் வட இந்தியாவின் செல்வச் செழிப்புமிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. 1011இல் பஞ்சாபிலுள்ள நாகர்கோட், டெல்லிக்கு அருகேயுள்ள தானேஸ்வர் ஆகிய நகரங்கள் அவரால் சூறையாடப்பட்டன.

சிந்துவை அரேபியர் கைப்பற்றியதும் அதன் தாக்கமும் 

கி.பி.(பொ.ஆ) 712ஆம் ஆண்டு உமையது அரசின் படைத்தளபதியான முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தார். சிந்துவின் அரசர் தாகீர், முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். சிந்துவின் தலைநகர் அரோர் கைப்பற்றப்பட்டது. காசிம் முல்தானையும் கைப்பற்றினார். சிந்துவில் நிர்வாக ஏற்பாடுகளைச் செய்தார். சிந்துப்பகுதிவாழ் மக்களுக்குப் "பாதுகாக்கப்பட்ட மக்கள்" எனும் தகுதி வழங்கப்பட்டது. மக்களின் வாழ்க்கையிலும் அவர்களின் மதங்களிலும் எவ்விதத் தலையீடும் செய்யப்படவில்லை. ஆனால் காசிம் வெகுவிரைவில் கலீஃபாவால் திரும்ப அழைக்கப்பட்டார். 

அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர். வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாகச் சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர். 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அதுவரையிலும் மேலைநாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. ஐரோப்பியர்கள் கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர். பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர். 

மேலைநாட்டவரும் அரேபியர்களும் சதுரங்க விளையாட்டை இந்தியர்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.




1018ஆம் ஆண்டில் மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்தார். கன்னோஜையும் அவர் தாக்கினார். கன்னோஜின் அரசர் ராஜ்யபாலர் கன்னோஜைக் கைவிட்டுவிட்டு வெளியேறி பின்னர் இயற்கை எய்தினார். கஜினி மாமூது பெரும் செல்வத்துடன் ஊர் திரும்பினார். அவருடைய அடுத்தப் படையெடுப்பு குஜராத்தின் மீதானதாகும். கி.பி. 1024இல் கஜினி மாமூது முல்தானிலிருந்து புறப்பட்டு ராஜபுதனத்தின் குறுக்கே படையெடுத்து வந்து சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரைத் தோற்கடித்து அன்கில்வாட் நகரைச் சூறையாடினார். கஜினி மாமூது மிகவும் புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலைக் கொள்ளையடித்து அங்கிருந்த கடவுள் சிலையை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் சிந்து பாலைவனத்தின் வழியாக அவர் நாடு திரும்பினார். இப்படையெடுப்பே இந்தியாவின் மீதான அவரின் இறுதிப் படையெடுப்பாகும். கி.பி. 1030இல் கஜினி மாமூது மரணமடைந்தார். கஜானாவியப் பேரரசு தோராயமாக பாரசீகம், ஆக்ஸஸுக்கு அப்பால் உள்ள பகுதிகள், ஆப்கானிஸ்தான், பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.



முகமது கோரி (1149-1206) 

கோர் பகுதியைச் சேர்ந்த முகமது அல்லது முகமது கோரி கஜினிக்குக் கப்பம் கட்டிய குறுநிலத் தலைவராக இருந்தவர். கஜினி மாமூதின் இறப்பிற்குப் பின்னர் சுதந்திரமானவரானார். கஜானாவியப் பேரரசின் வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்ட முகமது கோரி கஜினியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தார். கஜினியில் தனது நிலையை வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்கிக்கொண்ட பின்னர் இவர் தனது கவனத்தை இந்தியா மீது திருப்பினார். கஜினி மாமூதைப் போலன்றி இவர் இந்தியாவைக் கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்ய விரும்பினார். கி.பி. (பொ.ஆ) 1175 இல் முல்தானைக் கைப்பற்றிய அவர் அடுத்தடுத்த படையெடுப்புகளின் மூலம் ஒட்டுமொத்த முல்தானையும் கைப்பற்றினார். 1186இல் பஞ்சாப்பைத் தாக்கி அதனைக் கைப்பற்றினார். 


தரெய்ன் போர் (1191 - 1192) 

தாங்கள் அகப்பட்டுக்கொண்ட ஆபத்தான சூழலைப் புரிந்துகொண்ட வடஇந்திய இந்து அரசர்கள் பிருதிவிராஜ் சௌகானின் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கினர். நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவராகப் பிருதிவிராஜ் சௌகான் 1191இல் டெல்லிக்கு அருகே தரெய்ன் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார். இப்போர் முதலாம் தரெய்ன் போர் என்று அழைக்கப்படுகிறது. இத்தோல்விக்குப் பழி வாங்கும் பொருட்டு முகமது கோரி தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு பெரும்படையைத் திரட்டினார். தன்னுடைய பெரும்படையோடு பெஷாவர், முல்தான் வழியாக லாகூரை வந்தடைந்தார். தன்னுடைய மேலாதிக்கத்தை அங்கீகரிக்குமாறும் ஒரு முஸ்லீமாக மாறும்படியும் அவர் பிருதிவிராஜ் சௌகானுக்குச் செய்தியனுப்பினார். அதனை மறுத்த பிருதிவிராஜ் போருக்குத் தயாரானார். பல இந்து அரசர்களும் குறுநிலத் தலைவர்களும் அவருடன் அணிவகுத்தனர் 1192இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்த முகமது கோரி அவரைக் கைது செய்து கொன்றார்.

இரண்டாம் தரெய்ன் போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய போராகும். அவர்களின் அரசியல் கௌரவம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. சௌகான் அரசு அப்போது படையெடுத்து வந்தவரின் காலடியில் கிடந்தது. இவ்வாறு இந்தியாவில் ஆஜ்மீரில் முதல் இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்டது. இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியது. இரண்டாம் தரெய்ன் போரில் வெற்றி பெற்ற பின்னர் தனது நாட்டின் கிழக்கெல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும் மங்கோலியரையும் எதிர்கொள்வதற்காக முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார். கி.பி. (பொ.ஆ) 1206இல் முகமது கோரி இயற்கை எய்தவே இந்தியாவிலிருந்த அவருடைய திறமை வாய்ந்த தளபதி குத்புதீன் ஐபக் முகமது கோரிக்குச் சொந்தமாயிருந்த இந்தியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்த பின்னர் தன்னை "டெல்லியின் முதல் சுல்தான்" எனப் பிரகடனப்படுத்திக்கொண்டார். 


சுருக்கம் 

  ஹர்சருக்குப் பின்னர் புதிய பிராந்திய அரசுகள் உதயமாயின. அவற்றுள் பிரதிகாரர்கள், பாலர்கள், சௌகான்கள், பரமாரர்கள் ஆகியோர் முக்கிய அரச வம்சத்தினர் ஆவர். 

பிரதிகாரர்களும், பாலர்களும் வடக்குச் சமவெளிகளைக் கைப்பற்றுவதில் தங்களிடையே தொடர்ந்து போரிட்டுக்கொண்டனர். குறிப்பாகக் கன்னோஜைக் கைப்பற்றுவதில் அவர்கள் தனிக்கவனம் செலுத்தினர். 

கன்னோஜைக் கைப்பற்ற நடைபெற்ற தொடர் மோதல்கள் குறுநிலத் தலைவர்களையும் சிற்றரசர்களையும் தங்களைச் சுதந்திர அரசர்களாக அறிவித்துக்கொள்ளத் தூண்டின.

ராஜபுத்திரர்களும் பாலர்களும் படிப்படியாக வளர்ந்துவந்த இந்தியப் பண்பாட்டிற்கு மெச்சத்தகுந்த பங்களிப்பைச் செய்தனர். 

அரேபியரின் விரிவாக்க முயற்சிகள் பல அரசர்களால் எதிர்க்கப்பட்டன. 

கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட கஜினி மாமூதின் திடீர் இராணுவத் தாக்குதல்கள் பதினோராம் நூற்றாண்டிலும் அவற்றைத் தொடர்ந்து முகமது கோரி மேற்கொண்ட படையெடுப்புகளும் இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சி நிறுவப்படுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.


சொற்களஞ்சியம்

1. வாரிசு, வழித்தோன்றல் – scion - a descendant of the notable family

2. முன்னெப்போதும் இல்லாத - unprecedented - exceptional

3. இரு சாராருக்கும் நாசத்தை விளைவிக்கின்ற – internecine - mutually destructive

4. சித்தரிக்கும் கலை – portraiture - the art of painting

5. நேர்த்தியான – elegant - grand

6. மடாலயம் – monastery - a place where monks live

7. கூட்டமைப்பு – confederacy - a league or alliance of states


மூலாதார நூல்கள் 

1. Romila Thapar, Early India, New Delhi: Penguin, 2002. 

2. Burton Stein, A History of India, New Delhi: Oxford University Press, 2004 (Reprint).

3. S.K. Singh, History of Medieval India, New Delhi: Axis Books, 2013. 

4. K.V Rajendra, Ancient and Medieval Indian History, New Delhi: Pacific Publication, 2010.



Tags : Term 1 Unit 2 | History | 7th Social Science முதல் பருவம் அலகு 2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 1 Unit 2 : Emergence of New Kingdoms in North India : Emergence of New Kingdoms in North India Term 1 Unit 2 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 2 : வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் : வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் - முதல் பருவம் அலகு 2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 2 : வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்