தகவல் செயலாக்கம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு - செயல்வழிப் படம் மற்றும் செயல்வழிப் படத்தின் வகைகள் | 7th Maths : Term 3 Unit 6 : Information Processing
செயல்வழிப் படம்
சிக்கல்களுக்குத் தீர்வு காண முயலாத நாள்களென நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு நாளையாவது சொல்ல முடியுமா? இல்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். நமது அன்றாடச் செயல்பாட்டில் அதாவது, வலைப்பக்கங்களில் உலாவுதல், அங்காடிகளில் வாங்கும் பொருள்களுக்குப் பணம் செலுத்துதல், பள்ளிக் கட்டணம் செலுத்துதல் அல்லது தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திலிருந்து பணம் எடுத்தல் என அனைத்து நிகழ்வுகளும் ஒருவித தீர்வைக் காண விழையும் செயல்தான். ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடைய ஒரு மனிதன் அல்லது இயந்திரம் செய்யும் எந்தச் செயலும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய செயல்பாட்டின் கீழ் தான் வருகிறது. ஒருவர் எந்தவொரு சிக்கல்களுக்கும் தீர்வு காண முயலும் போது வரிசையாக எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிய முயல்கிறார்.
பெரும்பாலும், ஒரு சிக்கலைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி திட்டப் படங்களை வரைவதுதான். குறுகிய சொற்கள் அல்லது சொற்றொடர்களின் வரிசையை விட படங்கள் பெரும்பாலும் நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்களை நமக்கு வழங்குகின்றன. இருப்பினும், எப்போதுமே படங்களுடன் இணைந்த உரை சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவும் சக்திவாய்ந்த கருவியை நமக்கு வழங்குகிறது.
செயல்வழிப் படம் என்பது ஒரு பணியினை அல்லது கணக்கீட்டைச் செய்வதற்கான வழிமுறைகளைக் குறிப்பிட்ட சில வடிவங்களைப் பயன்படுத்தி விளக்கும் வழிமுறையாகும். பெரும்பாலும், ஓர் ஆவணம் அல்லது ஒரு ஆய்வினைத் தயாரிப்பதற்காகவோ அல்லது சிக்கலான செயல்முறையைத் தெளிவாகத் திட்டமிடுவதற்காகவோ அல்லது மேம்படுத்துவதற்காகவோ, புரிந்துகொள்வது எளிதானது என்பதால் பல துறைகளிலும் ஒரு வரைபடமானது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பின்வரும் அட்டவணையில், செயல்வழிப் படத்திலுள்ள ஒவ்வொரு வடிவத்திற்குமான குறிப்பிட்ட பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இவற்றைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள, நடைமுறையில் செயல்வழிப் படத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.
1. செயல்வழிப் படத்தின் வகைகள்
தொடர்- செயல்வழிப் படம்
எந்த வரிசையில் சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமென்ற செயல்பாடுகளைத் தொடர்- செயல்வழிப் படம் விவரிக்கிறது
சூழ்நிலை 1
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள படங்களின் உதவியுடன், தொடர்புடைய ஊடகப் (digital content) பாடக்கருத்துகளைக் காண உங்கள் பாடப் புத்தகத்திலிருந்து விரைவுத் தகவல் குறியீட்டை (QR code) ஊடுருவிப் (scan) பார்க்கவும்.
முதலில் பாடப் புத்தகத்திலிருந்து விரைவுத் தகவல் குறியீட்டை (QR code) ஊடுருவிப் (scan) பார்ப்பதற்கான தொடர் வழிமுறைகளை எழுதலாம்.
முதல் விரைவுத் தகவல் குறியீட்டை ஊடுருவதற்கான படிப்படியான செயல்முறையினை எழுதுவோம்.
தொடர் செயல்முறை
1. தேவைப்படும் QR குறியீடு அமைந்துள்ள சரியான பாடநூல் பக்கத்தை எடுத்துக் கொள்ளவும்.
2. உங்கள் அலைபேசி (mobile) அல்லது கையடக்க கணிணியில் (tab) QR குறியீட்டை ஊடுருவச்செய்து செயலியைத் (scanner) திறக்கவும்.
3. ஊடகப் (digital) பாடக் கருத்துகளைக் காணத் தொடர்புடைய விரைவுத் தகவல் குறியீட்டை (QR code) ஊடுருவவும் (scan).
4. திரையில் தோன்றும் ஊடகப் (digital content) பாடக் கருத்துகளைப் பார்க்கவும்.
இப்போது அருகில் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான செயல்வழிப் படத்தை எழுதுவோம்.
எடுத்துக்காட்டு 6.1
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையைப் பயன்படுத்தி தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் (ATM) பணம் முதலீடு செய்வதற்குப் பொருத்தமான செயல்வழிப் படத்தை உருவாக்கவும்.
உள்ளீடு
1. கடன் அட்டையைத் தேய்க்கவும்
செயல்முறைகள்
2. வங்கியைத் தேர்வு செய்யவும்
3. மொழியினை தேர்வு செய்யவும்
4. ATM இரகசிய எண்ணை உள்ளீடு செய்யவும்
5. பண முதலீட்டைத் தேர்வு செய்யவும்
6. பண முதலீட்டு வகையைத் தேர்வு செய்யவும்
7. வங்கி கணக்கு வகையினை தேர்வு செய்யவும் சேமிப்பு/ நடப்பு
8. பணம் செலுத்தியதை உறுதி செய்யவும்
9. வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்துவிட்டதற்கான தகவல் திரையில் தோன்றும்
வெளியீடு
10. வங்கிப் பரிவர்த்தனை முடிவடைந்தது, ரசீதைப் பெற்றுக் கொள்ளவும் என்ற தகவல் திரையில் தோன்றியவுடன் வங்கிக் கணக்கில் பணம் போட்டதற்கான ரசீதினை எடுத்துக்கொள்ளலாம்.
நிபந்தனை செயல்வழிப் படம்
சூழ்நிலை 2
கொடுக்கப்பட்ட இரு இயல் எண்களின் கூடுதலைக்காணும் செயல்வழிப் படம் (Flow Chart) வரைக. (இதை வரைய முதலில் இரண்டு எண்களின் மதிப்புகளும் இரண்டு பெயர்களில் சேமிக்கப்பட்டு, பின்னர் அவற்றின் கூட்டுத்தொகை கண்டுபிடிக்கப்பட்டு அச்சிடப்பட வேண்டும். இதற்கான செயல்வழிப் படம் அருகிலுள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.)
மேலே உள்ள பாய்வுப்படத்தில், ஒரு சிறப்புப் பொருள் உள்ளது. C = A + B. இங்கே, C இன் மதிப்பு A மற்றும் B இன் கூட்டுத் தொகையைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் A = 325 மற்றும் B = 486 என உள்ளீடு செய்தால் C இன் மதிப்பு 811 ஆக அச்சிடப்படும். பின்வரும் எடுத்துக்காட்டுகளின் மூலம் மேலும் அறிந்துகொள்ளலாம்.
எடுத்துக்காட்டு 6.2
கொடுக்கப்படும் எண் நேர்மறையான முழு எண் ((positive integer) அல்லது எதிர்மறை முழு எண் (negative integer) அல்லது பூச்சியம் (zero) என்பதைக் கண்டறிய செயல்வழிப் படத்தை உருவாக்கி அதன் தொடர் செயல்முறைகளை எழுதவும்.
இங்கு, கொடுக்கப்படும் முழு எண் x ஒரு நேர்மறையான முழு எண் ((positive integer) அல்லது எதிர்மறை முழு எண் (negative integer) அல்லது பூச்சியம் (zero) என்பதைக் கண்டுபிடிக்கும்படி கேட்கிறோம். அதற்கு, முதலில் நாம் x இன் மதிப்பை ஒதுக்கி சரிபார்க்க வேண்டும். x ஆனது 0 ஐ விட அதிகமாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து 'ஆம்' என்றால், "x என்பது ஒரு நேர்மறையான எண்" என அச்சிடப்படும். 'இல்லை' என்றால் x இன் மதிப்பு 0 ஐ விடக் குறைவாக இருக்கிறதா என்று மீண்டும் சோதிப்போம். 'ஆம்' என்றால், "x என்பது ஒரு எதிர்மறை எண்" என அச்சிடப்படும். 'இல்லை' என்றால், "x என்பது பூச்சியத்தியற்கு சமம்" என அச்சிடப்படும்.
படிப்படியான செயல்முறை
● X இன் மதிப்பை உள்ளீடு செய்யவும்
● x>0 ஐ சரிபார்க்கவும்
● 'ஆம்' என்றால்
● “x என்பது ஒரு நேர்மறையான எண்" என அச்சிடவும்
● 'இல்லை' என்றால் மீண்டும் x < 0 ஐச் சரிபார்க்கவும்
● 'ஆம்' என்றால் "x என்பது ஒரு எதிர்மறை எண்" என அச்சிடவும்
● ‘இல்லை’ என்றால் "x பூச்சியத்திற்குச் சமம்" என அச்சிடவும்
எடுத்துக்காட்டு 6.3
கொடுக்கப்பட்ட 3 இயல் எண்களில் மிகப் பெரிய எண்ணைக் கண்டறியும் படிப்படியானச் செயல்முறைகளை எழுதி செயல்வழிப் படத்தை உருவாக்குங்கள்.
தீர்வு
இந்தக் வினாவில், கொடுக்கப்பட்ட 3 இயல் எண்களில் மிகப் பெரிய எண்ணைக் கண்டுபிடிக்கும்படி கேட்கப்படுகிறோம். அதற்காக, முதலில் நாம் a, b மற்றும் c இன் மதிப்புகளை ஒதுக்க வேண்டும், பின்னர் a ஐ விட b இன் மதிப்பு பெரியதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்
'ஆம்' என்றால், a இன் மதிப்பு c ஐ விட அதிகமாக இருக்கிறதா என்று மீண்டும் சோதிப்போம். 'ஆம்' என்றால், கொடுக்கப்படும் a இன் மதிப்பு அச்சிடப்படும். 'இல்லை ' என்றால், b இன் மதிப்பு c ஐ விட அதிகமாக இருக்கிறதா என்று மீண்டும் சோதிப்போம். 'ஆம்' என்றால், கொடுக்கப்படும் b இன் மதிப்பு அச்சிடப்படும். 'இல்லை' என்றால், கொடுக்கப்படும் c இன் மதிப்பு அச்சிடப்படும்.
படிப்படியான செயல்முறை
● a, b & c இன் மதிப்புகளை உள்ளீடவும்.
● a>b என்பதைச் சரிபார்க்கவும்.
● 'ஆம்' என்றால், மீண்டும் a>c என்பதைச் சரிபார்க்கவும்
● ‘ஆம்' என்றால், a இன் மதிப்பை அச்சிடுக
● 'இல்லை' என்றால், மீண்டும் b>c என்பதைச் சரிபார்க்கவும்
● 'ஆம்' என்றால், b இன் மதிப்பை அச்சிடுக
● 'இல்லை' என்றால், c இன் மதிப்பை அச்சிடுக
சூழ்நிலை 3
நீங்கள் இணையச் செயல்பாடுகளில் அதிகம் பழக்கமானவரா? நீங்கள் இணையத்தைப் (internet) பயன்படுத்தி எவ்வாறு ஒரு தகவலைத் தேட வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்பினால் தேடுபொறி உலவியினை (search engine) தேர்ந்தெடுத்து முடிந்தவரை துல்லியத்துடன் முக்கியமான வார்த்தைகளைத் தேடல் உலவியில் (search engine) தட்டச்சு செய்க, பின்னர் திரையில் தென்படும் இணையதளங்களிலிருந்து, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய தகவலைத் தேடவும் பின்வரும் வழிமுறைகளைப் செயல்வழிப் படத்திலிருந்து இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
படிப்படியான செயல்முறை
● உங்கள் வலை உலாவியைத் (web browser) திறக்கவும்
● தேவையான இணைய முகவரி (URL) உங்களுக்குத் தெரிந்தால் முகவரிப் பட்டியில் (address bar) URL ஐ உள்ளிடவும் அல்லது தேடல் பட்டியில் (search bar) முக்கியக் குறிப்பு வார்த்தைகளை உள்ளிடவும்
● மேலும் தகவலுக்கு உலாவியில் காணப்படும் இணைப்பைக் கிளிக் செய்க
● உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்தால்,
● உங்கள் தகவல்களைப் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளவும் (உரை அல்லது படம் அல்லது ஆடியோ அல்லது வீடியோ அல்லது வலை இணைப்புகள்)
● இல்லையெனில் தேடலைத் தொடரவும்.