இரண்டாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் மற்றும் வெப்பநிலை | 7th Science : Term 2 Unit 1 : Heat and Temperature
அலகு 1
வெப்பம் மற்றும் வெப்பநிலை
கற்றல் நோக்கங்கள்
* வெப்பநிலைமானி வேலை செய்யும் தத்துவத்தினை புரிந்துகொள்ளுதல்
* வெப்பநிலைமானியை பயன்படுத்தி வெப்பநிலையினை அளவிடுதல்
* வெப்பநிலைமானி திரவங்கள் பற்றி அறிந்துக் கொள்ளுதல்
* மருத்துவ மற்றும் ஆய்வக வெப்பநிலைமானிகளை வேறுபடுத்துதல்
* வெப்பநிலையின் பல்வேறு அலகுகளை அறிதல்
* வெப்பநிலையின் மதிப்பினை ஒரு வகை அளவீட்டிலிருந்து மற்றொரு அளவீட்டிற்கு மாற்றுதல்
அறிமுகம்
வெளிப்புறம் குளிர்ச்சியாக உள்ளபோது நமது உடல் குளிரால் நடுங்குகிறது. இதே போல் வெளிப்புறம் வெப்பமாக உள்ளபோது நமக்கு வியர்க்கிறது. இக்குளிர்ச்சியினையும் வெப்பத்தினையும் நீங்கள் எவ்வாறு துல்லியமாக அளவீடுவீர்கள்?
நமது அன்றாட வாழ்வின் பல நிகழ்வுகளில் வெப்பநிலையானது முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக நமது உடல் இயக்க செயல்பாடுகள், காலநிலை மற்றும் உணவு சமைத்தல் போன்ற பல நிகழ்வுகள் வெப்பநிலையினை பொருத்து மாறுபடுகின்றன. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.
ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் மதிப்பே வெப்பநிலை ஆகும்.
வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்பதோடு தொடர்புடையதாகும்.