வளிமண்டலம் - புவியியல் - ஈரப்பதம், நீர் சுருங்குதல் மற்றும் மேகங்கள் | 11th Geography : Chapter 6 : Atmosphere
ஈரப்பதம், நீர் சுருங்குதல் மற்றும் மேகங்கள்
ஈரப்பதம் என்பது வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு ஆகும். காற்றின் வெப்பநிலை காற்றின் நீராவிக் கொள்ளளவைக் கட்டுப்படுத்துகிறது. காற்றானது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எடுத்துக்கொள்ளும் அதிக பட்ச நீராவியின் அளவை ஈரப்பதக் கொள்ளளவு என அழைக்கிறோம். வெப்பநிலை உயரும் போது காற்றின் பருமன் அதிகரிப்பதால் காற்று ஈரப்பதத்தை எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகரிக்கிறது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதக் கொள்ளளவும் அதிகரிக்கிறது. ஈரப்பதக் கொள்ளளவு ஈரப்பதத்தின் அளவு அல்லது காற்றின் பருமன் என அளவிடப்படுகிறது.
காற்றின் ஈரப்பதமானது கீழ்க்கண்ட வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது.
1. தனிநிலை ஈரப்பதம் (Absolute Humidity)
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு கன அளவு காற்றில் உள்ள நீராவியின் மொத்த அளவை தனிநிலை ஈரப்பதம் என்கிறாம். இது மேற்பரப்பில் உள்ள காற்று நகர்வை பொறுத்து பெரிதளவு வேறுபடுகிறது. இது காற்றில் உள்ள 'ஈரப்பதத்தின் அளவு' காற்றின் எடையாக அளவிடப்படுகிறது.
2. சார்பு ஈரப்பதம் (Relative Humidity)
சார்பு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதத்தின் கொள்ளளவு விகிதம் சதவீதத்தில் குறிக்கப்படுகிறது. காற்று பூரித நிலை அடைவதை காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவு கட்டுப்படுத்துகிறது. வெப்பநிலை உயரும் போது சார்பு ஈரப்பதத்தின் அளவு குறையும். ஆனால் தனிநிலை ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் போது சார்பு ஈரப்பதமும் அதிகரிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
ஈரப்பதமானி (Hygrometer) ஒரு பகுதியில் உள்ள சார்பு ஈரப்பதத்தை
அளக்க உதவுகிறது.
நீர் சுருங்குதல் செயல்முறை
(Process of condensation)
நீராவி (வாயுநிலை) நீராக (திரவ நிலை) மாற்றப்படும் நிகழ்வை திரவமாதல் என்கிறோம். பின்வரும் செயல்முறைகளால் வளி மண்டலத்தில் நீர் சுருங்குதல் நிகழ்வு நடக்கிறது.
காற்று 100 சதவீதம் சார்பு ஈரப்பதத்தை அடைந்தால் அக்காற்று முற்றிலும் ஈரப்பதத்துடன் நிறைந்திருக்கும். இங்கு சார்பு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதத்தின் கொள்ளளவு ஆகிய இரண்டும் ஒரே அளவில் இருக்கும். காற்றின் வெப்பநிலை குறைவதாலோ அல்லது ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பதாலோ காற்று பூரித நிலையை அடைகிறது. இங்கு வெப்பநிலை மேலும் குறைவதால் ஈரப்பதம் அதிகரித்து காற்று பூரிதமடைவதைப் பனிப்புள்ளி (Dew point) என அழைக்கிறோம். இந்தப் பனிப்புள்ளி நிலையில் காற்றின் வெப்பநிலை மேலும் குறையும் போது அல்லது ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒப்பு ஈரப்பதம் 100 சதவீதம் என்ற அளவைக் கடக்கிறது. இந்த நிலையைக் காற்று 'அதீத பூரிதமடைதல்' (Super Saturation) என்று அழைக்கிறோம். அங்கு காற்றானது அதிகப்படியான ஈரப்பதத்தை வெளியேற்றுகிறது. அப்போது சிறிய நீர் துளிகள் உருவாகி வளிமண்டலத்தில் உள்ள மேகங்களாக மிதக்கிறது. இதே செயல்முறை புவியின் மேற்பரப்பில் தரைக்கு அருகில் ஏற்படுமானால் அதனை மூடுபனி என்று அழைக்கிறோம். இந்த மூடுபனியை தரை மேகம் என்றும் கூறுகின்றனர்.
மேகங்கள் மற்றும் அதன் வகைகள்
காற்றில் உள்ள நுண்ணிய நீர் துளிகள் சுருங்குதல் முறையால் காற்றில் மிதக்கக் கூடிய நிகழ்வை மேகங்கள் என்கிறோம்.
மேகங்கள் உருவாகுதல், உயரம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் (படம் 6.21).
அ. உயரமான மேகங்கள் (High Clouds)
பெரும்பாலும் தரைப்பகுதியிலிருந்து 6 கி.மீ உயரத்தில் காணப்படும் இறகு போன்ற கீற்று மேகங்களை உயரமான மேகங்கள் என்கிறோம்.
மாணவர் செயல்பாடு
ஒரு கண்ணாடிக் குவளையில் பனிக்கட்டியை வைக்கும்போது அதன் வெளிப்புறத்தில் நீர் திவலைகள் தோன்றுகின்றன. காரணம் என்ன?
வளிமண்டலத்தில் ஈரப்பதம் கீழ்க்கண்ட முறைகளைப் பொருத்து அமைகிறது.
1. ஆவியாதல் (Evaporation)
நீர் திரவநிலையிலிருந்து வாயுநிலையை அடைதல்.
2. நீராவியாகுதல் (Transpiration)
தாவரங்களிலிருந்து நீர் ஆவியாதல்
3. நீராவிப்போக்கு (Evapotranspiration)
நீர் நிலைகளிலிருந்தும் தாவரங்களிலிருந்தும் நீர் ஆவியாதல்.
1) கீற்று மேகம் (Cirrus Cloud)
இது பார்ப்பதற்கு மிருதுவான பஞ்சு இழை போன்று நீல வானத்தில் காணப்படுகிறது. இது தெளிவான வானிலையையும் ஒளிமிக்க அந்தி வானத்தையும் காட்டுகிறது.
2) கீற்றுத் திரள் மேகம் (Cirro Cumulus Cloud)
இது பார்ப்பதற்கு வெண்மையான உருண்டை வடிவம் கொண்ட கானாங்கெளுத்தி மீன் கூட்டம் போன்று காணப்படுகிறது.
3) கீற்றுப்படை மேகம் (CirroStratusCloud)
இது மெல்லிய வெள்ளைத் தாள் போன்றது. வானம் பால் போன்று காட்சியளிக்கிறது. இந்த மேகங்களின் வழியே சூரியனும் சந்திரனும் ஒளிர்வதால் ஒரு ஒளிவட்டத்தை (Halo) உருவாக்குகிறது.
சமமேகக் கோடுகள் - ஒரே அளவு மேகங்கள் உள்ள பகுதிகளை இணைக்கும் கற்பனைக் கோட்டிற்குசமமேகக் கோடுகள் (Isonephs) என்று பெயர்.
ஆ. இடைப்பட்ட மேகங்கள் (Middle Clouds)
தரைப்பகுதியில் இருந்து 2 கி.மீ முதல் 6கி.மீ உயரம் வரை காணப்படும் மேகங்கள் இடைப்பட்ட மேகங்கள் எனப்படும்.
1) உயர்திரள் மேகம் (Altocumulus cloud)
இவை நீலவானத்தில் அலைகள் போன்று அடுக்கடுக்குகளாகக் கம்பளி பஞ்சு போன்றும் சுருள் சுருளாகவும் தோற்றமளிக்கும். இது தெளிவான வானிலையைக் குறிக்கிறது.
2) உயர்படை மேகம் (Altostratus cloud)
இவை அடர்த்தியான மற்றும் நீர் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.
இ) தாழ்மேகம் (Low Clouds)
தரைப் பகுதியிலிருந்து 2 கி.மீ உயரம் வரை காணப்படும் மேகங்கள் தாழ் மேகங்கள் என்கிறோம்.
1) படைதிரள் மேகம் (Stratocumulus cloud)
இது அலை அலையாக கரடுமுரடாகக் காணப்படும்.
2) படை மேகம் (stratuscloud)
இது மிகவும் தாழ்வான மேகம் ஆகும். சீரான சாம்பல் நிறத்துடன் அடர்த்தியாகவும் உயர்நில மூடுபனி போன்றும் தோற்றமளிக்கிறது. இது மந்தமான வானிலை மற்றும் லேசான தூறலைத் தருகிறது. இது பார்வை நிலையைக் குறைப்பதால் வான்வெளி போக்குவரத்திற்கு ஒரு தடையாக இருக்கிறது.
3) கார்படை மேகம் (Nimbostratus cloud)
இது மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையைக் கொடுப்பதால் மழை மேகம் என அழைக்கப்படுகிறது. இம்மேகம் இருண்ட, மந்தமான, தெளிவான அடுக்குகளைக் கொண்டுள்ளது.
அடர்
மூடுபனி, மூடுபனி, பனிப்புகை (Fog, Mist and Smog)
• புவியின் மேற்பரப்பின் மீது அல்லது அருகில் காற்றிலிருக்கும் நீர் சுருங்குதலால் செறிவூட்டப்பட்ட மிக நுண்ணிய நீர்த் துளிகளை அடர்மூடு பனி என்கிறோம். அடர் மூடுபனியில் பார்வை நிலை 1 கி.மீக்கு குறைவாக இருக்கும். அடர்மூடுபனி அமைதியான அல்லது குறைவான காற்று இருக்கும் நிலையில் ஏற்படும். கடல் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் அடர் மூடுபனி பொதுவாக கடலுக்கு அருகில் காணப்படும். குளிர்கால இரவு நேரங்களில் கண்டங்களின் உட்பகுதியில் வெப்பநிலை மிகக் குறைவாக காணப்படுவதால் இங்கு அடர் மூடுபனி (Fog) உருவாகிறது.
மாணவர் செயல்பாடு
இலண்டன், பெய்ஜிங் மற்றும் புதுதில்லி போன்ற நகரங்களில் ஏற்படும் பனிப்புகையைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவும். பனிப்புகை ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்டு பிடிக்கவும்.
• புவி மேற்பரப்புக்கு அருகில் அடர் மூடுபனியானது குறைவான நீர்துளிகளையும், அதிகமான பார்வை நிலையையும் கொண்டிருந்தால் அதை மூடுபனி (Mist) என அழைக்கிறோம்.
• பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நகரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காற்று அதிகமாக மாசடைகிறது. இப்பகுதியில் அடர் மூடுபனி ஏற்பட்டால் அது மாசுக்களுடன் கலந்து புகை மண்டலமாக மாறும். இதை பனிப்புகை (Smog) (புகை + அடர்மூடுபனி = பனிப்புகை) என்கிறோம். இது மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. (படம் 6.22)
நீர் சுழற்சி (Hydrological Cycle)
மூன்று
கோளங்களிலும் நீரின் தொடர்ச்சியான இயக்கத்தை நீர் சுழற்சி என்கிறோம். நீர்
சுழற்சியானது ஆவியாதல், நீர் சுருங்குதல், மழைப்பொழிவு, கிடைமட்டமாக நகர்தல், இடைமறித்தல், நீராவிப்போக்கு, ஊடுறுவல், வழிந்தோடுதல் மற்றும் கடலை நோக்கி ஓடுதல்
போன்றவற்றுடன் உள்ள டக்கியது ஆகும். (படம் 6.23).
ஆவியாதல் (Evaporation)
சூரியனின் வெப்ப ஆற்றலால் நீரானது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும் செயல்முறையை ஆவியாதல் என்கிறோம். வெப்பநிலை அதிகமாகும் போதோ, பரந்து விரிந்த நீரின் மேற்பரப்பின் மீது வறண்ட காற்று வீசும்போதோ ஆவியாதல் அதிகமாக நடைபெறுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
மிக வறண்ட பகுதியில் மழைத்துளியானது தரைப்பகுதியை வந்தடைவதற்கு முன்பே ஆவியாகி விடுகிறது.
நீர் சுருங்குதல் (Condensation)
காற்றின் வெப்பநிலை குறையும் போது நீராவி குளிர்ந்து நீர் துளியாக மாறும் செயல் முறையை நீர் சுருங்குதல் என்கிறோம். வளிமண்டலத்தில் வெப்பநிலையானது பனி நிலையை அடையும் போது நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது.
மழைப்பொழிவு (Precipitation)
அனைத்து வடிவங்களிலும் காணப்படும் நீர் வளிமண்டலத்திலிருந்து புவியை நோக்கி விழுவதை மழைப்பொழிவு என்கிறோம்.