Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

பருவம் 3 இயல் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ் - காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி | 4th Tamil : Term 3 Chapter 3 : Kattukulle patu potty

   Posted On :  02.08.2023 10:20 pm

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

3. காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி


காடே அமைதியாய் இருந்தது. வீசிய காற்றில் மரக்கிளைகள் அசைந்தன. இலைகள் உரசும் சத்தம் தவிர மற்றபடி எங்கும் ஒரேஅமைதி. சேவல் ஒன்று தயங்கியபடி வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தது. மெதுவாய் நடந்து செடிகொடிகளின் மறைவிற்கு வந்தது. 'யாராவது பார்க்கிறார்களா..?' என நோட்டமிட்டது. யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த சேவல்,"கொக்... கொக்... கொக்... கொக்கரக்கோ..!"

மெலிதாய் குரல் எழுப்பியது. வானத்தைப் பார்த்து, தலையை உயர்த்திக் "கொக்கரக்கோ... கோ... கோ.!" என இராகம் போட்டுப் பாடியது. அப்போது, திடீரென சிரிப்பொலியொன்று கேட்டது. சட்டெனப் பாட்டை நிறுத்தியது சேவல். சுற்றிலும் யாருமே இல்லை. 'யார் சிரித்தது..?' லேசாய் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட சேவல், "யாரது...?" என்று கேட்டது. 'நாந்தான், மேலே இருக்கேன்... பாரு!' என்று மேலேயிருந்து குரல் வந்தது.

நிமிர்ந்து பார்த்தது சேவல். மரக்கிளையில் குரங்கு ஒன்று உட்கார்ந்திருந்தது. "என்ன ... பாட்டு பலமா இருக்கு. என்ன விசேஷம்..?" என்று குரங்கு கேட்டது. சேவலுக்கு வெட்கம் வந்துவிட்டது.

ஒண்ணுமில்லே. நாளைக்குக் காட்டில பறவைகளுக்கான பாட்டுப் போட்டி நடக்குதில்லே. அதுல கலந்துக்க எனக்கும் ஆசை. அதான், பாடிப் பயிற்சி எடுக்கிறேன்.!" என்றது சேவல்."ஆகா... கதை அப்படிப் போகுதா! நல்லாத்தான் பாடுறே. நாளைக்குப் போட்டியில நீயும் பாடு; என் மனமார்ந்த வாழ்த்துகள்..!" என்றபடி, அடுத்த கிளைக்குத் தாவியது குரங்கு,"ரொம்ப நன்றி..' என்று சேவலும் தலையாட்டியது. மறுநாள்....

மொத்தக் காடுமே ஒன்றுகூடி விட்டது. போட்டியில் கலந்துகொள்ள வந்த பறவைகள் மேடையருகே வரிசையில் நின்றன. ஒவ்வொருவரின் பெயரையும் ஆந்தை மாமா எழுதிக்கொண்டே வந்தது.

குருவி மேடைக்குப் பறந்து வந்தது. ஒலிபெருக்கி முன்னே நின்றது. 'அன்பு நண்பர்களே! இன்று நம் காட்டில் அனைத்துப் பறவைகளுக்கான பாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதில் நன்றாகவும் அதிக நேரமெடுத்தும் பாடவும் வேண்டும்; அனைவரும் இரசிக்கும்படியான பாட்டாகவும் இருக்க வேண்டும். அப்படியான பாடலை யார் பாடுகிறார்களோ, அவர்களுக்கே பரிசு வழங்கப்படும். என்ன போட்டியாளர்களே, தயார்தானே..?" என்று கேட்டது குருவி. "நாங்க தயார்.!" என்று பறவைகள் குரல் கொடுத்தன.

இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்து, நல்ல தீர்ப்பினை வழங்கிட, உங்கள் அனைவரின் சார்பாக நம்ம மயிலக்காவை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன்..! என்று குருவி சொன்னது. ஒய்யாரமாகத் தோகை விரித்தபடி மேடையேறி அமர்ந்தது நடுவர் மயிலக்கா.


"முதலில் பாட மைனாவை அழைக்கிறேன்.." என்று மயிலக்கா சொன்னதும், மேடைக்கு வந்த மைனா. 'பிக்பி... பிக்பி, பிபிக்பி. .பிக்பி... " என்று ஐந்து நிமிடம் பாடியது மைனா. அதற்குள் தொண்டை கட்டிவிட்டது. "நல்லாப் பாடினீங்க. போதும்.."என்று நடுவர் மயிலக்கா சொன்னதும், மைனா தன் இடத்துக்குப் பறந்துபோனது. அடுத்த போட்டியாளராக உங்களுக்குப் பிடித்தமான பாடலைப் பாட வருகிறார் கிளியரசன்... என்று நடுவர் சொன்னதும்,

"கீ... கீ... கீ... கிக்கீ... கிக்கீ..." எனத் தலையை நீட்டிநீட்டிப் பாடியது கிளியரசன்.

பாடலைக் கேட்ட சில விலங்குகள் எழுந்து ஆட்டம் போட ஆரம்பித்தன. விசில் சத்தம் விண்ணைத் தொட்டது. பத்து நிமிடங்கள் தொடர்ந்து பாடிய கிளிக்கு, மூச்சு முட்டியது. பாட்டை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி வந்தது.

"நம்ம அடுத்த போட்டியாளர் சேவல். வாங்க... மேடைக்கு!"

அறிவிப்பு வந்ததும், பக்கத்தில் இருந்த குரங்கைப் பார்த்தபடியே, மேடைக்கு வந்தது சேவல்

'கொக் கொக்... கொக்கரக்கோ... கோ....'

தூங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு கரடிகளும் விழித்துக் கொண்டன. சேவலைப் பார்த்து, 'தூங்கிறவங்களை எழுப்புறதே உன் பாட்டா இருக்கு, அருமையான பாட்டு. போதும்ப்பா, நிப்பாட்டு.!" என்று மற்ற பறவைகள் கத்தின. சேவல் வெட்கத்தோடு கீழே இறங்கியது. அடுத்து படபடவென இறக்கைகளை அடித்தபடி மேடையேறியது கழுகு. தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே பாடியது கழுகு.

'கொவ்வ்... கொவ்வ்... கொவ்வ்வ்வ்வ்..."

காடெங்கும் எதிரொலித்தது பாட்டு. மான்குட்டிகள் பயந்து போய்விட்டன. சில பயத்தில் அழுதன. சில எழுந்து ஓடத் தொடங்கின. இதைப் பார்த்துச் சிரித்த யானைக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது.

*இப்பப் பாடப்போறது, நம்ம கொக்கு!" மயிலக்கா சொன்னதும் கை தட்டல் ஓசை பலமாய் எழுந்தது. மேடைக்கு வந்த கொக்கு,

"கர்... க்க.... க்க..." என்று இரண்டுமுறை இராகம் போட்டு இழுத்தது.

"என்னாச்சு..? பாடு, பாடு..!" கூட்டத்தில் ஒரே கூச்சல். இம்புட்டுத்தான் என் பாட்டு..!"என்று சிரித்தபடியே பறந்து போனது கொக்கு. அடுத்து, குயில் மேடைக்கு வந்தது. உற்சாகமாய் எல்லாமும் எழுந்து நின்று கைகளைத் தட்டின. குயிலுக்கு நிறைய விலங்குகள் இரசிகர்களாய் இருந்தன. ஒவ்வொன்றாக எழுந்து நின்று குயில் குமாரிக்குப் பூங்கொத்துகளைக் கொடுத்தன. வாழ்த்துகளைச் சொல்லி அனுப்பி வைத்தன. குயிலுக்கு ரொம்பவும் பெருமை தாங்கவில்லை. குதித்துக் குதித்து மேடையேறியது.

"க்கூ... குக்கூ... குக்கூ... கூ... குக்கூ... கூகூ...


குயிலின் பாட்டிற்கு மொத்தக் கூட்டமும் எழுந்து ஆடியது,

கூக்கூ... குக்கூ... கூக்கூகூகூ ஐந்து, பத்து, பதினைந்து நிமிடம்வரை குயில் பாடியது. அதற்குமேல் மூச்சுத் திணறவே, பாடலை நிறுத்திவிட்டு இறங்கி வந்தது குயில். 'இன்னும் கொஞ்ச நேரம் பாடு ... குயிலு.!" கூட்டத்திலிருந்து இரசிகர்கள் குரல் எழுப்பினார்கள்.

'நமது போட்டியின் கடைசிப் போட்டியாளராக காக்கா வருகிறார்.!" மொத்தக் கூட்டமும் அமைதியானது. "பெரிசாப் பாட வந்திடுச்சு..!" என்றது மரங்கொத்தி. "நீயெல்லாம் பாடலேன்னு யாரு கேட்டா..?" வம்புக்கு இழுத்தது நாரை.

காக்கா எதையும் கேட்டுத் தயங்கி நிற்காமல், மேடைக்குத் துணிச்சலாய் வந்தது. ஒரே கூச்சல். "நீ ரொம்ப நல்லா பாடுவே. போதும்டா... சாமி..!" என்று சில விலங்குகள் கத்தின. நடுவர் மயிலக்கா அனைவரையும் சத்தம் போடாமல் அமைதியாய் உட்கார வைத்தது, காக்கா மெல்ல தன் குரலைச் செருமியது. "கா... கா... கா...


மெல்லிய குரலில் முதலில் பாட ஆரம்பித்தது. கூச்சல்போட்டுப் பாட விடாமல் தடுத்த விலங்குகள், சற்றே ஆச்சரியத்தோடு கவனித்தன.

கா... கா கா கா கா..!" ஓர் எழுத்திலேயே புதுப்புது இராக ஆலாபனைகள். சுருதி கூட்டிப் பாடிக்கொண்டே இருந்தது காக்கா. 'ஏம்ப்பா, நல்லாத்தான் பாடுது.." என்றன பாட்டைக் கேட்ட விலங்குகள். "ககா... கக கா... கக ககா கா கா..." என்று பாடலில் சுருதியைக் கூட்டிக்கொண்டே பாடியது காக்கா. கேலி செய்த பறவைகளுக்கு என்னவோ போலாகிவிட்டது. அவை அனைத்தும் எழுந்து, பாட்டிற்கேற்ப ஆட்டம் போடத் தொடங்கின. புலி புவனா, "பிரமாதம்..!" என்றது. "ஆகா... என்ன சுருதி சுத்தம். அற்புதம்...!" என்று தலையாட்டி இரசித்தது சிங்க ராஜா,

"கா... கா க கா... கா ககா ககா ககா..!" தன் பாட்டை எந்தத் தடுமாற்றமுமின்றித் தொடர்ந்தது காக்கா. மொத்தக் கூட்டமும் கை தட்டிப் பாராட்டின. சரியாய் அரைமணி நேரத்திற்கு, காக்காவின் பாட்டுமழை நன்றாக வெளுத்து வாங்கியது. இப்படி ஒரு பாட்டை இதுவரை காட்டில் எந்த விலங்குமே கேட்டதில்லை. புலி எழுந்துவந்து, காக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டது.

பாட்டுப்போட்டிக்கான தீர்ப்பைச் சொல்ல மேடையிலிருந்த ஒலிபெருக்கிமுன் நடுவர் மயிலக்கா வந்தது.

"பாருங்க. காக்கா பாட வர்றபோது கேலி செஞ்சீங்க. ஆனா, தயங்கி நிற்காம, விடாமுயற்சியோட பாடுச்சு. அது மட்டுமில்ல, நிறைய பயிற்சி எடுத்துப் புதுப்புது இராகத்தில பாடியிருக்கு. அதுவும் நீங்க எல்லாருமே கை தட்டி பாராட்டுற அளவுக்கு அரைமணி நேரம் பாடியிருக்கு. எல்லாரோட குரலுக்கும் ஈர்ப்பு ஒன்னு இருக்கு. அதுபோல ஒவ்வொரு குரலுக்குள்ளும் அழகுமிருக்கு, நமக்கு இன்னிக்குத்தான் காக்கா குரலோட சிறப்பு தெரிஞ்சிருக்கு. முயற்சியும் பயிற்சியும் இருந்தா எல்லாராலும் பாடமுடியும்னு இந்தப் போட்டி மூலமா காக்கா நிரூபிச்சுக் காட்டியிருக்கு. தான் பாடியதோடு மற்றவர்களுக்கும் ஒரு தன்னம்பிக்கையை ஊட்டிய காக்காவிற்கே

இந்தப் பாட்டுப் போட்டியில் முதல்பரிசு வழங்கிப் பாராட்டுகின்றேன்.!" என்று நடுவர் மயிலக்கா தன் தீர்ப்பை அறிவித்தது.

காட்டின் எல்லா விலங்குகளும் இதை ஆமோதித்தன. ஆகா... நல்ல தீர்ப்பு.!" என்று ஒற்றுமையாய் குரல் எழுப்பின. நடுவர் மயிலக்கா 'பாட்டு ராணி' பட்டத்தை காக்கா தலையில் கிரீடமாய்ச் சூட்டியது.

அனைவருக்கும் நன்றி கூறி, மேடையிலிருந்து பறந்து சென்றது காக்கா.

Tags : Term 3 Chapter 3 | 4th Tamil பருவம் 3 இயல் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 3 Chapter 3 : Kattukulle patu potty : Kattukulle patu potty Term 3 Chapter 3 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி - பருவம் 3 இயல் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி