அழ. வள்ளியப்பா | பருவம் 2 இயல் 1 | 4 ஆம் வகுப்பு தமிழ் - காவல்காரர் | 4th Tamil : Term 2 Chapter 1 : Kavalkaarar
1. காவல்காரர்
சட்டை மேலே கோட்டு மாட்டிச்
சரிகை போட்ட வேட்டி கட்டி
நட்ட நடுவே தோட்டம் தன்னில்
ராஜா போலே நின்றி ருந்தார்
இரவும் பகலும் தூங்கி டாமல்
இங்கு மங்கும் நகர்ந்தி டாமல்
பெருமை யோடு காவல் காப்பார்
பெயரில் லாத காவல் காரர்
காக்கை குருவி அங்கே வந்தால்
காவல் காரர் நிற்கக் கண்டு
சீக்கி ரத்தில் வந்த வழியே
திரும்பி ஓடும் பயந்து கொண்டு
காற்று பலமாய் அடித்த தாலே
கனத்த மழையும் பெய்த தாலே
நேர்த்தி யான அவரின் உடைகள்
நித்தம் கிழிந்து வந்த தையோ
இதனைக் கண்ட காகம் ஒன்று
இந்தச் சமயம் இவர்க்கு நாமும்
உதவி செய்தால் பயமில் லாமல்
உலவ லாமே என்று கருதி
அருகில் உள்ள வீட்டிற் குள்ளே
யாரும் இல்லா வேளை சென்று
கறுப்புக் கோட்டு வெள்ளைச் சட்டை
கட்டிக் கொள்ள சரிகை வேட்டி
எடுத்து வந்து காவல் காரர்
இருக்கும் இடத்தில் போட்டு விட்டே
உடுத்திக் கொள்வீர் என்று சொல்லி
ஒதுங்கி நின்று பார்த்த தங்கே
காவல் காரர் பழைய உடையைக்
கழற்றிக் கீழே போட வில்லை
ஆவ லோடு புதிய உடையை
அணிய வில்லை அசைய வில்லை
உடனே காகம் அருகில் சென்றே
உற்று நன்றாய்ப் பார்த்த பின்னர்
அடடே இந்தக் காவல் காரர்
யாரோ என்று நினைத்தி ருந்தேன்
வைக்கோல் மேலே துணியைச் சுற்றி
வைத்தி ருக்கும் பொம்மை என்றே
இக் கணத்தே நண்பர் அறிய
எடுத்துச் சொல்வேன் என்று கூறி,
காவல் காக்கும் பொம்மை தலையில்
காலை வைத்து நின்று கொண்டு
கூவி அழைத்துப் பறவை யாவும்
கூடச் செய்து விட்ட தங்கே
– அழ. வள்ளியப்பா
ஓசைநயமும் கருத்தும் மிக்க பாடலைக் கேட்டுப்
புரிந்துகொள்ளும் திறன்
பொருள் அறிவோம்
தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த சோளக்கொல்லைப் பொம்மையைக்
காவல்காக்கும் உயிருள்ள மனிதர் என்று காகம் நினைக்கிறது. கனத்த மழையால் ஆடைகள்
கிழிந்து நிற்கும் அந்தப் பொம்மையிடம், புதிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டுகிறது. ஆனால், அஃது அணிந்து கொள்ளாததால், உயிரற்ற பொருள் என்பதை உணர்ந்து கொள்கிறது. அதனால், அச்சமின்றி மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.
நூல் குறிப்பு
'மலரும் உள்ளம்' என்னும் நூலின் இரண்டாம் தொகுதியில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலைப் பாடியவர் அழ. வள்ளியப்பா. இவர் குழந்தைகளுக்கான கதைகளையும் பாடல்களையும் மிகுதியாகப் பாடியுள்ளமையால், குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்.